ஸிந்துஜா
1
முன்னெச்சரிக்கை :
- இதுதான் என்னால் கொடுக்க முடிந்தசிறிய தலைப்பு
- இது சிறு அல்லது நெடுங்கதை ? இல்லை ! குறுநாவல்,
நாவல் ? ஊஹூம் ! ரெகுலராக வரலாம் அல்லது வராமலும் கூட.
- 56 வதுவயதில் எம் .ஜி.ஆர். தன்னை உலகம் சுற்றும் வாலிபன் என்று அறிவித்தார். இந்த வயதைஇதை எழுதுபவருக்கும் பொருத்திக் கொள்வது உங்கள் இஷ்டம் .
எனக்கு நாலு வயது ஆகும் போது என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடவேண்டும் என்று என் குடும்பத்தில் எல்லோரும் ஆசைப்பட்டனர். அதற்குக் காரணம் நான் கலைமகளின் கடைக்கண் பார்வை பெற்று வயதுக்கு மீறின அறிவுடன் விளங்கினேன் என்பதல்ல. ‘ எல்லோரையும் கட்டி மேய்க்கும் இடம் ‘ என்று தேர்ந்தெடுத்த பிரதேசத்தில் என்னைப் போட்டால் கொஞ்சம் அடங்குவான் என்றுதான். அப்போது இந்த மாதிரி,முதலில் ப்ளே ஸ்கூல் அப்புறம் ஒரு லட்சம் கொடுத்து நர்சரி, எல்கெஜி யூகேஜி என்றல்லாம் கொள்ளைக்காரர்கள் இல்லாத பாருக்குள்ளே நல்ல நாடாக இருந்தது நம்ம ஊர். ஆனால் ஒன்றாம் கிளாசில் சேருவதற்கு ஐந்து வயதாகி இருக்க வேண்டும். எனக்கோ நாலு வயதுதான். அதனால் எனக்கு ஒரு வயது கூடப் போட்டுக் கொடுத்துத் தள்ளி விட்டார் என் தகப்பனார். இது பிற்காலத்தில், சரியாக ஐம்பத்து மூன்று வருஷம் கழித்து என் வேலைக்கு ஓய்வு பெறும் வயது என வேட்டு வைக்கும் என்றோ ஒரு வருஷம் முன்னதாகவே ஓய்வு பெறுவதன் மூலம் ஒரு வருஷத்துக்கு பதினெட்டு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெறாமல் இழப்பேன் என்றோ அவர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தால் அவர் எனக்கு ஏழு வயதாகும் போது ஒண்ணாம் வகுப்பில் ஐந்து வயது என்று சேர்த்து விட்டிருப்பார்.
என்னைத் தினமும் ஸ்கூலுக்குக் கூட்டிக் கொண்டு போகும் பொறுப்பு பின் போர்ஷனி ல் இருந்த பாகவதராத்து மாமியினுடையது. ஏனென்றால் அவளுடைய பெரிய பிள்ளை சுந்தரம் அதே ஸ்கூலில் ரெண்டாவது படித்துக் கொண்டிருந்தான் . அவனைத் தினமும் கூட்டிக் கொண்டு போகும் போது என்னையும் அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் . போகும் வழியெல்லாம் அழுது கொண்டே வரும் என்னைத் தர தரவென்று மாமி இழுத்துக் கொண்டு போவாள். ஒரு லெவெல் வரை கண்ணா என்று கொஞ்சல் , சமத்தோல்லியோ என்று கொஞ்சம் கெஞ்சல் அப்புறம் இவை பலிக்காமல் போகும் போது ரெண்டு அறை . கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் எனக்கு, அறை மட்டும் சுந்தரத்துக்கு. அவனை அறைந்து விட்டு, ” எப்படி அடி விழுந்தது பாத்தியா ? உனக்கும் இது மாதிரி வேணுமா ? “என்று கேட்பாள் . சுந்தரம் என்னைக் கொலை வெறியோடு பார்ப்பான். அதற்காக விஷயத்தை அவன் அப்படியே விட்டு விடுவான் என்று அர்த்தமில்லை. காலையில் பத்து நிமிஷம் ரீசெஸ் என்று பாத் ரூம் போவதற்கு எல்லோரையும் அவிழ்த்து விடுவார்கள் ( கட்டி மேய்க்கும் இடம்தானே ? ) அப்போது பார்த்து சிரித்துக் கொண்டே சுந்தரம் என் பக்கம் வருவான். நாலு அறை , இரண்டு கிள்ளு என்று காலையில் அவன் வாங்கியதற்கு இரண்டு மடங்காகவும் ஒரு இலவச இணைப்பாகவும் கொடுத்து விட்டுப் போவான் . கன்னம் எரிந்து தள்ளும். செவ செவ என்று சிவந்து கிடக்கும் கன்னங்களுடன், அழுது கொண்டே வகுப்புக்குள் வருவேன்.
ஒன்றாம் வகுப்பில் எனக்கு நல்லம்மா டீச்சர். பெயருக்கே ஏற்ற மாதிரி நல்ல டீச்சர். என்னைப் பார்த்ததும் பதறிப் போவாள். ” யார் குளந்தையை இப்படி போட்டு அடிச்சுக்க கொன்னது ?” என்று யாரோ என்னைக் கொலை செய்ய முயன்றது போல் பதறுவாள். என் பதிலை எதிர்பார்க்காமல் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு கன்னத்தில் அடிபட்ட இடத்தில் முத்தம் கொடுப்பாள் . வெய்யில் கொளுத்தித் தள்ளும் மதுரைப் பகலில் ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை வேய்ந்த ரூமில் நல்லம்மா டீச்சர் வேர்வையில் குளித்துக் ‘கச கச ‘வென்றிருப்பாள் . அந்தக் கச கச முத்தம் கன்னத்தில் எரியும். என் வாழ்க்கையில் எரியும் முத்தம் கொடுத்த அவளை மறக்கவே முடியாது.
காலையில் பள்ளிக்கூடம் வரும் நாங்கள் மத்தியானம் வீட்டுக்குப் போய் விடலாம். மத்தியானம் ஸ்கூல் கிடையாது. காலையில் ஸ்கூலில் படிப்பும் மத்தியானம் வீட்டில் தந்தையின் தொழிலும் கற்றுக் கொள்ளா வேண்டும் என்ற கல்வி முறை இருந்தது. நானும் மத்தியானம் என் அப்பா ஆபிசில் செய்வதை ஒழுங்காகக் கற்றுக் கொண்டவனாய் மூணு மணிநேரம் நன்றாகத் தூங்குவேன்.
2.
நாலைந்து மாதங்களில் பள்ளிக்கூடம் பழகிவிட்டது. அழுது கொண்டே போவதும்,தர தர இழுப்பும் நின்று விட்டன. இதற்காகவே காத்திருந்தது போல் சுந்தரத்தின் குடும்பம் நகருக்குள் உள்ள இடம் ஒன்றிற்கு வீடு மாறிப் போய் விட்டனர். பக்கத்து வீட்டில் என் அப்பாவுடன் அவர் ஆபிஸில் கூட வேலை பார்க்கும் நாகராஜ மாமா இருந்தார். அவருடைய பெண் அகல்யாவும் என் ஸ்கூலில் என் க்ளாஸில்தான் படித்தாள் . அதனால் என் அப்பா அவளைக் கூப்பிட்டு தினமும் அவள் பள்ளி செல்லும் போது என்னையும் அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று சொல்லி விட்டார். அவள் என்னை விட ஒரு வயதுதான் பெரியவள். அவளிடம் இந்தப் ” பொறுப்பைக் ” கொடுத்ததும் அவள் பெரிய மனுஷியாகி விட்டாள். அவள் கூட்டிக் கொண்டு போக வரும்போது நான் ரெட்ட ரெடியாக இருக்க வேண்டும். வழக்கமாக அந்த சமயத்தில் சுந்தரத்தின் அம்மா முன்பு வரும்போது நான் வாசலில் இருந்த வேப்ப மரத்தின் மீது ஏறி வேப்பிலை பறித்துக் கொண்டிருப்பேன். இப்போது அது மாதிரி முக்கியமான வேலைகளை செய்ய அகல்யா விடவில்லை. ஸ்கூலுக்குப் போகும் போது, அவளுக்கு முன்னாலோ, பின்னாலோ நான் போகக் கூடாது அவள் கையைப் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். வழியில் வரும் பையன்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பான்கள்.நான் கையை இழுத்து எடுக்க முயன்றாலும் அவள் விட மாட்டாள், இதையெல்லாம் கூட ஒரு விதத்தில் பொறுத்துக் கொண்டு விட்டேன். ஆனால் போகிற வழியில் அவள் முன்தினம் நடந்த பாடத்தில் கேள்வி கேட்டு பதில் சொல்லச் சொல்லுவாள். இந்த சித்தரவதையைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முக்கால் வாசி நேரம் ” போடி, சொல்ல மாட்டேன் ” என்று திட்டுவேன். அன்று மாலையே புகார்ப்பட்டியல் என் அம்மாவிடம் வந்துவிடும்.
என் அம்மா, ” இதோ பார்டா , நீ அவளோட இப்பிடியெல்லாம் சண்டை போட்டா, அவ உன்னை ஸ்கூலுக்கு கூட்டிண்டு போமாட்டா ” என்று சொல்லுவாள்,
.
” ஓ. நீயே அவனுக்கு எப்படி ஸ்கூலுக்கு போக வேண்டாம்னு சொல்லிக் குடுக்கறயா ? ” என்று என் அப்பா அம்மா மீது பாய்வார். அப்போதுதான் அம்மாவுக்கு தான் சொன்னதன் அர்த்தம்
புரியும். ” எக்கேடோ கெட்டு ஒழி , நீ ஆச்சு, உங்க அப்பா ஆச்சு ” என்று கோபத்துடன் சமையல் உள்ளுக்குப் போய் விடுவாள் .
என் அம்மாவுக்கு என் மீது கை வைக்கப் பிடிக்காது. இது எனக்கும் தெரியும் . ஒரே ஒரு தடவைதான் இதற்கு விதி விலக்கு. ( அதை பற்றி அப்புறம் ). வாய் வலிக்கத் திட்டுவாள். ‘ உன்னை இன்னிக்கி கொன்னு போட்டுர்றேன் ‘ . ‘ மென்னியை திருகிப் போட்டாதான், நீ உருப்புடுவே ‘ ‘அடி பிச்சி நொறுக்கிடப் போறேன் ‘ ‘ காலை ஒடச்சுப் போட்டாத்தான் நீ ஓடுகாலியா இருக்க மாட்டே ‘ இத்யாதி இத்யாதி. இப்போது இருக்கும் சன் டி.வி., விஜய் டி.வி., ஜெயா டி.வி. சீரியல் டைரக்டர்களுக்கெல்லாம் என் அம்மாதான் மானசீகக் குருவாக இருந்திருக்க வேண்டும். அடி , குத்து, கொலை கொள்ளை எல்லாம் வாயிலேயே நடந்துவிடும் . வில்லனுக்கு அல்லது வில்லிக்கு பளாரென்று கையால் ஒரு அடி கூட விழாது.
ஆனால் அகல்யா கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போவதை எப்படி விட வில்லையோ, அதே மாதிரி போகிற வழியில் நடத்திய கேள்வி பதில் செஸ்ஷனையும் விடவில்லை. என் க்ளாஸ் டீச்சரை விட அவள் மோசமாகிக் கொண்டு வந்ததால், சண்டை போடுவதற்குப் பதிலாகக் காலைப் பிடித்துக் கெஞ்ச ஆரம்பித்து விட்டேன். அவள் ‘ விளையும் பயிர் முளையிலே ‘ கேட்டகரி என்பதை அப்போது என்னால் உணர முடியவில்லை . பின்னாளில் அவள் பம்பாயில் போரிவிலியிலோ , டோம்பிவிலியிலோ இருந்த ஒரு ஸ்கூலில் வேலை பார்த்து மத்திய அரசின் பரிசுகள் பெற்று எல்லோரும் கொண்டாடும் டீச்சராக இருந்தாள் என்று தெரிந்து கொண்டேன்.
அந்த வருஷம் கடைசிப் பரிட்சையில் மார்க் எல்லாம் டென்மார்க்தான்.
” இவன மீனாட்சி சுந்தரத்துக்கு அஸிஸ்டண்ட்டா போட்டுற வேண்டியதுதான் “என்று என் அப்பா குதித்தார். மீனாட்சிசுந்தரம் என் அப்பாவின் ஆபிஸ் கேண்டீனில் டேபிள் துடைத்துக் கொண்டிருந்தான். அவர்தான் அவனை அங்கே சேர்த்து விட்டிருந்தார் .
என் அம்மா ” இன்னும் ஒரு வருஷம் இதே க்ளாஸ்ல படிச்சிட்டு போகட்டுமே, குண்டான் குண்டான்னு நாலு வயசிலே எதுக்கு சேத்தேள் ? ” என்று கவர்ன்மென்ட் ஆடிட்டர் மாதிரி பழைய கணக்கை எடுத்தாள். அவர் கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்து விட்டு ஸ்கூலுக்கு நேரே போனார்.
பதினைந்து நிமிஷம்கழித்து வந்து ” இவனை தூக்கிப் போடச் சொல்லிட்டேன் ” என்றார்.
ஒரு காயமும் இல்லாமல் ரெண்டாம் க்ளாசுக்குப் போய் விட்டேன்.
=============================================================================
Facebook : Natarajan Rajagopal ( Cyndhujhaa )
- செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவனுக்கு தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி
- தொடுவானம் 129. இதய முனகல் ….
- கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்
- கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]
- யாராவது கதை சொல்லுங்களேன் !
- கவி நுகர் பொழுது-கருதுகோள்
- கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்
- குடை
- படித்தோம் சொல்கிறோம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை
- யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5
- எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்