நீங்கள் கொல்லையிலே போக.

author
0 minutes, 3 seconds Read
This entry is part 5 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

 

அழகர்சாமி சக்திவேல்

 

ஒண்ணுக்கும் ரெண்டுக்கும்

ஊர்க் கழிப்பறையில் போக

இந்த மூணுக்கு மட்டும் முடியவில்லை…

 

பாதகத்தி என்னைப் பத்தி…

பத்துவரியில் சொல்லட்டுமா?

 

பாவாடை மேலாக்கில் பாடிஓடித் திரிகையிலே

காலோடு ஒழுகிநின்ற தூமையால் சமைஞ்ச பின்னே

தாய்மாமன் ஓலைகொண்டு ஆசையாய் வேய்ஞ்சு விட்ட

குடிசையிலே குத்தவச்ச குமரியல்ல என் பிறப்பு…

 

பெண்ணாகும் ஆசையிலென் பிறப்புறுப்பு பிடிக்காமல்

பிளேடு கொண்டு அறுத்தெரிந்து புழைக்குழியை உருவாக்கி

நானே சமைஞ்சுக்கிட்டேன்.. நாதாரிப் பிறப்பானேன்…

கிராமத்து மாமன்கள் தம் கிண்டலால்தான் குடிசை வேய்ந்தார்.

 

பட்டணத்து தியேட்டரிலே படம்பார்க்க போயிருந்தேன்

கட்டழகன் சரத்குமாரின் கருமார்பில்நான் சிலிர்த்து நிற்க

முட்டியது ஒண்ணுக்கு.. இருக்கச் சென்றேன் பின்னுக்கு

எட்டி நடைநடந்து பெண் கக்குஸ் நுழைந்திட்டேன்..

 

“அய்யோ ஆம்பளை” என அலறிவிட்டாள் ஒரு சண்டாளி..

“அடச்சீ வெளியே போ”.அசிங்கமாய்த் திட்டிய இன்னொருத்தி…

செருப்பெடுத்தாள் ஓர் சிறுக்கிமவள்.. சீறிய அவர் சினத்தினால்

ஓடி வெளியே வந்தேன்.. உள்புகுந்தேன் ஆண் கழிப்பறையில்…

 

ஆத்திரமும் மூத்திரமும் அடங்காமல் நான் சேலை தூக்க

“உய்: என விசில் அடித்தான் ஊதாரி மகன் ஒருத்தன்..

“வரியா” எனக்கேட்டு வம்பு செய்தான் இன்னொருவன்…

பெருகிய அவமானத்தில் இறுகியது என் மூத்திரம்…

 

ஓடினேன் தியேட்டர் விட்டு.. தேடினேன் முச்சந்து..

குடல்பிடுங்கும் நாற்றத்தில் கலந்தது என் சிறுநீர் மட்டுமல்ல…

மானமும் ரோஷமும் மடை திறந்த என் கண்ணீரும்தான்.

படம் பார்க்க முடியவில்லை பாழாய்ப்போன சமூகமே…

 

அலியாய் இருந்த என்னை திருநங்கை ஆக்கியது

அரசியல் மட்டும் தானா? அவலங்கள் தீராதா?

மூன்றாம் இனம் இன்னும் மூத்திரம் போக நாதியில்லை..

முச்சந்தின் நாற்றத்தில்தான் முடியுமா எம் வாழ்க்கை?

ஒண்ணுக்கும் ரெண்டுக்கும்

ஊர்க் கழிப்பறையில் போக

இந்த மூணுக்கு மட்டும் முடியவில்லை…

 

கவிதை – ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

Series Navigationஹாங்காங் தமிழ் மலர்ஏறி இறங்கிய காலம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *