கேரளாவின் ஒரு மூலையில் எங்கோ காடு, மலைகளுக்கு மத்தியில் இருந்த காளி கோவில் அது. நண்பர் அங்கே பூசாரியாக இருந்தார். நிறையப் படித்தவர், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகியவற்றில் புலமை படைத்தவர். பி.எச்.டி முடித்து புரொபசர் ஆகிவிடுவார் என்று குடும்பத்தார் எதிர்பார்த்திருக்க, ஆன்மீகப் பற்று ஏற்பட்டு குருவின் உத்தரவின் பேரில் காளி கோவில் பூசாரியாக செயல்பட்டு வந்தார்.
”அந்த வாழ்வு எப்படி இருந்தது? சங்கடமாக இல்லையா?” என்று வெவ்வேறு தருணங்களில் கேட்டிருக்கிறேன். ”சிலை வழிபாடு முடிவுறும் தருணங்களில் இனம் புரியாத மகிழ்வுணர்வு எனது உள்ளுணர்வெங்கும் வியாபிக்கை உணரமுடிந்தது”, “ஒரு விதமாக மகிழ்வு-நிறைவு ஏற்படும்” என்றெல்லாம் சொல்லிவிட்டு அத்தருணங்களின் நினைவில் ஆழ்ந்துவிடுவார்.
அந்த காளி கோவிலில் அதற்கு முன்பு இருந்த ஒரு பூசாரி தங்கப்பன் ஒரு வில்லங்கமான ஆசாமி. மாந்த்ரிகம் செய்து பலரை தொந்தரவு செய்தவன், பெண்கள் விஷயத்திலும் மோசம். கிராமத்து சனங்கள் ப்ரசனத்திற்கு காளியை அழைத்து முறையிட, ”அவனது வேண்டுகோளின் படி சக்திகளை அளித்தேன், முடியும் காலம் வரும்போது ஆட்டம் முடிந்துவிடும்” என்று பதில் வந்தது.
அது போலவே ஒரு கட்டத்தில் திடீரென்று அவனது மாந்த்ரீக சக்திகள் நின்றுவிட்டன. அவனுக்கோ பயித்தியம் பிடித்ததுபோன்று ஆகிவிட்டது. கடைசியில் எங்கோ தூரத்து மலைப்பக்கம் சென்றுவிட்டதாக சிலரும், மலையுச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சிலரும் பேசிக்கொண்டனர். நாகர்கோவில் பக்கம் சென்று ஒரு பெண்ணை மணந்துகொண்டு எண்ணை வியாபாரம் செய்துவருகிறான் என்றும் செய்திகள் மிதந்தன.
அது சரி இதற்கும் மல்யுத்தத்திற்கும் என்ன சம்பந்தமென்ற கேள்வி எழலாம். தங்கப்பனின் முதல் மனைவி ஒரு மல்யுத்த வீராங்கணை. அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பல பகுதிகளில் பெண்களும் மல்யுத்தம் செய்வது வழக்கமாயிருந்தது. தங்கப்பனின் மனைவி பர்வதாச்சி (அநேகமாக பார்வதி ஆச்சி என்று பெயர் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் ஊர்பக்கங்களில் அவளை பர்வதாச்சி என்றே அழைத்தனர்) பல ஊர்களுக்கும் சென்று மல்யுத்தம் செய்துவந்தாள். தங்கப்பனின் முன்னோர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள். தமிழ் செட்டிகளில் மல்யுத்தம் செய்யும் பெண்களும் இருந்தார்கள் என்பதைக் கேட்பதற்கு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அந்தப் பெண்மணிக்கு போகப்போக தொடர்புகள் அதிகரித்தது. ஆனால், மல்யுத்தம் மூலம் வருவாய் வந்ததால் தங்கப்பனுக்கு வீட்டில் வாயைத் திறக்க முடியவில்லை. தினம் காளி கோவிலுக்கு வந்து விடுவான், மிகுதினம் பொழுது அங்கேதான் கழியும், வீட்டில் பிள்ளைப்பூச்சியாய் வாய் திறக்காமல் இருக்கும் தங்கப்பன் இங்கே காளியிடம் கத்துவான், அழுவான், முறையிடுவான். சில சமயங்களின் படியில் தலையை முட்டிக்கொண்டு இரத்தம் கசியும். ஒரு கட்டத்தில் குறி சொல்ல ஆரம்பித்தான். சரியாய்க் குறி சொல்ல கூட்டம் கூடியது. பர்வதாச்சி ஒரு சண்டையில் கீழே விழுந்து தலையில் அடிபட, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனாள்.
பர்வதாச்சி இறந்துபோன பிறகே, தங்கப்பனின் ஆட்டம் துவங்கியது. ஏகப்பட்ட பெண் தொடர்புகள். பெரிய குடும்பத்து அப்பு நாயரின் மனைவியிடமே தவறாக நடக்க முற்பட்டான் என்றும், அப்பு நாயர் இவனிடம் எதற்கு வம்பு என்று பயந்துபோய் குடும்பத்துடன் பெங்களூர் சென்று விட்டதாகவும் கூறுவார்கள்.
”கடவுளுக்கு இதெல்லாம் புரியாதா, தெரியாதா?” எனக்கேட்டேன் மேனனிடம். தொலைதூரத்தில் தெரிந்த அடிவானத்தை இலக்கில்லாமல் சற்று நேரம் பார்த்துவிட்டு சொன்னார், “ கேட்டது அவனிடமே. நிறை குறையை சீர் தூக்கிப்பார்க்காது கேட்டதை வழங்கும் ஆழ்மனதின் ஒரு பகுதியிடம் அவன் தொடர்பு கொண்டான். அது அவன் கோரிக்கையை வலுவிருக்கும் வரை வழங்கியது, அதன் பின்னர் கொடுத்ததை வட்டியும் முதலுமாய் சேர்த்து எடுத்துக்கொண்டும் விட்டது”.
சற்று நேரம் சும்மாயிருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார், “எது கேட்டாலும் கிடைக்கும், கேட்பதன் தீவிரத்தைப் பொறுத்து. ஆனால், எது கிடைத்தாலும் அதனுடன் அதற்கான விலையும் சேர்ந்து வரும். கேட்டதில் ஒரு பகுதியை மட்டும் மனிதர்கள் விரும்புகிறார்கள், இன்னொரு பகுதியை கவனிக்க மறுக்கிறார்கள். அது அவர்களின் கவனத்திற்கு வரும்போது அவர்கள் கேட்டதுதான் அது, அதாவது கேட்டதன் இன்னொரு புறம் என்பதை உணர்வதேயில்லை. விதியை நொந்துகொள்கிறார்கள் அல்லது கடவுளை திட்டுகிறார்கள், கடவுள் என்று எதுவுமே இல்லை. இருப்பது ஒரு கண்ணாடி, நாம் முகச்சவரம் செய்யும்போது பார்த்துக்கொள்வது போல நம்மை நாமே பார்த்துக் கொள்ள நாமே விரும்பி உருவாக்கிய கண்ணாடி. அந்த ஆடியின் ஒரு பகுதியை விரும்புகிறோம், இன்னொரு பகுதியை விரும்புவதில்லை. அது நமது பிரச்சினைதானேயொழிய ஆடியின் பிரச்சினையல்லவே”.
எனக்கு புரிந்தது போலவும், புரியாததுபோலவும் ஒருசேர குழப்பமாயிருந்தது. குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தலையை ஆட்டிவிட்டு எழுந்து சாப்பிட நகர்ந்தேன்.
- தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்
- பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு
- ‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு
- அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016
- ‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து
- கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி
- காணாமல் போன கவிதை
- காப்பியக் காட்சிகள் 16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்
- பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்
- “என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”
- கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி
- ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
- ஒரு சிற்றிதழ் அனுபவம் : கனவு 30
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7