தாரமங்கலம் வளவன்
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து நாடகம் நடத்தும் குழுவின் விளம்பர போஸ்டர் அது.
மாணிக்கத்தின் வீட்டிற்கு எதிரில் ஒட்டப் பட்டிருந்தது..
முதல் வரிசை டிக்கெட் ஐநூறு ரூபாய் என்றார்கள். வாங்கிக் கொண்டு போய் உட்கார்ந்தார்.
என்ன ஆச்சர்யம்.. அது அவருடைய சொந்தக்கதைதான்..
மோகன சுந்தரம் என்னும் அந்த பாத்திரத்தின் கதை அவருடைய கதையேதான்… குடித்து விட்டு வந்து தினமும் மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் ஒரு குடிகார தந்தை.
ஒரே ஒரு வித்தியாசம்…
நாடகத்தில் கடைசியில் மனம் மாறி மனைவியிடம் கெஞ்சி மன்னிப்பு கேட்பதாய் இருந்தது அந்தக் கதை..
அது நிஜ வாழ்க்கையில் மாணிக்கத்திற்கு கிடைக்காத ஒன்று.. மனம் திருந்தி மன்னிப்பு கேட்கும் அந்த வாய்ப்பு, நாடகத்தில் அந்த மனிதனுக்கு கொடுக்கப் பட்டிருந்தது,
மாணிக்கமும், அந்த நாடகத்தில் வருவது போல தன் மனைவியிடமும், மகனிடமும் மன்னிப்பு கேட்க இப்போது கூட துடிக்கிறார். ஆனால் அது முடியாது. அவருடைய மனைவியும், மகனும் இப்போது இல்லை..
இந்த நாடகம் மதுரையில் நடக்கும்வரை அந்த காட்சியை வந்து அவர் தினமும் பார்க்கலாம். தன்னை அந்த மோகன சுந்தரம் பாத்திரமாக பாவித்துக் கொள்ளலாம்.. அது சாத்தியம்.. அதற்காக தினமும் ஐநூறு கொடுக்க வேண்டும்.. கொடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்..
எல்லாம் அந்த கடைசி காட்சிக்காகத்தான்.. தானே அந்த மோகன சுந்தரம் பாத்திரத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வார்..
நான்கு நாட்கள் ஓடின.. ஐந்தாவது நாள் காலை.
இரவு நடித்து முடித்த களைப்பில், நாடகக் குழு தூங்கிக் கொண்டிருந்தது. மோகன சுந்தரம் பாத்திரத்தில் நடித்த அந்த நடிகர், பெயர் சாமிக்கண்ணு, அவரும் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த அவருடைய செல்போன் அடிக்க, எழுந்து எடுத்தார். அடுத்த முனையில் அவருடைய தங்கையின் குரல்.
“ அண்ணே.. அம்மா போயிட்டாங்க..”
சாமிக்கண்னு கிளம்பி சென்னை போக, என்ன செய்வது என்று நாடகக் குழு திகைத்து நின்றது..
அன்று மாலை..
எப்போதும் வருவது போல, முதல் ரசிகராக மாணிக்கம் டிக்கெட் வாங்க வந்து நிற்க, டிக்கெட் கொடுப்பவர் சொன்னார்..
“ மோகன சுந்தரம் பாத்திரத்தில நடிச்சிக்கிட்டு இருந்தவரோட அம்மா தவறிட்டாங்களாம்.. சென்னையிலிருந்து போன் வந்துச்சி… கெளம்பிட்டாரு.. நாடகத்தை நடத்தலாமா வேண்டாமான்னு யோசிச்சிகிட்டு இருக்காங்க..”
மாணிக்கம் கொஞ்ச நேரம் நின்று யோசித்தார்.
“ நாடகத்துக்கு யாருங்க டைரக்டர்.. நான் பாக்கணுங்க அவரை..” என்றார்.
வழியைக் காண்பித்தார்கள். பெயர் கிருஷ்ணன் என்றார்கள். ஐம்பது வயது இருக்கும். கவலையோடு உட்கார்ந்திருந்தார்.
மாணிக்கம் சொன்னதைக் கேட்டுவிட்டு,
“ நீங்க அந்த மோகன சுந்தரம் பாத்திரத்தில நடிக்கிறீங்களா..” ஆச்சர்யத்துடன் கேட்டார் கிருஷ்ணன்.
“ நடிச்சி காட்டட்டுமா..”
நம்ப முடியாமல் மாணிக்கத்தைப் பார்த்த கிருஷ்ணன்,
“ சரி.. நடிச்சி காண்பிங்க.. ஸ்கிரிப்ட் எடுத்து தரேன். மொதல்ல வசனத்தை மனப்பாடம் பண்ணுங்க..” என்று எழுந்து, ஸ்கிரிப்ட் ரிஜிஸ்டரை தேட ஆரம்பித்தார்.
“ . அதெல்லாம் வேண்டாங்க.. எனக்கு மொத்த வசனமும் மனப்பாடம்..” என்றார் மாணிக்கம்.
அன்றைய நாடகம் மாணிக்கத்தின் நடிப்பில் நடந்தது.
“ ரொம்ப பிரமாதங்க உங்க நடிப்பு.. சாமிக்கண்ணுவை பல தடவை ரிகர்சல் நடத்தி நடிக்க வைச்சோம்.. நீங்க ரிகர்சலே இல்லாம சூப்பரா நடிச்சிட்டீங்க.. கடைசியில மன்னிப்பு கேட்கிற அந்த காட்சியில நீங்க கதறி அழுதது, பார்க்கிறவங்க மனசை கசக்கி பிழியற மாதரி இருந்திச்சி..” கிருஷ்ணன்.
மாணிக்கத்தின் நடிப்புக்காகவோ என்னவோ, நாடகம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது.
நாடகம் நன்றாய் இருப்பதாக செய்தி பரவ, விருது நகர், தேனி, இராமநாதபுரம் என்று பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வரத் தொடங்கி விட்டார்கள்.
ஒரு வாரம் ஓடி இருக்கும்… தன் தாயின் ஈமக் கடன் செய்யச் சென்ற சாமிக்கண்ணு திரும்ப, மாணிக்கத்திற்கு தன்னை நாடகத்தில் இருந்து எடுத்து விடுவார்கள் என்ற கவலை வந்து விட்டது.
நேராக கிருஷ்ணனிடம் சென்றவர்,
“ சார்.. என்னை அந்த மோகன சுந்தரம் வேஷத்தில இருந்து எடுத்திடாதீங்க.. தயவு செஞ்சி சாமிக்கண்ணுக்கு வேற வேஷம் கொடுத்திடுங்க..” என்றார்.
“ வேற வேஷத்துக்கு ஆளுங்க இருக்கிறாங்களே…”
“ எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாங்க சார்.. நடிக்கறதுக்கு சான்ஸ் கொடுத்தா மட்டும் போதும்.. சம்பளம் இல்லாமலே நா நடிச்சி தர்ரேன்.. சாமிக்கண்ணுவுக்கு கொடுத்துகிட்டு இருக்கிற சம்பளத்தை நிறுத்த வேண்டாம். அவரை வேலையில இருந்தும் அனுப்ப வேண்டாம்..”
இப்படி ஒரு பேச்சு நடக்கிறது என்பது மற்ற சக நடிகர்களுக்கு தெரிந்து போக, அவர்கள் மாணிக்கத்தை தொடர்ந்து நடிக்க வைக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மாணிக்கம் கெஞ்சுவதைப் பார்த்த கிருஷ்ணன்,
“ இன்னிக்கு ஒரு நாள் மட்டும் மோகன சுந்தரம் பாத்திரத்தில நடிங்க.. நாளையில இருந்து சாமிக்கண்ணுதான்..” என்றார்.
மாணிக்கம் தலையாட்டினார்.
நாடகம் துவங்க ஒரு மணி நேரம் இருக்கும்..
கலை அரங்கத்தின் செயலர் வந்து இருப்பதாக யாரோ வந்து சொல்ல, கிருஷ்ணன் வாசலுக்கு ஓடி வந்தார்.
“ என்ன கிருஷ்ணன் சார்.. அக்ரிமெண்ட் தேதி நாளையோட முடியுது… நாளைக்கே காலி பண்ணிடுங்க..”
சற்று அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன்,
“ சார்.. அக்ரிமெண்ட் தேதி முடியுதுங்கறது வாஸ்தவம் தான்.. நாடகம் நல்லபடியா போயிக்கிட்டு இருக்கு.. ஜனங்க நெறைய வராங்க.. இன்னும் பத்து நாள் டைம் கொடுங்க சார்..”
“அதெல்லாம் முடியாது.. இன்னொரு புரோகிராமுக்கு அட்வான்ஸ் வாங்கி இருக்கோம்.. நாளைக்கு ராத்திரி அவங்களுக்கு சாவி கொடுக்கணும்..”
கிருஷ்ணன் சக நடிகர்கள் அனைவரையும் கூப்பிட்டார். மாணிக்கமும் உடன் இருந்தார்.
“ பாருங்க.. கலை அரங்கத்தோட செக்ரட்ரி காலி பண்ண சொல்லிட்டாரு.. கெளம்பியாகணும்.. நம்மோட அடுத்த புரோகிராம் நாகர் கோயில்ல..”என்றார்.
மற்ற நடிகர்கள் கிளம்பி போவதற்காக காத்திருந்த மாணிக்கம்,
“ சார்.. என்னை உங்க நாடகக் குழுவில நிரந்தரமா சேர்த்துக் கோங்க.. நானும் உங்களோடவே நாகர்கோயிலுக்கு வர்ரேன்.. தினமும் அந்த மன்னிப்பு கேட்கற சீன்ல நான் நடிக்கணும்னு ஆசையா இருக்கு..” என்றார்.
“ எப்படி முடியும் அது.. சாமிக்கண்ணுவை என்னா பண்ணறது.. சாமிக்கண்ணு பத்து வருஷமா எங்களோட இருக்காரு.. ஏற்கனவே சொன்னபடி, இன்னிக்கு மட்டும் நீங்க நடிங்க.” என்றார் கிருஷ்ணன்.
கடைசி நாள் நாடகத்தில், மாணிக்கத்தின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ரசிகர்களின் பலத்த கரவோசையுடன் கடைசி நாள் நாடகம் முடிந்தது.
நாடகம் முடிந்தவுடன், மேடையில் தோன்றிய கிருஷ்ணன்,
“ மதுரை நகரம் நம்ம பண்பாட்டுக்கும், கலைகளுக்கும் பேர் போனது. ரசிகர்களாகிய நீங்க தொடர்ந்து இந்த நாடகத்தை இந்த மதுரையில நடத்தணும்னு விருப்பப் படறீங்க.. ஆனா இந்த அரங்கத்தை காலி பண்ண சொல்லிட்டதனால, நாங்க அடுத்த ஊருக்கு கெளம்ப வேண்டியதாயிடிச்சி.. அடுத்த ஊர் நாகர் கோயில்.. இந்த நாடகத்தை நல்ல படியா ரசிச்ச நீங்க, நாகர் கோயில்ல இருக்கிற உங்க உறவினர்கள், நண்பர்கள்கிட்ட எங்களோட இந்த நாடகத்தை பத்தி சொல்லுங்க.. வந்து பார்க்க சொல்லுங்க..” என்றார்.
முன்வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு ரசிகர் எழுந்து,
“ மோகன சுந்தரம் பாத்திரத்தில இன்னிக்கு நடிச்சவரு நாகர்கோயில்ல நடிப்பாரா.. அவரு நடிக்க மாட்டாருன்னு கேள்விப் பட்டோம்..அவரை வந்து நாலு வார்த்தை பேசச் சொல்லுங்க..” என்றார்.
தர்ம சங்கடமாக இருந்தது கிருஷ்ணனுக்கு.
பின்பக்கம் திரும்பினார். தன்னுடைய நடிப்பை முடித்தவுடன் மாணிக்கம் கிளம்பி போய் விட்டதாக, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நடிகர் கூறினார்.
“ மன்னிக்கனும்.. மாணிக்கம் கிளம்பி போயிட்டதா தெரியுது.. உங்களோட ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்னு நினைக்கிறேன்..” பேச்சை நீட்டிக்க விரும்பாமல், வேகமாய் முடித்துக் கொண்டார் கிருஷ்ணன்.
மதுரை ரயில் நிலையம். மழை கொட்டிக் கொண்டிருந்தது.
நாடகக் குழு நாகர் கோயில் எக்ஸ்பிரசுக்காக காத்திருந்தது. ரயில் வந்து சேர்ந்தது.
“ கொஞ்ச நேரம் தான் ரயில் நிக்கும்.. சீக்கிரம் வாங்க..” என்று கிருஷ்ணன் எல்லோரையும் அவசரப் படுத்த, வேகமாய் ஓடி வந்த சாமிக்கண்ணு மழை ஈரத்தில் வழுக்கி பிளாட்பாரத்தில் விழுந்தார்.
எழ முயன்றார் சாமிக்கண்ணு. அவரால் முடியவில்லை.
சாமிக்கண்ணுவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை தெரிந்து கொண்ட கிருஷ்ணன், மற்றவர்களைப் பார்த்து,
“ நீங்க கெளம்புங்க.. நான் சாமிக்கண்ணுவை ஆஸ்பத்திரியில சேத்திட்டு வர்ரேன்..” என்றார்.
அவசர அவசரமாக மற்றவர்கள் ரயிலில் ஏறிக் கிளம்ப, சாமிக்கண்ணுவை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு போய் ஜிஎச்சில் சேர்த்தார் கிருஷ்ணன்.
சாமிக்கண்ணுவின் மனைவிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, பதறிப் போன அவர் மனைவி, அடுத்த ரயிலில் மதுரைக்கு வருவதாகச் சொன்னார்.
எக்ஸ்ரே எடுத்தார்கள், சாமிக்கண்ணுவுக்கு கணுக்காலில் ஒரு முறிவு என்றார்கள். எப்படியும் குணமாக ஒரு மாதம் ஆகும் என்றும் சொன்னார்கள்.
நாகர்கோயிலில் எப்படி நாடகத்தை நடத்துவது… நாடகம் நடத்தவில்லை என்றால் பணத்திற்கு என்ன வழி என்று குழம்பிப் போன கிருஷ்ணனுக்கு ஒரு விஷயம் மனதில் தோன்றியது.
மாணிக்கத்தை கூப்பிட்டால் என்ன.. கெஞ்சிக் கேட்டாரே.. நாகர் கோயிலுக்கும் உடன் வந்து நடித்து கொடுப்பதாக..
அவர் விலாசம் கொடுத்திருந்தாரே.. டைரியில் எழுதி வைத்திருந்தேனே..
அதில் செல்போன் நம்பர் இருந்ததா..
டைரியைத் தேடியதில் மாணிக்கத்தின் விலாசம் கிடைத்தது. செல்போன் நம்பர் இல்லை.. செல் போன் வைத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது. ஒண்டிக்கட்டை.. யாருக்கு போன் செய்யப் போகிறார்.
விலாசத்தை கையில் வைத்துக் கொண்டு, மாணிக்கத்தின் வீட்டை தேட ஆரம்பித்தார்.
மாணிக்கத்தின் வீட்டை நெருங்கும் போது அவர் வீட்டில் கூட்டமாய் இருப்பது தெரிந்தது. வேகமாய் ஓடிப்போய் பார்க்க, முதல் நாள் இரவே மாணிக்கம் இறந்து போய் விட்டதாகச் சொன்னார்கள்.
கடைத்தெருவுக்கு போய் ஒரு மாலை வாங்கி வந்து போட்டார் கிருஷ்ணன்.
“ நேத்து ராத்திரி நாடகத்தில ரொம்ப உருக்கமா நடிச்சாராம்.. அதில ரத்த கொதிப்பு அதிகமாயிடிச்சாம்..”
யாரோ பேசுவது காதில் விழுந்தது.
——————
- இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்
- வரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’
- லேசான வலிமை
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்
- நாமே நமக்கு…
- வியாழனுக்கு அப்பால்
- கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்
- இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..
- நாடகத்தின் கடைசி நாள்
- வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்
- இலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்
- நான்கு கவிதைகள்
- தோழா – திரைப்பட விமர்சனம்
- எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா
- தொடுவானம் 114. தேர்வுகள் முடிந்தன .
- எனக்குப் பிடிக்காத கவிதை