கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)

This entry is part 5 of 29 in the series 9 அக்டோபர் 2016

author1

இதனை, மீறல் இலக்கியக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற, கனிமொழி ஜி யின் ,’கோடை நகர்ந்த கதை’, விமர்சன அரங்கிற்கு தலைமையேற்றுப் பேசியதன் கட்டுரை வடிவம் எனக்கொள்ளலாம்.

கவிதைகளை வாசிப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவதும் கவிதைகளை முன்வைத்து இதுபோன்ற அரங்குகளில் உரையாற்றுவதும் என் மனத்திற்கு மிகவும் நிறைவு தருகிற விஷயங்களாகவே எப்போதும் உணர்கிறேன்.

 

.wrapper6

ஒரு கவிதையை வாசகன் அணுகும் போது அவனுள் இருக்கும் ரசனை, மனோபாவம்,கருத்தியல், கோட்பாடு என பல காரணிகளும் பங்கு பெறுகின்றன என்பதை நாமறிவோம். எனவே கவிதை குறித்த வரையறைகளும் அவற்றிற்கேற்ப மாறுதலடைகின்றன.

பிற இலக்கிய வகைமைகளைப் போலல்லாது கவிதை மிகவும் நுட்பமானதும் தனித்துவமானதும் எனக்குப் பிடித்தமானதுமாகும்.

கவிதை, வாசகன் தன்னளவில் பறப்பதற்குச் சுதந்திரமான விஸ்தாரமான வெளியையும் அவ்வெளியில் உற்சாகமாய்ப் பறப்பதற்கான சிறகுகளையும் வழங்குகிறது.அந்த மன நிலையோடு இங்கே உரையாற்றும் பொருட்டு கனிமொழி ஜி யின் இத்தொகுப்பை வாசித்தேன்.

கனிமொழி.ஜி யின் , ‘கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலில் 54 கவிதைகள் இருக்கின்றன. தமிழ்க்கவிதை மரபில், சமகாலக் கவிதைகள் நவீன கவிதைகளுக்கென ஒரு மொழியைக் கண்டடைந்திருக்கின்றன என்பதை தொடர் வாசிப்பில் அனுமானிக்க முடிகிறது. பலரும் கையாளும் நவீன கவிதைகளுக்கான மொழியினில் தான் கனிமொழி .ஜி எழுதியிருக்கிறார். அம்மொழி நுட்பமாய்ச் செயலாற்றி சமகால கவிதை நுகர்வாளரை திருப்திப் படுத்துகிற மொழி.

இந்நூலின் பின்னட்டையில், ‘உலர்ந்த கவிதைகளால் ஆனவை கனிமொழி.ஜி யின் கவிதைகள்’, என்னும் குறிப்பு இருக்கிறது.அப்படித்தானா? எனில், அப்படி ஒரு கருத்து முன்வைப்பை இவரின் கவிதைகளுக்குச் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது.

அலகேந்தும் இரையோடு

கூட்டுக்கு மீளும் பறவையிடம்

எளிய வாழ்வைப்

பயில முயல்கிறேன்

என வெளிப்படையாக எதிர்கொள்ளத் தயாராகும் இவரின் கவிதைகளை, ‘ உலரும் கனவுகளால் ஆனவை’, என்று சொல்வதை விடவும் சமூகத்தின் இறுக்கமான சூழல் உருவாக்கும் வெப்பத்தில் மானுடத்தின் ஈரம் உலர்ந்து விடக் கூடாதென்னும் அச்சம் இழையோடும் கவிதைகள் என்றே கூறவேண்டும். அத்தகைய விழைவே, வாழ்வில் தரிசிக்கிற நுட்பமான தருணங்களை,இயல்பு வாழ்வின் நிதர்சனத்தை, நிதர்சனம் உருவாக்கும் சிக்கலை, அதன் மீதான கருத்தியலை, வெளியே பட்டவர்த்தனமாய்த் துருத்தி நிற்காத மெல்லியக் கோட்பாட்டைப் பேசும் கவிதைகளாக உருவாக்கியிருக்கிறது.

அப்படியான தொரு அச்சம் இவரின் கவிதைகளின் மையச் சரடாக இருப்பதை பல கவிதைகளிலும் மேற்கோளோடு நிறுவ முடியும்.

தன்னால் பார்க்கவியலாத

நடுமுதுகு பெருமச்சமென

பெண்ணை

எப்போதும் பிந்தொடர்ந்து

ஓர் இருள்

என்பதிலிருந்து அதனைத் தொடங்கும் சாத்தியம் இருக்கிறது.

கதவுகள் அவசியம் என்றொரு கவிதை.தலைப்பே அச்சத்தை வழிமொழிவதை யூகிக்க முடியும்.

மூடிய கதவை

நீ வெறித்துக் கொண்டிருக்கிறாய்

நான் உன்னை

திறந்திட முயலவே இல்லை

நானும் கூட

 

வெளிப்புறம் தாழ் இல்லை நீயறிவாய்

நானறிவேன் உட்புறமும்

 

வெளியே நீயும்

உள்ளே நானும் நகரவில்லை

தாழற்று இருப்பினும்

கதவுகள் அவசியம் தான்

மரக்கதவின் உள்ளும் வெளியுமான இருப்பை முன்வைத்த கவிதையெனினும் மனக்கதவின் உள், வெளி, என்பதனை எளிய வாசகனும் அனுமானிக்க முடியும்.

தாழற்று இருப்பினும்

கதவுகள் அவசியம் தான்

மனக்கதவெனில், அது தாழற்று இருக்கிறது என்பது அச்சத்தின் முக்கியகூறாகவும் அப்படித் தாழற்று இருப்பினும் கதவுகள் அவசியம் என்பது கவிமனத்தின் விழைவாகவும் கொள்ளமுடியும்.

இன்னொரு கவிதை, ’யசோதராவின் கண்ணீர்’.

உச்சிமகுடம் இடைக்கச்சை

உடைவாள் உருவியெறிந்து

உடலணிந்த பொன்கவசம்

எல்லாம் பெயர்த்து விட்டு

வாழ்வைத்துறக்கத் துணிந்தவன்

புத்தனமர்ந்த போதிமரத்துக்கு

பாதைகேட்டுப் போகிறான்

வழியெங்கும் முட்களாய் முளைத்திருக்கின்றன

யசோதராவின் கண்ணீர்.

புத்தனின் பாதையில் போகும் ஒருவனின் பயணத்தில், அவன் பாதங்களில் வழிநெடுக முளைத்திருக்கின்றன யசோதராவின் கண்ணீர் முட்களாய் என்னும் பார்வை ஒரு பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட கவிதை.யசோதராவின் பார்வையில் அவளின் துயரை முதன்மைப்படுத்தி புத்தனின் பாதையைக் கேள்விக்குள்ளாக்குகிற கவிதை. அவ்விதம் இல்லையெனில், புத்தனின் பாதை யசோதரைக்குத் துயர் தந்தது என்பதை மட்டும் சொல்வதாக மட்டும் புரிந்து   கொள்ள முடியும். ஆனால் பிறிதொரு இடத்தில்,புத்தன் என்னும் கவிதையில்,

ஆசையறுத்த புத்தனுக்கு

விழிகள் மூடும் இமைகள்

எதற்கு?

என்னும் வரிகள், புத்தனின் செயல் முறையை மட்டுமன்றி செயலின் மீதே ஐயத்தையும் கேள்வியையும் முன்வைப்பது. இத்தனை எளிதாய் புத்தனின் துறவையும் வாழ்வின் மீதான பற்றற்ற நிலையையும் அவன் கண்டடைந்த கருத்தியலையும் கேள்விக்குட்படுத்துவதென்பதை ஒரு விவாதப் பொருளாகவே நான் கருதுகிறேன்.

 

மணற் கடிகாரம் வாழ்வைச்சொல்லிக்கொடுப்பதாகவும் சுழலும் முட்கள் உள்ள கடிகாரம் சுற்ற வேண்டிய தூரத்தைக் கணக்கிட்டுச் சொல்ல,

இன்று

ஒளிரும் சிவப்பெண்கள்

அணையப் போகிற வாழ்வைச் சொல்லி

அச்சுறுத்துகிறது

என்னும் போது இவரின் அச்சத்தின் இழை சிக்குகிறது.இப்படித் தொடரும் இழையில்,

’சுவடுகள் தொடர்கின்றன’, கவிதை முக்கியமானது.

ஓர் அரவமற்ற மணல் வெளியும்

நடுவில் அடர்ந்த சிறுகாடும்

என ஒரு கானகத்தின் சித்தரிப்போடு தொடங்கும் கவிதையில், பல்வேறு மிருகங்களின் சுவடுகள் சொல்லப்படுகின்றன. மணலெங்கும் உயிர்ச் சுவடுகள், சிறுவிலங்கின் கால்வடிவு,கனத்த மிருகங்களின் அகலக் காலடிகள், வளைந்த நகங்களுடன் வனவிலங்கின் கால்தடம் என.

மென்மணலில் நெளிவுகளை விட்டுச் சென்றிருக்கிறது

நஞ்சுமிழும் அல்லது உமிழாத சர்ப்பமொன்று

என்னும் போது ‘நஞ்சுமிழும்’ என்பதோடு சர்ப்பத்தை அறிமுகம் செய்ய வியலாத கவிமனம் அடுத்தவார்த்தையே ‘அல்லது உமிழாத’ என்பது உற்று நோக்கத்தக்கது. ஏனெனில், இதே கவிமனம் தான் அடுத்தவரிகளில் மனிதப் பாதங்களைக் கண்டு அச்சுறுகிறது.

அந்தச் சுவடுகள்

என்னைப்பின் தொடர்ந்தவாறிருக்கின்றன

என்னும் காரணத்தோடு.

 

நம்மின், திணை சார்ந்த கவிதை ஒன்று,’குறிஞ்சி நிலக் குருவியொன்று’,. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி.வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்.குறிஞ்சி நிலக்குருவியொன்று மருதநில மரமொன்றில் கூடுகட்ட விழைகிறது.இந்தக் கவிதையின் போக்கில் குறிஞ்சி நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் பிரத்யேகமான சொற்பிரயோகங்களை எப்படிப் பயன் படுத்தியிருக்கிறார் என்பது என் கவனத்தைக் கோரியதெனலாம்.

’முதியவனின் கூப்பிய கைகளைப் போல சோளக்கதிர்கள், புளியம்பழங்கள், பனைகள்,வெம்மை பொங்கும் குழந்தைக்கண்களில் இளம் தாயொருத்தி பீய்ச்சிய தாய்ப்பால், பின்வாசல் படர்ந்த வெயில்’, போன்ற சொற்களை குறிஞ்சி நிலச் சித்தரிப்புக்கு பயன் படுத்துகிறார்.அதற்கிணயாக மருதநில ஒப்பீடுகளாக தேர்வான சொற்களைப் பயன்படுத்திகிறார்.

மருத நிலத்தைப் பற்றிப்பேசும் போது கம்பன்,

தண்டலை மயில்கள் ஆடத்

தாமரை விளக்கம் தாங்க

கொண்டல்கள் முழவின் ஏங்க

குவளை கண் விழித்து நோக்க

தெண்திரை எழினி காட்ட

தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட

மருதம் வீற்றிருக்கும் மாதோ.

என்பார்.

 

மருதத்திற்கான இவரின் சொற்களாக,’ஆம்பல் மலர் மொட்டுகள்,பச்சை நரம்பென நிலம் படர்ந்த, செழித்த நெற்பயிர்கள், உம் நஞ்சையாய் தளும்புகிறது’, போன்றவற்றை அறிய முடிகிறது. ஒரு புலம் பெயர்தல் சார்ந்த கவிதையாகவும் குறிப்பாக பாரிமகளிர் நினைவிற்கு வருகிறார்கள்.

பரம்புமலை வீழ்ந்ததற்குப் பின்னால், பாரிமகளிர் கபிலரோடு புலம்பெயர்ந்த காட்சி விரிகிறது.

 

‘வலியின் நிறம்’, என்றொரு கவிதை.

மகளொன்று கேட்கிறாள்

தன்பிறப்பில் என்வலி எவ்வண்ணமென்று

 

நிறங்களின் நினைவுகளில் பின்னீந்திப் போகிறேன்

 

கருக்கொண்டு விட்டதாய் நம்பிய பின்னிரவு

இரவாடையின் நீல நிறம்

 

உறுதிப்படுத்திய நேரம் உடுப்பில்

வெண்பரப்பில் சிறுபூக்கள்

 

பெருத்திருந்த மேல்வயிற்றில் இறுக்கம் தளர்ந்திருந்த

மஞ்சளாடையொன்று மனதில் மலர்கிறது

 

தாளாத வலியோடு பற்களால் உதடழுத்தி

மருத்துவமனை சாளரக்கம்பியை இறுக்கிக் கொண்ட போது

உடையெனக்கு ஊதாநிறம்

 

புறமீன்று புன்னகைத்து தளர்ந்துன்னை வருடிய போது

வலியின் நிறங்கள் முற்றிலுமகன்று நம்மை

வானவில் ஒன்று வளைத்திருந்தது மகளே.

வலியின் நிறமென்று சொன்னபோதிலும் காலத்திற்கு நிறங்களைக் கையளிக்கிறார்.இதனைப் போல ஓசைகளுக்கு நிறத்தை ஒப்பிட்டு, கவிஞர் கோ.கண்ணன், ‘ஓசைகளின் நிறமாலை’, என்றொரு கவிதை எழுதியிருப்பார்.

ஓசைகளுக்கும் நிறமுண்டு

சிதறும் சிரிப்புக்குப் பச்சை

சிலிர்ப்பூட்டும் சிருங்காரச் சிணுங்களுக்கு நீலம்

அலுப்பூட்டும் அழகுக்கு அடர்மஞ்சள்

குழந்தையின் மழலைக் கொஞ்சலுக்கு

நாதக் கருங்குயிலின் கீதத்திற்கு கருநீலம்

ரௌத்ர உறுமலுக்கு ரத்த சிவப்பு

புதிய மணி ஓசைக்கு அதிசய ஊதாஎன்று

ஓசைகளுக்கு நிறம் வழங்கியிருக்கியிருக்கிறார்.கூடுதல் செய்தி யாதெனில் கோ.கண்ணன் இயல்பிலே பார்வைத் திறன் மாற்றுத்திறனாளர் ஆவார்.

சரி. கனிமொழி ஜி ஒவ்வொரு தருணத்திற்குமான ஒரு வண்ணத்தை அடையாளப்படுத்துகிறார். எந்த எந்த தருணத்திற்கு எந்நிறம் சொல்கிறார் என்று யோசிப்பதும் அதற்கு காரணங்களைக் கற்பிப்பதையும் விட பொழுதுகளை நிறங்களாய்க் காட்டிய கவிதை எங்கே வெற்றி பெறுகிறது என்பது முக்கியமானது. எல்லா பொழுதுகளுக்கும் வண்ணங்களைச் சொன்னவர்,

புறமீன்று புன்னகைத்து தளர்ந்துன்னை வருடிய போது

வலியின் நிறங்கள் முற்றிலுமகன்று நம்மை                                       வானவில் ஒன்று வளைத்திருந்தது மகளே

என்னும் இடத்தில் நிறங்களைக் கொண்டு கட்டமைத்ததற்கான நியாயம் செய்கிறார். கவிதை அங்கே தான் முழுமையும் வெற்றியும் அடைகிறது.

 

’போத்தலில் நிறைகிறேன்’,என்னும் ஒரு கவிதை,

போத்தலின் குலுக்கலில் பொங்கியமது

திறத்தலில் மெல்லத்தணிந்தது

ததும்பித் ததும்பி சின்னக்குமிழ்களால்

அது ஆசை நெய்தது

ஒவ்வொருமிடறாய்

அருந்தக் கொடுத்து தீர்ந்து போகிறேன்

முகர்ந்து முகர்ந்தே மயங்கிப் போகிறாய்

மீள நிறைகிறேன்

மது குறித்துப் பேசுவதான கவிதை. சங்க இலக்கியத்தில்,’உண்டாட்டு’, என்னும் சொல் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. இன்றைக்கு மது குறித்து பல வித பெயர்களைக்குறிப்பிடுவது போல சங்க காலத்தில், கள், அரியல், தோப்பி, கந்தாரம், பிழி, மட்டு, மட்டம், வேரி, நறவு, தேறல், மது என பல்வேறு பெயர்களால் வழ்ங்கப்பட்டு வந்ததை அறிகிறோம்.இங்கே போத்தல் என்னும் சொல் பயன் படுத்தப் படுவதைப் போல மூங்கில் குழாய் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட தசும்பு அக்காலத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.

மதுவுக்கு எப்போது சுள்ளாப்பு ஏறும் என்பது பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிட்டுள்ளது. இரு பகல் இரண்டு இரவு புளிக்கவைத்தால் மதுவுக்குச் சுள்ளாப்பு மிகுதியாகும் என்பதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 279 முதல் 281 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன. நீண்ட நாள்கள் புளிக்கவைத்த மதுவின் சுள்ளாப்பு தேள் கொட்டியது போல நாவில் ஏறும் என்று புறநானூற்றின் 392ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.

நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்

புல்வேய்க் குரம்பை குடிதொறும் பகர்ந்து

(புறம்120)

குறியிரைக் குரும்பைக் குறவர் மாக்கள்

வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து

(புறம்129)

போன்ற பல வரிகள் மது மக்கள் வாழ்வோடு பங்கு கொண்டிருந்ததை தெரியப்படுத்துபவையாய் இருக்கின்றன. மது, மதுவருந்துதல் அதனூடாக விளையும் மயக்கம் ஆகியவற்றைப் பேசும் பல சங்கப்பாடல்களையும் தொடரும் பல்கால இலக்கிய மேற்கோள்களோடும் பொருத்திப் பார்த்து இப்பாடலை உள்வாங்குவது ஒரு வாசிப்பு தான். ஆனால் அத்தகைய வாசிப்பை மட்டும் முன் வைத்தால் கவிதையின் உட்பொருள் கடந்து இருக்குமோர் இடத்தினை அடைந்ததாகாது என்பது மட்டுமல்ல கவிதையை நியாயமாய் அடையாளம் காட்டியதுமாகாது.

 

ஊடல் நிகழ்ந்து, கூடல் நிகழ்ந்து எல்லாவிதமான சாத்தியப் பாடுகளுக்கும் பின்னால்

ஒரு வெறுமை சூழ்ந்த தருணம் பேசும் பெண்ணின் குரலாகப் பார்க்கத் தோன்றுகிறது.

தலைவன் பிரிவின் போது உயவு நோய் கொண்டு ஔவை பாடிய தலைவியின் கூற்று

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

ஓரேன் யானுமோர் பிற்றி

மேலிட்டு

ஆஅஒல்லெனக் கூவேன் கொல்

அலமறல் அசைவளி யலைப்பவென்

உயவு நோய் அறியாது

துஞ்சும் ஊர்க்கே

என்பதாக அமையும். அதற்கு ஒப்பீட்டளவில் சமகாலத்தின் தலைவியின் கூற்றாக இக்கவிதையைப் பார்க்க முடியும்.

 

இப்போது இக்கவிதையைப் படித்துப்பாருங்கள்.

போத்தலின் குலுக்கலில் பொங்கியமது

திறத்தலில் மெல்லத்தணிந்தது

ததும்பித் ததும்பி சின்னக்குமிழ்களால்

அது ஆசை நெய்தது

ஒவ்வொருமிடறாய்

அருந்தக் கொடுத்து தீர்ந்து போகிறேன்

முகர்ந்து முகர்ந்தே மயங்கிப் போகிறாய்

மீள நிறைகிறேன்

பொழிப்புரை தேவையில்லை.

முற்றிலும் முரண்களைக் கொண்ட புனைவுகள் வாசிக்க புதிய வெளிகளைத் தருகின்றன. இக்கவிதை சிறந்த உதாரணம்.

பசித்திருக்கும்

வேட்டை மிருகத்தின் கண்களை

இரையொன்று

ரசித்துப் பார்க்கிறது

சாத்தியமற்ற சாத்தியத்தைக் கொண்டிருக்கும் இப்புனைவு அல்லது காட்சி வேறு பல சாத்தியப்பாடுகளை வாசிப்பில் உருவாக்குகிறது.

தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல மானுடத்தின் ஈரம் உலர்ந்து விடக்கூடாதென்னும் விழைவைக் கொண்டிருக்கும் அச்சம் மைய இழையாக இருக்கும் கவிதைகளில்,

அரவமற்ற தீவின்

கரை மரத்தில் கட்டப்பட்டு

நீரில் ஆடிக்கொண்டிருக்கும்

படகின் கயிறு

மெல்ல இற்றுப்போகிறது

என்னும் எதிர்மறைப் படிமங்களைக் கடந்து சில தைரியம் உருவாகிற மனத்தின் புள்ளிகள் காணக்கிடைப்பது ஆசுவாசத்தை தருவதாய் இருக்கிறது.

சிறிதாய் காயம்பட்டு

உன் கைகளடைந்த

சிட்டுக் குருவிக்கு

உன் வருடல்களால்

இன்னுமிரு சிறகுகள் முளைக்கின்றன

என்னும் நம்பிக்கை வெளியும்

தோட்டம் முழுக்கச் சுற்றி

தன் ஒவ்வோர் அமர்விலும்

பூவொன்றை உருவாக்குகிறது

இந்தப் பட்டாம் பூச்சி

என்னும் உயிர்த்தலின் உணர்வும் இறுக்கத்திலிருந்து கவிமனம் வெளியாகும் இடங்களை அடையாளம் காட்டுகின்றன. அது மகிழ்ச்சியான ஒன்று.

 

கவிதை மொழி ஒற்றைத்தன்மையோடு இருப்பது, எதிர்காலத்தில் பாடுபொருள்களுக்கும் உணர்வெழுச்சிக்கும் ஏற்ப புதிய சில மாறுபட்ட தொனிகளையும் பரிட்சார்த்த கட்டமைப்புகளையும் அடையக்கூடும். வாசிப்பனுபவத்தின் ஊடாகத் தோன்றிய கருத்து இதுவெனினும்  அது முற்றிலும் கவிஞரின் முடிவின் பாற்பட்டது.

 

நல்ல கவிதைகள் வாசிக்கும் வாய்ப்பைத் தந்ததற்காக கனிமொழி ஜி க்கு என் நன்றியும் வாழ்த்தும்.

 

Series Navigationஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *