சுவை பொருட்டன்று – சுனை நீர்

சுவை பொருட்டன்று – சுனை நீர்
This entry is part 2 of 14 in the series 20 மார்ச் 2016

55

ஒரு விதையை விதையாகவும் பார்க்கலாம். ஒரு அடர் விருட்சத்தைத் தனக்குள் உறைய வைத்திருக்கும் உயிராகவும் பார்க்கலாம். இதில் ஷாநவாஸ் இரண்டாவது வகை.  பரோட்டாவை ஒரு பதார்த்தமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு மத்தியில் அதில் ஊடேறிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வுகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதைத் தான் பேசுகின்றன.

ஒரு ஞாயிறன்று பெய்த மழை கலைத்துப் போட்டதில் அந்த முதலாளி(தவ்கே)க்கும், தொழிலாளிக்கும் ஏற்படுகின்ற மன ஓட்டத்தையும்,  சுகாதார அதிகாரியிடம் பகிர முடியாத சத்தியத்தினால் குறுகி நிற்கும் காதலையும் பேசி நகரும் இக்கவிதைத் தொகுப்பு சொற்ப வரிகளைத் தனக்குள் வைத்துக் கொண்டு வாசிப்பாளனின் பார்வையை விசாலமாக்கிய படியே செல்கிறது. அவைகளில் பலவும் வாசிப்பவரின் அனுபவத்திற்கேற்பப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் நெகிழ் தன்மை கொண்டவைகள்.

மறந்து போன நினைவுகளை, மனித முகங்களை, அவர்களின் அடையாளங்களை மீட்டெடுக்கும் ஒரு கருவியாக, சந்திப்பும்-பிரிவும் நிகழும் தளமாக, லேண்ட் மார்க் மாதிரியான அடையாளமாக பரோட்டாவும், பரோட்டாக் கடைகளும்  நம்மை அறியாமலே இருந்து வருவதைத் தன் நுண்ணிய அவதானிப்புகளின் வழியாகக் கண்டடைந்து வரிகளின் மூலமாக நமக்குள்ளேயே திருப்பி விடுகிறார். மடிப்பு அதிகமில்லை எனச் சொல்ல நினைக்கும் வாடிக்கையாளர் ஏன் அதை இரகசியக் குரலில் சொல்கிறார்? இந்த ரொட்டி பரோட்டா அங்கிளுக்கு உன்னை மாதிரி இன்று லீவு இல்லையா அப்பா? என்று ஞாயிறன்று தன் தந்தையுடன் வந்த குழந்தை கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்னவாக இருக்கும்? என்று இரகசியங்களாய் நிகழும் மொழிகள் குறித்தும் நம்மிடம் கேள்வி எழுப்புகிறார். யோசித்துப் பார்த்தால் அதற்கான பதில்கள் நம்மிடமே இருப்பதாகவே நினைக்கிறேன்.

காற்றாய் கிளம்பிய பரப்புரை பரோட்டாவின் பாரம்பரியத்தில் நிகழ்த்திச் சென்ற தாக்கத்தை, பரோட்டாக் கடையில் பணி செய்பவர்களுக்கிடையே நிகழும் போட்டியின் வெக்கையை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளும் முறையை, சாப்பிட வருகின்றவர்களின் ருசியின் வழியாக நிகழும் செயல் முரண்களை அக்கறையோடு பதிவு செய்திருக்கும் ஷாநவாஸ் பரோட்டாக் கடை முதலாளியாய் இருப்பதன் மூலம் கிடைத்த ஒரு ”ஸ்மைலி” அனுபவத்தையும் பதிவு செய்திருக்கிறார். இன்னொரு அனுபவக் கவிதையில் தலைவர், மருத்துவர், எழுத்தாளர் என்று வரும் வரிசையில் தலைவரையும், மருத்துவரையும் அடையாளப்படுத்த ”சிறந்த” என்ற முன் சொல்லைக் கையாண்டவர்  எழுத்தாளரைச் சொல்லும் போது மட்டும் ”மிகச் சிறந்த” என்று சொல்கிறார். திடீர் கவிதைகள் மாதிரி திடீர் எழுத்தாளர்களுக்கு இப்போது பஞ்சமில்லை என்பதால் திட்டமிட்டே மிகச் சிறந்த என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பாரோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

சாப்பிட்டவர்களின் ருசிகளில் இருந்து உதிரும் ஒரு சொல்லில் தன் முகம் தேடும் சமையற்காரரின் தேடலை வாசித்து முடித்ததும் கடைகளில் மட்டுமல்ல தத்தம் வீடுகளிலும் இப்படியான தேடல்கள் இருப்பதை உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்!

நிகழ்வை அப்படியே காட்சிப் படுத்தாமல் அதன் வழியாக வாசிப்பவனுக்குத் தான் நினைத்ததைக் கடத்தும் வித்தை அறிந்தவனால் மட்டுமே படைப்பாளியாய் பரிணமிக்க முடியும், அப்படி ஷாநவாஸ் பரிணமிக்கும் இடமாய் இந்தத் தொகுப்பில் ஒரு உணவுப் பரிமாறலுக்கும் இன்னொரு உணவுப் பரிமாறலுக்கும் இடையேயான நேரத்தை உயிர்ப்பில் வைத்திருப்பதைச் சொல்லும் ”சத்து கோஸம் சத்து துளோர்” என்ற சொல்லில் (சொற்களில்) முடியும் கவிதையைச் சொல்வேன்.

தான் இயங்கும் துறையில் தன் இறுப்பை படைப்புகளின் பங்களிப்பாலும் நிரூபித்து வரும் ஷாநவாஸ் இம்முறையும் அதற்கான முயற்சியைக் கவிதை வழி ஆரம்பித்திருக்கிறார். அதில் கவிதைகளுக்கான கட்டமைவுகளை பொருத்திப் பார்த்துக் கொண்டு அங்கேயே நிலை குத்தி நிற்காமல் அவர் விரித்துச் செல்லும் கவிதைக் கடை வீதியின் வழியே நகர்ந்து செல்லுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் இத் தொகுப்பில் இன்னும் லயிக்க முடியும்.

———————————————————————————————————————–

Series Navigationமுற்பகல் செய்யின்……சொற்களின் புத்தன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *