கவி நுகர் பொழுது – சொர்ணபாரதி

This entry is part 6 of 23 in the series 24 ஜூலை 2016

sornabharathy

( சொர்ணபாரதியின்,”எந்திரங்களோடு பயணிப்பவன்”, நூலினை முன் வைத்து)

வாழ்க்கை, சம்பவங்களால் கட்டமைக்கப் படுகிறது.சம்பவங்கள்,துக்கங்களாலும் சந்தோஷங்களாலும் கட்டமைக்கப்படுகின்றன. சந்தோஷங்களும் துக்கங்களும் சில வேளைகளில் நம்மாலும் பல தருணங்களில் நம் கட்டுப்பாட்டை மீறியும்  நிகழ்கின்றன. நிகழ்பவை எதுவாயினும் எதிர்கொள்ளும் கட்டாயத்தைக் காலம் நமக்கு வழங்குகிறது.வழியில்லை;எதனையும் எதிர்கொண்டேதீர வேண்டும்.மகிழ்ச்சியின் போது துக்கத்தை எதிர் கொள்ளும் அவகாசமாயும் துக்கத்தின் போது மகிழ்ச்சியை எதிர்கொள்ளும்  நம்பிக்கையாயும் உணர்வெழுச்சியை எதிர்கொள்வது இயல்பாகிறது.அது போலவே,கவிமனம், கவிதையின் வாயிலாகவே சந்தோஷத்தை சுகிக்கவும் துக்கத்தைத் துடைக்கவும் முயற்சிக்கிறது.அந்த முயற்சியின் பலனாய் கவிமனம் சமன் பெறவும், வாசகன் சில நல்ல கவிதைகளை பெறவும் முடிகிறது.

wrapper

சொர்ணபாரதி,”எந்திரங்களோடு பயணிப்பவன்”, என்னும்கவிதைத் தொகுப்பைக் கொடுத்தவுடன், அவரின் முந்தையத் தொகுப்பான “மனவெளியளவு” சட்டென நினைவுக்கு வந்தது. பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும் அத்தொகுதி   வெளிவந்து என நினைக்கிறேன்.அத்தொகுப்பில்,வெகு கால வெளியில் உருவான கவிதைகள் இடம் பெற்றிருந்தன.இத்தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், அதாவது ஓரிரு ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், அதாவது ஓரிடு ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன.தனிதனிக் கவிதைகளாயினும், கவிதைகளின் ஊடாக இழையோடும் மைய உணர்வுச் சரடைக் கைப்பற்றுவது இத்தொகுப்பில் அவ்வளவு சிரமமில்லை;சில கவிதைகள் வேண்டுமெனில் விதி விலக்காக இருக்கக்கூடும்.

மனிதன் ஒரு சமூக விலங்கு.விலங்கின் பரிணாமத்தின் உச்சமாக உருவாகியிருக்கும் மனிதன் சமூக உறவைப் பேணுவதிலே தான் தனித்து நிற்கிறான்.

அதைப் பேண வேண்டுமெனில்சில பிரத்யேக நற்குணங்கள் வாய்க்கப் பெற வேண்டும். அத்தகைய சிறப்புக் குணங்களஏ, அவனின் அடையாளமாகிறது.சமூகத்தோடும் சகமனிதர்களோடும் உறவு பேணுவது நற்குணம் எனில், அவ்விதம் பேணும் சூழ் நிலை அமைவது நல்வாய்ப்பாகும்.தனித்து விடப்பட்டவன் தவித்துப் போகிறான்.

தனிமை தண்டனையாகிறது.சிறைவாசத்தின் அடிப்படையே அதுவாகிறது.தனிமை சலிப்பைத் தருகிறது.தன்மீதே வெறுப்பை உருவாக்குகிறது.அச்சம் உண்டாகி, வாழ்வின் விளிம்பைத் தொட்டு விடக் கூட பணிக்கிறது.

“தனித்திரு-விழித்திரு”,என்பது ஞானிகளின் வார்த்தை.வழமையான வாழ்க்கை வேறாக இருக்கிறது.தனிமை கொடுமையானது;ஏனெனில், அத்தனிமையை உருவாக்கும் காலமும் சூழலும் அதனை விடக் கொடுமையானது.அந்தத் தனிமையின் உக்கிரத்தை பல கவிதைகளில் சொர்ணபாரதி பதிவு செய்கிறார். தனிமை தரும் அயற்சி தன்னிரக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடியது. அதனாலே தான்,

மின்விசிறியின் சுழற்சியில்

படபடக்கும் நாட்காட்டியின் தாள்கள்

என் தனிமை கண்டு ஏளனம் செய்கின்றன.

என்கிறார். தனிமையின் பிறிதொரு முக்கியமான தன்மை செயலற்றுப் போகச் செய்வதாகும்.

தத்தளித்த நத்தை

சுமைகளோடு சேர்ந்து தன்னையும்

கூட்டின் உள்ளிழுத்துக் கொண்டு

தனிமையை மட்டுமே

தன் நட்பாக்கிக் கொண்டு

அசைவின்றி செயலற்றுப் போனது.

என்னும் வரிகள்,தனிமைக்கு முன்னர் உருவாகும் தத்தளிப்பினையும் தனிமைப்படும் போது செயல் படும் தன்மையையும் தனிமைப்பட்ட பின்னர் ஸ்தம்பித்துப் போகும் செயலற்ற நிலைமையையும் உணரவியலும்.

மற்றொரு கவிதையில்,

அவள் இருப்பே என் தனிமைக்கு

வரவு கூறியது

“தனிமையுண்ணும் அந்தி”, என்னும் தலைப்பிட்ட கவிதையில், தனிமையின் தீவிரத்தை பதிவு செய்கிறார்.தனிமை என்பது பௌதிகம் சார்ந்தது மட்டுமன்று. உள்ளம் சார்ந்ததாகவும் உருவாகிறது. கூட்டத்தின் நடுவே தனியனாய் இருப்பது, இருக்க வேண்டிய சூழல் உருவாவது மேலும் பல சிக்கல்களை உண்டாக்கிவிடக் கூடியது.

பசும் வயல்கள், பழமையும் புதுமையும் குழைத்த வீடுகள், மாணவிகளின் சிரிப்பொலி,தொழில் நுட்பக் கருத்துரைகள்,வண்ண மிட்டாய்கள் தொங்கும் பெட்டிக்கடை,பேராசிரியர்களை விட பெர்தாய்ப் பேசும் வேப்ப மரம், ஆட்டுமந்தை, ஓடிப்பிடித்து விளையாடும் சிறுமிகளின் கூக்குரல்,இவையாவற்றோடும் ஒட்டாத ஒருவன் திண்ணையிலே அமர்ந்திருக்கிறான்.அருகில் நின்றிருந்த  நாயை உற்று நோக்கியபடியே என்பதில் உள்ள அனைத்திற்குள்ளும் அல்லது அனைத்தின் மத்தியிலும் தனித்திருப்பதன் வேதனையை உறுதிப்படுத்துவதாகிறது.

அதுபோலவே,

விழிகளின் முன் விரியும் பிரமாண்டம்

குழந்தைகள் குதூகலத்துடன்

கூச்சலிட்ட படியே

ஆடிக்கொண்டிருந்தனர்

கைகளைக் கோர்த்தபடி

எனத்தொடங்கும், “அச்சவெளியில்” என்னும் தலைப்பிட்டகவிதையில்,தனிமையிம் காரணம்

தவிப்புடன் கூடிய‌

தப்பித்தலுக்கான மனத்தயாரிப்போடு

என்று நிறைவுறுகிறது.

தனிமையென்னும் உக்கிரமான மனஅழுத்தத்தின் காரணத்தை கவிதைகளின் ஊடாக கண்டுபிடிக்க இயலுமா?அதற்கான சூழ் நிலைத்தாக்கம் என்னவாக கவிமனத்தைப் பாதிக்கிறது என்பது மிக முக்கியமானது.எதிர்பார்ப்பது கிட்டவில்லையெனில், ஏமாற்றமே விளைகிறது.ஏமாற்றத்தைத் தவிட்க்க எதிர்பார்ப்பதை நிறுத்தவேண்டும்.ஆயினும், அத்தனை எளிதானதல்ல. ஒரு செயலை நிகழ்த்துகிறோம்.அதற்கான, எதிர்வினை இதுவாகத் தான் இருக்கும்;இருக்க வேண்டுமென அவாவுறுகிறது மனம்.ஆயினும்,

இயல்பற்றவைகளையே இயல்பென‌

ஏற்றுப்பழகிய மனம்

இயல்பானவற்றைப் புறக்கணிப்பது

இயல்பற்றவையென‌

சாத்தானின் வாயிலில் நின்று

இறைஞ்சுவது எப்போதும் இயல்பாகிறது.

என்னும் பட்சத்தில் தனிமையின் தேவை உருவாகிப் போகிறது.

ஒவ்வொரு முறையும் உனைச்

சந்திக்கும் போதும் நிறைய‌

பேச வேண்டும் என்கிறாய்

பேசினால் தானே… இல்லையெனில் யாதென பேதலிக்கத் தானே செய்யும். இறுக்கத்தைத் தளர்த்தச் சொல்லி இறைஞ்சியும் பலனற்றுப் போக இறுக்கமாகிப் போகிறது கவிமனம்.

எவ்விதச் சலனமுமின்றி

அணில் தன் முதுகில் சுமந்த‌

காதல் வரிகளுடன் ஓடிக்கொண்டிருக்கும்

மணியடித்து வரவேண்டுமென‌

லேசாய் முகம் சுளிக்கும் மலரிடம்

என்ன செய்ய முடியும்.

வாசலில் இறக்கிவிடும் போது

உள்ளே அழைப்பாயென‌

எதிர் நோக்கும்போது

சட்டென கையசைத்துவிட்டுச்

சென்றுவிட்டாய்

அழைப்பை எதிர்பார்த்து அழையாத போதில், அதிர்ந்து மீள நினைக்க அடுத்த வரிகளில்,

மறுமுனை உடனே புறப்பட எத்தனிக்கையில்

“தேனீர் அருந்திவிட்டுப் போ”

எனப் புன்னகைக்கிறாய்

அழைக்காமல் இருப்பதும்,தேனீர் அருந்தச் சொல்வதும் முக்கியமில்லை.பின்னர் எதுமுக்கியமெனில்,இந்த சாசுவதமற்ர மன நிலைச் சூழலை பிறர் உருவாக்கி,அதன் படி இயங்கித் தீரவேண்டியதன் கட்டாயம் வேதனையானது.

அழகான காட்சிச் சித்திரங்களாகவே பல கவிதைகள் அமைந்திருக்கின்றன.எனவே, பெயரிடப்பட்டோ அல்லாமலோ பாத்திரங்கள் உருப்பெற்று உயிர் பெற்றிருக்கிறார்கள். சில பாத்திரங்கள் மீதான அபிப்ராயத்தை கவிதைகள் ஏற்படுத்தி விடுகின்றன.பாத்திரங்களுக்கான அடையாளத்தை, நேரடி காரணப்பெயர்களைப் போன்று சூட்டியிருக்கும் விதம் கவனத்திற்குரியதாகிறது.

உதாரணமாக, ” நிலவு சேர் நீள் சடையன்” என்கிறார்.காலங்களை விற்கும் மாயாஜாலக்காரன் என்கிறார். தாமரையரசனென்கிறார்.சரி.யார் இவர்கள்?

இந்தப் புனைவுகளால் உருவாக்கப் படும் பாத்திரங்கள் அத்தகையப் புனைவின் செயல் தன்மையோடு கவிதை தொடர்வது ஒன்று.

மறைமுகமாக ஒருபாத்திரத்தை பூடகமாய் அறிமுகப்படுத்தி கவிதையை பொதுத்தன்மையோடு தொடர்வது பிறிதொன்று. முன்னதன் வாயிலாக கவிஞனுக்குக் கிடைக்கும் பலன் வாசகனுக்குக் கிட்டுமாவென்பது ஐயமே.

இருந்த போதிலும், யாரென்று கண்டுபிடிப்பது அவசியமில்லை என்பதை, கவிதையின் பிற வரிகளின் தத்துவார்த்த , கருத்தியல் வெளியின் மூலம் புலப்படும் பட்சத்தில், வாசகன் முற்பட்டு விடுவான். அத்தகைய நுட்பமான மனவெளியின் பெரும்பரப்பின் பல்வேறு இடங்களைத் தொட்டுச் செல்லும் கவிதைகளாக அவைகள் அமைன்திருக்கின்றன.

சமூகச் சூழல், சுயம் சார் பொருளாதார அவஸ்தைகள், அவற்றின் மூலம் எதிர் கொண்ட இன்னல்கள், வாய்க்கும்போது அந்த நினைவுகளோடு சக மனித நேயத்தோடும், கடப்பாட்டோடும், செயலுறும் தன்மையென பல நல்ல செய்திகளை உள்ளடக்கிய கவிதைகளை “எந்திரங்களோடு பயணிப்பவன்”, தொகுப்பில் காணமுடிகிறது.

சொர்ணபாரதியின், கவிப்பயணத்தில் கடந்த சில ஆண்டுகளின் கவிமன வெளிப்பாடாக கவிதைகள் அமைந்திருக்கின்றன. தனிமை, தன்னிரக்கம், சுயசலிப்பு, நிச்சயமற்ற மன நிலை இவற்றை ஒற்றைப் பாய்ச்சலில் கடந்து சமூக வெளியின் சகலத்திற்கும் முக்கியம் தரும் பல கவிதைகளை சொர்ணபாரதி எழுதவேண்டும் சொல்வதற்கு உரிமையும், எழுதுவார் என்னும் நம்பிக்கையும் எனக்கு இரக்கிறது.ஏனெனில், சொர்ணபாரதி கவிஞர் மட்டுமல்ல;என் இனிய நண்பர்.

Series Navigationதிண்ணை வாசகர்களுக்குகவி நுகர் பொழுது- உமா மோகன்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *