கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)

This entry is part 24 of 29 in the series 9 அக்டோபர் 2016

nesamithran

சதுரங்க விளையாட்டில்,காய்களுக்கு பிரத்யேகமான செயல்பாட்டுத்தளம் கட்டமைக்கப் பட்டுள்ளது.செக் அண்ட் மேட் என்னும் இலக்கின் புள்ளியாய் இருக்கும் ராஜா, மேல் கீழ் வல இடமென ஒற்றைக் கட்டம் நகர்தலே சாத்தியம்.ராணியோ எல்லாவிதமான விஸ்தீரணங்களோடும் நேர், கோணம் என்று அனைத்து நகர்தலுக்குமானது. பிஷப் எப்போதும் நேரின்றி கோணங்களில் மட்டும். சிப்பாய் முதல் நகர்தலில் இருகட்டமும் பின் ஒன்றாய். யானையின் நகர்தல் நேர்த்திசை மட்டும்.குதிரை தான் தாவுதலோடு ,’ட; வடிவில் சட்டெனப் பெயறும்.எல்லா நகர்தலும் எதிர்வண்ணக் காய்களை வெட்டுவதையும் உட்படுத்தியது தான்.வெட்டுவது எவ்வளவு முக்கியமோ இணையாக வெட்டுப்படாமல் இருப்பதும் தவிர்க்கவேவியலாத் தருணத்தில் எதனை வெட்டுக் கொடுப்பது எனத்தீர்மானிப்பதும் முக்கியமாகிறது.எல்லாம் சேர்த்துத்தான் செக் அண்ட் மேட்.

wrapper5

சொற்கள் என்பவைச் சதுரங்கக் காய்களா?ஆம் எனில்,அதற்கான அர்த்தச் செயல்பாட்டுத்தளம் அறுதியிடப்பட்டதா?அகராதியில் முன்முடிவு செய்து நமக்குக் கையளிக்கப்பட்டவையா?இயல்பான மொழிப்பயன்பாட்டில் எல்லாம் சரிதான்.கவிதையில் வெறும் அணிசார் வண்ணங்களோடு வழங்கப்படும் சொற்களுக்கு ராஜா, ராணி,பிஷப்,யானை,சிப்பாயென வடிவம் கொடுப்பதும் அவற்றிற்குரிய தனித்துவச் செயல் பாட்டினை உருவாக்குவதும் ஆட்டத்திற்கு ஆட்டம் அதனை உருமாற்றுவதும் திசைமாற்றுவதும் திறன்மாற்றுவதும் கவிஞனின் ஆகச்சிறந்த நேர்த்தியில் அடக்கம் கொள்கிறது.

ஒரு சொல்லின் இடம் வலம் இருக்கும் சொற்கள் மையச் சொல்லின் பொருளினையும் சேர்த்துத் தீர்மானிக்கின்றன.இரண்டு சொற்கள் அல்லது அதற்கும் மேற்பட்டசொற்கள் புணர்ந்து முற்றிலும் புதிய பொருள்கொண்ட சொல்லைத் தருகின்றன.இச்செயல்பாடு இயல்பான மொழிப்பயன்பாட்டைக்கடந்து படைப்பாளியின் தனித்துவமாய் மாறுகிறது.

காலந்தோறும் கவிதைக்கான வரையறை குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். வடிவம், உள்ளடக்கம், பயன்பாட்டுச்சொல் வளம்,  யுத்தி,படிமக்கட்டமைப்பு, உணர்வு, கவிமொழி ரசனை,உவமை, உருவகம், கோட்பாடு என இன்னபிற பிரதிக்குள்ளான காரணிகளும் கவிநுகர் ரசனை, வாசக மொழிப்புலம், மனம்,சூழல், அனுபவம்,கோட்பாட்டுச் சாய்வு, முன்முடிவற்ற வாசிப்புத்தளம்,வாசக ஈடுபாடு அதனூடாக விளையும் உழைப்பு என்று நுகர் சார் காரணிகளும் இணைந்தே கவிதைக்கான வரையறையை உருவாக்குகின்றன.ஆயின்,வரையறை முற்றானதும் முடிவானதுமல்ல என்பது தெளிவு; மாறுதலுக்குட்பட்டது.

தொடர்ந்து பலநூறு நவீனத் தமிழ்க்கவிதைகளை  வாசித்துக் கொண்டிருக்கும் போது எல்லாவிதமான வகைமைகளையும் தெளிந்து உள்வாங்கும் சாத்தியம் கிடைக்கிறது.

இத்தருணத்தில்,கவிஞர் நேசமித்ரனின்,’மண்புழுவின் நான்காவது இதயம்’, கவிதைத் தொகுப்பினை வாசிக்கிற வாய்ப்பும் அதிலுள்ள கவிதைகள் குறித்தும் அவை என்னுள் கிளர்த்திய உணர்வு வெளிப்பரப்பின் விஸ்தீரணம் பற்றியும் கவனத்திற்கு வருகின்றன.மேற் சொன்ன சொற்சார்ந்த சிந்தனையும் அப்போது எழுந்தது தான்.

”தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சமங்களை நேசமித்ரன் கவிதையாக்குகிறார்.அவரது மொழி வேட்கையும் உயிரனங்களின் நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன.அதனால் தான் காதுகளே வௌவாளின் கண்களாக நமக்குத் தெரிகிறது.

ஆகாயம் மற்றும் நிலத்தோற்றங்களின் மீது மொழி மண்புழு போல்படிந்துஊர்கிறது.இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் புழுத்த நம்பிக்கைகள் மற்றும் அற எல்லைகள் கடந்த கார்ப்பரேட் யுகத்தின் வாழ்வு முறைகள் சாட்சியமாகின்றன.

கவிதை என்பது ஒரு தனித்ததுறையல்ல.பல்வேறு துறைசார்ந்த வாசிப்பு அனுபவங்களிலிருந்து இவர் தமிழ்க் கவிதைகளுக்கான புதிய கலைச் சொற்களை உருவாக்குகிறார்.அவ்வகையில் நேசமித்ரன் கவிதைகள் தமிழ் நவீன கவிதையின் விஸ்தரிப்பு’,என்னும் சிறு குறிப்பொன்றினை செல்மா பிரியதர்ஷன் நூலின் பின்னட்டையில் எழுதியிருக்கிறார்.

இக்குறிப்பு,நேசமித்ரனின் கவிதைகளின் ஊடாக ஆழப்பயணிப்பதற்கு முன்னதாக ஒரு கவிசார் கருத்தியலை நேர்மறையோடும் மேலதிக வாசிப்பைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கும் சொட்டுகளாகப் பாவிக்க முடியும்.

’முலை நீவுதல்’, என்னும் தொகுப்பின் முதல் கவிதை.

எப்போதும் அம்மாவின் அடிவயிறு

நீருயிரியைப் போல்

கதகதப்பானது

அருகில் கிடத்தி கடலின்

பின்னிசையுடன் கதைகள்

சொல்லித் தூங்க வைப்பது

என்று அம்மாவின் சித்திரத்தை முகமன் படுத்தித் துவங்குகிறது கவிதை.பேசுவது பதின்ம வயதுச் சிறுமி;மகள். கருநாட்கள் துவங்கும் அந்தப் பிறைநாளில் பள்ளியில் இருந்து பாதியில் அழைத்து வரப்பட்டவள்.

உப்பு காய்ந்து கொண்டிருக்கும்

வெள்ளை வயல்களின் நிழற்கூடாரங்களில்

நத்தைகள் சுட்டுத்தின்னும் சிநேகிதர்கள்

கூட்டத்தில் இருந்து அம்மா என்னை

கிழித்தெடுத்துப் போக துவங்கியிருந்தாள்

அம்மாவின் இந்தச் செயலுக்கும், ‘இதுவரை, ‘முலை நீவுதலுக்கு உட்பட்ட 4 மில்லியன் சிறுமிகளுக்கும்,’என்று கவிதையின் இறுதியில் இருக்கும் குறிப்புக்குமான தொடர்பு விளங்கிக் கொள்ளக் கூடியதே.அழைத்து வந்தபின்…?

அப்போதுதான்

செங்கடம்பு மரத்தின் கட்டைகளை உரிக்கும்

இழைப்பு உளியின் நாக்கால்

கங்கு மீதமிருக்கும் தேங்காய் ஓடுகளின்

பற்கள் விரியத்துவங்கின திசுக்களில்

தடம் விட்டுச் செல்லும்

 

அவ்வப்போது

அச்சு கடையும் மத்து

கொட்டில் மாடுகளுக்கு

இலக்கமிடும் சூட்டுடன் உப்புரசி

சிராய்ப்பில் செந்தட்டியாய்

நெஞ்சூறும்

 

இவ்வரிசையில் அதிகம் வலிப்பது

கருமையேறிய கல்குழவியால்

மார்பு மொட்டுகளைச்

சுட்டு நசுக்கும் போது தான்

வாசிப்பினூடாக கேமரூன் தேசத்தில் இளம்பெண்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகள் அதிர்ச்சியளிக்கின்றன.

 

Breast Ironing also known as breast flattering is the pounding and massaging of a pubescent girl’s breast, using hard or heated objects, to try to make them stop developing or disappears. It is typically carried out by the girl’s mother who will say she is trying to protect the girl from sexual harassment and rape. It is mostly practiced in Cameroon where boys and men may think that girls whose breast have begun to grow are ready for sex .The most widely used implement for breast ironing  is a wooden pestle normally used for pounding tubers. Other tools used include leaves, bananas, coconut shells, grinding stones, ladles, spatulas and hammers heated over coals.

 

கேமரூன் தேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற சமூகக் கொடுமையை இளம் சிறுமிகளுக்கு ,’முலை நீவுதல்,’ என்னும் சித்திரவதையை அதற்கான வாழ்வியலின் இருட்சூழலும் நம்மின் புரிதலுக்கு உட்படும் போது நேசமித்ரனின் இக்கவிதை உருவாக்கும் ஆற்றாமையும் அப்பெண்கள் மீது கவிழும் மானுட கவனமும் உச்சமாகிறது. அதற்காகவே மேற் குறிப்பிட்ட குறிப்பைக் கொடுத்தேன்.

இந்தக்கவிதைப் பேசிப்போகிற மொழி , பெண்ணின் குரலாகவே ஒலிக்கும் தொனி, பூகோளம் சார் கட்டமைப்பின் தன்மை கேமரூன் நாட்டில் துன்பத்துள்ளாகும் பெண்கள் பற்றி தமிழ்க்கவி ஒருவனால் எழுதப்பட்ட  கவிதையல்ல இது.

கேமரூன் தேசத்தில், சமகாலத்தில் வாழும் கவிஞன் ஒருவன் தமிழில் எழுதிய கவிதை என்றே சொல்ல வேண்டும்.  வாசித்தவுடன் என்னை அத்தகைய மனநிலைக்கே ஆட்படுத்தியது.

 

Yes. It is not simply a sympathetical poem, instead it is an empethetical.

 

’ப்ளூடூத் வௌவால்கள்’, என்றொரு கவிதை.

கில்மேஷ் என்னும்

ஆதிகல் காவியத்திலிருந்து

குரல் கேட்கிறது

பில்கமேஷ் என்னும் சுமேரிய அக்காடியன் கவிதைக் காவியத்தின் கில்கமேஷ் ’உருக்’ தேசத்தின் 126 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவனாக அறியப்படுகிறான்.அக்காவியத்திலிருந்து,மெசபடோமியாவின் கீழ்ப்புற அக்காடியன், ஆஸ்ப்பிரியன் மற்றும் பாபிலோனிய பகுதிகளின் பெண் தெய்வமாகக் கருதப்பட்ட இஸ்தாரின் குரல் கேட்பதாகவும், அதுவும் கூட’இன்னும் நசரேயளாயிருக்கும் வனமொன்றில் இருந்து’, கேட்பதாகவும் முடிவுறுகிறது இறுதிவரி.

அதற்குச் சற்றே மேல் வரிகள்,

செயற்கைகோள்களில் தலைகீழாய்

எரிகிறது தீ

மொட்டைப் போல் பற்றக்

கூடுவதில்லைக் கனிகளை

காம்புகள்

என்பது ஏற்படுத்தும் உணர்வும், அதற்கு மேல் வரிகளான,

நெற்றிக்கண் பசித்திருக்கிறது

ப்ளூடூத் குறியீடாய் வௌவால்

தொங்க

என்பதில் வௌவால் உருவாக்கும் வாசிப்பனுபவமும் புலப்படத் தொடங்குகிறது.அதற்கும் மேல் வரிகளாக,

தர்ப்பை மோதிர விரல்

கவிழ்க்கும் குடுவையிலிருந்து டில்டோவென

தரை தொடுகிறது எலும்ப்த்துண்டு

என்னும் சொற்களில் தர்ப்பை மட்டுமன்றி,’டில்டோ’வின் பொருள் இறங்கும் மனத்தில்,

குளத்திற்கு கருவிழி வரைகிறது

ஒற்றை மரம்

என்பதான கவிதையின் முதல் வரியில்,’ஒற்றை மர நிழல்’ அனுபவத்தின் எல்லை அடைகிறது.

இக்கவிதையை மேலிருந்துதான் வாசிக்கத் தொடங்கினேன்.முடித்தவுடன் கீழிருந்து மேலாக ஒரு மீள் வாசிப்பை நிகழ்த்திய போது வேறொரு புதுப் பரிமாணத்தைக் கைக்கொள்ளும் சாத்தியத்தை வழங்கியது வாசக மனத்தைன் கட்டமைப்பாகவும் இருக்கக்கூடும்.

 

‘ஆப்பாயில் என்னும் எதிர்குவிமைய வாதம்,’என்னும் கவிதை மிகவும் அங்கதத்தோடு எழுதப்பட்டிருக்கும் அரசியல் கவிதை.

ஆப்பாயில் இட்டுத்தரும்

ஆயாக்களின் கரம் ஆயிரம்

பாவமன்னிப்புகள்

வழங்கிய

பேராயரின் கரத்தைவிட கனம்

என்று கொஞ்சம் உரக்கவும் பேசி

அவித்த முட்டை அதிகார குவிமைய வாதம்

எதேச்சதிகாரம்

ஆப்பாயில் ஆத்தும சுத்தி

ஆப்பாயில் கட்டற்ற திரப்பு

சுதந்திரம்

குடிவிடுதி வாசிகளின் ஆரமற்ற

அசோகச் சக்கரம்

என்று அழுத்தமாக, எளிய விஷயம் போலப் பேசி அதே சமயம் பெரும் அரசியல் பகடி நிகழ்த்துவதை அறிய  முடியும்.

 

கவிதையில் புனைவு வெளி சுதந்திர வெளி.

 

நேசமித்ரனின் கவிதைகளில் புனைவுவெளி பிரபஞ்சத்தின் வெளியாக பிரமாண்டம் காட்டுகிறது. அப்பெருவெளியை சலிப்பற்று கடந்தேக சொற்சிறகுகளைப் பரிசளிக்கிற கவிதைமொழி.

ஸ்க்ரீன் சேவர் மௌனங்களில்

கடலுக்கு லட்சம் காம்புகள்

மழை

 

இசைத்தூணில் செதுக்கிய

நிமிர்ந்த வீணையில் குழல்

செலுத்தும் வண்ணத்துப் பூச்சி

தீவாய் இறகு படிய

ஆதித்துளை

என்பதாக விரியும் மொழி.

அவள் இமைகள்

தானே எரிந்துதிரும்

சிகரெட் சாம்பலின்

அழுக்கு நிற

உதிர்வாய் தாழ்கின்றன

என்பதில் அழுக்கு நிற உதிர்வு மேலோங்கிய உவமையாய் தென்பட்டாலும் தானே எரிந்துதிர்வதில், கங்கில்லா சாம்பல் என்னும் நனி நுட்பத்தைக் கொண்டிருக்கிற மொழி.

எந்திரங்களின் மலத்துவாரம்

ஆகாசம் நோக்கியே இருக்கும்

21வது குண்டில் செத்துவிழும்

கடவுளின் உடல் மஞளாய்த்தான்

இருக்கும் ஆனால் அவனுடல்

கூம்பு கூம்பாய் கட்டி வைத்திருக்கும்

எந்த கல்லறைக்கும்

பொருந்தப்பொவதில்லை

என்று கோபத்தைப் பேசவும் தயங்காத மொழி.

 

சாத்தியமேயில்லாத அசாத்தியமான உவமைகளை உருவாக்கி அதைப் பொருத்தப்பாட்டுடன் கவிதையில் வைக்கிற போது உவமையாக மட்டுமன்றி படிமமாய் மாறி வாசகனை கிளர்த்தும் வல்லமை பெற்று விடுகிறது. நேசமித்ரனின் பல உவமைகள் அதற்கான உதாரணங்களாகின்றன.

பரிசோதனைக் குடுவையில்

தேங்கிய தோற்ற விந்தென

நிலா

********* ********  *********

நீத்தார்

கடனொப்ப ஆகாயம் பார்த்த சொற்களுடன்

நீர்ச்சிலந்தி

நெய்தபடி இருக்கிறது

போன்ற உவமைகளோடு

ஏடிஎம்மில் முத்தமிடுபவர்களைப்போல

அவசர மேகங்கள் நிரம்பியிருக்கும்

****     *******      *****

பிரிக்கப்படாத செய்தித் தாளின் மேல்

உறங்குகிறது

சாம்பல் நிறப்பூனை

என்று இயல்பு வாழ்வின் கணங்களில் இருந்து உவமைகளையும் படிமங்களையும் கண்டடைகிறார்.

 

பெண்கள் குறித்தான கட்டமைப்பு என்பதும், பால் சார்ந்த வித்தியாசத்தின் முக்கிய அம்சமாக பிள்ளைப்பேறு என்பது இயற்கையின் பாற்பட்டதெனக் கொள்ளும் பட்சத்தில் அதுகுறித்த பெருமிதமான பதிவுகளே வாழ்வு நெடுகிலும் காணக்கிடைக்கின்றன.உண்மையான அதன் அடிப்படையான மாதவிடாய் குறித்த சமூக ஆண்மனப்பார்வை வேறாகவும் புரிதலற்றும் இருப்பதை அறியமுடியும்.அதை முற்றிலும் உணர்ந்த கவிமனம் பெண்ணிய நிலைப்பாட்டோடு ‘விடாய்’ குறித்த பல படிமங்களை நுட்பமாக உருவாக்கியிருப்பது கவனத்திற்குரியது.இவரின் பல கவிதைகளில் ‘மாதவிடாய்’ பிண்ணியக்குறியீடாய் மாறியிருக்கின்றன.

 

விலங்குகளில் இருந்து தோன்றியவன் மனிதன்.பரிணாமம் சுட்டுவது அது. மனிதனாக மாறிய பிறகு உடல் ரீதியாக பல மாற்றங்களை இயற்கையின் கொடையால் பெற்றது மட்டுமன்று; தானாகவும் தகவமைத்துக் கொண்டான்.

மிருகங்களாக இருந்த போது நகம் என்பது முக்கியமான உட்ற்கூறு. பாதுகாப்பை, தற்காப்பை உறுதிப்படுத்துவது.தாக்குதலுக்குப் பயன் படும் ஆயுதம்.மனிதன் நகத்தை வெட்டப் பழகிய கணம் தான் மிருகத்திலிருந்து மனிதத்துவத்திற்கு மாறிய தருணம்.அது உளவியல் சார்ந்த நிலையில், மனிதத்துவத்தின் மீதான இருப்பைச் சொல்கிற குறியீடாக மாறுகிறது.அது ஒரு நுட்பமான குறியீடாக இவரின் கவிதைகளில் இருக்கின்றன.

பிரேதத்தின் நகமாய் நிறம்

மாறிக்கொண்டிருக்கிறது

****       *****      *****

பிழை நகத்தின் சாயமுருக

மரமேறியின்

கால்களால் இறங்குகிறது மழல்

***********     ****     ********

பெற்றுக்கொள்ள யாருமற்ற

உடல்களில் நகங்கள்

******      ******       *******

பார யானைகளின்

பழுப்பு நகம்

இப்படி பல நகங்கள் இவரின் கவிதைகளில் வளர்ந்திருக்கின்றன.

 

’நதியில் மிதக்கும் மூக்குத்தி நிலா’        வாசகன் நைஜர் நதிக்கரையில் தனக்கான பெண்ணைத் தரிசிக்கிற  வாய்ப்பை வழங்கும் மேற்கு ஆப்பிரிக்க தேசத்தின் மெல்லிய காதல் கவிதை.

 

நேசமித்ரன் கவிதைகள் குறித்துப் பேச இன்னும் பல செய்திகள் இருக்கின்றன.

 

எளிய வாசிப்பில் சட்டென உட்செல்ல முடியாத நுட்பமான படிமங்கள் , இறுக்கமான கட்டமைப்பு, புறச்செய்திகள் கொண்டிருக்கும் கவிதைகள்.ஆனால் வாசிப்பினூடாக சிறிய கவனக் குவிப்புடனான மெனக்கடலில் மிகப்பெரிய கவிதை தரிசனத்தை வைத்திருக்கின்றன.

எத்தகைய இறுக்கமான கவிதையும் தன்னுள் ஒற்றை வெளிச்சப் புள்ளியை வாசகனுக்கு வைத்திருக்க வேண்டும் என்பது எப்போதும் என்கருத்தாக சொல்வதுண்டு.

 

பெருமலை துளைத்த குகை மொழிக் கட்டமைப்பின் வழியெங்கும் நட்சத்திரங்களென திறப்புகள் மினுக்குகின்றன,தேர்ந்த வாசகன் கண்டடைவதற்கான சாத்தியங்களோடு.

நேசமித்ரன் கவிதைகள் குறித்த சிறு அடையாளத்தை இக்கட்டுர வழங்குமெனில் மகிழ்ச்சி.

 

நேசமித்ரனுக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்தும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationகவிதைகள்தொடரி – விமர்சனம்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *