0
விருதுகளையும் வெகுஜன ரசிப்புகளையும் அள்ளிக் கொண்டிருக்கும் மலையாளப்படம்!
‘ நேரம்’ இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் படைப்பு.
அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு ஐம்பது நாட்கள் கழித்து திரையரங்கில் பார்த்தேன்.
ஆரம்பம் வெகு சாதாரணம். ப்ப்பி லவ் என்கிற விசயத்தை ‘பன்னீர் புஷ்பங்கள் ‘ தொடங்கி, பாக்யராஜின் ‘ இன்று போய் நாளை வா ‘ வரை பல கட்டங்களில் துவைத்து காயப் போட்டு விட்டார்கள். அது இன்னமும் கிழியாமல் இன்றைய இயக்குனர்களிடம் போய் சேர்ந்திருப்பது அந்த முடிச்சின் மார்க்கண்டேய தன்மையே தவிர, இவர்களின் திறமை ஏதுமில்லை.
சைக்கிளில் சுற்றுவது; செயின் கழண்டு விட்டதா என்று பார்ப்பது போல நாயகியின் வீட்டை நோட்டம் விடுவது என்று எல்லாமே இந்தப் படத்தில் தழுவல் தாக்கங்கள். பாக்யராஜின் பாதிப்பில் விளைந்த இந்தக் காட்சிகள் மலையாள ரசிகர்களுக்கு வேண்டுமானால் புதுசாக இருக்கலாம். நமக்கு பழங்கஞ்சி.
மேரி ஜார்ஜ் வேறு ஒருவனை காதலிக்க, நம்ம ஆளு ஜார்ஜ் என்கிற நிவின் பாலி சட்டென்று பாதை மாறி, விலகி, அடிதடியில் இறங்கும் கல்லூரி மாணவனாக மாறும் பரண் சமாச்சாரம் கூட உண்டு.
சிட்னி பாய்ட்டரின் “ டு சார் வித் லவ் “ தொடங்கி, பாக்யராஜின் முந்தானை முடிச்சைப் பற்றிக் கொண்டு ஜார்ஜ், மலர் டீச்சரை ஒருதலையாக காதலிப்பது ரெண்டாவது எபிசோட்.
இங்கே அல்போன்ஸ் புத்திரனின் புத்திசாலித்தனம் பளிச்சிடுவது மலர் டீச்சர் எனும் சாய் பல்லவியின் பாத்திர செதுக்கலில் தான். வயதுக்கு மீறிய தெளிவுடன் படைக்கப்பட்ட பாத்திரம் அனைத்து திரை ரசிகர்களுக்கும் புதுசு. சாய் பல்லவியின் அதிக அழகில்லாத, சராசரி மிடில் கிளாஸ் முகம் சட்டென்று ரசிகன் மனதில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கிக் கொடுக்கிறது.
ராகிங் பண்ண யத்தனிக்கும் பெண் ஒரு கெஸ்ட் விரிவுரையாளர் என்கிற கணத்திலேயே நிவினுக்கு காதல் வந்து விடுகிறது. கண்டிப்பான, அதே சமயம் நேசம் கொண்டாடும் மலர் டீச்சர், பிரேக் டான்ஸும் ஆடுவார். சகஜமாக பையன்களுடன் சம்பாஷிப்பார். தன் உறவினரான கஸின் அறிவழகனை அறிமுகமும் செய்து வைப்பார். குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் ஜார்ஜையையும் அவன் நண்பர்களையும் கல்லூரி முதல்வர் முன் நிற்கவும் வைப்பார். பல வண்ணங்கள் கொண்ட கொலாஜ் பாத்திரம் இது!
மலர் எப்படி ஜார்ஜை கழட்டி விடுகிறார்? இங்குதான் அல்போன்ஸுக்கு “ எங்கிருந்தோ வந்தாள்”, “ ராமன் எத்தனை ராமனடி” , “ மூன்றாம் பிறை “ எல்லாம் கைக்கொடுக்கிறது. தலையில் அடிபட்டு சுத்தமாக எல்லாவற்றையும் மறக்கும் மலர், ஜார்ஜை ஒதுக்கி அறிவழகனை கட்டிக் கொள்கிறாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் இயக்குனரின் பிரில்லியன்ஸ் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.
ஜார்ஜ் மலரை நினைத்து உருகவில்லை. தாடி வளர்த்து பாட்டு பாடவில்லை; படிப்பு முடித்து ஒரு ஓட்டலை ஆரம்பித்து விடுகிறான். அந்த ஓட்டலின் பெயரும் மலர் இல்லை. சுத்தமாக அவன் மலரை தன் நினைவிலிருந்து அழித்து விட்டான்.
அவனுடைய பேக்கரி கம் டீக்கடைக்கு வருகிறாள் செலின். அவனது பப்பி லவ் மேரியின் தங்கை. அவளைக் காதலிக்கலாமா என்று ஜார்ஜ் நினைக்கும்போது, அவளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று ஒரு டிவிஸ்ட். கடைசியில் திருமணம் தடைப்பட்டு செலினுடன் அவனுக்கு திருமணம் என்கிற க்ளைமேக்ஸ்.
அதோடு விடவில்லை அல்போன்ஸ் புத்திரன்! மலரை மீண்டும் கொண்டு வருகிறார். மலர் அறிவழகனுடன் திருமண வரவேற்புக்கு வருகிறாள். நாசுக்காக வாழ்த்திவிட்டு வெளியே போகிறாள். அவளுக்கு இன்னும் ஜார்ஜ் நினைவில் இல்லையா?
“ ஜார்ஜுக்கு சொல்லியிருக்கலாமே!”
“ அவன் தானே புரிஞ்சுப்பான்”
அவ்வளவுதான்! இந்த குறியீடு வசனங்கள் பல கதைகளை கிளறிவிடுகின்றன.
நான் அனுமானித்தது இதுதான்.
மலர், ஜார்ஜ் தன் மேல் வெறித்தனமான காதலுடன் இருப்பதை உணர்கிறாள். ஆனால் அவளது அறிவும் மனமும் அதை ஏற்கவில்லை. அறிவழகனுடன் ஊருக்கு போகும்போது பொய்யாக ஒரு விபத்தை மனதளவில் நடத்தி, தலையில் கட்டுடன், நினைவு இழந்தது போல நடிக்கிறாள். அவள் எதிர்பார்த்தது போலவே ஜார்ஜ் அவளை விட்டு விலகுகிறான். செலின் நுழைய கல்யாணமும் செய்து கொள்கிறான்.
இதில் செலின் கொஞ்சம் மலரை ஒத்த ஜாடையில் இருக்கும் மடோனா சபாஸ்டியனாக இருப்பது கூடுதல் நேர்த்தி. உளவியல் ரீதியாக தனக்குப் பிடித்த பெண்களின் சாடையில் வேறு பெண்கள் இருந்தால் ஆண்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இதை சாமர்த்தியமாக பயன் படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
செலினுக்கு ஒரு பின்கதை வைத்திருக்கிறார் அல்போன்ஸ். அக்கா மேரி காதலிக்கும் போது, அவளுடன் வரும் செலின், பொழுதைப் போக்க கூடவே வரும் ஜார்ஜுடன் பழகுகிறாள். ஆனால் அப்போது அவள் சிறுமி.
“ என்னை யார் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களோ?”
“ ஏன் நானே பண்ணிக்கறேன் “ ஜார்ஜின் விளையாட்டான பதில் செலின் நெஞ்சில் பதிந்து விடுவதாக ஒரு சின்ன ஹைக்கூ! வளர்ந்த பெண்ணாக மீண்டும் அவள் ஜார்ஜை சந்திக்கும்போது அவளுக்கு பழைய ஈர்ப்பு. கொஞ்சம் புகுத்தப்பட்ட காட்சியமைப்பு என்றாலும் திரையில் பார்க்க ரம்மியமாக இருக்கிறது.
அல்போன்ஸ் புத்திரன் நகைச்சுவையில் தேர்ந்தவர் என்பது, மென்பொருள் விரிவுரையாளராக ஒரு வழுக்கை தலையரை மலர் மேல் காதல் கொள்ள வைப்பதும், அவருக்கு உசுப்பேத்த ஒரு உடற்பயிற்சி ஆசிரியரை துணைக்கு வைத்து, எந்நேரமும் வழுக்கையின் பர்சை காலி செய்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பதும் சூப்பர் காமேடி.
பல மொழிகளில் எடுக்கப்படுகிறது பிரேமம். தமிழில் அவ்வளவாக வரவேற்பிருக்காது என்பது என் எண்ணம். இங்கே, இன்னும் பாக்யராஜையும் கமலையும் யாரும் மறக்கவில்லை.
0
- முற்பகல் செய்யின்……
- சுவை பொருட்டன்று – சுனை நீர்
- சொற்களின் புத்தன்
- அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு
- பிரேமம் ஒரு அலசல்
- அவியல்
- பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்
- தொடுவானம் 112. திராவிட நாடு திராவிடருக்கே!
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2016 மாத இதழ்
- தேடிக்கொண்டிருக்கிறேன்
- இரண்டாவது புன்னகை
- நீங்காப் பழி!
- கூடு – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எதையும் எதிர்பார்க்காத கலைஞர்கள் – வெளி ரங்கராஜனின் ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’