உடலியல் பாடத்தில் உடலின் உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றி இரண்டு ஆண்டுகள் பயில வேண்டும். உடலியல் ஆராய்ச்சிகளில் இறந்துபோன மனித உடல்கள் பயன்படுத்த முடியாத காரணத்தால் நாய்களும், தவளைகளும், முயல்களும் பயன்படுத்தப்பட்டன.
முதன்முதலாக நாய்களைப் பயன்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க ஒரு கண்டுபிடிப்பை உலகுக்கு உணர்த்தியவர் பாவ்லோவ் ( Pavlov ) என்ற ரஷ்ய நாட்டு உடலியலாளர் . பல அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்று இதுவும் எதிர்ப்பாராத ஒரு கண்டுபிடிப்புதான்! அவர் கண்டுபிடித்த உடலியல் உண்மையும் அதைக் கண்டுபிடித்த விதமும் சுவையானது.
அவர் நிறைய நாய்களை வளர்த்தவர். அவற்றுக்கு உணவு தரும் வேளையில் அவற்றின் வாயிலிருந்து எச்சில் வழிவதை அவர் காண்பதுண்டு. சில வேளைகளில் அவர் உணவு கொண்டுசெல்லாவிட்டாலும், அவரைப் பார்த்ததுமே அவற்றுக்கு எச்சில் வழிந்தது. அதையே வைத்து ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட முடிவு செய்தார்.அது மிகவும் எளிமையானதுதான்.
அவர் ஒரு நாயை தமது ஆராய்ச்சிக்கு தயார் செய்தார் . ( படம் இணைத்துள்ளேன் ) அதன் வாயில் ஒரு நீண்ட குழாயை இணைத்து எச்சிலை அதன் வழியாக ஒரு கிண்ணத்தில் சேகரிக்க வழி செய்தார். நாயின் செயல்பாட்டை பதிவு செய்யும் கருவியையும் உடன் இணைத்தார்.
முதலில் அவர் உணவு கொண்டு சென்றார். அதைப் பார்த்ததும் அதன் எச்சில் வழிந்து குழாயினுள் புகுந்தது. அதுபோன்று சில நாட்கள் தொடர்ந்தார். பின்பு உணவை அவருடைய உதவியாளரிடம் தந்து நாய்க்கு தரச் சொன்னார். அவரைப் பார்த்ததும் நாய்க்கு வாயில் எச்சில் வழிந்தது. உணவை இயல்பான துலங்கல் (unconditional stimulus ) என்றும் நாய்க்கு எச்சில் வழிவதை இயல்பான மறிவினை ( unconditional reflex ) என்றும் பதிவு செய்துகொண்டார். இதை எளிதாகச் சொல்லவேண்டுமெனில் இயல்பாகத் தூண்டுவதும் அதன் விளைவாக இயல்பாக எதிர் விளைவு உண்டாகிறது எனலாம்.
அதன்பின்பு உணவுத் தட்டு இல்லாமல் மணி மட்டும் அடித்தார். நாய்க்கு எச்சில் வழியவில்லை. மீண்டும் தட்டுடன் சென்று மணி அடித்தார். எச்சில் வழிந்தது. அதுபோன்று சில நாட்கள் பழகியபின்புதான் மணியை மட்டும் அடித்தபோது நாய்க்கு எச்சில் வழிந்தது. இதை கட்டுப்படுத்திய மறிவினை ( conditioned reflex ) என்று பதிவு செய்தார். மணியோசையை கட்டுப்படுத்திய துலங்கல் ( Conditioned Stimulus ) என்று பதிவு செய்தார். இந்த ஆராய்ச்சியை அவர் செய்தது 1902 ஆம் வருடத்தில்.
இந்த பரிசோதனை மிகவும் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இதுவே சில ஆண்டுகளுக்குப்பின்பு ரஷ்ய நாட்டின் தலை எழுத்தையே மாற்றி அமைத்துவிட்டது! 1919 ஆம் வருடத்தில் லெனின் பாவ்லோவின் பரிசோதனைக்கூடத்துக்கு இரகசியமாக வந்தார். பாவ்லோவ் கண்டுபிடித்த கட்டுப்படுத்திய மறிவினையைப் ( Conditioned Reflex ) பயன்படுத்தி மனிதர்களை மாற்ற இயலுமா என்று கேட்டார். ரஷ்ய மக்களை கம்யூனிசத் தத்துவத்தை ஏற்று பொதுவுடைமை வழியில் அவர்களை கொண்டுசெல்லவேண்டும் என்றார். அவர்களை கம்யூனிச வழியில் நினைக்கவும் செயல்படவும் மாற்றியமைக்கவேண்டும் என்றும் விளக்கினார். அது கேட்டு பாவ்லோவ் அதிர்ச்சியுற்றார். காரணம் அவர் தன்னுடைய நாய்களுக்குச் செய்ததைப்போன்று மனிதர்களுக்கும் செய்யச் சொல்கிறார் லெனின்! ” நீங்கள் என்ன ரஷ்ய மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக மாற்றவேண்டும், அவர்கள அனைவரும் ஒரே மாதிரியாக செயல்படவேண்டும் என்கிறீரா? ” வியப்புடன் வினவினார் பாவ்லோவ். ” அப்படித்தான்! மனிதனை மாற்றலாம். அவனை நாம் எப்படி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோமோ அப்படியே மாற்றலாம். கம்யூனிச தத்துவத்தின் அடிப்படையே மனிதனின் இயல்பை மாற்றி அமைப்பதே. ” என்று லெனின் பதில் தந்தார். பாவ்லோவின் கண்டுபிடிப்பு மிகவும் உன்னதமானது என்றும் அது ரஷ்ய புரட்சிக்கு மிகவும் உதவக்கூடியது என்றும் லெனின் புகழ்ந்தார். இதே கட்டுப்படுத்திய மறிவினையைப் பயன்படுத்தி ரஷ்ய மக்களை ஒரு வழிக்குக் கொண்டுவரலாம் என்று ரஷ்ய கம்யூனிஷ்ட் கட்சி முடிவு செய்தது. அதன் நாத்திக நம்பிக்கையையும், பொதுவுடமைக் கொள்கையையும் மக்கள் மனதில் பதியவைத்து இதை செயல்படுத்தி லெனின் வெற்றி கண்டார். அதன் விளைவாக ரஷ்யா முதுதும் கம்யூனிஸ்ட் தத்துவம் பரவியது! இவ்வளவுக்கும் இந்த சாதாரண நாயை வைத்து நடத்திய ஓர் ஆராய்ச்சி ஒரு நாட்டின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்துவிட்டது!
உடலியல் பாடம் வகுப்பறையிலும் பரிசோதனைக் கூடத்திலும் நடந்தது. நாங்கள் நாய்களைப் பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக தவளைகளைப் பயன்படுத்தினோம். அது பற்றி பின்பு விளக்குகிறேன்.
இரண்டாம் ஆண்டில் உடற்கூறு, உடலியல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இன்னும் இரண்டு பாடங்களும் படித்தாகவேண்டும். அவை கரிம வேதியியல் ( Organic Chemistry ) , உயிர் வேதியியல் ( Biochemistry ) என்னும் இரண்டு பாடங்கள். இதில் கரிம வேதியியல் பாடத்தை ஒரு வருடம் பயிலவேண்டும். உயிர் வேதியியல் பாடத்தை உடலியலுடன் இரண்டு ஆண்டுகள் கற்க வேண்டும். இந்த இரண்டுமே மிகவும் சிக்கலான பாடங்கள். காரணம் எதையும் காண இயலாததே! கொள்கை அளவில் ( Abstract form ) கற்பனையில்தான் முழுதும் பயிலவேண்டும். பரிசோதனைக்கூடத்தில் இரசாயனங்களுடனும் வாயுக்களுடனும் கற்றறிய வேண்டும். அவற்றை முழுமையாகக் காண இயலாது.
கரிம ( Organic ) என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. இதற்கு இயற்கையானது ( Natural ) என்று பொருள் கூறுவர் . விவசாயிகள் செயற்கை உரமின்றி உண்டாக்கும் காய்கறிகளை கரிம காய்கறிகள் ( Organic Vegetables ) என்று அழைப்பார்கள். கரிம வேதியலில் ” கார்பன் ” பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும். ” கார்பன் ” என்பது கரி. இது எல்லா உயிர்ப் போருள்களிலுமுள்ளது.உயிருள்ள அனைத்திலும் இந்த கரிமம் உள்ளது. எல்லா உயிரினத்தின் மூலக்கூறிலும் ( Molecule ) கரிம அணுக்கள்தான் அதிகம் உள்ளன.மனித உடல் உறுப்புகளின் செயல்பாட்டைப் புரிந்தகொள்ள இந்த கனிம வேதியியலைப் படித்தாக வேண்டும். இந்த வகுப்பை நடத்தியவ ர் டாக்டர் புனூஸ் மேத்தியூ என்பவர். இவர் இளைஞர் தோற்றம் கொண்டவர்.இவர் ஒரு மலையாளி.
உயிர் வேதியியல் என்பது உயிரினங்களில் இரசாயன செயல்பாடுகள் பற்றி ஆராய்வதாகும்.இதை அதிகம் ஆராய்ச்சிக் கூடத்தில் பயிலவேண்டியுள்ளது. இது செல்களினுள் உள்ள புரோதம், கொழுப்பு போன்றவற்றைப் பற்றியும், செல்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வது பற்றியும், ஆரோக்கியத்திலும் நோயிலும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப்பற்றியும் அறிந்துகொள்வது. உயிர் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கூறுவதுதான் உயிர் வேதியியல். இந்த வகுப்பை நடத்தியவர் டாக்டர் ஜேம்ஸ் வர்கீஸ் என்பவர். இவர் வழுக்கைத் தலையுடன் கொண்ட முதியவர். இவரும் மலையாளிதான்.
இரண்டாம் ஆண்டில் இத்தகைய கடினமான பாடங்கள். இவற்றின் நூல்களும் தடித்து கனமானவைதான். ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. ஒரு பக்கமும் விடாமல் படித்தாக வேண்டும். அது போதாதென்று நூல் நிலையத்திலும் நூல்கள் எடுத்து குறிப்புகள் சேகரிக்கவேண்டும். இந்தப் பாடங்களில் மனதைச் செலுத்தினால்தான் எதையும் புரிந்துகொள்ளமுடியும். வகுப்புகளுக்குச் செல்வது முக்கியமானது. இல்லையேல் பாடங்கள் விடுபடும்.
விடுதி அறை இப்போது மாறினோம். இருவருக்கு ஒரு அறை. நானும் சம்ருதியும் ஒரு அறையில் தங்கியிருந்தோம். அவன் அதிகம் தொந்தரவு செய்யமாட்டான். இருவரும் ஒன்றாக உணவருந்துவது, வெளியில் செல்வது வழக்கமானது. இரவில் தூக்கம் வரும்வரை படிப்போம். வேறு பொழுதுபோக்கு இல்லை. அறையில் ஒரு வானொலி பெட்டிகூட இல்லை. நான் அப்பாவிடம் ஒன்று அனுப்பும்படி கடிதம் எழுதினேன். அவர் அது பற்றி பதில் எழுதவில்லை. யாரவது தமிழகம் வந்தால் கொடுத்தனுப்பலாம். ஆனால் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். வானொலி இருந்தால் காதல் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பில் கோட்டை விடுவேன் என்று நம்புபவர் அப்பா!
படிப்பில் கவனம் செலுத்தியதால் கடிதங்கள் எழுதுவதை குறைத்துக்கொண்டேன். ஆனால் சிறுகதைகள் எழுதுவதைத் தொடர்ந்தேன்.அவற்றை தமிழ் முரசுக்கும் தமிழ் நேசனுக்கும் அனுப்புவேன். அவை வெளிவந்தால் அப்பா அவற்றை அனுப்பிவைப்பார்.
செல்வராசன் என்னும் ஒரு தமிழ் ஆசிரியர் எனக்கு நண்பரானார். அவர் எப்போதும் வேட்டியும் வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்திருப்பார்.அவர் என் அறைக்கு வருவார். அவருடன் தமிழ் இலக்கியம் பற்றி பேசி மகிழ்வேன்.பெரும்பாலும் புறநானூறு, அகநானூறு பாடல்கள் பற்றிதான் பேசி இரசிப்போம்!
லதா, வெரோனிக்கா, கோகிலம் ஆகியோர் நினைவில் வருவார்கள். நினைவில் வந்ததுபோலவே மறைவார்கள். என்ன செய்வது. இப்போது மருத்துவம் பயிலும் பருவம்.
” கற்க கசடற ” என்றார் வள்ளுவர். அதற்கான நேரம் இது. எதற்கும் ஒரு நேரம் உள்ளது என்கிறது வேதம். அது வருமாறு:
” ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு ; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு ;
நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு:
கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு ;
இடிக்க ஒரு காலமுண்டு , கட்ட ஒரு காலமுண்டு;
அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு;
புலம்ப ஒரு காலமுண்டு, நடனம் பண்ண ஒரு காலமுண்டு;
கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு;
தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;
தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு;
காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு ;
கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு;
மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;
சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு;
யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம் பண்ண ஒரு காலமுண்டு;
( தொடுவானம் தொடரும் )
- தொலைந்து போன கடிதம்
- பீப் பாடலும் பெண்ணியமும்
- இலை மறை காய் மறை
- புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு
- சாவு சேதி
- சலனங்கள்
- தொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்
- தியானம் என்பது….
- நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சிறுவர் நூல் வெளியீடு
- மரணத்தின் கோரம்
- பேராசிரியர் இரா ஆண்டி நினைவு சொற்பொழிவு
- உன்னைப் பற்றி
- மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை
- மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….
- “ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல
- திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது
- நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை
- மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி
- கட்புலனாகாவிட்டால் என்ன?
- “குத்துக்கல்…!” – குறுநாவல்