மருத்துவக் கல்வியில் அறுவை மருத்துவம் இன்றியமையாதது. இதை இரண்டு வருடங்கள் பயிலவேண்டும். மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள நோயாளிகளைப் பார்த்து அவர்களைப் பரிசோதனைகள் செய்து பார்ப்பதுடன், அறுவைச் சிகிச்சை வகுப்புகளிலும் விரிவுரைகள் கேட்டு பயிலவேண்டும்.
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை மருத்துவப் பிரிவுகள் மூன்று உள்ளன. அதில் முதல் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். இதன் தலைமை மருத்துவர் டாக்டர் எல். பி. எம். ஜோசப் என்பவர். சிறப்பாக அறுவை மருத்துவம் செய்பவர். தமிழர். நன்றாகத் தமிழ் பேசுவார். நடுத்தர வயதுடையவர். கறுத்த நிறத்தவர். பின்னாளில் இவர் மருத்துவமனையின் இயக்குனராகப் பதவி வகுத்தவர்.
நாங்கள் பயன்படுத்திய நூல் ” Bailey and Love ” என்பது. மொத்தம் 1550 பக்கங்கள். நிறைய படங்கள் கொண்டது .கட்டிகள், வீக்கங்கள், உடல் உறுப்புகளினுள் தோன்றும் நோய்களின் படங்கள்,உடலின் பாகங்களை அறுத்து அதில் சிகிச்சை செய்யும் விதங்கள் கொண்ட படங்கள் அவை.
அறுவை மருத்துவத்தில் முதல் பாடம் அழற்சி ( Inflammation ). அழற்சி என்பது நோய்க்கிருமிகளுக்கும், பாதிப்புக்கு உள்ளான செல்கள், இதர தொல்லைகள் தரக்கூடிய ஊக்கிகளுக்கும் எதிராக உடலின் பாகங்களின் கலவையான உயிரியல் துலங்கல் அல்லது எதிர்ச் செயல். ( Inflammation is part of the complex biological response of body tissues to harmful stimuli, such as pathogens, damaged cells, or irritants. ) இது உடலின் தற்காப்பு நடவடிக்கை. இது உடலின் எதிர்ப்புச் சக்தி செல்கள், இரத்தக் குழாய்கள், மூலக்கூறு இணக்கம் செய்பவை ( Molecular mediators ) போன்றவையின் தொடர்புடையது.அழற்சியின் நோக்கம் ஊக்கிகளால் உண்டான பாதிப்புகளை அகற்றி, இறந்துபோன செல்களை அகற்றி, அப்பகுதி திசுக்களை சரி செய்வதாகும். இவ்வாறு செப்பனிடும் வேலை நடக்கும்போது சில முக்கியமான அறிகுறிகள் தோன்றுகின்றன. இவை எல்லாவிதமான அழற்சியிலும் தோன்றுபவை. இவை ஐந்து வகையானவை. இவை லத்தீன் மொழி சொற்களிலிருந்து உருவானவை..அவை வருமாறு:
*. டோலோர் ( Dolor ) – வலி
* கேலோர் ( Calor ) – சூடு
* ரூபோர் ( Redness ) சிவந்துபோதல்
* டூமோர் ( Tumor ) – வீக்கம்
* ஃபன்க்டியோ லீசா ( Functio Laesa ) – செயலிழப்பு
இதில் முதல் நான்கு மாற்றங்களையும் விவரித்தவர் செல்சஸ் ( கி.மு. 30 – கி. பி. 38 ) என்பவர். இவற்றோடு செயலிழப்பைச் சேர்த்தவர் கேலன் ( Galen ) என்பவர். இப்படி கி. மு. 30 களில் அழற்சி பற்றி சொன்னது இன்றுவரை மாறாமல் நிலைத்திருப்பது ஆச்சரியமானது!
அழற்சிதான் நோயால் உண்டாகும் முதல் மாற்றம். அழற்சியால் பாதிப்புக்கு உள்ளானஉறுப்பு சிவந்துபோதலும், சூடாக இருப்பதும் இரத்தவோட்டம் அதிகரிப்பால் உண்டாவது. வீக்கம் அங்கே நீர்த் தேக்கமுறுவதால் உண்டாவது. வலி ஏற்படுவது சில இரசாயனங்கள் வெளியேறுவதால்.செயலிழப்புக்கு வேறு பல காரணங்கள் கூறலாம்.
அழற்சி உண்டான ஓர் உறுப்பை அந்த உறுப்பின் பெயருடன் ” ஐட்டிஸ் ” ( Itis ) என்ற சொல்லுடன் சேர்த்துச் சொல்ல வேண்டும். உதாரணமாக டான்சில் என்ற தொண்டைச் சதையில் அழற்சி உண்டானால் அது டான்சிலைட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதுபோல்தான் அப்பெண்டிசைட்டிஸ் ( Appendicitis ) – குடல் வால் அழற்சி, ப்ரோன்கைட்டிஸ் ( Bronchitis ) – சுவாசக்குழாய் அழற்சி, கார்டைட்டிஸ் ( Carditis ) – இருதய தசைநார் அழற்சி, சைனுசைட்டிஸ் ( Sinusitis ) – சைனஸ் அழற்சி , ஆர்த்ரைட்டிஸ் ( Arthritis ) – எலும்பு மூட்டு அழற்சி, மெனிஞ்ஜைட்டிஸ் ( Meningitis ) – மூளை சவ்வு அழற்சி, கேஸ்ட்ரைட்டிஸ் ( Gastritis ) – இரைப்பை அழற்சி , கோலைட்டிஸ் ( Colitis ) – குடல் அழற்சி என்றும் பல்வேறு உறுப்புகளின் அழற்சிகளும் பெயர் பெறுகின்றன.
அறுவை மருத்துவத்தின் அடிப்படைக்கு கூறுகளைக் கற்றபின்பு சில உறுப்புகளில் உண்டாகும் வீக்கங்ககள் குறித்து படிக்கலானோம். அப்போது அது தொடர்புடைய நோயாளிகளை அறுவை மருத்துவ வார்டுகளில் சென்று பார்ப்போம். அங்கு டாக்டர் எல். பி. எம். ஜோசப் அவர்கள் அது பற்றி விளக்குவார். மருத்துவ வார்டுகளில் டாக்டர் புளிமூட் மருத்துவம் சொல்லித் தந்ததுபோலேவே எங்கள் குழுவினர் பத்து பேர்களும் இப்போது அறுவை மருத்துவ வார்டில் டாக்டர் ஜோசப் அவர்களிடம் பயிற்சி பெற்றோம்.
சில நாட்களில் மாலையில் அறுவை மருத்துவம் ஒன்று அலுவலகம் செல்வோம். அங்கு அமைந்துள்ள ஒன்றுகூடல் அறையில் தையல் போடுவதும், முடிச்சு போடுவதும், தையலை வெட்டிப் பிரிப்பதும் கற்றுக்கொண்டோம். அதை ஒரு தோலில் வளைந்த ஊசி சில்க் நூலால் செய்து பழகினோம்.
நாங்கள் முதல் முதலாக அறுவைக் கூடம் செல்லப் போகிறோம். அதற்கான முன் பயிற்சி அது! அங்குதான் டாக்டர் ஜோசப் அறுவை மருத்துவம் செய்வார். அதை நாங்கள் நேரில் அருகில் நின்று காணலாம்.
( தொடுவானம் தொடரும் )
- தொடுவானம் 131. அறுவை மருத்துவம்
- பேனா முனையில் இந்திய ஒலிம்பிக்
- மதம்
- தோரணங்கள் ஆடுகின்றன!
- கவி நுகர் பொழுது-7 (வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் ,’மெல்லின தேசம்’, கவிதை நூலினை முன் வைத்து)
- தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்
- ‘காடு’ இதழ் நடத்தும் ‘இயற்கை மற்றும் காட்டுயிர் ஒளிப்படப்போட்டி’
- பூகோளச் சூடேற்றும் தீவிர வாயு கார்பன் டையாக்சைடு மாற்றப்படும் இயக்கத்தில் மின்சக்தியும் உற்பத்தி
- ஜோக்கர்
- கற்பனையும் விளையாட்டும் – செந்தில் பாலாவின் ‘இங்கா’-
- கவி நுகர் பொழுது- அன்பாதவன்
- திரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்
- காப்பியக் காட்சிகள் 15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் கலைகள்
- யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6