கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]

This entry is part 5 of 12 in the series 31 ஜூலை 2016

 

சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒரு சில பாத்திரங்களுடன் படைப்பது சிறுகதை எனலாம். பல்வேறு சம்பவங்களின் கலவையாக நிறைய பாத்திரங்களுடன் தள வருணனைகள் மிகையாகப் பெற்று வருவதே நாவல் எனலாம். இன்னும் கூடச் சொல்லலாம். தனியாக மணம் வீசுமொரு மலரே சிறுகதை; பலமலர்கள் சேர்ந்து கதம்பமாகிப் பலவித மணங்களைத் தருவதே நாவல் எனலாம்.  இவை இறுதியான முடிபுகள் அல்ல; சில விதிவிலக்குகளும் இருக்கலாம். எல்லாவற்றிற்கும் படைப்பாளனின் உள்ளிருந்து எண்ண அலைகளே காரணமாய் அமைகின்றன.

அண்மையில் நூலகத்தில் ஷங்கரநாராயணனின் ”ஆயுள்ரேகை” நாவலைத் தற்செயலாகப் பார்த்தேன். நீண்ட காலமாகத் தமிழ் நவீன இலக்கிய உலகில் இயங்கி வருபவர் அவர்; அதுவும் இப்பொழுது எனக்கு மிகவும் அணுக்கமான நண்பராக இருக்கிறார். சாதாரணமாகவே இதுவரை வாசிக்காத ஒரு புதிய நூலென்றாலே கண்டவுடன் படிக்கத் தொடங்கும் நான் அவரின் நாவலை விடுவேனா? நூலகங்களில் ஒரு சில நல்ல புத்தகங்களும் அவ்வப்போது கிடைக்கின்றன என்பதை நம்புங்கள். ஆனால் நாம் தேடும்போது அவை கிடைக்கவே கிடைக்காது.

நாவலைப் படித்து முடித்தபோது அதில் உள்ள மனிதர்கள் எல்லாரும் நான் முன்பே அறிந்தவர்களாக, நன்கு பழக்கமானவர்களாக இருப்பதை என் மனம் உணர்ந்தது. அது மட்டுமன்று; நாவலில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நான் பார்த்தவையாக அல்லது நண்பர்கள் வழி கேட்டவையாக இருந்தன. எனவேதான் அதைப்பற்றி ஒரு பதிவைச் செய்யும் ஆவல் ஏற்பட்டது.

நாவல் மிகப்பெரிய வெள்ளத்தைக் காட்டித் தொடங்குகிறது. கிராமத்துக்குப் பக்கத்தில் ஓடிய தேனாறு ஊருக்குள் புகுந்து விடுகிறது. ஒரு ஆள் மட்டத்துக்கு தண்ணீர் வீதிகளில் ஓடுகிறது எல்லா வீடுகளும் மூழ்குகின்றன. சிறுமி சுப்புலட்சுமியின் கண் முன்னேயே அவளது அப்பாவும் அம்மாவும் அடித்துச் செல்லப்படுகின்றனர்.

இச்சம்பவம் அண்மையில் கடலூர் மாவட்டத்தில் உண்மையிலேயே நடந்தது. பண்ருட்டிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவனின் கண்முன்னாலேயே ஒரு மரக்கிளையைப் பற்றிக்கொண்டிருந்த அவனது மனைவியும் மகளும் ஒரு கட்டத்தில்  வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டனர்.

அந்த சுப்புலட்சுமி இப்பொழுது அநாதையாகி வாழ்வாங்கு வாழ்ந்து கிழவியாகி எல்லார்க்கும் பாட்டியாகி விட்டாள். அவளுக்கு என்று அவள் மீது அன்பு செலுத்தும் அக்னி எனும் இளைஞன்; ஆனால் அவன் சற்று அறிவு முதிர்ச்சியில்லாதவன்; அந்தக் கிராமத்திற்கு எப்பொழுது எப்படி வந்தான் என அவனுக்கே தெரியாது. சாப்பாடு போடுபவர் வீட்டில் தின்றுகொண்டு ஊரின் எல்லாரும் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு பிறரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிக் கொண்டிருப்பவன்.

அடுத்து பிரமிளா; ஹையர் செகண்டரி தேறாதவள்; கர்ண கடூரமான மை தீட்டல்; மிகையான பௌடர்; படுடைட்டான ஜம்பர்; கண்ணாடித்தாள் தாவணி; ஊரில் அவளுக்குக் கோயில்மாடு என்றுதான் பெயர்.

நாவலின் முதல் இருபது பக்கங்களுக்குள்ளேயே இந்த மூவரும் அறிமுகமாகிறார்கள். வயதான காரணத்தால் பாட்டி இடையிலேயே மறைந்து போக இறுதிப்பக்கத்தில் கூட அக்னியும் பிரமிளாவும் இருக்கிறார்கள்.

மனித மனம் விசித்திரமானது. அது எப்பொழுது எப்படி இயங்கும் என்பது அதை உடையவனுக்கே கூட தெரிவதில்லை. அம்மனத்தில் பட்டென்று நிகழும் திட்டமிடப்படாத ஒரு தீப்பொறிதான் சில நல்ல அல்லது தீய விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் பாலையில் திரிபவன் திடீரெனப் பார்த்து அனுபவித்த நீர்ச்சுனையை மறக்கவே இயலாது. அது அவன் பிரிந்து வந்த பின்னும் அவனைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். அந்த இம்சையானது ஒற்றை அனிச்சைச் செயலாலேயே நீங்கும் என்பது நாவலில் தெரிகிறது.

சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் அக்னியின் மனத்தில் காம எண்ணத்தைத் தூண்டிய பிரமிளா அவனை ஒருமுறை அனுபவித்தும் விடுகிறாள். இச்சம்பவத்தைக் கம்பிமேல் நடக்கும் வித்தை காட்டுவதுபோல் ஷங்கரநாராயணன் எழுதிச் செல்கிறார். அதன் பிறகு அவனுக்குத் தொடர்பில்லை. அவளைச் சந்திப்பதையே தவிர்க்கிறான். பிரமிளாவிற்குத் திருமணம் நிச்சயமாகிறது. அதைக் கேட்டபோது கூட அவன் மனத்தில் எதுவும் எழவில்லை. திருமண வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறான்.

ஆனால் கல்யாண நாளில் பிரமிளாவின் அலங்காரத்தைப் பார்க்கும் போது அவனால் தாங்க முடியவில்லை. அவளிடமே “அடியே இது நம்ம பிரமிளாதானா? நம்பவே முடியவில்லையே” என்று அதிசயிக்கிறான். அவளோ “ டேய்….போடா—பொம்பளை சைடு எல்லாம் வரப்படாது” என்கிறாள். மாப்பிளையைப் பார்த்தவுடன் ஏனோ அக்னிக்கு அவனைப் பிடிக்கவில்லை. படபடப்பு வருகிறது. தனியே அழுகிறான்.

அக்னி அதிகமாய் சமையல் வேலைக்குப்போய் வருபவன். அதனால் அவன் நிலையை நாவலாசிரியர் சரியான உவமையுடன் காட்டுகிறார்.

”அக்னி நெருப்புக்குள் தவறி விழுந்து விட்டான்.அப்பளம் வாட்டுகிற மாதிரி அவன் உணர்வுகள் சூட்டில் காய்ந்து உட்சுருட்டின.”

அக்னி என்ன செய்வதென்று தெரியாமல் தனக்குள்ளேயே புகைகிறான். மனத்திற்குள்ளேயே புதைந்து போகிறான். உள்ளேயே சுருண்டு போகிறான். அப்பளம் காயும் போது தானே சுருள்வது நல்ல உவமை.

திருமணத்திற்கு முதல் நாள் ஜானவாசம் நடந்து முடிகிறது மாப்பிள்ளை மொட்டை மாடியில் தனித்திருக்கும்போது அக்னி அவரைச் சந்திக்கிறான். அவரிடம், “பிரமிளா…பிரமிளா வேண்டாம் சார் உங்களுக்கு; ஆம் சார், ஏற்கனவே….நான் அவளை…” என்று கூறி விடுகிறான். இதுபோன்று சொல்ல வேண்டுமென அவனிடம் ஏதும் திட்டமில்லை. ஏதோ மனத்தில் தோன்றிய பொறி வேலைசெய்து விடுகிறது. மாப்பிள்ளை கையிலிருந்த சிகரெட் கீழே விழுகிறது அக்னி ஊரை விட்டே அந்த நள்ளிரவில் போய் விடுகிறான்.

ஊரின் எல்லையில் பெரிய பலகையில் “நன்றி, மீண்டும் வருக” என்றிருக்கிறது. அவனுக்கு அதை வாசிக்கத் தெரியவில்லை. “அக்னி வழி ஒதுங்கி அதை நோக்கிப் போய்…அந்தப்பலகையில் எட்டும் உயரத்துக்கு ஒண்ணுக்கடித்தான்” என்று நாவல் முடிகிறது. பிரமிளாவின் நடத்தையால் அவன் உள்ளே இருந்த வெறுப்பு வெளிப்படுகிறது.

அக்னியின் மீது நமக்குப் பரிதாபம் ஏற்பட்டாலும் அவன் செயலை நியாயப்படுத்த முடியவில்லைதானே? ஆனால் அவன் மனநிலை யாருக்குப் புரியும்? அவனிடம் பல வேலைகளை வாங்கிக்கொண்ட கிராமமும், அவனைப் பயன்படுத்தித் தூண்டிவிட்ட பிரமிளாவும் செய்ததை நியாயப்படுத்த முடியுமா? வாசகன் தன் மனத்தில் இக்கேள்விகளை எழுப்பி ஒரு பூ மெதுவாக மலர்வதுபோல விடைகளைக் கண்டறிய முல்வதே நாவலின் வெற்றி எனலாம்.

நாவலில் வரும் தமிழ்மணி குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரம். பலவித முரண்கள் உடையவன். பகுத்தறிவாளன். ஊர் கூட்டத்தில் திருவிழாவிற்கு என்று தேவயற்ற செலவுகள் செய்வதைத் தவிர்க்க வற்புறுத்தவன். இது அவனின் நல்ல எண்ணத்தைக் காட்டிலும், தண்ணி போட்டுக்கொண்டு அனைவரையும் வசை பாடுவதும், கும்பல் சேர்த்துக் கொண்டு பெண்களைக் கேலி செய்வதும் வழக்கமாகக் கொண்டவன். அப்படிப்பட்டவன் படித்த பெண்ணான ருக்மணியைக் கேலிசெய்கிறான். ருக்மணி ஊரின் மற்ற பெண்கள் போல் சும்மா போய்விடாமல் செருப்பைத் தூக்கிக் காட்டிக் கண்டிக்கிறாள். அவன் அதிர்ச்சி அடைகிறான். பட்டென்று மனம் திருந்தி நல்லவனாகிறான். ருக்மணியிடமே மன்னிப்புக் கேட்கிறான்.

இன்னும் காதலித்துத் திருமணம் புரிந்த ராக்குவை அவள் கணவன் கிச்சாமி அடித்துத் தொல்லதர அவள் தூக்கு மாட்டிக்கொள்வது, கிராமத்தில் இருபத்திரண்டு ஆண்டுகள் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றி ஓய்வு பெறும் சீனிவாசகோபலனின் பற்றற்ற நிலை, சின்னத்தாயி-சிவக்கொழுந்துவின் கபடமற்ற காதல், இசைக்கலைஞர் ராஜமாணிக்கம் பட்டணம் போய் திண்டாடுவது, போன்று பலவித மணங்களை நாவலில் நாம் அனுபவிக்க முடிகிறது.

நாவலில் ஆங்காங்கே கிராம சீர்திருத்தம், பெண்கல்வியின் முக்கியத்துவம், நகரத்தில் நடக்கும் போலிவிழாக்கள், சாதி மறுப்புத் திருமணம் போன்றவை சொல்லப்பட்டாலும் அவை நாவலிலிருந்து பிரச்சாரமாகத் துருத்திக்கொண்டு வெளியே தெரியாமல் நாவலின் போக்கிலேயே காட்டப்பட்டிருப்பது பாராட்டவேண்டிய ஒன்றாகும்.

ஆக மொத்தத்தில் இது வாசமுள்ள கதம்பமாலை எனத் துணிந்து சொல்லலாம்.

 

[ஆயுள் ரேகை—நாவல்—எஸ். ஷங்கரநாராயணன்—வெளியீடு: அகிலா பதிப்பகம்; எஃப்-9; பாலகிருஷ்ணா அடுக்ககம்; 8/97, பெரியார் பாதை, சூளைமேடு; சென்னை—600 094; பக்: 176; விலை; ரூ 75; அலைபேசி:97865 77122; 80152 92995]

Series Navigationகடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்யாராவது கதை சொல்லுங்களேன் !
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *