கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 13 of 23 in the series 20 டிசம்பர் 2015

கனவு இலக்கிய வட்டம்
————————————————–
டிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்

கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 17/12/15 மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை ” நாவலின் வங்காள மொழிபெயர்ப்பு நூலை ஜோதி அறிமுகப்படுத்திப் பேசினார். ” சாயத்திரை ” நாவல் “ ரங்க பர்தா “ என்ற பெயரில் அமரர் கல்கத்தா கிருஷ்ணமூரத்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு கல்கத்தாவைவைச் சார்ந்த ஆதர்ஷ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாவல் முன்பே ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புலவர் சொக்கலிங்கம் பேசுகையில் ” குறிப்பிட பிரதேசம் சார்ந்த மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இலக்கியம் எப்போதும் உயர்வான இடத்தை அதன் மொழி, கலாச்சாரம் சார்ந்து பெறும். அதுவே மண்ணின் படைப்பாக இருக்கும். திருப்பூர் மக்களின் பழமையான வாழ்க்கையையும், நகரமயமாதல், தொழில் மய்மாதலின் விளைவுகளையும் ” சாயத்திரை “ பேசுவதாலே அது சிறப்பிடம் பெற்றுள்ளது “ என்றார்.சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயா நன்றி கூறினார்.
சுப்ரபாரதிமணியனின் நாவல்
“ சாயத்திரை “
* சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது.
* ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்துள்ளது.* தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் பெறுவது.

பிரேமா நந்தகுமார்: இந்தியா டுடே விமர்சனம்

விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.
இந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும் முக்கியத்துவம் பெறுகிறத. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலே முன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form) என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத் தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள் சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
நிகழ்ச்சிகள் ஒரே சீராக முன்னேறாமல் விட்டு விட்டுத் தரப்பட்டாலும், சாயத்திரை எங்குமே சோகம்தான். அங்கிங்கெனாதபடி திருப்ழுர் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் அனைவர் மேலும் வண்ணமோ, பஞ்சுத் துகளோ படிந்திருப்பது போல், துயரமும் இவர்கள் வாழ்வில் படிந்திருக்கிறது. இந்த சோகத்தினை மூலதனமாகக் கொண்டுள்ள முதலாளிகளை ஆசிரியர் நமக்குக் காட்டவில்லை. இது நன்று. அந்த முரண்பாடு இருந்திருந்தால் படிக்கும் பல உள்ளங்கள் வெடித்திருக்கும். இங்கு ஓரளவு வசதியானவர்கள் செட்டியாரும், சாமியப்பனும் என்றாலும் அவர்களுக்குள்ளும் சுகமேதும் இல்லை.
பக்தவத்சலம், ஜோதிமணி, நாகன், செல்லம்மிணி, பெரியண்ணன் முதலியோரின் வாழ்க்கையுடன் ஒன்றும்போது நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமான தோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும்? அந்த விஷ மலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும்.
இந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப் பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள், வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும் ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோ எனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது.
1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.

Series Navigationதினம் என் பயணங்கள் – 47 யுக்தி13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *