ஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதும் பரப்பரப்பாக ஊடகத்தில் பேசப்பட்டது. மிகவும் வருத்தம் அளித்தது அவர்கள் திரும்ப இலைங்கைக்குப் போக விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போகவே விரும்பினார்கள். ஜூன் 2016 காலச்சுவடு இதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. ‘இருண்ட பங்குனி’ என்னும் கட்டுரையில் அஜிதா தமிழ்ப் பெண்கள் போருக்குப் பின் இன்னும் கடக்க முடியாத இடர்களைப் பட்டியலிடுகிறார். பொருளாதார மற்றும் மனோரிதியான தடங்களில் அவர்களுக்கு வெளிச்சம் எதுவும் தென்படவில்லை. கருணாகரன் காலச்சுவடுக்கான நேர்காணலில் கண்ணி வெடிகளை அகற்றுவதில் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் ஏனையர் ஆண்களும் பெண்களுமாக கூலிக்கு அமர்த்தப் பட்டுள்ளதை விவரிக்கிறார்.
19.6.2016 ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் ஏழாம் பக்கத்தில் ராணுவத்தால் சித்திரவதைக்கு ஆளாகிய போராளிகள் மற்றும் பிற ஆண்கள் தங்கள் குடும்பத்தினர் மீது அந்தக் கசப்பை வெளிக்காட்டி அவர்களைக் கொடுமைப்படுத்துவதாக ஒரு பெட்டி செய்தி. மனோரீதியான புனர் வாழ்வுக்கு அவர்களுக்கு உளவியல் மருத்துவ ஆலோசனை உதவும் என்கிறது பதிவு.
இந்தியாவில் உள்ள தமிழர்களின் சிறிய பெரிய குழுத்தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கெல்லாம் இலங்கை வாழ் தமிழர்கள், வீரம் மற்றும் தியாகத்தின் வடிவங்கள். மக்களை உசுப்பேற்றி இவர்கள் அரசியல் செய்ய என்றே பிறந்தவர்கள். போரிட்டால் அது வீரம். மரணமடைந்தால் வீர மரணம். இன்று பரிதவித்தால் அது தியாகம். நாங்கள் எப்போதும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் இனமான உணர்வுச் சிங்கங்களாக்கும். இதைத் தாண்டி எந்த அக்கறையும் இலைங்கை வாழ் அல்லது புலம்பெயர்ந்த எந்தத் தமிழர் பற்றியும் எங்களுக்குக் கிடையவே கிடையாது. அரசியலுக்கு அவ்வப்போது வசதியாகக் கிடைக்கும் அப்பாவிக் கைப்பாவைகள் இலங்கைத் தமிழர்கள்.
லெமூரியா கண்டம் என்ற ஒன்று இருந்து சுனாமியில் அழிந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என ஒரு விரிவான கட்டுரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 19.6.2016 நாளிதழின் இரண்டாம் பக்கத்தில் தொல்லியல் அறிஞர்களை மேற்கோள் காட்டி வந்திருக்கிறது. ஆதாரமில்லாத ஒன்று குழந்தைகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறுவது பொருத்தமில்லை என்றும் எடுத்துரைகிறது.
பெருமை மிகு வரலாறை நினைவு கூர்வது வரும் தலைமுறைக்கு நாம் நம் பாரம்பரியத்தில் எதைப்பிடித்துக் கொள்கிறோம் என்னும் அளவில் பயனுள்ளது. மன ஊக்கம் தருவது. ஆனால் நாம் எதாவது பெருமை பேசக் கிடைத்தால் போதும் என்று பற்றிக் கொள்வது குறுகிய அணுகுமுறை. தேக்க நிலைக்கு அறிகுறி. அடுத்தது நாம் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்ளும் மொழி மற்றும் பண்பாட்டுக்கு என்ன பங்களிப்பு செய்கிறோம் என்னும் கேள்விக்கான விடை தேடல் விவாதம் நமக்குள் நடந்த படி இருக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் பண்பாடு பற்றிய விவாதங்கள் நடப்பதே இல்லை. பங்களிப்பு என்ன என்பது அதை வைத்து பிழைப்போரின் தொலைக்காட்சிகளைப் பார்த்தாலே புரியும்.
உணர்ச்சி வசப்பட்டு உசுப்பேற்றிக் கொள்ள கடந்த காலத்தின் லெமூரியா முதல் இன்று நாம் அரசியல் மட்டுமே ஆக்கிய இலங்கைத் தமிழர் வரை எத்தனையோ உதாரணங்கள். நாம் நேசிப்பது நம் மொழி நம் பண்பாடு நம் மொழி பேசும் மக்களென்றால் நாம் அவர்களுக்கான என்ன செய்தோம் என்னும் கேள்வியை எழுப்பி நேர்மையுடன் ஒரு ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 2
- ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?
- திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா
- லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை
- அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16
- “காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”
- `ஓரியன்’ – 2
- தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்
- காப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்
- சூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்
- தொடுவானம் – 124. தேசிய கீதத்தில் திராவிடம்
- கனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்
- My two e-books for young adults