தாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்

author
13
0 minutes, 3 seconds Read
This entry is part 3 of 18 in the series 3 ஜனவரி 2016

 prabhu

முனைவா் பு.பிரபுராம், உதவிப் பேராசிரியா், தமிழ்த்துறை,

கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூா்-21.

 

கல்வியாளா்கள் “நரம்பு மெழியியல்”(neuro linguistics) என்ற துறை குறித்த கருத்தாக்கங்களை ஆழமாக அறிந்து, கல்விமொழி(Educational Language) குறித்த விவாதங்களைத் தீவிரமாக நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சுயநலன்களைத் தள்ளி வைத்துவிட்டுக் கல்விப்பணி செய்வோரை ஊக்குவிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதைப்போல, கல்வியறிவில்லாத மக்கள் களா் நிலம் என்பதை நாம் அறிவோம். எல்லாம் நாம் அறிவோம், அறிந்து என்ன பயன்?. நம் நாட்டில் வருடத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பள்ளிப் படிப்பையும், பட்டப் படிப்புகளையும் முடிக்கின்றனா். ஆராய்ச்சிப் பட்டங்களையும் ஆயிரக் கணக்கில் கல்வி நிறுவனங்களால் வழங்க முடிகின்றது. பட்டங்களைக் காகிதத்தில் அச்சடித்து அளித்து என்ன பயன்?. கோடிக் கணக்கான மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலகளவில் பெற்ற நோபல் பரிசுகள் விரல்விட்டு எண்ணத்தக்கனவே. நம் கல்வி நிறுவனங்களில் எத்துனை புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துவிட்டன?. அப்படியென்றால் கண்டுபிடிப்புகள் நிகழாததற்குக் காரணம்தான் என்ன?.

நமது சிந்தனை மொழியான தாய் மொழியில் மாணவா்களுக்குக் கல்வி கற்பிக்கப் படாமையே புதிய கண்டுபிடிப்புகள் நிகழாததற்குக் காரணமாகும். தமிழா்களாகிய நம் மூளை பெரும்பாலும் தமிழ்மொழியில் சிந்திக்கும் திறன் வாய்ந்ததே. நம் நரம்பு மண்டலங்களிலும், மூளைச் செல்களிலும் உள்ள தமிழ்மொழி சம்பந்தமான பதிவுகளையெல்லாம் அழித்துவிட்டால் நாம் வெறும் நடைபிணம் என்பதை உணரவேண்டும். மொழி சார்ந்த பதிவுகள்தான் மனிதனை இயக்குகின்றன. மொழி என்பது கருத்துப் பரிமாற்றக் கருவி மட்டுமல்ல. உடலின் இயக்க சக்தியே மொழிதான். நரம்பு மண்டலத்தின் வழியாக “அந்த உணவைச் சாப்பிடு” என்ற கட்டளையை மூளை பிறப்பித்தால்தான் மனிதனுக்கு உணவுண்ணவேண்டும் என்ற எண்ணமே தோன்றும். நமக்கு எப்படி தமிழ்மொழி உடலின் இயக்க ஆற்றலோ, அதுபோலத்தான் அவரவா்களுக்கு அவரவருடைய தாய்மொழியும். அந்தத் தாய்மொழி வழிதான் ஒவ்வொருவரது மூளைச் செயல்பாடுகளும் அமைகின்றன. உணா்தல், பேச்சு, சிந்தனை, பண்பாட்டுப் பதிவு, வரிவடிவ வெளிப்பாடு, கல்வி, ஆராய்ச்சி ஆகியவை குறித்த அனைத்து ஆற்றல்களையும் தாய்மொழியால்தான் மனிதனுக்கு முழுமையாக அளிக்க இயலும்.

இந்த விடயம் அனைவராலும் அறியப்பட்டதே. அது காலம் காலமாக வலியுறுத்தப்பட்டும் வருவதுண்டு. பிறகு ஏன் தாய்மொழிவழிக் கல்வி நாட்டில் வளா்க்கப் படுவதில்லை?. ஒருவேளை மக்களைத் திட்டமிட்டு முட்டாள்களாகவே வைத்திருக்கத்தான் அதிகார வா்க்கம் தாய்மொழிவழிக் கல்வியைப் புறக்கணிக்கிறதோ?. மக்களின் உணா்வு மண்டலம் முதன் முதலாக ஏற்காத ஒருமொழியைக் கல்வி மொழியாகப் படிக்கும்போது, அம்மொழியைப் புரிந்துகொள்ள முடியாமல் நமது மாணவா்கள் படும் பாடு கண்கூடு. அப்படி ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை வசதிகளும் மொழி ஆய்வுக் கூடங்களும்(Language Lab) எத்தனை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ளன?. எத்தனை கல்வி நிறுவனங்கள் தரமான மாணவா்களை உருவாக்குகின்றன?. நம் நாட்டில் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவிகிதம் மாணவா்கள் கல்வி நிலையங்களால் முட்டாள்களாக மாற்றப்படுகின்றனா் என்பது பெரும் வேதனைக்குரிய விடயம்.

          சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்குமேல் ஆகியும் ஏன் இந்திய மொழிகளில் அறிவுக்கருவூலங்கள் உருவாகவில்லை?. இன்றுவரை ஆங்கிலம் மட்டும்தானே நூலகமொழி என்ற பெயரைத் தட்டிச் செல்கிறது?. குறிப்பாகத் தமிழ் மொழிக்கு வருவோம். 1960-களில் இந்தியை வேண்டாம் என்று புறக்கணித்தோம். வடநாட்டில் பெரும்பான்மையாக வாழ்கிற இந்தி பேசுகின்ற மக்கள் நம்மை மேலாதிக்கம் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் நமக்குப் பிறந்தது சரிதான், அதில் தவறில்லை. ஆனால், இன்று ஆங்கிலம்தானே நம்மை மேலாதிக்கம் செய்கிறது. தமிழ்மொழி வளா்ச்சிக்கு நாம் என்ன செய்துவிட்டோம்!. இந்தியைப் புறக்கணித்த நாம், ஆங்கிலத்தைப் புறக்கணிப்பதிலும் வெற்றிகண்டு, தமிழ் மொழியை வளா்த்தெடுத்திருக்க வேண்டாமா?. நாம் அதைச் செய்யவில்லை. உலகத்தின் அறிவு நூல்களைத் தமிழில் முறையாக மொழிபெயா்த்தெடுக்கவில்லை. கோடிக் கணக்கில் தமிழ் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கி என்ன பயன்?. தமிழ் தெருக்கோடியில் மட்டும்தான் நிற்கிறது. பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ, ஆய்வு நிறுவனங்களிலோ தமிழுக்குக் கொடுக்கப்படவேண்டிய சிம்மாசனம் தமிழ் நாட்டில் எங்கும் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பான்மையான மாணவா்களுக்குத் தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது என்ற நிலையை, இந்த இரண்டும் கெட்டான் தனமான கல்விச் சூழல் உருவாக்கிவிட்டிருக்கிறது. வருங்கால இளைய தலைமுறையினா், சிந்தனை வளா்ச்சி அடையாத மனநலம் குன்றியோராக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனா். ஆங்கிலம் படித்தால்தான் அறிவு வளரும், வெளிநாடுகளுக்குச் செல்லமுடியும், நிறையப் பணம் சம்பாதிக்க இயலும் என்பதெல்லாம் அதிகார வா்க்கத்தால் பரப்பப்படும் திட்டமிட்ட மாயை என்பதை உணரவேண்டும். வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு வேலை செய்து கொடுப்பதற்காகவா நம் நாட்டுச் சுதந்திரத்திற்காகப் பலா் தம் வாழ்வையும் இன்னுயிரையும் அா்ப்பணித்தனா்?. அப்படியென்றால், பிரிட்டிஷ் அரசாங்கமே நம்மை ஆண்டிருக்கலாமே?. பின்காலனியத்துவத்தை ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகள், அம்மொழி மூலம் தற்போதும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

நமக்குச் சொந்த தேச வளா்ச்சி, சொந்த மொழி வளா்ச்சி, நாட்டு மக்களின் சிந்தனை வளா்ச்சி ஆகியவற்றைப் பற்றிக் கவலை இருந்திருக்குமேயானால், இந்நேரம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கல்வி கற்பதற்கு உரிய மொழிகளாக ஆகியிருக்கும். நம் நாட்டிற்குத் தேவையான தொழில்கள் அனைத்திலும் நாம் தன்னிறைவு பெற்றிருப்போம். நம் நாட்டில் பாடுபடவேண்டும், நம் மக்களுக்காகப் பாடுபடவேண்டும், நம் சமுதாய வளா்ச்சிக்காகப் பாடுபடவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றியிருக்கும். இந்த எண்ணங்கள் மக்களுக்குத் தோன்றாததற்குக் காரணம் தாய்மொழி வழிக் கல்வி இல்லாததே. புரியாத மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் நிச்சயமாக நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கான வாய்புகள் இருக்காது. இனியாவது அதிகார வா்க்கம் திட்டமிட்டு மக்களை முட்டாள்களாக மாற்றும் வேலையை நிறுத்திக்கொள்ளட்டும். சமுதாய நலன் மீது பற்றுடைய திறமையான கல்வியாளா்களைப் பயன்படுத்தி, தாய்மொழி வழிக் கல்வி வளா்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவாவிட்டால் வருங்கால சந்ததிகளின் அறிவு நிலை மிகவும் மோசமடைந்துவிடும் என்ற நரம்பு மொழியியல் வாதத்தை இக்கட்டுரை தீா்க்கமாகப் பதிவு செய்கிறது.

 

 

Series Navigationகுருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவைநாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது
author

Similar Posts

13 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //பெரும்பான்மையான மாணவா்களுக்குத் தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது என்ற நிலையை, இந்த இரண்டும் கெட்டான் தனமான கல்விச் சூழல் உருவாக்கிவிட்டிருக்கிறது. வருங்கால இளைய தலைமுறையினா், சிந்தனை வளா்ச்சி அடையாத மனநலம் குன்றியோராக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனா்.//

    பெரும்பான்மையான மாணவர்கள் என்று சொல்வது தவறு,இன்று முழுக்க முழுக்க அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ந்து இரு நிமிடம் ஆங்கில கலப்பின்றி உரையாட முடியாது.பேச்சை தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் முடிப்பார்கள்.அல்லது இடையிலேயே தமிங்கலத்துடன் கலப்பார்கள். ரெண்டுங்கெட்டான் மாணவர்களைத்தான் நமது கல்வி உருவாக்கி உள்ளது.

    இவர்கள் கல்வியின் அதிக பட்ச உச்சம், வயிற்றைக் கழுவ ஒரு வேலை தேடுதல் என்ற அளவில் சுருங்கி விட்ட பிறகு நோபில் பரிசு பற்றி பேசுவது நகைச்சுவைதான்.

    குழந்தைக்கு தாய்ப்பாலும் இல்லை…தாய் மொழியும் இல்லை.எல்லாமே சீமைப்பசு பாலும், சீமை மொழியும் என்று சீரழிந்து மக்கள்.இவர்கள் மக்களல்ல..வள்ளுவர் கூறிய மாக்கள்.

  2. Avatar
    BSV says:

    //ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை வசதிகளும் மொழி ஆய்வுக் கூடங்களும்(Language Lab) எத்தனை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ளன?. எத்தனை கல்வி நிறுவனங்கள் தரமான மாணவா்களை உருவாக்குகின்றன?. //

    இதற்குகாரணம் கல்வி, வியாபார்களின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாக, அவர்கள் மாணவர், பெற்றோர், மற்றும் அவர்கள் வேலைக்கு வைக்கும் ஆசிரியர்களைச் சுரண்டி பணத்தைப் பெருக்குவதனால் தரமற்ற கல்வியே கிடைக்கிறது. அதை நிறுத்தமுடியுமா? ஆங்கிலத்தைச் சிறப்பாகப் போதிக்க பெரும் பணம் தேவையில்லை. An interested and competent English teacher is enough. No lab is needed.

    கே வி, மதுரையில் பிள்ளைகளைப் போட பெற்றோரிடம் கடும்போட்டி. அப்பள்ளியில் தமிழே கிடையாது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மக்கள் கே வி விட்டு தமிழை அழித்துவிட்டார்கள். மதுரையைப்போலவே மற்ற ஊர்களும்.

    தாய்மொழிக்கல்வி புதிய கண்டுபிடிப்புக்களுக்குக் கொண்டு செல்லும் என்பது not found in practice.

    தாய்மொழிவழிக் கல்விதான் அரசுகல்விக்கூடங்களில் தாய்மொழி வழிக்கல்வியில் படித்து. தமிழ்நாட்டில் மட்டுமன்று. எல்லாமாநிலங்களிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வெளிவருகிறார்கள். எவனாவது ஏதாவது புதிய கண்டுபிடிப்பைச் செய்தானா? இல்லை புரட்சிகரமாக புதிய சிந்தனைதான் கொண்டானா? அய்யோ பாவம். கடும் தாழ்வுமனப்பான்மையுடன் மனம்புழுங்கிக்கொண்டு விரக்தியில் வெளிவருகிறார்கள். தாய் மொழி என்ன கிழித்தது அவர்களுக்கு?

    இராமகிருஷணனும், சி வி இராமனும், சந்திரசேகரும் புதிய கண்டுபிடிப்ப்பாளர்கள்தான். தாய்மொழிக்கல்வி பயின்றதாலா ? எம்மொழியையும் சிறப்பாகப் படித்து அம்மொழியின் வழியாக பெரும்பேரடையலாம். இது திண்ணம். They know Tamil. They may have also studied in Tamil medium. Has it helped them any way? Only English helped them read science through which they ascended to individual glory.

    Learn English. Your School + Your Parents + Your own interest and efforts. Even without parental help, you can dazzle in English if you are willing and interested. You will take off soon and go places.

    English is the gateway not only to knowledge, but to self confidence and intellectual conviction – necessary for a scientist: as Ramakrishnan observed in the meeting held by NOBLE SOLUTIONS organised by NDTV in New Delhi last month. He was also saying the culture of superstitions and crushing of independent thinking are also the culprits to hinder science.

    தமிழ் நாட்டுக்கலாச்சாரம் இவ்விரண்டையும் தராது. அதாவது தமிழ் ஒரு தடையே.

  3. Avatar
    முனைவா் பு.பிரபுராம் says:

    தாய்மொழி நமக்கு என்ன கிழித்தது? என்ற கேள்வி கேட்பதற்கு முன்பு, தாய்மொழிக்கு நாம் என்ன கிழித்தோம் என்று சுய பாிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

    ஆங்கிலம் அறிவுலகின் திறவுகோல் என்றால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டு மக்களனைவரும் உலகின் உட்சபட்ச அறிவாளிகளாக உருவெடுத்துவிட்டனரா? அந்நாடுகளில் ஆங்கிலத்தில் கூவிப் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரா்களே இல்லையா? ஆங்கிலம் ஒரு மொழிதானே ஒழிய அது அறிவு அல்ல என்பதை அறிவுஜீவிகள் புாிந்துகொள்ளவேண்டும்.

    ஆங்கிலம் தொியாத மாணவா்கள் தாழ்வு மனப்பான்மையுடன் உள்ளனா் என்பது உண்மைதான். ஆயின் அம்மனப்பான்மை தானே உருவாகியது அல்ல. அது நாட்டு நலன் கருதாத அறிவு ஜீவிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுவது.

    மாணவா்களுக்குப் புாியாத மொழியில் பாடங்களை நடத்தி அவா்களை முட்டாள்களாக மாற்றும் கொள்கை ஒரு தொலைநோக்குப் பாா்வையுடைய நாட்டிற்கு ஏற்புடையதல்ல.

    வசதிவாய்ப்புகள் படைத்தோா் மிகத் தரமான கல்வி நிறுவனங்களில் கல்வியை அதிக விலைக்கு வாங்கிக் கொள்கின்றனா். வசதியில்லாதவா்கள் கல்வியை விலை கொடுத்துவாங்க இயலாமல் உங்கள் பாசையில் “தாழ்வு மனப்பான்மை உடையோராக” மாறுகின்றனா்.

    எங்கள் கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்குத் தமிழில் பாடம் நடத்தினால்தான் நன்றாகப் புாிகிறது. பின்பு ஏன் ஆங்கிலத்தில் பாடம் நடத்தினால்தான் அறிவு வளரும் என்று அவா்களது கல்விக்குத் தூக்குத் தண்டணை அளிக்கிறீா்கள்?

    ஆங்கிலம் போன்ற வேற்றுமொழி அறிவினை அளவுகோலாகக் கொண்டு உயா் பதவிகளை அடைவோா் சொகுசாக வாழ்கின்றனா். வேறுமொழி தொியாது என்ற ஒரே காரணத்திற்காக எத்தனை அறிவாளிகள் உயிரோடு சாகின்றனா் தொியுமா?

    ஏதோ ஆங்கிலம்தான் அறிவு என்றும், அதைக் கற்றால்தான் அறிவாளியாகமுடியும் என்றும் எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றுவீா்கள்?. அனைவருக்கும் தொிந்த மொழி எதுவோ அம்மொழியில் அறிவுநூல்களை உருவாக்க முயலுங்கள். பல்மொழிக் கலாச்சாரத்தை உடைய இந்தியாவிற்கு ஆங்கில மொழிதான் அறிவைக் கொடுக்கும் என்பது இந்தியாவை ஆங்கிலத்திற்கு அடிமையாக்கும் செயல்.

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    முனைவர் ஸ்ரீ பிரபு ராம்

    \\ தாய்மொழி நமக்கு என்ன கிழித்தது? என்ற கேள்வி கேட்பதற்கு முன்பு, தாய்மொழிக்கு நாம் என்ன கிழித்தோம் என்று சுய பாிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம். \\

    தாய்மொழிக்கு நாம் என்ன கிழித்தோம் என்று சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். மிக மிக மிகச் சரி.

    நீங்கள் தாய் மொழி வழிக்கல்வி பற்றி ஆரம்பித்தீர்கள். உள்ளபடி தமிழகச் சூழலில் அதை தமிழ்வழிக்கல்வி என்று தொடர்ந்திருக்கிறீர்கள். முடிக்கையில் பொதுவில் தாய்மொழிக் கல்வி என்று முடித்திருக்கிறீர்கள்.

    பத்தாம் வகுப்பு வரைக்கும் தமிழில் படித்து பின்னர் ஆங்க்லத்துக்கு தாவும் போது மனதில் இருந்த அச்சம் கூச்சம் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது.ஆனால் அப்போது (70 களில்) இந்த அச்சத்தையும் கூச்சத்தையும் திறமையாக சவாலாக மாற்றி எங்களை ஊக்குவித்து கற்பித்த ஆசிரியர்கள் அப்போது இருந்தனர். அவர்களுக்கு எம் நன்றிகள்.

    \\\ கோடிக் கணக்கில் தமிழ் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கி என்ன பயன்?. தமிழ் தெருக்கோடியில் மட்டும்தான் நிற்கிறது. \\

    இதில் இரண்டு கூற்றுகள். சர்க்கார் என்ன சாதித்தது என்று நாம் நிச்சயம் விவாதிக்க வேண்டும் தான்.

    சர்க்கார் சாராத ஸ்தாபனங்கள் தன்முனைப்பில் சாதித்தது என்ன? அவை தமிழை நிறுத்தியிருக்கும் இடம் என்ன என்பதும் விவாதிக்க வேண்டிய விஷயம். இரண்டாவது விஷயம் பற்றி பின்னர் தனியாக எழுதுகிறேன்.

    நம் மொழியை வளர்க்க நேர்மறையான செயல்கள் தாய்மொழி வழிக் கல்விக்காக தமிழில் அறிவியல், கணிதம், வணிகவியல் என்று ஒரு துறை விடாமல் …. தமிழக பல்கலைக்கழக சிலபஸ் சார்ந்து………..ஒவ்வொரு துறை சம்பந்தமாகவும் நூற்கள் எழுதப்படல். இதில் நாம் எவ்வளவு சாதித்திருக்கிறோம்? இது சுயபரிசோதனைக்கான கேழ்வி. 70 களில் 80 களில் அவ்வளவாக மேற்படிப்புக்கான நூற்கள் தமிழில் இருந்ததில்லை. இன்று நிலைமை எப்படி? இது பற்றித் தாங்கள் அறிந்த விஷயங்களை பகிர்ந்திருக்கலாம். அல்லது பகிரலாம்.

    கடந்த முப்பது வருஷத்துக்கும் மேற்பட்டு உத்தரபாரதத்தில் இருக்கிறேன் என்ற படிக்கு என் மனதில் படும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    தமிழகத்தில் ஹிந்தி சம்பந்தமாக தேவையில்லாமல் தப்பும் தவறுமாக நிறைய தவறான தகவல்கள் பரிமாறப்படுகின்றன. போஜ்புரி, ப்ரிஜ்பாஷா, அங்கிகா, மகஹி (அ) மகதி, மார்வாடி, மைதிலி, சந்தாலி, சத்தீஸ்கரி, குமாவுனி, கட்வாலி என எண்ணிறந்த வட்டார வழக்குகள் இருந்தாலும் …………….. ஹிந்தி பெல்ட் என்று சொல்லப்படும் பகுதிகளில் (உ.பி, ம.பி, பீஹார், உத்தராகண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹிமாசல்ப்ரதேஷ், ஹரியாணா)………….வழக்கு மொழி ஹிந்தி. ஹிந்தி என்றதும் அரசியல் சாஸனத்தால் வகுக்கப்பட்டுள்ள பரிந்துறை செய்யப்பட்டுள்ள மானக் (Standard) ஹிந்தி அல்ல. சுளுவான ………….. ஆங்க்லம், உர்தூ மற்றும் பல மொழிகள் கலந்த பொது வழக்கிலான ஹிந்தி.

    பத்தாம் வகுப்புக்கு மேற்பட்டு +2 என்று என்ன ……………. இஞ்சினியரிங்க், CA, ICWA, CS என பல துறைகளிலும் மேற்படிப்புக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் ஹிந்தியில் கிடைக்கின்றன.
    IIT போகும் மாணவர்கள் மட்டிலும் கண்டிப்பாக ஆங்க்லத்தில் படித்தாக வேண்டிய நிர்ப்பந்தம். பல மாணவர்கள் இந்த சவாலை ஏற்கொள்ள முயன்று……….. சமாளிக்க முடியாது போகையில் மனம் உடைந்து தாழ்வு மனப்பான்மை அடைந்து தற்கொலை வரைக்கும் கூட சென்றிருக்கிறார்கள். ஆங்க்ல மொழி தெரியவில்லை என்ற குறைபாட்டிற்காக.

    எனக்குத் தெரிந்து CA, ICWA, CS என ப்ரொஃபஷனல் கோர்ஸஸ் படிக்கும் பலரும் ஹிந்தி வழி படித்து தங்கள் தேர்வுகளை எழுதுகிறார்கள். காரணம் …………….. பொதுவில் புரிந்துகொள்ளத்தக்க சுளுவான முறையில் இவை அனைத்திற்கும் புத்தகங்கள் கிடைப்பது. சக்கை போடு போடுகிறார்கள். நிறைய பேர் மிகவும் கஷ்டமான இந்த ப்ரொஃபஷனல் கோர்ஸ்களை ஹிந்தியில் எழுதி வெற்றியும் அடைகிறார்கள். மேற்கொண்டு உத்யோகத்திலும் சக்கை போடு போடுகிறார்கள். உத்தரபாரதத்தில் ஒழுங்காக இரண்டு வரி ஆங்க்லத்தில் எழுதத் தெரியாத………… ஆனால் செய்யும் வேலையில் தெளிவு உள்ள………… எவருக்கும் ஆங்க்லம் தெரியவில்லை என்பது ……………. மிகப்பெரிய குறைபாடாக மிகைப்படுத்தப்படுவதில்லை.

    நான் மேற்குறிப்பிட்ட புத்தகங்களும் மானக் ஹிந்தி எனும் ஸ்வச்ச ஹிந்தியை ப்ரயோகிப்பதில்லை. அது பண்டிதர்களுக்கேயான ஹிந்தி. கலைச்சொற்கள் பெரும்பாலும் (அனைத்தும் அல்ல) ஆங்க்லத்தில் அப்படியே உபயோகிக்கப்படுகின்றன. அதாவது கலைச்சொற்கள் ஆங்க்லத்தில். அவை சார்ந்த கல்வி சுளுவான ஹிந்தியில்.

    ஹிந்தி பெல்ட் முழுக்க பெருமளவு கல்வி ஹிந்தியில்.

    அதுபோன்றதொரு சூழல் தமிழ்மொழிவழிக் கல்வியில் நாம் கொண்டு வருவதில் ப்ரச்சினைகள் உளவா? தமிழில் ப்ரொஃபஷனல் நூற்கள் எந்த அளவு பதிப்பிக்கப்படுகின்றன. கலைச்சொற்கள் அனைத்தும் தமிழில் இருந்தால் மாணவர்களுக்கு சுளுவா? கலைச்சொற்கள் ஆங்க்லத்தில் தொடருவதனால் தாய்மொழிவழிக்கல்வியில் பாதிப்பு இருக்குமா? இவை விவாதிக்கப்பட்டு கல்வி சம்பந்தமான புத்தகங்கள் மேற்படிப்புக்கு தமிழில் அதிகம் பதிப்பிக்கப்பட்டு (அவை பெருமளவு மாணவர்கள் புரிந்துகொள்ளும் படிக்கு இருக்க வேண்டும்) வெகுவான மாணவர்களுடைய உபயோகத்துக்கு விரைவில் வருவதற்கு வழிவகுத்தால் ஒரு பெரிய முன்னகர்வாக இருக்கும்.

    தமிழும் ஆங்க்லமும் கலந்த புத்தகங்கள் முதலில் புழக்கத்துக்கு வந்து சிறிது சிறிதாக கலைச்சொற்களில் தூய்மைக்கு பயணிப்பது சரியான ஒரு தீர்வாக இருக்குமா?

    அல்லது மொழித் தூய்மை என்பதை இலக்காகக் கொண்டு …………. தாய்மொழிவழிக்கல்வி என்ற விஷயம் ……………. விவாதத்தில் மட்டிலும் இருந்து விட்டு ………….. நடைமுறையில் எட்டாக் கனியாக தொடருவது சரியா?

    தங்களுடைய பதிவில் தாங்கள் முன்வைத்த வாதங்கள் முற்று முழுதாக நரம்பு மொழியியல் வாதம் சார்ந்தவை தானா?

    எந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் நேர்மறையான செயற்பாடுகளில் நாம் எந்த அளவு ஈடுபடுகிறோம் என்பதே வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணி என்பது என் புரிதல். ஹிந்தி எதிர்ப்பு என்ற எதிர்மறைக் காரணியில்…………. ஆங்க்ல எதிர்ப்பு என்ற எதிர்மறைக் காரணியில்……….. ஈடுபடுவதை விட எந்த அளவு நேர்மறையான செயல்களில் ஈடுபடுகிறோம் என்பது மொழி வளர்ச்சிக்கு பெருமளவு வழிவகுக்கும்.

    தங்களுடைய முனைப்புக்கும் ஆர்வத்துக்கும் வாழ்த்துக்கள்.

    1. Avatar
      முனைவா் பு.பிரபுராம் says:

      நீங்கள் வாழ்த்தியமை என் தன்முனைப்பிற்கு வரங்கள் என்பதில் சந்தேகமில்லை. நன்றி. ஆங்கிலத்தின் மீதுள்ள அச்சத்தால் எத்தனையோ மாணவா்கள் மேற்படிப்பிற்குச் செல்வதைத் தவிா்க்கின்றனா். போதிய வசதியற்ற பெற்றோா்களால் தரமான ஆங்கிலவழிக் கல்வியை பிள்ளைகளுக்கு அளிக்க இயலுவதில்லை. தற்காலக் கல்வி வணிகத்தில் ஆரம்பப் பள்ளிகளுக்கான சோ்க்கைகளுக்கே இலட்சக் கணக்கில் பணம் தேவையாகிறது. இப்படிப் பல சிக்கல்கள் ஆங்கில வழிக் கல்வியில் நிறைந்துள்ளன. இங்கு சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். சாி சிக்கல்கள் தனி ஆய்விற்குாியன.
      தமிழ்வழிக் கல்விக்குப் பிறமொழி அறிவு நூல்களை உடனுக்குடன் தமிழில் மொழிபெயா்க்க வேண்டியது அவசியம். இது மிகப்பொிய முயற்சி. தமிழக அரசு இதைச் செய்துமுடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை குறைவே. நம்மைப் போன்ற தன்முனைப்புள்ளவா்கள் அறிவுச் செல்வங்களைத் தமிழில் கொணரவேண்டும். உதாரணமாக ஒரு உளவியல் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் கொணர வேண்டுமாயின் அதற்கு உளவியல் திறன், ஆங்கில அறிவு, மொழிபெயா்ப்புத் திறன், தமிழ்மொழி வல்லமை ஆகியவை ஒருசேரப் பெற்றிருத்தல் அவசியம். உதாரணத்திற்கு பேராசிாியா் தி.கு.இரவிச்சந்திரன் அவா்கள் சிக்மண்ட் பிராய்டு அவா்களின் உளவியற் கோட்பாடுகளைத் தமிழில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்படி ஒருவருக்கு இத்திறன் வாய்க்கப் பெறவில்லையெனில் ஒவ்வொரு திறன்களையும் உடைய தனிநபா்களை ஒன்றிணைத்து குழுச் செயல்பாட்டில் மொழிபெயா்ப்புகளை உருவாக்கவேண்டும்.
      மொழி சுத்தம் பற்றிக் கேள்வி எழுப்பினீா்கள். பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஒலியுடன் மாற்றிப் பயன்படுத்தலாம் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியா் என்ற தமிழ் மொழியியல் அறிஞா் கூறிவிட்டாா். பஸ் என்று கூறினாலே நமது நகர வாசிகளிலிருந்து கல்வியறியாத மக்கள் வரை அனைவருக்கும் bus என்ற ஆங்கிலச் சொல் அறிமுகமாகிவிடுகிறது. ஆகவே மாற்றவியலாத கலைச் சொற்களை அப்படியே தமிழ்மொழி ஒலி அமைப்பில் மாற்றிப் பயன்படுத்துதல் வேண்டும். உதாரணம் – ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற சொல்லாட்சிகளைக் கூறலாம். அதிகமாக மொழிச்சுத்தம் பேணினால் அது மொழி வளா்ச்சிக்குத் தடைக் கல்லாகவே இருக்கும்.
      வடமாநிலங்களில் இந்தி மொழிவழிக் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், உங்களைப் போன்றோா் வடமாநிலங்களில் வாழ்பவா்களால் தொியவருகிறது. இது எனக்குப் புதிய செய்தி. இதுபோன்ற செய்திகளை நாம் நிச்சயம் பகிா்ந்துகொள்ளவேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஆங்கில மோகத்தில் மூழ்கியுள்ளனா் என்பது வருத்தத்திற்குாிய செய்தி.

  5. Avatar
    BSV says:

    /தாய்மொழி நமக்கு என்ன கிழித்தது? என்ற கேள்வி கேட்பதற்கு முன்பு, தாய்மொழிக்கு நாம் என்ன கிழித்தோம் என்று சுய பாிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.//

    ஒரு மாணவன் நிலையிலிருந்து வைக்கப்பட்டது என் பார்வை. பெற்றோர் நிலையிலிருந்தும் என்று சொல்லலாம்.

    மாணவர்கள்/பெற்றோர்கள் தமிழுக்கு எதையும் கிழிக்கவேண்டிய தேவையில்லை. தமிழ் ஒரு மாணவன் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுகிறதா? என்பதே கேள்வி. அதன்படி, தமிழ் அவனுக்கு என்ன கிழித்தது என்ற கேள்வியே சாலப்பொருத்தம்.

    ஒருவர் தமிழ் வாழ்க என்பார். உடல் தமிழுக்கு உயிர் மண்ணுக்கு என்பார்.

    சாகையிலும் தமிழ் படித்துச்சாக வேண்டும் – என்
    சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

    என்று சவுடால் விட்டு கைதட்டல்களை அள்ளுவார்.

    பின்னர் தான் ஒரு தகப்பன் என்ற நிலையில் என்ன செய்வார்? சர்ச் பார்க் கான்வெண்டிலும் குட் ஷெப்பார்டிலும், பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கப் பாடாய் படுவார்.

    தனக்கு வந்தால் தெரியும் திருகு வலியும் தலை வலியும்.

    தாயை வீட்டில்தான் வைத்துப் பாதுகாப்பர்.
    ஊர்வலம் செல்ல மனைவி/அல்லது காதலிதான் வேண்டும்.

    தாய் = தமிழ்
    காதல் மனைவி = ஆங்கிலம்
    வைப்பாட்டி = ஹிந்தி

    இதுதான் என் வரிசை. வைப்பாட்டி என்று ஹிந்தியைப் போடக் காரணம். வெளியே ஓபனாக சொல்லிக்க முடியாது :-)

    1. Avatar
      முனைவா் பு.பிரபுராம் says:

      இந்தப் பதிவுகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லையாயினும் சில விளக்கங்களை அளிக்க வேண்டியது கட்டுரையாளனாகிய என் கடமை. மொழிகளைக் காதல் மனைவி என்றும் வைப்பாட்டி என்றும் நாகாிகம் இன்றி உரைப்பதற்கு யாருக்கும் உாிமையில்லை. தமிழ் உங்களுக்குத் தாய் என்றால் இந்தியைச் சிந்தனை மொழியாக உடையவா்களுக்கு அம்மொழி தாய் ஆகும். மாற்றான் தாயை வைப்பாட்டி என்று நா கூசாமல் உரைப்பது அறிவாா்ந்த செயல் அல்ல.
      உங்கள் கூற்றிலேயே ஒரு உண்மை ஒளிந்துள்ளது. தமிழைத் தாய் என்று ஒப்புக்கொள்கிறீா்கள். ஆனால் தாய்ப்பால் குடித்து வளராமல் புட்டிப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு சத்திருக்காது என்பதை மட்டும் ஒப்புக்கொள்ளாமல் வாதம் செய்கிறீா்கள்.
      மாணவன் நிலையிலிருந்து பேசுகிறேன், பெற்றோா் நிலையிலிருந்து பேசுகிறேன் என்று தன் தரப்பிற்கு நியாயம் சொல்வது சுவையாகத்தான் இருக்கிறது. ஆங்கிலம் என்பது ஒரு மொழி தானே ஒழிய அறிவு அல்ல. எந்த மொழியில் முழுமையாகப் படிக்கத் தொிந்து படித்தாலும் அறிவு வளரும். ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும் என்பது மூடத்தனம். உடனே ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று சொல்வீா்கள். இது முற்றிலும் தவறு உலகத்தில் ஆங்கிலம் தொியாமல் பல கோடி மக்கள் வாழ்கின்றனா். அவா்களெல்லாம் வேலை கிடைக்காமல் பிச்சையெடுக்கின்றனரா? நம் தமிழ்நாட்டில் மட்டும் உங்களைப் போன்றவா்கள் ஆங்கிலம் தொியவில்லை என்றால் வாழ்க்கை சூனியமாகிவிடும் என்று சிறு குழந்தைகளிலிருந்து அனைவரையும் பயமுறுத்துகிறீா்கள். அந்த பயத்திலேயே பாதிப் போ் தன்னம்பிக்கையை இழக்க வேண்டியதாயிருக்கிறது. உங்களைப் போன்றவா்கள் தலைமுறை தலைமுறையாகப் பல மாணவா்களை ஆங்கில மோகச் சுடுகாட்டில் உயிருடன் கொழுத்திக் கொண்டிருக்கிறீா்கள். பிற மொழியைப் பயிலவேண்டாம் என்பது என்போன்றோாின் கொள்கை அல்ல. ஆனால் தமிழ் வழியில் படித்தால் அறிவு வளராது, வேலை கிடைக்காது என்று சொல்வதெல்லாம் பச்சைப் பொய்.
      ஆங்கில வழிக் கல்வியால் தனியாா் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. ஆங்கிலம் சாிவர அறிந்தவா்களிடமிருந்து வெளிநாட்டுக் கம்பெனிகள் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு அதிக இலாபத்தைச் சம்பாதிக்கின்றனா். இந்த முதலாளிகளுக்கெல்லாம் உங்களைப் போன்றவா்கள் மறைமுக ஏஜெண்டுகளாக செயல்படுகிறீா்கள். உங்களுடைய இத்தகு நற்செயல்களை நீங்கள் தொடா்ந்தால் தமிழ் நாட்டு மாணவா்களின் அறிவுத்திறன் அகல பாதாளத்தில் வைத்துப் புதைக்கப்படும். எச்சாிக்கை.

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் பீ எசு

    வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து நைஸாக நழுவி விவாதத்தை தடம் புரளச்செய்யும் அவலத்தை எப்போது தலை முழுகப்போகிறீர்கள்?

    \\\ தாயை வீட்டில்தான் வைத்துப் பாதுகாப்பர்.
    ஊர்வலம் செல்ல மனைவி/அல்லது காதலிதான் வேண்டும்.
    தாய் = தமிழ்
    காதல் மனைவி = ஆங்கிலம்
    வைப்பாட்டி = ஹிந்தி
    இதுதான் என் வரிசை. வைப்பாட்டி என்று ஹிந்தியைப் போடக் காரணம். வெளியே ஓபனாக சொல்லிக்க முடியாது :-) \\

    அடுத்த மொழியை கேவலமாக இழிவு செய்து அதற்குக் காரணம் வேறாம்.

    உத்தரபாரதத்தில் ஒட்டுமொத்த தக்ஷிணபாரதத்து மொழியையும் கிண்டலடிக்கும் அரைகுறைப் பேர்வழிகள் உண்டு. ஒரு தகர டப்பாவில் கற்களைப்போட்டு குலுக்கினால் வரும் ஓசை எப்படி இருக்குமோ ……………… அப்படியே ஒட்டுமொத்த தக்ஷிணபாரதத்து மொழிகள் என்று உளறிக்கொட்டும் கெக்கே பிக்கே அறைகுரைகள் உண்டு. அந்த அரைகுறைப் பேர்வழிகளுடன் ஒருகாலத்தில் மல்லுக்கு நின்றதுண்டு. ஸர் சி பி இப்படியான அரைகுறைகளை இடித்துரைத்து சொல்லும் பதிலை அவர்களுக்குச் சொன்னதுண்டு. ஆனால் உங்களுடைய விசிலடிச்சான் குஞ்சப்பத்தனமாகிய……….. கேவலமான அரைகுறை உளறலைக் கண்ட பின்னர்……………. ஒட்டு மொத்த ஹிந்துஸ்தானத்திலும் அரைகுறைகளுக்கு குறைவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

    எப்போது பண்புடன் எழுதக் கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? ஹிந்துஸ்தானத்தில் கோடானு கோடி மக்களுடைய தாய் மொழி ஹிந்தி. அடுத்தவருடைய ***தாயை** வைப்பாட்டி என்று கேவலப்படுத்தும் இழிவினை நிச்சயம் ஒரு தமிழகத்தில் பிறந்த தமிழன் செய்ய மாட்டான்.

    ஏசப்பா!!!!!!!!!!!!!!!! அவதார வரிஷ்டர்களுக்கு ஸன் மதி தோ.

    நிற்க.

    விவாதத்தில் உள்ளது தாய்மொழி வழிக் கல்வி. பீஹாரிலிருந்து உத்தர ப்ரதேசத்திலிருந்து ஐ ஏ எஸ் மற்றும் இதர மேற்படிப்புகளுக்கு படிக்க விழையும் மாணாக்கர்களுக்கு அவர்களது தாய் மொழியில் மேற்படிப்பை படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேற்படிப்புக்கான புத்தகங்கள் எளிதில் புரிந்துகொள்ளத் தக்க …………. சுளுவான படி விவரணங்கள் அடங்கிய…….. தாய்மொழியில் உள்ளன. மாற்று மொழிகளின் கலப்பும் அதில் உள்ளது என்ற போதிலும் கூட. இப்படி படித்த மாணாக்கர்கள் எதிலும் குறைந்து போகவில்லை. சக்கைபோடு போடுகிறார்கள். இன்று தேச முழுதும் ஐ ஏ எஸ் அதிகாரிகளாக பெருமளவு கோலோச்சுவது இப்படி தங்கள் தாய்மொழிவழிக் கல்வி கற்றவர்கள் தான்.

    தமிழுக்காக முதலைக்கண்ணீர் வடித்து ஆங்க்லத்துக்குக் கொடிபிடிக்கும் உங்களைப் போன்றோரால் ………….. அந்த மனோநிலையை ப்ரதிபலிக்கும் தமிழகத்து படிப்புச் சூழலால் தான்……. தமிழக மாணாக்கர்களுக்கு ………………. தாய்மொழிவழிக் கல்வி கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது.

    பத்தாம் வகுப்பு வரைக்கும் தாய் மொழியில் படித்து ……………. பின்னர் ஆங்க்லத்துக்குக் மாறிய என்னைப்போன்றோர்…………… தாய்மொழியில் கல்வி பயின்றதால் எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை.

    நீங்கள் ஒருக்கால் மிஷநரிப்பள்ளியில் ஆங்க்லக் கல்வி பயின்றிருக்கலாம். அதனால் பயன் பெற்றும் இருக்கலாம். மறுக்கவில்லை. ஆனால் தாய்மொழிக் கல்வி கேடு விளைவிக்கும் என்பது எந்த விதத்திலும் நிரூபணமில்லாத வெட்டி விதண்டா வாதம்.

  7. Avatar
    BSV says:

    தாய்மொழி வழி இந்திய ஆட்சிப்பணி தேர்வெழுதி பணியில் அமர்ந்தோர் சிறப்பாக (திரு கிருட்டிணக்குமார் மொழியில் சக்கை போடு) பணி செய்கிறாரென்பதற்கும், ஆங்கில வழியில் பணியில் அமர்ந்தோர் அப்படி பணி செய்யவில்லை எனபதையும் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுக. இல்லாவிட்டால் இஃதொரு பொய்யே.

    நானும் 12 வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி கற்றவனே. ஆனால் அக்கல்வியினால் என் சிந்தனை சிறகடிக்கவில்லை. அடிமைத்தனத்தில் சுருங்கியே கிடந்தது. என் வாழ்க்கையிலிருந்துதான் மற்றவர்களுக்கு நான் எதுவும் சொல்லமுடியும். அதன்படி, தமிழ் சிந்தனையை அடிமைப்படுத்துகிறது என்பதே. பழமை பேசி புதுமையை இகழும் மனிதர்களையே உருவாக்குகிறது.

    இந்திய விடுதலைப்போராட்டத்தை அலசும் வரலாற்றறிஞர்கள் சொல்வது: இந்திய விடுதலையை வாங்கித்தந்தது ஆங்கிலமே. அதை எப்படியென்று விரிவஞ்சி விடலாயிற்று.

    ஆங்கிலத்தில் வகை வகையான சிந்தனையாளர்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறார்கள். தமிழ் பழமை வாதிகளின் கொடுங்கரங்களுக்குள் சிக்கிக்கொண்டு [புதுமைக்காக மன்றாடிக்கொண்டிருக்கிறது.

    தமிழ் இலக்கியம் என்ற பேரில் செய்யப்படுவது முன்னோர் பிடித்த முயலுக்கு மூணே கால்; கேள்வி கேட்காதே என்னும் தால்பானித்தனம்தான். இதனால் பெருவுகையும் பலனுமடைவது திரு கிருட்டிணக்குமார் போன்ற மதவாதக்கூட்டமே. மதத்தைத் திணித்து மக்களை மருங்க வைக்க அவர்களிடம் அடிமைச் சிந்தனை ஊறவிட வேண்டும். தமிழ் அதைச்செய்ய இவர்கள் பலனை எடுத்துக்களிக்கிறார்கள். சங்ககால இலக்கியத்துக்குப்பின்னர் தமிழ் படுத்துவிட்டது. தனிநபர் சிந்தனை ஓடி, கூட்டுச்சிந்தனை சமய இலக்கியம் என்ற போர்வையில் உள்ளுழைந்தது. அது இன்றும் தொடர்கிறது.

    நான் மேலே எழதியவற்றில் எச்சொல்லும் பிறமொழிச்சொல் அன்று. தமிழின் மேல் திடீர்க்காதல் வேடம் போடும் திரு கிருட்டிணக்குமார் கலப்பில்லாமல் எழுத முடியுமா? முடியும்போது அன்னாரின் சொற்கள் மதிக்கப்படும். அதுவரை தென்மாநிலத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் எப்படி இரசிக்கப்படுகிறதோ அப்படி.

    தமிழ் பற்றி இங்கும் மட்டுமன்று, எங்கு கட்டுரை வந்தாலும், அதில் பல தமிழ்ப்பிழைகளை என்னால் காட்ட முடியும்.

    இப்படிப்பட்ட நிலையில் தமிழ் இருக்கிறது.

    ஆங்கிலம் கடினமான மொழி என்று கதை விடுபவர்கள் ஆசிரியர்களே. அதன் காரணம் அவர்களே அரைகுறை ஆங்கில அறிவுடனே வேலைக்கு வந்திருக்கிறார்கள். குருடன் குருடனை வழி காட்டினால் என்னவாகும்?

    இன்றைய செய்தித்தாள்களின்படி இமாச்சல் ;பிரதேசத்தில் கணிதமும் ஆங்கிலமும் முதல் வகுப்பிலேயே வரும் கல்வியாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படப்போகின்றன.

    தமிழை அரசியல்வாதியே நம்பவில்லை. அப்படியிருக்க அப்பாவிகளை ஏன் ஏமாற்றுகிறீர்கள் ? அரசியல்வாதி வாக்குக்களுக்காக போடும் வேடம். மதவாதிகள் மதத்தைத் திணிக்கப் போடும் வேடம்.

    உங்களுக்கென்ன வேடம் இருக்க முடியும்? Be yourself. Take a decision in the best interests of your child.Let him or her have a life far better than you had. Let them learn Tamil also; because we need to have an identity. Tamil is there to serve that purpose only. Don’t give more importance to it.If you give, as already said, the beneficiaries are other cunning men. not you at all. Beware of them!

    1. Avatar
      Rathinavelu says:

      உண்மை நண்பரே.பிரபுராம் முனைவர் தம்ழில். அவர் பிழைபடத்தான் எழுதுகிறார்;வேண்டாத வடமொழிக் கலப்புடன். இவர்கள் கூற்றின்படி குழந்தை பாலுக்கும் வலிக்கும் வெகுளிக்கும் அழவே முடியாது.
      பொதுவாக, நமக்குள் நாமே பேச, பிறரிடம் பேச, மொழி பயன்படுகிறது. “அய்யோ நேரமாயிற்றே புறப்ப்டாதிருக்கிறோமே” என்று நமக்குள் நாமே ‘பேசிக்’ கொள்ளூம்முன் அதனைத்தூண்ட என்ன நிகழ்ந்த்ததோ அது , மொழிசாராத, மனத்தின் ‘உள்’வேலை.
      அதனால்தான் மனம், மொழி,(செயல்) என்றனர் முன்னோர்.

      சிந்தனை எப்படி நடக்கிறது என்றே இன்னும் பிடிப்டாதபோது அதற்கு ஒரு மொழி கூறுவத் எப்படி?
      முன்னோர்கள் இதை அறிந்தே மனம் , மொழி, செயல் என்று வேறு படுத்தியுள்ளார்கள். Savant என்ற தன்மைகொண்டார் மனமும் செயலும் மொழி இல்லாமல் இணைந்தவர்களாய் இருப்பது பற்றி ஆய்வு நடக்கிறது. இது பற்றி Brain என்ற பெயரில் Scientific American வெளியிட்ட புத்தகத்தில் இருக்கிறது.
      இப்படிக்கு,
      T.Rathinavelu, rathinavelu@gmail.com

  8. Avatar
    ஷாலி says:

    //பத்தாம் வகுப்பு வரைக்கும் தாய் மொழியில் படித்து ……………. பின்னர் ஆங்க்லத்துக்குக் மாறிய என்னைப்போன்றோர்…………… தாய்மொழியில் கல்வி பயின்றதால் எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை.//

    க்ரிஷ்ணகுமார்ஜி! கிச்சுகிச்சு மூட்டி சிரிக்கவைப்பதில் நீங்க கில்லாடிதான்.எவ்வளவு தைரியமாக எழுதுகிறீர்கள்…தாய்மொழியில் கல்வி பயின்றதால் எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை.
    பத்தாம் வகுப்பு வரை உங்கள் தமிழ் பத்தரை மாற்று தங்கம்தான்,உஞ்சவிருத்தி உத்தியோகத்திற்கு உத்தரபாரதம் பாரதம் போனவுடன்….உங்க தமிழ் ஓரங்கட்டப்பட்டு,,சமஸ்கிருததமிழில்தானே இன்றும் சல்லாபம் சலம்பல் எல்லாம்…தாய்மொழியையப் பற்றி நீங்களும் பேசுகிறீர்கள்…இது உங்களுக்கே நல்லாயிருக்கா? ம்ம்…ம்..பொழிக! பொழிக!!

  9. Avatar
    Rathinavelu says:

    ” நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவிகிதம் ” அறிவாளியே
    தமிழை ஒழுங்காகப் படிக்கவும். சதவிகிதம் என்றாலே நூற்றுக்கு
    நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவிகிதம் என்றால் 1 சதவிகதத்துக்கும் குறைவு;.99; தொள் நூறு தொண்ணூறாகும் தொன்னூறாகாது.

    சதவிகிதம் தமிழா, தமிழா?!

    மனிதன் ஆழ்ந்த சிந்தனை எளிய சிந்தனை மொழி கடந்தவை; மனம் மொழி செயல் என்று தமிழ் கூறுவது என்ன?
    பரந்து கிடக்கும் அறிவு, வளர்ந்துவரும் அறிவு எவ்வளவு என்று தெரியாத குட்டைத்தவளைகள் ” கோணிப்பையில் குவலயம்” அடங்காது என்று தெரிந்துகொள்ளவே போவதில்லை.
    ஒழுங்காக ஆங்கிலம் படித்துத் தமிழர் முன்னேறுவதை உங்களால் எல்லாம் தடுக்க முடியாது.
    எதற்கும் மூன்றாம் வகுப்புத்தமிழ் கற்கவும்.
    “வாய்புகள் இருக்காது.” பன்மை எழுவாய்க்கு ஒருமை வினை முற்று!! அங்கங்கே ‘சந்தி’ சிரிக்கிறது.நடைபிணம்
    “கல்வி கற்பிக்கப் படாமையே ” படாதது என்று இருக்கவேண்டும் இங்கும் ஒருமை- பன்மைக்குழப்பம் நீங்களெல்லாம் தமிழ்ப் பேராசிரி(றி)யர்!
    ஆங்கிலத்தின் உதவியால் பணம் சேர்த்த முடியும் என்பது மாயை அன்று(மாயை தமிழ்ச் சொல்லுமன்று) நான் என் பிள்ளைகள் என் பல 100 மாணவர்கள் கோடிக்கணக்கில் சேர்த்ததும் சேர்த்துக் கொண்டிருப்பதும் ஆங்கிலத்தால்தான் .

    பிறந்த குழந்தை பாலுக்கு அழுவது “தாயே எனக்குப் பால் வேண்டும்” என்ற சிந்தனையாலா?

    எல்லாம் சரி, இத்தனை பிழைகளா ஒரு பக்கக் ‘கட்டு’ ரையில்?
    எனக்குத் தமிழ் நன்கு பாடம். பிழையில்லாமல் பக்கம் பக்கமாக எழுதுவேன்;எழுதுகிறேன். கீழே ஓர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:

    (தமிழ்ப் போதும் ஆங்கிலம் வேண்டாம் என்னும் பிரபஞ்சனைப் போன்றார்க்கு)
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    கோணிப் பையில் குவலயம் முழுதும்
    கொண்டு போவேன் என்று சொல்லும்
    கேனப் பயலே கேளடா கிணற்றுத்
    தவளை நீயடா தத்துப் பித்தாய்ப்
    பேனாப் பிடித்துப் பிதற்றும் பேதாய்!
    பிச்சை எடுத்துப் பிழைத்தது போதும்
    தானாய் உழைத்துத் தலைவிதி வசத்தால்
    தாரம் ஆனவர் தளர்வினை நீக்கடா
    ( கேனம் நல்ல தமிழ்ச் சொல்;அறிவு வளராதவரைக் குறிப்பது; imbecile என்ற ஆங்கிலசொல்லுக்கு ஏறக்குறைய இணை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *