கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை
ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில்
வரவான கையறுநிலை
அருகதையில்லா அன்பில் ஆட்கொல்லியாக…..
தலையைச் சுற்றித் தூக்கியெறுந்துவிடத்தான் வேண்டும்
இந்தத் திறவுகோலை.
வீடே யில்லையென்றான பின்பும்
இதையேன் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது என் கை?
அறிவுக்கும் மனதுக்கும் இடையறாது நடந்துகொண்டிருக்கும்
இந்தப் போட்டியில்
வெற்றிக்கம்பத்தின் எதிர்முனை நோக்கி நான் ஓடியவாறு…..
பெருவலியினூடாய் புன்னகைத்துக்கொண்டிருந்தேன்.
கல்தடுக்கிக் கால்கட்டைவிரலில் மின்னிய ரத்தச்சொட்டு
என்னவொரு நிவாரணம் என
எண்ணாதிருக்க முடியவில்லை.
ஒரு நெகிழ்வில் நக்கிக்கொடுத்ததால்
என்னை நாயென்று பொருள்பெயர்த்துக் கொள்பவர்க்கு
குனிந்து கல்பொறுக்கும் சிரமத்தைத் தரலாகாதென்று
சிறகுவிரித்துயரே பறந்துசென்றுவிட்டேன்.
என் பாட்டில் மொட்டைமாடியில் நின்று அண்ணாந்து பார்த்தவண்ணம்….
அந்தப் பறவை அத்தனை அற்புத வண்ணத்தில்
ஒரு சிறகிழையை உதிர்த்துவிட்டுத் தன் வழி சென்றது.
காற்றில் சுழன்றிறங்கும் அது என் கால்களின் பரப்பெல்லைக்குள்ளாய்
விரிந்த என் கைகளுக்குள் வசப்படுமோ?
விக்கித்து நிற்கிறேன்.
நேற்றும் இன்றும் நியமப்படி நீர் வார்த்தாலும்
நான்கைந்து நாட்கள் விட்டுப்போனதில் பட்டுப்போன செடிகள்
துளிர்விட மறுக்கின்றன.
இல்லை, இது இளைப்பாறும் பருவமோ?
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் பேதைமனம்.
பலமுறை வாசித்தும் தீராத புத்தகத்தின் பக்கமொன்றில்
பொடிந்த சின்னஞ்சிறு இலையொன்று கிடந்தது.
ஒருவேளை என் மூச்சால் அதை மீண்டும்
பசுமையாகத் துளிர்க்கச் செய்ய முடியுமோ என்னவோ….
முயன்று பார்க்க பயமாயிருக்கிறது.
இந்தப் பூனைக்கு என்ன வயதிருக்கும் தெரியவில்லை.
குடியிருப்பு வளாகமெங்கும் நீர் சூழ்ந்த நேரம்
தன்னந்தனியாய்த் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடியது.
ஜன்னலிலிருந்து முருங்கை மரத்திற்கும், மரத்திலிருந்து மொட்டைமாடிக்கும்
அது தாவிய தாவல்……… அம்மாவோ!
அதன் மூக்கில் பல நாட்களுக்கு ரத்தக்கறை இருந்தது.
தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் தனதொரு கண் பார்வையைப்
பறிகொடுத்துவிட்டதுபோலும்.
பலவீனமாய் ”மியாவ்” வெளிப்படுகிறது.
தினமொரு முறை, பக்கத்துவீடு பூட்டியிருக்கும் சமயமாய்ப் பார்த்து
அத்தனை நம்பிக்கையோடு எனக்காய் குரலெழுப்புகிறது.
தரும் பாலை யருந்திவிட்டுத் தன் வழியே போய்விடுகிறது.
தலையை வருடித்தா என்று ஏங்கிப் பார்க்காத
அதன் சுயமும் தன்மானமுமாய் _
பூனையை எனக்குப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது
தூலமாகவும், குறியீடாகவும்.
- பூங்காற்று திரும்புமா?
- தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”
- அப்பாவும் மகனும்
- தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை
- ’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளி
- குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை
- இயன்ற வரை
- கர்ணனுக்காக ஒரு கேள்வி !
- சமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…
- சொற்களின் புத்தன்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு – 21.3.2016 முதல் 23.3.2016 வரை
- தி டோக்கன் ஆங்கிலம் – மே சிங்க்ளேர்