தொடுவானம் 136. நுண்ணுயிரி இயல்

This entry is part 4 of 17 in the series 18 செப்டம்பர் 2016
lister
(ஜோசப் லிஸ்டர்)

மருத்துவக் கலவியின் நான்காம் வருடத்தில் ” மைக்ரோபையோலாஜி ” ( Microbiology ) அல்லது நுண்ணுயிரி இயல் பயிலவேண்டும். மைக்ரோபையோலாஜி என்பது கிரேக்க சொல். மைக்ரோ என்பது நுண். பையாஸ் என்பது உயிர். நுண் உயிர்களைப் பற்றிப்  பயில்வது நுண்ணுயிரி இயல் என்று அழைக்கப்படுகிறது.

நுண்ணுயிரிகள் கண்களுக்குத் தெரியாத அளவு சிறியவை. இவற்றை நுண்ணோக்கி வழியாகவே காணலாம். இவை ஒரு செல், பல செல்கள், அல்லது செல் இல்லாத உயிரிகள்.

நுண்ணுயிரி இயலில் நச்சுயிர் இயல் ( Virology ), பூஞ்சை இயல் ( Mycology ), ஒட்டுண்ணி இயல் ( Parasitology ), குச்சி வடிவ உயிர் இயல் ( Bacteriology ) ஆகிய துணை பிரிவுகள் அடங்குகின்றன.

நுண்ணுயிரிகளை நாம் தமிழில் பொதுவாக கிருமிகள் என்கிறோம். கிருமிகளால் நோய்கள் உண்டாகின்றன எனபதையும் நாம் அறிவோம்.ஆனால் ஒரு காலத்தில் கிருமிகள் உள்ளதை அறியாமல்தான் வைத்தியர்கள் நோய்களுக்கு மருந்துகளைத் தந்தும் மந்திரங்களை ஓதியும் குணமாக்க முயன்றனர்.

கிருமிகள் உள்ளது தெரியவந்தது மருத்துவ வரலாற்றை மாற்றி அமைத்தது. அதைக் கண்டுபிடித்தவர் ஒரு டச்சு இனத்தவர். அவர் மருத்துவரோ அல்லது ஆராய்ச்சியாளரோ கிடையாது. சாதாரண கண்ணாடி இழைப்பவர். மூக்குக் கண்ணாடி செய்யும்போது கண்ணாடிகளை இழைக்கவேண்டும். அப்படி செய்த ஒரு சமயத்தில் இரண்டு கண்ணாடிகளை இழைத்தபோது அவற்றின் அடியில் எதோ சில உயிரிகள் அசைவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். தன்னுடைய  எச்சிலை அந்த கண்ணாடிகளுக்குக் கீழ் வைத்து பார்ததபோது மேலும் சில உயிரிகள் நீந்துவதைக் கண்டு அதிர்ந்துபோனார். அதன்பின்பு வெவ்வேறு பொருள்களை வைத்து ஆராய்ந்தபோது அவற்றிலும் உயிரிகள் நீந்துவதாக கண்டு வியந்துபோனார். இந்த உலகில் நம் கண்களுக்குத் தெரியாது இன்னொரு உயிர் உள்ள உலகம் உள்ளதென்று மருத்துவக் கழகத்திற்கு கடிதம் எழுதினர். ஆனால் அங்கு படித்த மேதாவிகளோ அவருடைய கற்பனை அபாரம் என்று கேலி செய்தனர். ஆனால் பின்னர் பல வருடங்கள் கழித்து வேறு சில அறிவியலார்கள் அவரின் கண்டுபிடிப்பு உண்மைதான் என்று ஏற்றுக்கொண்டனர்! கிருமிகள் உலகைக் கண்டுபிடித்த அந்த ஹாலந்து நாட்டவரின்  பெயர் அன்ட்டென் வேன் லீவென்ஹாக் ( Anton Van Leeuwenhoek ) இது நடந்தது 1676 ஆண்டில்.

leevenhock
          அதன்பின்பு இரண்டு நூற்றாண்டுகள் கழித்து 1865 இல் இன்றைய நவீன அறுவை மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஜோசப் லிஸ்டர் Joseph Lister ) என்னும் ஆங்கிலேயர்தான் தொற்று நோய்கள் கிருமிகளால் பரவுகின்றன என்று கூறினார். அதோடு திறந்த காயங்களில் அவர் ஃபீனால் ( Phenol ) ஊற்றி கழுவி தொற்றுக்கிருமிகளைக் கொல்லலாம் என்றும் செயலில் காட்டினார். அதுவரை அறுவை மருத்துவம் செய்தவர்கள் தங்களுடைய கைகளையோ, காயம் உண்டான பகுதியையோ கழுவவேண்டும் என்றுகூட தெரியாமல் இருந்தனர்.அப்படி செய்யும்போது காயங்கள் விரைவில் சீழ் பிடிப்பது எதனால் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. அறுவை மருத்துவம் செய்யும் அறைக்குள் நிலவும் அசுத்த வாடையைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுடைய கைகளிலும் உடையிலும் காணப்படும் இரத்தக் கறைகளை அவர்கள் வெளியில் காட்டிக்கொள்வதில் பெருமையும் கொண்டனர். காயங்கள் சீழ் பிடிப்பதற்கும் புண்கள் ஆறாமல் போவதற்கும் கிருமிகளின் தொற்றுதான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அறுவை மருத்துவம் செய்யும் அறை சுகாதாரம் இல்லாமல் நாற்றமெடுக்கும் இடமாக இருப்பதற்கு அங்கு தொற்றுக்  கிருமிகள் உள்ளதுதான் காரணம். கிருமிகள் பற்றி தெரியாத காரணத்தால் அவர்கள் அதன் தடுப்புமுறைகளையும் அறியாமல் இருந்தார்கள்.
         லிஸ்டர் ஃபீனால் எனும் கார்போலிக் அமிலத்தை கிருமிகளின் நாசனியாகப் பயன்படுத்திய விதம் சுவாரசியமானது. வயல்களில் கழிவு நீர் பாய்வதால் துர்நாற்றம் வீசியது. அந்த நாற்றத்தைப் போக்க அப்போது கார்போலிக் அமிலத்தைத் தெளித்தனர். அதைக் கண்ட லிஸ்டர் அதற்குக் காரணம் கார்போலிக் அமிலம் வயல்களில் உள்ள கிருமிகளைக் கொல்கின்றன என்பதை உணர்ந்தார். அதையே அறுவை மருத்துவக் கூடத்திலும் பயன்படுத்திப் பார்த்தார். அறைக்குள் வீசிய இரத்த வாடை குறைந்தது. அவர் அதோடு திருப்தி கொள்ளவில்லை. அறுவை மருத்துவத்துக்கு பயன்படுத்தும்  கருவிகளையும் கார்போலிக் அமிலத்தில் .கழுவினார். காயப்பட்ட புண்ணிலும் அமிலம் ஊற்றிக் கழுவினார். அவர் கையாண்ட இந்த புதிய முறையால்  காயங்களில் சீழ் பிடிப்பது தவிர்க்கப்பட்டது. அதற்குக் காரணம் கிருமிகளை கார்போலிக் அமிலம் கொல்கிறது என்பதை அவர் பிரபலப்படுத்தி இங்கிலாந்தின் அனைத்து அறுவைக் கூடங்களிலும்  அதை செயல்படுத்தச் செய்தார். இதன்மூலம் அறுவைச் சிகிச்சைகளுக்குப்பின் உண்டாகும் பின்விளைவான  கிருமித் தொற்றும் மரணங்களும் பெருமளவில் குறைக்கப்படடன.
          நுண்ணுயிரிகளை மேலும் தீவிரமாக ஆராய்ந்து அதன் மூலம் பல முக்கிய உண்மைகளை உலகுக்குத் தந்தவர் லூயிஸ் பாஸ்டியூர் ( Louis Pasteur ) என்பவர்.இவர்தான் நுண்ணுயிரி இயல் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் பல நோய்க் கிருமிகளுக்கு எதிராக தடுப்பு ஊசிகளைப் போடலாம் என்பதைக் கண்டுபிடித்தவர். அதோடு கிருமிகளைப் பயன்படுத்தி உணவுப் பதனிடும் முறையையும் கண்டுபிடித்தவர்.
louis-pasteur
          நுண்ணுயிரி இயலை மருத்துவச் சிகிச்சையில் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ராபர்ட் காக் ( Robert Koch )என்பவர். இவர்தான் குறிப்பிட்ட நோய்கள் குறிப்பிட்ட நுண்ணுயிரிகளால் உண்டாகின்றன என்பதைக் கண்டுபிடித்தவர். அதோடு பல்வேறு கிருமிகளை ” கல்ச்சர் ” என்ற முறையில் வளர்த்து அவற்றை இனம் கண்டவராவார். இவர்தான் காச நோய்க் கிருமியைக் கண்டுபிடித்தவர். இவர் மருத்துவ நுண்ணுயிரி இயல் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
koch
          நுண்ணுயிரி இயல் பாடங்கள் மருத்துவமனையில் வகுப்பறையில் நடந்தன. அதை நடத்தியவர் அன்னம்மா தாமஸ் என்னும் மலையாளப் பெண்மணி. நல்ல நிறத்தில் அழகாக இருப்பார். இளம் வயதுதான். திருமணம் இன்னும் ஆகவில்லை.
          பாட நூலில் உள்ள வரிசைப்படி ஒவ்வொரு கிருமியாகப் பயில்வோம். பின்பு பரிசோதனைக் கூடத்தில் அந்த கிருமியை நுண்ணோக்கியில் கண்டு குறிப்புப் புத்தகத்தில் அவற்றை வரைந்துகொள்வோம்.
          ஒவ்வொரு  கிருமிக்கும் ஒரு தனிப்பட்ட தன்மைகள்  உள்ளன. அவற்றைக்  குழப்பாமல் மனதில் வைத்திருப்பது சிரமம். திரும்பத் திரும்ப பாடநூலைப் புரட்டினால்தான் நினைவில் பதியும்.

          நுண்ணுயிரி இயலின் அனைத்து பிரிவுகளையும் முறையாகப் பயில ஓராண்டு ஆகும்.

          ( தொடுவானம்  தொடரும் )
Series Navigation“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகைபூர்வப் பூமியின் இடைப் பகுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *