தொடுவானம் 103. உடலியல் அறிமுகம்

This entry is part 9 of 16 in the series 17 ஜனவரி 2016
Physiologyஅன்று இரவு முழுதும் பிரேதங்களின் நினைவில்தான் கழிந்தது. ஒரு காலத்தில் அவர்கள் உயிரோடு இருந்தபோது எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள். இன்று  வெறும் மரக்கட்டைகள் போன்று கிடக்கிறார்களே! நாங்களும் அவர்களை மனிதர்கள் என்பதை மறந்த நிலையில் வெட்டி உடற்கூறு பயில்கிறோமே என்ற எண்ணம் மேலோங்கியது. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களுடைய உடலை இப்படி எங்களுக்காக தானம் செய்துள்ள தியாகச் செம்மல்கள்தான் என்றும் எண்ணிக்கொண்டேன்.

மறுநாள் வகுப்பும் கையின் அமைப்பைப் பற்றிதான். தசைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள் போன்ற அனைத்தையும் அறிந்துகொள்ளவேண்டும். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன. இவை இலத்தீன் மொழி பெயர்கள். இவற்றை நினைவில் வைத்திருப்பது மிகவும் சிரமம் என்பதோடு குழப்பமும் நிறைந்தது. திரும்பத் திரும்ப உச்சரித்தால்தான் நினைவில் நிற்கும்.

உதாரணமாக கையை எடுத்துக்கொண்டால் அதை palm, forearm , arm என்று பிரித்து கூறலாம். இம் மூன்று பகுதியையும் நாம் கை என்றே சொல்லுகிறோம். எப்போதாவது உள்ளங்கை , மணிக்கட்டு,  முழங்கை , என்கிறோம். உள்ளங்கையின்  ஐந்து விரல்களையும் சேர்த்து palm என்று அழைக்கும் கைப் பகுதியின் தசைகளைத்தான் நாங்கள் அறுத்து பயின்றுகொண்டிருந்தோம். கையின் கட்டை விரல் அல்லது பெருவிரலின்  தசைகள் நான்கு. அவற்றின் பெயர்கள் Abductor Pollicis, Opponens, Pollicis , Flexor Brevis Pollicis , Adductor Pollicis என்பவை. ஒரு விரலின் தசைகள்  இவ்வாறு நெருக்கமான வகையில் பெயர்கள் கொண்டுள்ளதால் நினைவில் வைத்திருப்பதில் குழப்பம் உண்டாகும். அதைத் தீர்க்கவே நேரடியாக அந்தந்த தசைகளை அறுத்துப் பார்த்து நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது இந்த அறுவைப் பயிற்சியாகும்! கையின் ஒரு விரலின் தசைகளை நினைவில் வைத்திருப்பதே இவ்வளவு சிரமமென்றால் உடலின் அத்தனை  தசைகளையும் நினைவில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய சிரமம்!
உடற்கூறு பயிலும் இந்த இரண்டு வருடங்களும் மனதை வேறு காரியங்களில் செலுத்தாமல் முழுமூச்சுடன் இதைப் பயின்றாகவேண்டும். இல்லையேல் தேர்வில் சிரமம் உண்டாகும். ஒருமுறை தவறினால் ஆறு மாதங்கள் வீணாகும். மீண்டும் தேர்ச்சியுற்றபின்புதான் நான்காம் வருடம் செல்ல முடியும்.

தசைகள் அனைத்துமே எலும்புகளில் இணைந்திருப்பதால் அந்த எலும்புகளைப்பற்றியும் பயின்றாக வேண்டும். ஆகவே உடம்பிலுள்ள அத்தனை எலும்புகளின் பெயர்களையும் அவற்றின் ஒவ்வொரு பகுதிகளையும் தெரிந்திருக்கவேண்டும்.

வகுப்புகள் இரண்டாம் நாள் முடிந்ததும் எங்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு கறுப்புப் பெட்டி தரப்பட்டது. அது கனமாகவும் இருந்தது. அதை அறைக்குக் கொண்டுசென்று திறந்து பார்க்கச் சொன்னார் டாக்டர் ஹர்ஷா. அதை பத்திரமாக விடுதிக்குத் தூக்கிச்சென்றோம். எங்களைப் பார்த்த சீனியர்கள் கைகொட்டி சிரித்தார்கள். ஜெபம் செய்துவிட்டு திறந்து பார்க்கச் சொல்லி பயமுறுத்தினார்கள். அறையில் அதைத் திறந்து பார்த்தால் உள்ளே நிறைய எலும்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு மண்டை ஓடும் இருந்தது. அந்த எலும்புகளை ஒவ்வொருவரும் தங்களின் அறையில் இரண்டு வருடங்கள் வைத்திருக்கவேண்டும். ஓய்வு நேரத்தில் அவற்றில் ஒவ்வொன்றாக எடுத்து தடவி அதன் அமைப்பையும் அதன் மேடு பள்ளங்களையும் அவற்றின் பெயர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். நான் என்னுடைய மண்டை ஓட்டை மேசையில் வைத்து அழகு பார்த்தேன்! தனியாக இருக்கும்போது அதனுடன் பேசுவேன். அதுவும் என்னிடம் பேசுவதுபோல் தோன்றும். இரவு நேரத்திலும் அது பேசுவதுபோல் கேட்டது. அது வெறும் பிரமை!

          உடற்கூறு பயில்வது இவ்வளவு சிரமம். இவ்வளவுக்கும் பிரேதங்களை அறுத்துப் பார்த்து பயிலும் வாய்ப்புகள் நிறைந்தது. அனால் இதைவிட சிரமமான இன்னொரு பாடமும் இரண்டாம் ஆண்டில் படித்தாகவேண்டும். அதன் பெயர் ” பிசியோலாஜி ” ( Physiology ) என்பது. இதை தமிழில் உடலியல், உடல் செயலியல் என்று கூறலாம். இதில் எதையும் நேரடியாகக் காணமுடியாது. உடலின் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப்பற்றியது உடலியல். உடற்கூறும் உடலியலும் ஒன்றாக இணைந்திருப்பதால் இந்த இரண்டு பாடங்களையும் இரண்டு வருடங்கள் பயின்றாக வேண்டும். இந்த இரண்டிலும் தேறியபின்புதான் நான்காம் ஆண்டுக்குள் புக முடியும்.
          முதல் நாள் உடலியல் வகுப்புச் சென்றோம். அதை நடத்தியவர் டாக்டர் ஜாக்கரியா என்பவர். முன்பக்கத் தலையில் கொஞ்சம் வழுக்கையாகவும், நல்ல நிறத்தில் காணப்பட்டார். அவரும் மலையாளிதான். அவர் ஆங்கிலத்தில் மலையாள உச்சரிப்பு அதிகம் இருந்தது. நன்றாக சொற்பொழிவு ஆற்றுபவர்போல்தான் பேசினார். இந்த பாடமே நிறைய சொற்பொழிவுகள் நிறைந்ததுதான் என்பதை விரைவில் தெரிந்துகொண்டேன். ஆகவே அவர் பேசும்போதே உடனுக்குடன் குறிப்புகள் எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு இரவில் அறையில் மொத்தமான உடலியல் நூலைப் படித்தாகவேண்டும். அப்போதுதான் ஓரளவாவது அவர் சொன்னது புரியும். முதல் நாள் அவர் உடலியல் பற்றிய சரித்திரப்பூர்வமான முன்னுரை வழங்கினார். அது கேட்பதற்கு சுவையாகத்தானிருந்தது! ( மனதில் பதிய வைப்பதுதான் சிரமமாகவிருந்தது. )
          ” பிசியோலாஜி ” என்ற சொல் பண்டைய கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இது உயிரியலின் ஒரு கிளை. இது உயிரினங்களின் உடல்களின் செயல்பாட்டை அறிவியல்பூர்வமாகப் பயில்வதாகும். நோயற்ற நிலையின்றி ஆரோக்கியமான நிலையில் உடலின் உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றியது உடலியல்.
          உடலியல் பற்றிய சிந்தனையும் கல்வியும் பண்டைய இந்திய நாகரிகக் காலத்திலேயே இருந்துள்ளது. மனிதனின் உடலியல் மருத்துவத்துடன் ஒரு கூறாக ஆனது  கிரேக்க நாட்டில் ஹிப்போகிரெட்டஸ் வாழ்ந்த காலமான கி.மு. 420 ஆம் ஆண்டில். ஹிப்போகிரேட்டஸ்  என்பவர்தான் நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர். அவர் அப்போது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் இயற்கையின் அடிப்படை  சக்திகளான நிலம், நீர், ஆகாயம்,, நெருப்பு ஆகியவற்றால் ஆனது என்றும் அவை உடலில் நான்கு வகையான நீர்மங்கள் என்ற குழம்பு வகையாக உள்ளதென்றும் கூறினார். அவர் அவற்றை கருப்பு பித்தம், சளி, இரத்தம், மஞ்சள் பித்தம் என்று வகைப்படுத்தினார்.
          அவரைத் தொடர்ந்து அரிஸ்டாட்டில் உயிர்களின் செயல்பாட்டுக்கு வெப்பம், குளிர், ஈரம், உலர்தல் தேவை என்ற தத்துவத்தை முன்மொழிந்தார்.
அதன் பின்பு குலாட்  கேலனுஸ் ( கி.பி. 130 – 200 ) என்பவர்  ( பின்பு கெலன் என்று அழைக்கப்பட்டார் ) ஆராய்சிகளின் வழியாக உடலின் செயல்பாடுகளை ஆராயலானார். அவர் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் நீர்மங்களில் சமநிலை குறையும்போது நோய் உண்டாகிறது என்றார். அது உடலின் எல்லா உறுப்புகளிலும் உண்டாகலாம் என்றார். அவர் உடலின் உறுப்புகளை மூன்று தொடர்புடைய பிரிவுகளாகப் பிரித்து விளக்கம் அளித்தார். மூளையும் நரம்புகளும் சிந்தனைக்கும் உணர்வதற்கும் செயல்படுவதாகவும், இருதயமும் தமினிகளும் ( Heart and Arteries ) உடலுக்கு உயிரைத் தருவதாகவும், கல்லீரலும் சிரைகளும்  ( Liver and veins ) ஊட்டத்தையும்  உடல் வளர்ச்சியையும் உண்டுபண்ணுவதாகக் கூறினார்.அதோடு நில்லாமல் அவர்தான் பரிசோதனைகள் மூலம் உடலியல் கற்பதற்கு முன்னோடியானார். அதைத் தொடர்ந்து 1400 வருடங்கள் கேலன் போதித்த ஆராய்ச்சி தழுவிய உடலியல்தான் மருத்துவ வளர்ச்சியில் பயன்படுத்தப்பட்டது.
          ” பிசியோலாஜி ” என்ற பெயரை முதன்முதலாக பயன்படுத்தியவர் ஜீன் பெர்னல் ( 1497 –  1558 ) என்னும் பிரெஞ்சுக்காரர்.
          19 ஆம் நூற்றாண்டிதான் உடலியல் வெகு வேகமான வளர்ச்சி கண்டது.குறிப்பாக 1838 இல் கண்ணறை கொள்கை ( Cell Theory ) மத்தாயஸ் ஸ்க்லீடன் , தியோடோர் ஸ்வான் என்னும் இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மூலமாக உயிரினங்கள் அனைத்துமே கண்ணறை ( Cell ) என்ற தனித்தனி கூறுகளால் அமைந்தவை என்ற உண்மை தெரியவந்தது. இதைத்  தொடர்ந்து கிளாட் பெர்னார்ட் ( Claude Bernard ) ( 1813 – 1878 ) பல்வேறு ஆராய்ச்சிகளின்மூலமாக உடலுக்குள் அமைந்துள்ள சுற்றுச்சார்பு ( Internal Environment ) கருத்தை வெளியிட்டார். அதன் பின்னணியில் 1925 இல் வாலர் கேனன் என்னும் அமெரிக்கர் ” ஹோமியோஸ்டேசிஸ் ” தத்துவத்தை வெளியிட்டார்.அது மிகவும் பிரபலமானது. இதன் மூலம் உடலின் உள்ளுறுப்புகள் அனைத்துமே சமநிலையில் இருப்பதும் அதற்கான உடலியல் மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதும் இந்த ” ஹோமியோஸ்டேசிஸ் ” என்னும் உடலின் சமநிலைக் கட்டுப்பாடுதான் என்பது புலனானது.
          உடற்கூறு பயில மனித பிரேதங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் உடலியல் பயில உயிருள்ள மனிதர்களைப் பயன்படுத்த இயலாது. அதனால் உயிருள்ள நாய்களைத்தான் பயன்படுத்தினர். அது இன்றும் தொடர்கிறது. உடலியல் பற்றி முதல் நாளன்றே டாக்டர் ஜாக்கரியா இத்தைகைய வரலாற்றுப்பூர்வமான அறிமுகவுரையாற்றினார். நாங்கள் மெய்மறந்து அதைக் கேட்டு மகிழ்ந்தோம்.
          உடற்கூறு போன்றே உடலியலும் குழப்பமானதே. இதையும் இரண்டு வருடங்கள் பயிலவேண்டும். மனதை வேறு காரியங்களில் செலுத்தாமல் உடற்கூறு, உடலியல் நூல்களில் புகுத்தவேண்டும்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationதாரை தப்பட்டை – விமர்சனம்நல்வழியில் நடக்கும் தொல்குடி!
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *