அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை

author
0 minutes, 9 seconds Read
This entry is part 4 of 17 in the series 12 ஜூன் 2016

   ATLAS Function04ரஸஞானிமெல்பன்

”  இலங்கையில்  போருக்குப்பின்னர்  தோன்றியுள்ள இலக்கியங்கள்   மனச்சாட்சியின்  குரலாக ஒலிக்கின்றன.”

நான்கு   அமர்வுகளில்  நடைபெற்ற  கருத்துக்களம்                  

 

”  போருக்குப்பின்னரான   இலக்கியங்கள்  மக்களின்  மனச்சாட்சியைத் தூண்டி  போரினால்  சீரழிந்த  நாட்டை,  சமூகத்தைக்   கட்டி  எழுப்ப  வேண்டும்  என்ற  உணர்வை  ஏற்படுத்து கின்றது.   நமது  நாட்டிலும்  போருக்குப்பின்னரான  பாதிப்புகள், அவல நிலைகள்  குறித்த  இலக்கியங்கள்   உருவாகிக் கொண்டிருக்கின்றன.

தற்போது   சுய தணிக்கைகள்  எதுவுமின்றி  தமது  படைப்புகளை எழுதும்  சூழ்நிலை அங்கு உள்ளது. போரில் இடம்பெற்ற தவறுகளை விமர்சிக்கும்  எழுத்துக்கள்  வருகின்றன.  போராளிகள்  சிலர் வெளிப்படையான  தமது  எண்ணங்களை  எழுதுகின்றனர். ”   – இவ்வாறு  கடந்த  4   ஆம்   திகதி  அவுஸ்திரேலியா –  கன்பராவில் நடைபெற்ற   கலை  இலக்கியம் – 2016  நிகழ்ச்சியில்  உரையாற்றிய ஈழத்தின்  மூத்த  எழுத்தாளரும்  ஞானம்  இதழின்  ஆசிரியருமான மருத்துவர்  தி. ஞானசேகரன்  உரையாற்றினார்.

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கமும்  கன்பரா  கலை இலக்கிய  வட்டமும்  இணைந்து  கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள் மண்டத்தில்  நடத்திய  இந்நிகழ்விற்கு  சங்கத்தின்  தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா    தலைமைதாங்கினார்.

நான்கு    அமர்வுகளாக   நடைபெற்ற   இந்நிகழ்ச்சியை   கன்பரா  தமிழ் மூத்த  பிரஜைகள்   சங்கத்தின்  தலைவர்  திரு. முருகேசு  ருத்திரன், இலக்கிய  ஆர்வலர்  கலாநிதி கே. கணேசலிங்கம்,   இலங்கையிலிருந்து  வருகைதந்த  எழுத்தாளர்   திருமதி  ஞானம்  ஞானசேகரன்,  கன்பரா தமிழ்ச்சங்கத்தின்  தலைவர்  திரு. ஞானசிங்கம்,  ஆகியோர்  மங்கள  விளக்கேற்றி  தொடக்கிவைத்தனர்.

ஞானம்  ஆசிரியரின்  பவளவிழாவை  முன்னிட்டும்  நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில்   கன்பரா,  மெல்பன்,  சிட்னி  ஆகிய  நகரங்களிலுமிருந்து   பல  கலை,  இலக்கிய  ஆர்வலர்கள்  கலந்து சிறப்பித்தனர்.

   ” ஈழத்து  இலக்கியத்தின்   இன்றைய  நிலை   என்ற  தலைப்பில் தி. ஞானசேகரன்   மேலும்  உரையாற்றியதாவது:

” உலக   அரங்கில்  போர் முடிந்த  பின்னர்,  போரினால்  ஏற்பட்ட பாதிப்புகளை   விபரிக்கும்  இலக்கியங்கள்   பல  வெளிவந்துள்ளன. இத்தகைய   இலக்கியங்களில்  வியட்னாம்  யுத்ததிற்குப்பின்னர் வெளிவந்த   இலக்கியங்கள்  முக்கியமானவை.     THE SARROW OF WAR என்ற நாவல் வட வியட்னாம்  போராளியால்  எழுதப்பட்டது.    VIETNAM: THE TEN THOUSAND DAY WAR என்ற நாவல்   MAC LEAR என்பவரால் எழுதப்பட்டது.    THE GIRL IN THE PICTURE   வியட்னாம் போரில்   அகப்பட்டு  குண்டுத்தாக்குதலினால்  எரிகாயங்களுடன் உடம்பிலே   உடுப்புகள்  ஏது மின்றி  ஓடிவரும்  7  வயதுச் சிறுமி பற்றிய   நாவல்.   அவள    ஓடிவரும்  காட்சியை   உலகு   எங்கிலும் உள்ள   மில்லியன்  கணக்கான  மக்கள்   திரையில் பார்த்தார்கள். அதன்பின்னர்    மேற்குலக  மக்களின்  அபிப்பிராயம்  போருக்கெதிராக மாறியது.    போர்நிறுப்பட்டது.

அகதி நிலை,  சிறை  வாழ்க்கை, கணவன்மார்களை  இழந்த கைம்பெண்கள்,  தாய்தந்தையரை  இழந்த  பிள்ளைகள்,  பிள்ளைகளை  இழந்த  தாய்தந்தையர்,  ஊனமுற்ற  போராளிகளின் வாழ்க்கைப்   போராட்டம்,  போராளிப்  பெண்களின்   பிரச்சினைகள்,  சொந்த  நிலங்களை  இழந்து  பிறிதோர்  இடத்தில்  வாழ  நேரிடும் அவலம்,  இராணுவப்பிரசன்னம்,  போரின்  பின்னர்  சமூகத்தில் ஏற்படும்  சமூகச் சீரழிவு,  பண்பாட்டுச் சீரழிவு  போன்றவை   இன்றைய  ஈழத்து  இலக்கியச்  செல்நெறியின்  பாடு  பொருளாகியுள்ளன.  இவை போருக்குப்பின்னரான  இலக்கியங்கள்.

ஏராளமான   சிறுகதைகளும்  கவிதைகளும்  சிலநாவல்களும் வெளிவந்துள்ளன.

குறிப்பாக  அதிக  கவிதைத்  தொகுதிகள்  போருக்குப்  பின்னரான விடயப்   பரப்பைக்  கொண்ட   தொகுதிகளாக  வெளிவந்துள்ளன.

கருணாகரன்    யுத்தகளத்தில்  போராளியாக  இருந்தவர்.  தற்போது அவரது   அந்த  நிலைமை  மாறி   போரின்  சரி  பிழைகளை  விமர்சிக்கும்   கவிதைகளை  எழுதிவருகிறார்.  யுத்தம்  பற்றிய  சிறந்த ஆவணமாக  இவரது  பலி  ஆடு,  எதுவுமல்ல  இதுவும்  போன்றவை திகழ்கின்றன.

தீபச்செல்வனின்   பதுங்குகுழியில்  பிறந்த  குழந்தை,  கிளிநொச்சி – போர்தின்ற  நகரம், பாழ்நகரத்தின் பொழுது  ஆகியவை  முக்கியமான தொகுதிகள்.

கி. பி. நிதுன்  எழுதிய  துயரக்கடல்  தொகுதியில்  யுத்தம் இடம்பெற்றபோது   முள்ளிவாய்க்கால்  பகுதியில்  மக்கள்  பட்ட அவலங்கள்,  இழப்புகள்,  போருக்குப்பின்னான   முகாம்  வாழ்க்கை,  மீள் குடியேற்றம்   போன்றவை  பாடுபொருளாயுள்ளன.

சேரனின்  காட்டாற்று  ஒரு  முக்கியமான  தொகுதி.

2010 ல்  குட்டி  ரேவதியால்  தொகுக்கப்பட்ட  ” முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ முக்கியமான  ஒரு  தொகுதி.

சித்தாந்தனின்   துரத்தும்  நிழல்களின்  யுகம்  இறுதி  யுத்தம் பற்றிய சிறந்ததொரு   ஆவணமாகத்  திகழ்கிறது. ”

இந்நிகழ்வில்  ஞானம்  ஆசிரியரின்  பவளவிழாவை  முன்னிட்டு அவரின்    வாழ்வையும்   இலக்கிய  சேவைகளையும்  பாராட்டி திருமதி  யோகேஸ்வரி  கணேசலிங்கம்  உரையாற்றினார். அதனையடுத்து   அவுஸ்திரேலயா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தினால்  ஞானம்  ஆசிரியருக்கு  விருது  வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட   விருதுக்கான  சான்றிதழ்  உரையை  சங்கத்தின் செயற்குழு   உறுப்பினர்  திரு. செல்வபாண்டியன்   சமர்ப்பித்தார்: அவ்வுரையில்   பின்வருமாறு  குறிப்பிடப்பட்டிருந்தது:

”  இலங்கை   தமிழ்   இலக்கிய    உலகில்  கடந்த  அரைநூற்றாண்டு  காலமாக  இயங்கிவரும்  மருத்துவர்  தியாகராஜா ஞானசேகரன்   அவர்கள்  சிறுகதை,  குறுநாவல்,  நாவல்,  விமர்சனம், கட்டுரை,  பயண  இலக்கியம்  உட்பட  பல்துறைகளில்  அயற்சியின்றி தொடர்ச்சியாக   எழுதிவருபவர்.

இதுவரையில்   பத்து  நூல்ளை  வரவாக்கியிருக்கும்  ஞானசேகரன்,  பல  இலக்கிய  நூல்கள்  மலர்களின்   தொகுப்பாசிரியருமாவார்.   2000 ஆம்   ஆண்டு  முதல்  ஞானம்  கலை,  இலக்கிய  மாத  இதழையும் வெளியிட்டுவருகிறார்.

இவருடைய   நூல்களுக்கு  இலங்கையில்  தேசிய  சாகித்திய விருதுகளும்,  மாகாண  ஆளுநர்  விருதுகளும்,  மேலும்  சில இலக்கிய   அமைப்புகளின்  விருதுகளும்  கிடைத்துள்ளன.  சில படைப்புகள்  இலங்கை , தமிழக  பல்கலைக்கழகங்களில்  பாட நூல்களின்   வரிசையில்  தெரிவாகியுள்ளன.

ஞானசேகரன் ,  அவர்களின்   சேவைகளை   பாராட்டி  அவுஸ்திரேலியா தமிழ்   இலக்கிய  கலைச்சங்கமும்  கன்பரா  கலை  இலக்கிய வட்டமும்   இணைந்து  நடத்தும்  கலை –  இலக்கியம்  2016  நிகழ்வில் இவ்விருது   வழங்கப்படுகிறது. ”

நிகழ்ச்சியின்   இரண்டாவது  அமர்வு  சங்கத்தின்  துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின்  தலைமையில்  நடந்தது.

திருமதி  பாமதி  பிரதீப் சோமசேகரம்,  ”  முகநூல்களின்  ஊடாக கவிதைகள்  ஏற்படுத்தும்  தாக்கமும்  அதற்கு  வரும் எதிர்வினைகளும் ”   பற்றி  உரையாற்றினார்.

சிட்னி   தாயகம்  வானொலி  ஊடகவியலாளர்  திரு. எழில்வேந்தன்,  வானொலி   ஊடகங்களின்   நீட்சியும்  நேயர்களின்  வகிபாகமும் என்னும்   தலைப்பில்  உரையாற்றுகையில்  கூறியதாவது:

”  புலம்பெயர்ந்த  நாடுகளில்  ஆரம்பிக்கப்பட்ட  வானொலிகளின் பின்னணிகள்  எவையெனப்  பார்க்கும்போது  அடிப்படையில் அவற்றை    ஆரம்பித்தவர்கள்,  இவற்றை  ஒரு  வர்த்தக முயற்சியாகவே   ஆரம்பித்தனர்  எனத்  தெரிகிறது.  பணம் பண்ணவேண்டும்   அல்லது  புகழடையவேண்டுமென்ற  நோக்கையே கொண்டு   ஆரம்பிக்கப்பட்டவையாக   வானொலிகளை  நான் காண்கிறேன்.   பலசரக்குகளை  விற்கும்   பல்பொருள்  அங்காடிக்கும் அல்லது   ஸ்பைஸ்  ஷொப்பிற்கும்  வானொலி நிலையத்திற்குமிடையில்   இவற்றை  ஆரம்பித்தவர்கள்  பெரிய வித்தியாசத்தைக்   காண்பிப்பதாக  எனக்குத்  தெரியவில்லை.

வானொலி   தொடர்பான  அரைகுறை  அறிவுடையவர்கள்  அல்லது பகுதிநேரமாக    நிகழ்ச்சிகளில்  பங்கெடுத்துக்கொண்டவர்கள்  அல்லது வேறு    இலக்கிய  முயற்சிகளில்  ஈடுபட்டு  அவற்றின் மூலம் புகழடைய   முடியாதவர்கள்  என  பலதரப்பட்டவர்கள் வானொலிகளை   ஆரம்பித்து,  அல்லது  அவற்றில்  இணைந்து தங்களுடைய   சுய  விருப்பு  வெறுப்புகளை  வெளிக்காட்டும் சாதனமாக   அவற்றைப்  பயன்படுத்தினர்,  பயன்படுத்திவருகின்றனர்.  இவ்வாறு   ஒலிபரப்புப்  பயிற்சியற்றவர்களால்  வானொலிகள்  நடத்தப்படுவது   கவலைக்குரியதே.”

கன்பராவில்   வதியும்  இலக்கிய  ஆர்வலர்  மருத்துவர் கார்த்திக்வேல்சாமி   தற்காலத்தில்  கம்பன்  என்ற  தலைப்பில் உரையாற்றுகையில்,  ”  கவிச்சக்கரவத்தி  கம்பன்  இராமாயணத்தை மாத்திரம்   பாடவில்லை.   அவர்  உழவர்களுக்காகவும்  பாடுபட்டு உழைக்கும்    மக்களுக்காகவும்  பல  காவியங்களை   இயற்றியவர்.

இன்று  காடுகள்  அழிக்கப்பட்டு  கட்டிட  காடுகள்தான்  உருவாகின்றன.   ஏழை  விவசாயி  தண்ணீருக்கு  போராடுகின்றான். பஞ்சத்தினால்   கிராமத்தை  விட்டு  வெளியேறுகின்றான்.   இதனை கம்பன்  என்றோ  தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்;டார்.

கம்பனின்   கருத்துக்கள்  இன்றும்  பொருந்தக்கூடியன. ” எனத்தெரிவித்தார்.

கன்பரா   இலக்கிய  ஆர்வலர்  திரு. திருவருள் வள்ளல்  தலைமையில் நடைபெற்ற   மூன்றாவது  அமர்வு  வாசிப்பு  அனுபவப்பகிர்வாக இடம்பெற்றது.

டொக்டர்   நடேசனின்  வாழும்  சுவடுகள்  மூன்று  பாகங்களின் தொகுப்பை  கவிஞர்  செ. பாஸ்கரன்  அறிமுகப்படுத்திப்பேசும்பொழுது,   ”   வழக்கமாக  எழுத்தாளர்கள் மக்களைப்பற்றியும்   அவர்களின்  வாழ்வுக் கோலங்களையும்தான் இலக்கியமாக   படைப்பார்கள்.   இந்த  நூலில்  நாம்  மக்களை மட்டுமல்ல ,  அவர்களின்  செல்லப்பிராணிகளின்  வாழ்க்கையையும் அவற்றின்   உணர்வுகளையும்  தெரிந்துகொள்கின்றோம். இலக்கியத்தில்   இவைபோன்ற  எழுத்துக்கள்  வித்தியாசமானவை. பிராணிகளின்   உலகம்  முற்றிலும்  வேறுபட்டது.  அந்த  உலகம் எப்படி   இருக்கிறது  என்பதை  மிருக  மருத்துவரான  நடேசன் தொடர்ந்து  பதிவுசெய்துவருகிறார்.

இதில்   இடம்பெற்றுள்ள  ஒவ்வொரு  கதைகளும்  எம்மை  புதிய உலகிற்குள்  அழைத்துச்செல்கின்றன. ”   – எனத்தெரிவித்தார்.

கவிஞர்    செ. பாஸ்கரனின்  முடிவுறாத  முகாரி  என்னும்  கவிதை நூலைப்பற்றி   உரையாற்றிய  டொக்டர்  நடேசன்  பேசுகையில்,

” கடந்த 30   வருடத்தின்  சம்பவங்கள்  போராட்ட  வாழ்வுக்குள்  மிச்சம் விட்டு  சென்றது  என்னவென்பது   இங்கு  பதிவு செய்யப்பட்டிருக்கிறது.    நிலத்திலிருந்து  வெளியேறிவர்கள்  ஏங்கும் நினைவுகள் –  இந்த  முடிவுறாத  முகாரி.

மற்றவர்கள் போல   வெளியிலிருந்து  பார்க்காமல்    போராட்டத்தின் முக்கிய   பங்குதாரியாக  பார்த்த  பாஸ்கரனின்  நினைவுகளில் போலித்தனமில்லை.

ஈழத்தின்  சிறந்த  தமிழ்க்கவிஞரான  மு . பொன்னம்பலத்தின் முகவுரை  மிகவும்  அழகான  கவிதையாக  இருக்கிறது.  முடிவுறாக முகாரி கவிதை  நூலை  வாசிப்பவர்களை  முகவுரை  கைப்பிடித்து அழைத்து  செல்லும். ”  என்று  தெரிவித்தார்.

ஆசி. கந்தராஜாவின்    கறுத்தக்கொழும்பான், கீதையடி  நீ  எனக்கு   ஆகிய   நூல்களை  முருகபூபதி  அறிமுகப்படுத்தி  உரையாற்றினார்.

” ஜெயமோகன்,   மாலன்,  எஸ்.பொ.  முதலான  இலக்கிய  ஆளுமைகள் கந்தராஜாவின்   நூல்களை  விதந்து குறிப்பிட்டு  எழுதியுள்ளனர்.    புகலிட  வாழ்வுக்கோலங்களை  கந்தராஜா  தமது கீதையடி நீ  எனக்கு     குறுநாவல்  தொகுதியில்   சித்திரித்துள்ளார். அத்துடன்   இவரும்  தனது  தொழில்  சார்   தாவரவியல் ஆய்வுக்கண்ணோடு   கறுத்தக்கொழும்பான்  நூலை  வரவாக்கியுள்ளார். ”   எனக்குறிப்பிட்டார்.

நான்காவது  அமர்வில்,  கன்பரா கலைஞர்   ரமேஸ் குமார்   தயாரித்து இயக்கிய  உயிர்குடிக்கும்  பசி   என்னும்   குறும்படம்  காண்பிக்கப்பட்டது.   இதனை  அறிமுகப்படுத்தி  உரையாற்றிய  திரு. மயூரன் சின்னத்துரை,  ”  நீடித்த  போரின்  சுவடுகளில்  ஆழமாக வேரோடிப்போயுள்ள   வறுமையையும்  அதனைப்போக்குவதற்கு புலம்பெயர்   உறவுகள்  மேற்கொள்ளும்  மனித நேயப்பணிகளையும் சித்திரிக்கிறது.   ரமேஸ்குமார்  எமது  தாயகத்தின் போர்க்காலச்சூழலை  ரமேஸ் குமார்   முடிந்தவரையில்  அவுஸ்திரேலியாவில்   படமாக்க   முயன்றிருக்கிறார்.   அவருடைய  உழைப்பு   இக்குறும்படத்தின்  காட்சிகளில்  துலக்கமாகியிருக்கிறது. ” என்று குறிப்பிட்டார்.

நடிகர் திலகம்  சிவாஜி கணேசன்  மறைந்த பின்னர் ஆவணப்படக்கலைஞர்  கனடா  மூர்த்தி  தயாரித்த  சிவாஜிகணேசன் ஒரு  பண்பாட்டியல்  குறிப்பு    என்னும்   ஆவணப்படமும்  கன்பரா  நிகழ்ச்சியில்   காண்பிக்கப்பட்டது.  பேராசிரியர்   கா. சிவத்தம்பியின்  தொகுப்புரையுடன்   பதிவாகியுள்ள  இந்த  ஆவணப்படத்தில்,  சிவாஜி நடித்த   ஏராளமான  திரைப்படங்களின்  முக்கிய  காட்சிகள் இடம்பெற்றிருந்தன.   சிவாஜி  ஏன்  மிகை  நடிப்பில்  கவனம் செலுத்தினார்   என்பதற்கு  அவர்  நாடக  உலகிலிருந்து  திரை உலகிற்கு   வருகை  தந்ததும்  முக்கிய  காரணம்  என்று  சிவத்தம்பி தமது   உரையில் குறிப்பிட்டிருந்தார்.

நீண்ட   இடைவெளிக்குப்பின்னர்  அவுஸ்திரேலியா – கன்பராவில் கலை,   இலக்கியவாதிகள்  ஒன்றுகூடி  கருத்துப் பகிர்ந்துகொள்வதற்கு இந்த   நிகழ்ச்சி  சிறந்த  களமாக  இருந்தமை  குறிப்பிடத்தகுந்தது.

கன்பரா  சமூகப்பணியாளர்  பல் மருத்துவர் ரவீந்திரராஜா  அனைவருக்கும்   தேநீர்  விருந்துபசாரம்  வழங்கி  சிறப்பித்தார். கன்பரா   கலை  இலக்கிய  வட்டத்தின்  சார்பில்  இந்நிகழ்ச்சிக்கான அனைத்து  ஒழுங்குகளையும்  திரு. நித்தி துரைராஜா மேற்கொண்டிருந்தார்.

—-0—-

 

 

Series Navigationஅணுசக்தியே இனி ஆதார சக்திதுரும்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *