தொடுவானம் 139.உலகத் தொழுநோய் தின விழா

This entry is part 11 of 29 in the series 9 அக்டோபர் 2016

 hhh

(நான் வரவேற்பு நிகழ்த்துகிறேன்.

அமர்ந்திருப்பவர்கள்: இடமிருந்து : நாவலர், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி, டாக்டர் செல்வபாண்டியன், டாக்டர் ஜோப் .)

அறுவைச் சிகிச்சை பயின்றபோது அதன் கிளைப் பிரிவாக எலும்பு நன்னியல் ( Orthopaedics ) வகுப்புக்கும் செல்வோம். இதை நடத்தியவர் டாக்டர் செல்வபாண்டியன்.தமிழர். இவர் அப்  பிரிவின் தலைமை மருத்துவர்.

எலும்பு நன்னியலில் எலும்புகளில் உண்டாகும் நோய்கள், விபத்துகளில் உண்டாகும் எலும்பு முறிவு ஆகியவற்றைப் பயில்வோம். அதோடு தொழுநோய் தொடர்புடைய எலும்புகள் பாதிப்பையும் பயில்வோம். குறிப்பாக தொழுநோயால் கைகள் முடங்கியவர்களுக்கு இங்கே அறுவை சிகிச்சை மூலம் முடங்கிய விரல்களை நீட்டி மடக்கும்` வகையில் சிகிச்சை தரப்பட்டத. அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு அவர்களின் கைகளுக்கு பயிற்சிகள் தரப்படும். அதன் பின்பு அவர்கள் கைகளையும் கால்களையும் பயன்படுத்த முடியும். அந்த பயிற்சிகள் தரும் பகுதிக்கு பழனி என்பவர் உதவியாளராக   இருந்தார். அவர் தமிழர்.

என்னிடம் டாக்டர் செல்வபாண்டியனும் பழனியும் நன்றாகப் பழகினார்கள் பழனியிடம் நான் தமிழில் கதை கட்டுரைகள் எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன்.

வருடந்தோறும் ஜனவரி 30 ஆம் உலகத்  தொழுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்று மகாத்மா காந்தி இறந்த நாள். அவர் தொழுநோயாளிகள் மீது பரிவு காட்டியதால் அந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளனர். அவரைக் கெளரவிக்கும் வண்ணம் உலக சுகாதார நிறுவனம் இதை பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த வருடம் இதை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று பழனியும் நானும் முடிவு செய்தோம். இதற்கு முன்பெல்லாம் இதை ஒரு விழாவாக இங்கு கொண்டாடியதில்லை. எங்கள் முடிவை டாக்டர் செல்வபாண்டியனிடம் தெரிவித்தோம். அவர் மகிழ்ச்சி பொங்க அதை வரவேற்றார்.நான் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்து அனுமதி பெற்றேன்.அவரும் இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்தினர்.

நான் என் நண்பர் செல்வராஜுவிடம் இதுபற்றி பேசியபோது, இதை கல்லூரிக்குள்ளேயே நடத்தாமல் பொது நிகழ்ச்சியாக நடத்தலாம் என்று கூறினார்.இதில் பொது மக்கள் பங்கெடுத்தால் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை உண்டுபண்ணலாம் என்றார். வட ஆற்காடு மாவட்டத்தில் அப்போது தொழுநோய் பரவலாகக் காணப்பட்டது. ஆயிரம் பேர்களில் 35 பேர்களுக்கு தொழுநோய் இருந்தது.இதை SET முறையில் ஒழிக்கும் முயற்சியில் அரசு முயன்றது. S என்பது Survey ( ஆராய்தல் ) ,E என்பது Education ( கல்வி ), T என்பது Treatment ( சிகிச்சை ). இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவி செய்தது.

விழாவை நாங்கள் நன்கொடை மூலமாக  நடத்தத் திட்டமிட்டோம். உள்ளூர் அரசியல் பிரமுகர்களை அணுகி நன்கொடை வசூலித்தோம். எங்கள் ஆசிரியர்களிடம் வசூல் செய்தொம். என்னுடைய மாணவ நண்பர்களிடமும் வசூல் செய்தேன். செல்வராஜும் பழனியும் வசூலில் உதவினார்கள்.

இது பொது நிகழ்ச்சி என்பதால் வேலூரிலுள்ள  இராஜகோபால் மண்டபத்தில் விழாவை நடத்த முடிவு செய்தொம். அதில் சுமார் 500 பேர்கள் வரை அமரலாம். அதற்கான வாடைகைத்   தொகையையும் செலுத்திவிட்டோம்.

விழா பொது மக்களுக்கு என்பதால் யாரை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம் என்று ஆலோசனை செய்தபோது எனக்கு நாவலர் நெடுஞ்செழியன்  மிகவும் பொருத்தமானவர் என்று தோன்றியது. அப்போது அவர் தமிழ் நாட்டின் கல்வி அமைச்சர். அது ஒரு முக்கிய காரணம். அதைவிட இன்னொரு காரணமும் இருந்தது. அண்ணாவுக்கு அடுத்த முக்கிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும் விளங்கினார். அவருடைய அடுக்கு மொழி எனக்கு .பிடிக்கும். எதையும் புள்ளி விவரத்துடன் பேசும் ஆற்றல் மிக்கவர் நாவலர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாவலரை அழைத்து சிறப்புச் செய்ய முடிவு செய்தேன். இதற்கு கல்லூரி முதல்வரின் சம்மதத்தையும் பெற்றுவிட்டேன்.

நாவலரை எப்படி அழைப்பது என்பதுதான் பிரச்னை. அவர் தமிழக அமைச்சர். அவருடைய நிகழ்ச்சிகள் ஏராளம் இருக்கும். அவை முன்பே திடடமிடப்பட்டிருக்கலாம். இந்த நிலையில் எங்களுடைய அழைப்பை அவர் ஏற்று வர இயலுமா? அதிலும் நாங்கள் குறிப்பிடும் நாளில் அவர் வருவது சாத்தியமாகுமா? அவருக்காக எங்களுடைய தேதியை மாற்றமுடியாது.  தொழுநோய் தினம் ஜனவரி 30 ஆம் தேதி. விழாவை அன்று நடத்துவதே சாலச் சிறந்தது. இதை அவரிடம் விளக்கினால், நிச்சயம் அவர் புரிந்துகொள்வார். ஆனால் அதற்கு அவரைத் தேடிக்கொண்டு சென்னைக்கு செல்லவேண்டுமே. அப்படிப் போனாலும் உடன் பார்க்க முடியுமா?

நான் வேலூர் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்துக்கு செல்வராஜுவுடன் சென்றேன். அங்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து அவரிடம் இதுபற்றிக் கூறினேன். அதே நேரத்தில் விழாவுக்கு அவரையும் அழைத்தேன். அவர் அதில் ஆர்வம் கொண்டார். நாவலரை தொடர்புகொண்டு இரண்டொரு நாட்களில் முடிவு சொல்வதாகக் கூறினார். நம்பிக்கையடன் நாங்கள் மெட்ராஸ் ஹோட்டல் சென்று பிரியாணி உண்டோம்.

டாக்டர் செல்வபாண்டியனும், கல்லூரி முதல்வரும் நாவலர் வரப்போகிறார் என்பதைக் கேட்டு என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். விழா வெகு விமரிசையாக இருக்கவேண்டும் என்று என்னிடம் கூறினார்கள் . இதற்கு ஒரு விழாக்குழு அமைத்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி நான் ஒரு சிறு குழு அமைத்துக்கொண்டேன். அதில் பெஞ்சமின், டேவிட் ராஜன், சம்ருதி ஆகிய நெருங்கிய நண்பர்களுடன் செல்வராஜ், பழனி ஆகியோரையும் சேர்த்துக்கொண்டேன். முக்கியமாக விளம்பரம், மேடை அலங்காரம், வரவேற்பு, மாலைகள், சிற்றுண்டியும் தேநீரும் ஆகியவற்றுக்கு தனிக்குழுக்கள் அவர்கள் தலைமையில் அமைத்து செயல்பட்டோம். சுவரொட்டிகள் அச்சடித்தோம்.

பழனியும் நானும் தினத்தந்தி அலுவலகம் சென்று விளம்பரம் தந்தோம். அதன் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் தொழுநோய் பற்றி ஆர்வம் காட்டுவதை உணர்ந்தேன். தொழுநோய் பற்றி ஒரு விளக்கக் கட்டுரை தந்தால் அதை அந்த வார ஞாயிறு மலரில் பிரசுரம் செய்ய முடியுமா என்று அவரிடம் கேட்டேன். அவர் உடன் சரி என்றுவிட்டார்.  என்னால் அதை நம்பமுடியவில்லை. என்னடைய கட்டுரை தினத்தந்தியில் வரப்போகிறது என்ற பெருமிதம். இரண்டொரு நாட்களில் கட்டுரையை தயார் செய்துவிடலாம்.

விழா ஏற்பாடுகளைப் பார்ப்பதுடன் மிகுந்த உற்சாகத்துடன் கட்டுரையை இரவு நேரங்களில் தயார் செய்தேன். பத்து முதல் பனிரெண்டு பக்கங்கள் எழுதினால் போதுமானது. ” சாபத்தினாலேயோ அல்லது பிறப்பினாலோ உண்டாவது தொழுநோய் அல்ல.  அது கிருமிகளால் உண்டாகிறது. ” என்று கட்டுரைக்கு தலைப்பு தந்தேன். கட்டுரையை முதலில் செல்வராஜுவிடம் தந்தேன். அவர் படித்துப் பார்த்துவிட்டு அருமையாக உள்ளது என்று பாராட்டினார். பின்பு பழனியிடம் படித்துக் காட்டினேன். அவர் என்னை டாக்டர் செல்வபாண்டியனிடம் கூட்டிச் சென்றார். அவரிடமும் படித்துக் காட்டினேன்.அவரும் என்னுடைய தமிழ் நடையைக் கேட்டு வியந்துபோனார். இது பொதுமக்களுக்கு நல்ல விழிப்பூட்டும் கட்டுரை என்று கருத்து கூறினார். உடன் இதை தினத்தந்தியில் தந்துவிடுமாறு வேண்டினார். அப்போது பழனி என்னுடைய கட்டுரையில் டாக்டர் செல்வபாண்டியனின் பெயரையும் சேர்த்துக்கொண்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். அவர் என்னுடைய பேராசிரியர். தொழுநோய் நிபுணர். அப்படியானால் நாங்கள் இருவரும் கட்டுரையை எழுதியதுபோல் இருக்கும். கட்டுரையில் நிபுணத்துவம் இருக்கும். இதைக்  முதலில் வேண்டாம் என்று சொன்னார். பின்பு நானும் கேட்டுக்கொண்டபின்பு சம்மதித்தார். கட்டுரையை எடுத்துக்கொண்டு பழனி தினத்தந்தி அலுவலகம் சென்றுவிட்டார்.

விழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன. விழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை தினத்தந்தியில் என் கட்டுரை சிறப்பாக வெளிவந்தது.  ஆனால் அதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்! அதில் என் பெயர் விடுபட்டிருந்தது! டாக்டர் செல்வபாண்டியனின் பெயர் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது! இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. பழனியும் அப்படிதான் கூறினார்! எனக்கு பெரும் ஏமாற்றம்! நான் ஆசையாக அதைக் காண காத்திருந்ததெல்லாம் வீண்போனது! அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட சில நாட்கள் ஆனது. அதற்குள் விழா நாளும் வந்துவிட்டது.

காலையிலேயே நானும் விழாக்குழுவினரும் மண்டபம் சென்றுவிட்டோம். கடைசி நிமிட ஏற்பாடுகளை செய்து முடித்தோம். அன்று சனிக்கிழமை. விழா காலை பத்து மணிக்கு சிற்றுண்டியுடன் துவங்கும். எங்கள் விடுதியிலிருந்து அதைக் கொண்டுவந்துவிடுவார்கள். கல்லூரியிலிருந்து விழா மண்டபத்துக்கு விஷேச பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.

ஒன்பது முப்பது மணியளவில் கல்லூரி பேருந்துகள் வந்து சேர்ந்தன. பொதுமக்களும் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்ததும் சிற்றுண்டி தரப்பட்டது. அரங்கம் நிறைந்துகொண்டிருந்தது. எங்களுடைய கல்லூரியினரின் கூட்டமே பெரிது.

சரியாக பத்து மணிக்கெல்லாம் நாவலரும் வந்துவிட்டார்! எங்களுக்கெல்லாம் அது பெரும் ஆச்சரியம்! அரசியல்வாதிகள் பெரும்பாலும் அப்படி குறித்த நேரத்தில் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது! முன்பு அண்ணாவும் பட்டமளிப்பு விழாவுக்கு அதுபோன்றுதான் குறித்த நேரத்தில் வந்தது நினைவுக்கு வந்தது. ஒருவேளை புதிய திராவிட அமைச்சர்கள் இந்த பாணியைக் கையாள்வார்களோ? அப்படிச் செய்வது நல்ல முன்மாதிரியாக இருக்கும்.

விழா மேடையில் நாவலர், பாராளுமனற்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி, டாக்டர் செல்வபாண்டியன், தொழுநோய்க் கிருமி இயலார் டாக்டர் ஜோப் ஆகியோருடன் நானும் அமர்ந்திருந்தேன்!

நான் நாவலருக்கு மாலை அணிவித்துவிட்டு வரவேற்புரையை தமிழில் வழங்கினேன்!  தொழுநோய் பற்றிய கட்டுரை எழுதியபோது அதுபற்றி அதிகம் தெரிந்து வைத்திருந்ததால் அவற்றை சுருக்கமாக என்னுடைய உரையில் பயன்படுத்தினேன். பொதுவாக தொழுநோய் பற்றிய சில அடிப்படை உண்மைகளை அறிமுகமாகக் கூறினேன். தொழுநோயாளிகளை நோய் காரணமாக நாம் ஒதுக்கிவைக்கலாகாது என்றும் அவர்களையும் நாம் மனிதநேயத்துடன் அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வு நாம் தரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டேன். அதுவே உலகத் தொழுநோய் தினத்தின் சாரம் என்றும் கூறினேன்.

தலைமை உரையை கல்லூரி முதல்வர் ஆங்கிலத்தில் ஆற்றினார். அவர் மலையாளி என்பதால் தமிழில் சாளரமாகப் பேசத் தெரியாது. டாக்டர் செல்வபாண்டியனும், டாக்டர் ஜோப் அவர்களும் சுருக்கமாக ஆங்கிலத்தில் வாழ்த்துரை கூறினார்கள்.

நாவலர் பேச எழுந்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் கைகளைத் தட்டி கரகோஷம் செய்தனர். அவர் கையில் எந்த குறிப்பும் இல்லை. ஆனால் அத்தனையும் அவர் கைவசம் இருந்தது! அத்தனையும் வியக்கத்தகும் புள்ளிவிவரங்கள்! திறந்த மடை போன்று அழகிய அடுக்குமொழியில், தூய தமிழில் உரையாற்றி அனைவரையும் தேனுண்ட வண்டென கிறங்கவைத்தார்! திராவிட இயக்கத்தினருக்கு இவ்வாறு மயக்கும் தமிழில் பேசுவது எப்படி வந்தது? அண்ணாவும் கலைஞரும் பேராசிரியரும் இப்படித்தானே! தங்குதடையின்றி சுமார் ஒரு மணி நேரம் தொழுநோய் பற்றிய புள்ளி விவரங்களும்,தொழுநோய் சிகிச்சையில் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி உலகுக்கு முன்னோடியாக செயல்படும் விதத்தையும், தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார். அதிலும் தொழுநோய் மருத்துவ சிகிச்சையில் டாக்டர் காக்ரேன் ( Dr. Cochrane ) அவர்களும், தொழுநோய் அறுவை சிகிச்சையில் டாக்டர் பால் பிரெண்ட் (Dr. Paul Brand )அவர்களும் இங்கிருந்து உலகத்துக்கு முன்னோடிகளாக இருந்ததையும் எடுத்துக் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்!

இன்னும் தொடர்ந்து பேசமாட்டாரா என்ற நிலையில்தான் அவர் தம்முடைய இனிமையான உரையை முடித்துக்கொண்டார். கரகோஷம் விண்ணைப் பிளந்தது!

பழனி நன்றி கூற உலகத் தொழுநோய் தின விழா சிறப்புடன் முடிந்தது. கல்லூரி முதல்வர்  கைகுலுக்கி என்னைப் பாராட்டினார்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigation“முள்வேலிக்குப் பின்னால் “ – 2தொடு நல் வாடை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *