காப்பியக் காட்சிகள் சிந்தாமணியில் ​உழவும் ​நெசவும்

This entry is part 2 of 12 in the series 4 ஜூலை 2016

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

 

மனிதன் தனது வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் இயற்கையாகக் கிடைக்காதபோது அவற்றைச் செயற்கையாக உருவாக்க முயன்ற முயற்சியே தொழில்களாகும். மனிதன் பல்வேறு தேவைகளின் அடிப்படையில் பலவகையான தொழில்கள் உருவானது. இவ்வகையில் உருவான தொழில்களைச் செய்வோர் அத்தொழில்களின் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டனர். இதுவே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றம் பெற்றன.

சீவகசிந்தாமணியில் உழவு, வணிகம், நெசவு, கொல்லு, தச்சு உள்ளிட்ட பலவகையான தொழில்கள் இருந்தன. அதில் தலைமைத்துவம் வாய்ந்ததாக உழவுத் தொழில் விளங்கியது.

உழவுத் தொழில்

சிந்தாமணியில் பதினோரு இடங்களில் உழவு குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. உழவுத்தொழிலுக்கு இயற்கையிலிருந்தே தேவையான நீரைப் பெற்றுப் பயன்படுத்தினர்(32-39). வானிலிருந்து பொழியும் மழைநீரை முறைப்படுத்தி ஆறுகளில் பாயவிட்டனர்(40) ஆறுகளில் பாய்ந்த நீரைச் சிறுசிறு வாய்க்கால்களில் பாய்ச்சி உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தினர்(41). நீரின் வருகையைக் கரையைப் பாதுகாக்கும் கரைக்காவலர்கள் பறையறைந்து மக்களுக்கு அறிவித்தனர். இதனை,

“பழமெகாள்தெங் கிலையெனப் பரந்து பாய்புனல்

வழங்கமுன் இயற்றிய சுதைசெய் வாய்த்தலை

தழங்குரல் பம்பையிற் சாற்றி நாடெலாம்

முழங்குதீம் புனல்அக முரிய மொய்த்ததே”(40)

என்று திருத்தக்கதேவர் குறிப்பிடுகின்றார்.

உழவுத் தொழிலை மேற்கொள்ளும் மக்கள் அந்நீரை வயல்களில் பாய்ச்சினர்(41). நீர் நிறைந்த வயல்களை உழுது பயன்படுத்துவதற்கு எருதுகளையும் எருமைக் கடாக்களையும் பயன்படுத்தினர்(43). எருதுகளும் எருமைக்கடாக்களும் ஏரில் பூட்டுவதற்கு முன் அவை சம உயரமுடையவைகளாக இருக்குமாறு தேர்ந்தெடுத்தனர்(43-44). சம உயரமுடைய எருதுகளைக் கொண்டு வயலை நன்கு உழுது பண்படுத்தினர்(44). பண்படுத்தப்பட்ட வயலில் நல்ல நாள் பார்த்து இறைவனை வணங்கி விதை நெல்லை விதைத்தனர்(45).

விதைநெல் நன்கு செழித்து வளர்ந்தது. வளர்ந்த நெற்பயிரில் களைகள் காணப்பட்டன(51). அக்களைகளைப் பெண்கள் வயலில் இருந்து பிடுங்கினர். பெண்களே களையெடுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. களைகளற்ற நெற்பயிர் கதிர்முற்றி நின்றது. நெற்கதிர்களை உழவர்கள் வளைந்த அரிவாளைக் கொண்டு அரிந்தனர்(55). அரிந்த நெற்கதிர்களைப் பெரிய கட்டுக்களாகக் கட்டிக் களத்திற்கு எடுத்துச் சென்றனர்(57). பின்னர் அவற்றிலிருந்து நெல்லைப் பிரித்து எடுத்தனர். அந்நெல்லை அளவறியாது பொருநர் போன்றோருக்குக் கொடுத்தனர்(61). அவ்வாறு கொடுத்தது போக எஞ்சியிருந்ததை விற்பதற்கு வண்டிபகளில் எடுத்துச் சென்றதை,

“கிணைநிலைப் பொருநர்தம் செல்லல் கீழ்ப்படப்

பணைநிலை ஆய்செந்நெல் பகரும் பண்டியும்

கணைநிலைக் கரும்பினிற் கவரும் பண்டியும்

மணம்நிலை மலர்பெய்து மறுகும் பண்டியும்”(61)

என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது.

இதே போன்று கரும்பு(61), தேங்காய்(62), வெற்றிலை(62), பாக்கு(62), மலர்கள்(61) முதலியவற்றையும் வண்டிகளில் ஏற்றி விற்பதற்காக எடுத்துச் சென்றனர். பயிர்த்தொழில் ஈடுபட்டிருந்த ஆண்களும் பெண்களும் மது அருந்தினர். குவளை மலர்களைத் தலையில் சூடியிருந்தனர்(61). அக்கால மக்கள் உழவுத் தொழிலில் நெல்லை மட்டும் பயிரிடாமல் கரும்பு, தேங்காய், வெற்றிலை, பாக்கு, மலர்கள் முதலிய பலவகையான பயிர்களையும் பயிரிட்டனர் என்பது சீவகசிந்தாமணியிலிருந்து புலப்படுகின்றது.

நெசவுத் தொழில்

சிந்தாமணியில் நெசவுத் தொழில் பற்றி நேரடியாக எதுவும் குறிக்கப்படவில்லை. பலவகையான ஆடைகள் அக்காலத்தில் இருந்தமையால் நெசவுத் தொழில் இருந்தது என்பது தெளிவாகின்றது. ஆடைகள் வெள்ளாடை(697,873,1094,1146,1409), செவ்வாடை(926),கரிய ஆடை(320,939), நீல ஆடை(931) முதலிய பல வண்ணங்களில் இருந்தன. இவ்வாடைகளை உள்ளாடையாகவும் மேலாடையாகவும் மக்கள் பயன்படுத்தினர். ஆடைகளின் மேற்புறத்தில் பல வண் ஓவியங்கள், பூக்கள் வரையப்பட்டிருந்தன(1033). பட்டாடைகளை ஆண், பெண் இருவரும் மகிழ்ந்து அணிந்தனர்(1650,2425), இறப்பு உள்ளிட்ட துன்பம் நிறைந்த நாள்களில் கருப்பு நிற ஆடைகளை அணிந்தனர்(320).பிறந்த நாள், மணநாள் முதலிய மகிழூச்சி நிறைந்த நாள்களில் வெள்ளாடைகளை அணிந்தனர்(697,873,1094). இவ்வாடைகள் அனைத்தும் பாலாவி போன்ற மெல்லிய ஆடைகளாக விளங்கின(873). பூந்துகில் என்றும் பால்நுரை என்றும் ஆடைகளின் தன்மையைக் குறிப்பிட்டனர் (697,1015).

போர்வைகள்

குளிர்காலங்களில் போர்த்திக் கொள்வதற்கு ஏற்புடைய வகையில் போர்வைகள் இருந்தன(1033,2686). இவை நெருப்பைப் போன்று குளிரைப் போக்கக்கூடியதாக விளங்கியது. இத்தகைய அரிய போர்வைகளைத் தயாரிக்க நெருப்பைத் தின்னும் எலியின் மயிரைப் பயன்படுத்தினர் என்பதை,

“செந்நெரு ப்புணுஞ் செவ்வெ லிம்மயிர்

அந்நெ ருப்பன வாய்பொற் கம்பலம்

மன்ன ருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்

என்ன ரொப்புமில் லவர்க ளென்பவே”(2686)

என்று திருத்தக்கதேவர் குறிப்பிடுகின்றார். இப்போர்வைகள் பல நிறங்களில் இருந்தன(1033).

போர்க்காலங்களில் வீரர்கள் அணிந்து கொள்ளும் வட்டுடை(767) எனும் ஆடை இருந்தது. இவ்வாடை வீரர்களின் முழுஉடலையும் மறைக்கக்கூடியதாக விளங்கியது(767). இவ்வாடை முழுவதும் துணி நூலால் நெய்யப்பட்டிருந்தது(767).

மண்டபங்களில் விதானங்கள் அமைக்கத் துணியாடைகள் பயன்படுத்தப்பட்டன(837). நாடக அரங்குகளில் எழினிகளாகத் துணி ஆடைகள் பயன்படுத்தப்பட்டன(873,948). பொழில்களில் குடில்கள் அமைக்கத் துணிகள் பயன்படுத்தப்பட்டன(873).

ஓவியங்கள் வரைவதற்கும்(948), வரைந்த ஓவியங்களைப் பாதுகாப்பதற்கும் துணிகள் பயன்படுத்தப்பட்டன(1047). மக்கள் நாள்தோறும் உறங்குவதற்குப் பஞ்சு மெத்தைகளும்(838), துணி விரிப்புகளையும்(617), துணியாடைகளையும் பயன்படுத்தினர்(926). இங்ஙனம் பல்வேறுவிதமான துணிகளை மக்கள் பயன்படுத்தியதிலிருந்து அக்காலத்தில் நெசவுத்தொழில் சிறப்புற்றிருந்தமை தெளிவாகின்றது.(தொடரும்-12)

 

Series Navigationபுரியாத புதிர் மயிர் நீப்பின்…
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *