தொடுவானம் 107. அவள் பறந்து போனாளே!

This entry is part 17 of 18 in the series 14 பெப்ருவரி 2016

டாக்டர் ஜி. ஜான்சன்

வரப்பில் ஒருவர் பின் ஒருவராக நடந்து வந்தோம். கோகிலத்தை முன்னே விட்டு நாங்கள் பின்தொடர்ந்தோம். பால்பிள்ளை எனக்குப் பின்னால் வந்தான். மௌனமாகவே நடந்து வந்தோம். வயல்கள் வெறிச்சோடிக் கிடந்தன. எங்களை யாரும் கவனிக்கவில்லை. சின்னத் தெருவில்தான் ஒரு சிலர் வயலுக்குச் சென்று வருகிறீரா என்று கேட்டனர்.
வீடு சென்றதும் திண்ணையில் பாய் விரித்து படுத்து நன்றாகத் தூங்கினேன். மனதில் பல்வேறு குழப்பங்கள் குடிகொண்டிருந்தாலும் உடன் உறக்கம் வந்துவிட்டது.
மதிய உணவின்போது அம்மா எழுப்பினார். ஏனோ உணவு சுவைக்கவில்லை. உணவு உண்டபின்பு மீண்டும் படுத்தேன். நல்ல தூக்கம் அப்போதும். மாலையில் பால்பிள்ளை குரல் கேட்டு விழித்தேன். துண்டை எடுத்துக்கொண்டு அவனுடன் ஆற்றங்கரைக்குச் சென்றேன். கரையோரமாகவே நடந்து வெகு தூரம் சென்றோம். அங்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மதகின்மேல் அமர்ந்தோம்.
” அண்ணே… என்ன சொன்னுது கோகிலம்? அழுதமாதிரி தெரிந்ததே? ” தயங்கியபடி கேட்டான்.
” பால்பிள்ளை . நிலைமை விபரீதமாகிவிடும்போல் தெரியுது. ”
” ஆமாம் அண்ணே. அது சத்தம் போட்டு அழுவது தூரத்திலேயே கேட்டது.என்ன சொல்லி அழுதது? ”
” எப்போதும் சொல்வதுதான்…. சாகப்போகிறதாம்! ”
” இது வழக்கமாய் சொல்றதுதானே? அப்படியெல்லாம் செய்யாது.”
” இல்லை பால்பிள்ளை. இந்த தடவை உறுதியாகச் சொல்லிவிட்டது.எனக்கு என்னவோ பயமாக உள்ளது. இதில் நாளை நான் புறப்படணும் ”
” நான் பாத்துக்கிறேன் அண்ணே. நீங்கள் கவலைபடாம போங்க. முடிஞ்சா நாளைக்கி கொஞ்சம் தைரியம் சொல்லிவிட்டுப்போங்க.”
” இல்லை பால்பிள்ளை . நாளையே ஏதாவது நடக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது….”
” என்ன அண்ணே இப்படிச் சொல்றீங்க! ஏதாவது ஆனால் என்ன செய்வது? ”
” அதான் எனக்கும் தெரியலை. ஒரே குழப்பமாக உள்ளது. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றே தெரியலை. ஒரே பிடிவாதம். வாழ்க்கையே வெறுத்த மாதிரி பேசுது.”
” இப்போ நாம் என்ன செய்வது? ”
” இரவு வந்தால் நான் பேசிப் பார்க்கிறேன். வரலையென்றால் நாளை முழுதும் நாம் கண்காணிக்க வேண்டும்.”
” எப்படி? ”
” அதன் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாம் கண்காணிக்க வேண்டும். ”
” நாளை நீங்கள் புறப்படுவது அதுக்கு தெரியும். இன்னிக்கி ராத்திரி எப்படியும் வரும். நீங்கள் ஆறுதலாகப் பேசிப்பாருங்க. அதன் மனசை மாற்றப்பாருங்க . ”
” சரி. அப்படிதான் செய்யணும். வேறு வழியில்லை. ”
ஆற்றில் இறங்கி குளித்தோம். குழம்பிய மூளைக்கு குளிர்ந்த ஆற்று நீர் இதமாக இருந்தது. குளுகுளுவென்று மேலைக் காற்று வீசியது. தூரத்தில் மேற்கில் தங்கத் தகடுபோல் கதிரவன் செந்நிற தொடுவானத்தில் புகுந்து மறைந்துகொண்டிருந்தது. இருட்டுவதற்குள் வீடு திரும்ப ஆற்றங்கைப் பாதையில் விரைந்து நடந்தோம்.
அன்று இரவு படுக்கும்வரை பால்பிள்ளை என்னுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். அவள் வீடு வரவில்லை.எனக்கு அது சஞ்சலம் தந்தது. எப்படியும் வருவாள் என்ற நம்பிக்கையுடன் படுத்துவிட்டேன். பால்பிள்ளையும் வீடு சென்றுவிட்டான். நான் கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன்.
யாரோ தட்டி எழுப்புவது தெரிந்து கண் விழித்தேன். நல்ல இருட்டு. தொட்டுப் பார்த்தேன். அது அவள்தான்! பேச வாய் திறந்தேன். அவள் தன் கையால் மூடினாள்.
” எப்போ வந்தாய்? ” மெல்ல கேட்டேன்.
” இப்போதான்.. ” குனிந்து காதருகில் கூறினாள்.
” விடிந்துவிட்டதா? ” அவளிடம் கேட்டேன்.
” இல்லை. விடியும் நேரம். ஒங்களிடம் ஒரு வரம் கேட்கணும். அதை நீங்க தரணும். ” கெஞ்சுவதுபோல் ஒலித்தது.
” சொல். ” என்றேன்.
” என் உயிர் உங்க கையிலதான் போவணும். ” அவளுடைய கண்ணீர் என்னுடைய கன்னத்தில் போலபோலவென்று கொட்டியது.
” இல்லை. நீ சாகக் கூடாது. நீ வாழணும். ” அவளுடைய கரத்தைப் பற்றியவாறு கூறினேன்.
” முடியாது. எனக்கு வாழ பிடிக்கல. நான் முடிவு செய்துட்டேன். ஓங்க கையிலதான் என் உயிர் போகும். ”
” உனக்கு என்ன பைத்தியமா? ”
” ஆமாம். ஓங்க மேல பைத்தியம். அதனால சாவப் போறேன். என்ன வழி அனுப்பிவிட்டு ஊருக்கு போங்க. நீங்க நான் செத்த பெறகு ஓங்க உயிருள்ள வரைக்கும் என்ன மறக்காதீங்க. ஆமா. என்ன ஒங்களால மறக்காம இருக்க இதுதான் எனக்கு தெரிஞ்ச வழி. என்ன நிம்மதியா போகவிடுங்க. நான் வரேன். ” என்னுடைய பிடியிலிருந்து விடுபட்டு விம்மியபடி சென்றுவிட்டாள்!. அப்போது ஊர்ச் சேவல் ஒன்று கூறியது!
விடிந்ததும் நான் வேண்டாவெறுப்பாக பிரயாணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்தேன். மாலையில்தான் சிதம்பரம் செல்லவேண்டும். ஐந்து மணிபோல் புறப்பட்டால் போதுமானது. இரவு ஏழு மணிக்கு தொடர்வண்டி ஏறவேண்டும்.
முன்பே பேசிவைத்ததுபோல் பால்பிள்ளை காலையிலிருந்தே ரோந்தில் ஈடுபட்டிருந்தான். கோகிலம் வீடு செல்வதும் என்னிடம் வருவதுமாகவும் இருந்தான். அவளுடைய கணவன் அன்று பார்த்து வெளியூர் சென்றுவிட்டான். அவள் வீட்டில் தனியாதகத்தான் இருந்தாள். பால்பிள்ளை அவள் வீடு சென்று திண்ணையில் உட்கார்ந்து அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். அது எனக்கு நிம்மது தந்தது. அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் நாங்கள் அவளைக் கண்காணித்து வந்தோம். ஆனால் என் மனதின் ஆழத்தில் அந்த பயம் நீங்கியபாடில்லை. அதற்குக் காரணம் அவள் விடியலில் வந்து என்னிடம் உறுதியாகக் கூறியது. அவள் துணிச்சல்காரி என்பது எனக்குத் தெரியும். ஒரு பெண் துணிந்துவிட்டால் எதையும் செய்வாள். அவளிடம் பேசிப் பழகியதிலிருந்து அவள் சொன்னதைச் செய்வாள் என்பதில் சந்தேகமீயில்லை.
மதிய வேளைவரை அமைதியாகக் கழிந்தது. பெட்டிப் படுக்கையை தயார் செய்து திண்ணையின் மூலையில் வைத்திருந்தேன். மதிய உணவின்போது அவள் வீடு வந்து அம்மாவுக்கு உதவினாள். எனக்கும் உணவு பரிமாறினாள். முகத்தைப் பார்த்தேன். அதில் எவ்வித சலனமும் இல்லாதது கண்டு ஆறுதல் கொண்டேன்.
கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்று திண்ணியில் படுத்தேன். அவள் என்னைப் பார்த்தவாறே வீடு சென்றாள். பால்பிள்ளையிடம் ரோந்துப் பணியைத் தொடரச் சொல்லி சைகை செய்துவிட்டுக் கண்களை மூடினேன்.வேப்ப மரத்து காற்றில் அசந்து தூங்கிவிட்டேன்.
ஏதோ கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தேன். பால்பிள்ளை என்னை உலுக்கி எழுப்பினான்! கோகிலம் வீட்டில் அழுகுரல் கேட்டது!
” என்ன ஆச்சு ? ” பதறியபடி எழுந்து நின்றேன்.
” அண்ணே. கோகிலம் விஷம் குடிச்சிடுச்சி! வாங்க சீக்கிரம்! ” பதற்றமுடன் கத்தினான்.
நான் அவள் வீடு நோக்கி ஓடினேன்! அதற்குள் அங்கு ஊர் மக்கள் கூடிவிட்டனர்! என்னைக் கண்டதும் வழி விட்டனர். நான் உள்ளே ஓடினேன். அங்கு நடு அறையில் சாய்ந்த கோபுரம் போன்று தரையில் கிடந்தாள் கோகிலம்! கைகளையும் கால்களையும் ஆவேசமாக உதறிக்கொண்டிருந்தாள்! அவள் வாயிலிருந்து நுரை தள்ளியது. எனக்கு அச்சமும் ஆத்திரமும் அனுதாபமும் கலந்த நிலை. ஆனால் அதுபற்றியெல்லாம் நினைக்கும் நேரமில்லை. உடன் முதலுதவி செய்தாகணும். உப்பும் நீரும் கொண்டு வருமாறு பால்பிள்ளையிடம் கத்தினேன். அவன் உடன் சமையல் கட்டுக்கு ஓடினான். உப்பை நீரில் கரைந்தேன். தரையில் உட்கார்ந்து அவள் தலையைத் தூக்கி மடியில் வைத்து வாயைத் திறந்து உப்பு நீரை ஊற்றினேன். அவள் அதை விழுங்கினாள் . வாய்க்குள் விரலை விட்டு தொண்டையை வருடி வாந்தி எடுக்க வைத்தேன். ஒரு முறை வாந்தியில் மூச்சை முட்டும் வாடை! வாந்தியில் விஷம் வெளியேறியிருக்கலாம். இரண்டாவது முறை அவள் வாந்தி எடுத்தபோது அதில் இரத்தம் இருந்தது! மீண்டும் தொண்டைவரை விரலை விட்டதும் அவள் இறுக்கி கடித்துக்கொண்டாள். விரலை வெளியே எடுக்க முடியவில்லை! விரலில் காயம் பட்டது. வேறு வழி தெரியாமல் கரண்டியை பற்கள் இடுக்கில் விட்டு வாயை அகட்டியபின் விரல்களை வெளியே எடுத்தேன். அவளுடைய கையைப் பிடித்து நாடியைப் பார்த்தேன். அது வேகமாக அடித்தது. மூச்சு விடுவதில் சிரமப் பட்டாள். இவ்வளவுதான் முதலுதவி இங்கே செய்யமுடியும். இனி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவேண்டும்.
பால்பிள்ளை துரிதமாகக் செயபட்டான். எனக்குத் தயார் செய்து வைத்திருந்த கூண்டு வண்டியில் காளைகளைப் பூட்டி வாசலுக்குக் கொண்டுவந்தான். அவனும் நானும் சேர்ந்து அவளைத் தூக்கி வண்டிக்குள் கிடத்தினோம். நான் அவள் தலைமாட்டு பக்கம் உட்கார்ந்துகொண்டேன். பால்பிள்ளை காளைகளைத் தட்டிவிட்டான். அவை இரண்டும் அவசரம் தெரிந்ததுபோல் தெருப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வேகமாக சிதம்பரம் செல்லும் சாலை நோக்கி ஓடின!
நான் கோகிலத்தின் தலையை என் மடியில் வைத்து இரு கரங்களாலும் அவளைப் பிடித்திருந்தேன். அவள் என்னையே பார்த்தாள். ஆனால் பேச முடியவில்லை. எதோ சொல்ல முயல்வது மட்டும் தெரிந்தது. கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள். அவளுடைய கன்னத்தைத் தட்டி , ” ஏன் இப்படிச் செய்தாய்? ” என்று மட்டும் கேட்டேன். அவளால் பதில் சொல்ல முடியவில்லை. இனி அவள் பதில் சொல்லிதான் என்ன பயன்? அவள்தான் என்னை விட்டுப் போக முடிவு செய்துவிட்டாளே! நான் நிலைதடுமாறிய நிலையில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படியே அவள் நினைவிழந்துகொண்டிருந்தாள். நான் தட்டி அவளைக் குலுக்கினேன். அவள் விழிப்பாள். என்னையே பார்ப்பாள். ” உன்னை நான் சாக விடமாட்டேன்! எப்படியும் காப்பாற்றிவிடுவேன்! ” அவளுக்கு தைரியம் சொன்னேன்.அது அவளின் செவிகளில் விழவில்லை. அனால் எதையோ சொல்ல முயல்வது மட்டும் தெரிந்தது. அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை சென்று வருகிறேன் என்று விடை பெறுகிறாளோ? ஐயோ கோகிலம்! என்னை விட்டு போகப் போகிறாயா? என் மனம் துடித்தது!
காளைகள் பாய்ந்து பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தன. தவர்த்தாம்பட்டு நெருங்கிவிட்டது வண்டி. இனி தார் நெடுஞ்சாலையில் இன்னும் வேகமாக ஓடலாம். ஆனால் சிதம்பரம் பத்து கிலோமீட்டர் தொலையில்! அரை மணிக்கு மேலாகும். அது முடியாது. கோகிலத்துக்கு உடனடியாகத் தேவை ” ட்ரிப் ” அவளுடைய இரத்த அழுத்தத்தை உயர்த்தவேண்டும். அதன்பின் மாற்று மருந்து தரவேண்டும். அவள் குடித்துள்ளது அரை பாட்டில் ” போலிடால் ” என்ற கொடிய விஷம். அது வயல்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி. அதைக் குடித்தவர் யாரும் எளிதில் தப்பமுடியாது!
குமராட்சி ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. அங்கு அரசு மருந்தகமும் தனியார் கிளினிக் ஒன்றும் உள்ளது. முயன்று பார்க்கலாம் என்று பால்பிள்ளையிடம் வண்டியை குமாரட்சிக்கு திருப்பச் சொல்லிவிட்டு கோகிலத்தைப் பார்த்தேன். அவளின் கண்கள் என்னையே பரிதாபமாகப் பார்த்தன! இமைகள் மூடவில்லை! கன்னத்தைத் தட்டி எழுப்பினேன். பயனில்லை! என்னைப் பார்த்து ஏங்கியபடியே அந்த கண்கள் அசைவற்றுபோயின! ” ஐயோ! கோகிலம்! ” என்று உரக்க கதறியபடி அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationதைப்பூசமும் சன்மார்க்கமும்முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு – 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *