சுமார் மூன்றாண்டு காலத்துக்கு முன்பே வைகோ, சசி பெருமாள் போன்ற சமூக ஆர்வலர் மட்டுமே கையிலெடுத்த மது ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தார். ராமதாஸின் அரசியலில் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு எல்லா ஜாதி மக்களும் பாராட்டுவதாக இருந்தது. ஆறுமாதங்களுக்கு முன் வரை மதுவிலக்கே தேர்தலின் மையப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்னும் ஒரு தோற்றமே இருந்தது. ஆனால் அணி சேரும் கணக்குகள் ஆரம்பித்ததும் ஊடகங்கள் அதை ஒட்டி பொது மக்கள் கவனம் திரும்பி விட்டது. மதுவுக்கு அடுத்தபடியாக இலவசங்களை நாம் ஏன் ஒரு ‘நலத்திட்டமாக ஏற்கிறோம்? அதன் விலை என்ன? என்னும் கேள்விகள் தொடர்ந்து விவாதிக்கப் பட்டு வேலைவாய்ப்பு மையமான திட்டங்கள் இலவச வழங்கலுக்கு மாற்றாக எல்லாக் கட்சிகளாலும் முன்னெடுக்கப் பட வேண்டும். இவற்றுக்கு அடுத்தது நீர்வழித் தடங்களை ஆக்கிரமிப்பதும் வெள்ள நீர் வடிய ஏற்ற தடங்களாக எல்லா வாய்க்கால்களையும் ஆழமும் விரிவுமாக்குவது. விவசாயிகளுக்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும்போது அரசியல் அல்லாமலேயே என்ன உத்திரவாதம் உண்டு என்பது தெளிவாவது முக்கியம். அவர்களுக்கு பயிர் செய்ய முடியாத காலத்தில் என்ன வேலைவாய்ப்பு சுய தொழில் வாய்ப்பு என்பவை பற்றிய தெளிவு உருவாக வேண்டும். கிராமம், சிறுநகர், பெருநகர் எங்கேயும் நீர் சேமிப்புக்கு என்ன ஏற்பாடுகள் இருக்கின்றன என்பதும் நிபுணர்களால் தெளிவாக்கப் பட்டு அரசால் நிறைவேற்றப் பட வேண்டும். மாணவர்களுக்கு திறன் மேம்பாடு தன்னம்பிக்கையும் சுயதொழில் தொடங்க ஊக்கமும் கொடுப்பது மிக முக்கியமானது. அது பற்றிய தெளிவு இப்போது இல்லை. ஏட்டுக் கல்விக்கே முக்கியத்துவம் இருக்கிறது.
இவைகளைத் தவிர ஊழல் ஒழிப்பு என்பது எல்லாத் தரப்பு மக்களின் மனதில் பதிய எல்லாக் கட்சிகளுமே முனைய வேண்டும். இதற்கான சூழல் இப்போது தமிழ் நாட்டில் இல்லை. மக்களின் தீர்ப்பு வலிமையான எதிர்க்கட்சி இருக்கிற மாதிரி வந்திருக்கிறது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி இருவருமே கவனம் பிசகாமல் மக்கள் நலனைப் பேணும் கட்டாயமுண்டு இந்தத் தீர்ப்பின் தாக்கத்தால். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நோடா என்னும் ‘யாருக்குமே ஓட்டில்லை’ என்னும் தேர்வு செய்தவர்கள் தோற்றவர்களைத் தேர்வு செய்யாமல் நோடாவைத் தேர்ந்தெடுத்ததால் தான் அவர்கள் தோற்றார்கள் என்று ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கிறது. அதாவது வென்றவர் எத்தனை ஓட்டுக்களால் தமக்கு அடுத்தவரைத் தோற்கடித்தாரோ ஏறத்தாழ நோடா ஓட்டுக்கள் அதே எண்ணிக்கையில் இருக்கும் தொகுதிகள் 25 என்று ஆய்வில் தெளிவு படுத்தி இருக்கிறது. மக்கள் இரண்டு கட்சிகளைத் தாண்டி இன்னும் சிந்திக்காவிட்டாலும் ஜனநாயகத்தில் தமது ஓட்டுக்கு உள்ள வலிமையை முன் எப்போதையும் விட உணர்ந்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்திருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் பார்த்தோம். அவர்கள் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றைத் தராமல் ஏமாற்றி விட்டார்கள். ஆனால் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாத படி மூன்றாவது அணி நம்பிக்கை நட்சத்திரமாக உயரவில்லை. அவர்கள் மக்கள் பணியில் தமது அர்ப்பணிப்பைப் தொடர்ந்து வெளிப்படுத்தி சட்டசபைக்கு வெளியே தமது கடமையை செவ்வனே செய்தால் வரும் நாட்களில் உரிய இடத்தை அடைய மக்கள் வாக்களிப்பார்கள்.
தமிழ் நாடு தலை நிமிர பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் தீவிரமுள்ளவர்கள் வேண்டும். பிரச்சனைகளால் அரசியல் ஆதாயம் தேடுவோரல்ல.
- பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!
- அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்
- 19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்
- முரசொலி மாறனை மறந்த திமுக.
- ‘முசுறும் காலமும்’
- அம்மா நாமம் வாழ்க !
- பழைய கள்
- தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்
- தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6
- காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்
- உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’