மாயாண்டியும் முனியாண்டியும்

This entry is part 15 of 21 in the series 16 அக்டோபர் 2016

மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும்  தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர்.

“காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் மாயாண்டி கேட்கிறார்.

“புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? பல வருசமா தீபாவளி விருந்து நிகழ்ச்சிய நடத்தி வரோம். இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது  சந்தோசமா ஆட்டுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். சந்தோசமா ஆடி பாடி மகிழனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் படையல் போட்டு அமர்க்களப்படுத்திடனும் தலைவரே.இதுதான் என்னோட ஆசை” கோவில் செயலாளர் காளி பெரிய எதிர்பார்ப்புடன் கூறுகிறான்.

“பத்தில்ல காளி…. இருபது கிடாக்கள வெட்டி நம்ம கம்பம் மட்டுமல்லாம…சுற்று வட்டாரத்துல இருக்கிற ஏழைபாளைகளுக்கெல்லாம்     பெரிய அளவில பத்தாமாண்டுக் கோவில் திருவிழாவையும் தீபாவளி விருந்தையும் தடபுடலா விருந்து வெச்சு அசத்திடுவோம் அசத்தி…..!” தலைவர் மாயாண்டி  உற்சாகமாகப் பேசுகிறார்.

“இந்த வட்டாரத்தில, இதுவரையிலும் யாரும் நடத்திடாத அளவில மிக விமர்சியா தீபாவளி விருந்தை  நடத்திக் காட்டுவோம் காளி” மீசையை வேகமாக முறுக்கிவிடுகிறார் தலைவர்.

“தலைவரே….உங்கப் புண்ணியத்தாலே வருசா வருசம் கோவில்ல தீபாவளி விருந்துல  சுவையான ஆட்டுக் கறியோட வயிறாரச் சோறு சாப்பிட முடியுது. என் புருசன் இறந்த பிறகு நான் ஒண்டியா…. உழைச்சு சின்னஞ்சிறுசுகளா இருக்கிற என்னோட ஐந்து புள்ளைங்களக் காப்பாற்ற பாடு இருக்கே அந்த முனியாண்டி சாமிக்குத்தான் தெரியும்.நீங்க மவராசனா இருக்கனும் சாமி”

“ஏதோ….என்னால முடிஞ்சதச் செய்யிறேன் தாயி” அந்த அம்மாவை கைகூப்பி வணங்கி  வழியனுப்பி வைக்கிறார் தலைவர்.

“அந்த அம்மா சொன்னதக் கேட்டியா காளி…? நம்ம கம்பத்துலச் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஏழைகள் நிறையவே இருக்கிறாங்கிறதப் புரிஞ்சிக்கிட்டியா ”

“எனக்கும் அதுபற்றி நல்லாவே தெரியும் தலைவரே.நாளைக்கே வசூல ஆரம்பிச்சுடுவோம்”

“கூடிய சீக்கிரத்தில் நாட்டோட பொதுத் தேர்தல் நடக்கப்போறதா தலைவர்கள் சொல்லிக்கிட்டிருக்காங்க. நாட்டுல ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் போச்சின்னா நம்ம கோயிலுக்கு ஆபத்து வந்திடுமோனு கொஞ்சம் பயமா இருக்கு காளி. நம்ம தொகுதி ‘ஓய்பி’ வீரக்குமார் அவர்களக் தீபாவளி விருந்துக்கு அழைச்சுக் கோவில் பிரச்சனையை அவரிடம் எடுத்துச் சொல்வோம். என்ன சொல்ற காளி?”

“தலைவரே….நீங்க சொல்றது நல்ல யோசனை”

“இப்பவே ஒய்பியிடம் பேசுறேன். ஹல்லோ….ஒய்பியோட பிஏ விமலனா பேசறது….?”

“விமலந்தான் பேசுறேன்…..யாரு பேசுறது?”

“கம்போங் மிஸ்கின் கோவில் தலைவர் மாயாண்டி பேசுறேன். ஒய்பி இருக்கிறாரா?”

“பிசியா இருக்கிறார்…என்ன விசியம் மாயாண்டி?”

“கம்பத்து கோவில்ல நடக்கப்போற தீபாவளி விருந்து நிகழ்வுக்கு ஒய்பிக்கு அழைப்பு கொடுக்கனும். நாளை காலை பத்து மணிக்கு ஆபிசுக்கு என் கமிட்டிகளோடு  வர்ரோம். ஒய்யிடம் சொல்லிடுங்க”

“சரி சொல்லிடுறேன் மாயாண்டி”

மாயாண்டியின்  வருகையை விமலன் ஒய்பியிடம்  கூறுகிறார்.

“மாயாண்டியா….!அவன் வந்தானா…. பெரியப் பெரிய பிரச்னைகளைக் கொண்டு வருவானே” ஒய்பி தலையை ஆட்டிக்கொள்கிறார்.

மறுநாள் மாயாண்டி கோவில் கமிட்டிகளை அழைத்துக் கொண்டு   ஒய்பியை நேரில் சந்திக்கிறார்.கோவில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விலாவாரியாக ஒய்பிடம் எடுத்து கூறுகின்றார்.

பிரச்சனைகளைக் கவனமுடன் கேட்ட ஒய்பி சில வினாடிகள் ஆழ்ந்து சிந்திக்கிறார்.கோவில் தனது தொகுதியில் இருப்பதைக் கடந்த இரு தவணைகளாகக் கண்கூடாகக் கண்டு வருகிறார்.

“மாயாண்டி…. கோவில் அமைந்திருக்கிற ‘கம்போங் மிஸ்கின்’  அரசாங்க நிலம்.இன்று இல்லாட்டியும் எதிர்காலத்துல  மேம்பாட்டு திட்டத்திற்காக அந்த நிலத்த அரசாங்கம் எடுத்துக்க வேண்டிவரும்.ஆனா….எத்தனை ஆண்டுகளாகும்னு உறுதியாச் சொல்ல முடியாது….”

“ஒய்பி…அப்படியொரு நிலைமை வந்தா நீங்கதான் எங்களுக்குக் குடியிருக்க வீடுகளும் கோவிலுக்கு மாற்று இடமும் ஏற்பாடு செய்யனும்.இதுல ஏதும் குளறுபடிகள் நடந்தா….எங்க பலத்தைக் காட்டத் தயங்க மாட்டோம்” மாயாண்டி கடுமையாகக் கூறுகிறார். அவருடன் வந்திருந்த மற்ற கோவில் கமிட்டிகளும் தலைவரின் கருத்தை அழுத்தமாக ஆதரித்துப் பேசுகின்றனர்.

“மாயாண்டி….நீங்க எதைப்பத்தியும் கவலைப் படாதிங்க….! இந்தத் தொகுதி ஒய்பி நான் இருக்கேன்.என்னை மீறி எதுவும் நடக்காது. எந்தப் பிரச்சனையானாலும்  எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். ஆனா…வர்ர தேர்தல்ல நான் பெரும்பான்மையில வெற்றி பெற நீங்களெல்லாம் கடுமையா உழைக்கனும்”

“ஒய்பி…எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றைக்கும் குறையாது.இந்தத் தேர்தல்ல நீங்க மெரும்பான்மையில ஜெய்கிறதுக்கு நாங்க உறுதி சொல்றோம்.எங்கள் பிரச்னைக்கு நல்ல தீர்ப்புக் கிடைக்கனும்.அதற்காக உயிரைத் தரவும் தயங்கமாட்டோம்” மாயாண்டி அழுத்தமுடன் பேசுவதை ஒய்பி இதுவரைப் பார்த்ததில்லை.

சிறு தொகையொன்றை மாயாண்டியிடம் கொடுத்து அனைவரையும் வழியனுப்பி வைக்கிறார் ஒய்பி. மாயாண்டி மகிழ்ச்சியுடன்  தம் கமிட்டிகளோடு அங்கிருந்து புறப்படுகிறார்.

“என்னங்க ஒய்பி…அந்தக்கோவில் இருக்கிகிற இடத்துல,வெள்ளப் பிரச்னையத் தடுக்க பெரிய தண்ணீர் தேக்கம் கட்டப்போறதா போன வாரம்தானே ‘எஸ்கோ’ ஒப்புதல் வழங்கியிருக்குனு சொன்னீங்க?”

“நான் சொன்னது உண்மைதான். யார் எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்ன விமலன்? இந்தத் திட்டத்துல நமக்குக் கிடைக்கும் சுயலாபம்தான் முக்கியம். அடுத்த மாசமே அங்கே தண்ணீர் தேக்கத்துக்காகக்  குளம் வெட்டப் போற அரசாங்கத் திட்டத்தைத் தொடங்கப் போறத எந்த கொம்பனாலும்  தடுக்க முடியாது.கோவில் தலைவர் மாயாண்டி போன்ற ரவுடிகள் சொல்லிட்டா போட்டத் திட்டத்த மாற்ற முடியுமா?”

ஒய்பிக்குச் சிறப்பு செய்யும் பொருட்டு எல்லா ஏற்பாடுகளையும் மாயாண்டி முன்னின்று கவனிக்கிறார். அவருக்கு உறுதுணையாகப் பம்பரமாகச் செயல்படுகிறான் காளி.

கோவில் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன.  மாயாண்டி சிறப்புக் கமிட்டிக் கூட்டத்தைத் தனது அறையில் நடத்துகிறார். இரவு ஏழு மணிக்குத் தொடங்கிய கூட்டம் பத்து மணியை நெருங்கிய பின்னரும் விவாதங்கள் சூடாக நடந்து  கொண்டிருக்கின்றன.

“தலைவரே…..வருசா வருசம் தீபாவளி விருந்துல பல கிடாக்களை உயிர்பலியிட்டுத்  திருவிழாவைக் கொண்டாடுவதை விட இந்த வருடம் தொடங்கி சைவ சாப்பாடு  பக்தர்களுக்குப் பரிமாறினால் பக்தர்களிடையே இறை நம்பிக்கை பிறக்குமே. அதோட, இன்றைக்கு எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பொருள் சேவை வரி, நாளுக்கு நாள்  மலை போல் ஏறியிருக்கும் இந்த நேரத்தில நம்ம செலவைக் குறைச்சிகலாமே… எனது இந்தப் பரிந்துரையைப் பரிசீலிக்குமாறு செயலவையைக் கேட்டுக்கொள்கிறேன்” புதிதாகப் பொறுப்புக்கு வந்த கமிட்டி கோட்டையப்பன் கருத்துரைக்கிறார்.

பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கம்  புதிய கமிட்டியாக நியமனம் பெற்ற கோட்டையப்பனால்  சிதறுண்டு போய்விடுமே என்ற திகைப்பால் தலைவர் ஒரு கணம்  ஆடிப்போகிறார்.அருகில் அமர்ந்திருக்கும்  செயலாளர் காளியைப் பார்க்கிறார். செயலாளர் அதர்ச்சியில் உறைந்து போயிருப்பதைக் காணமுடிந்தது. நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே? சுதாரித்துக்கொண்டு தலைவருக்கே உரிய பந்தாவோடுப்  பேசுகிறார்.

“இதுநாள் வரையிலும் கோவில்ல நடைபெறும் தீபாவளி விருந்தில சாமிக்குக்  கிடா வெட்டி, பீர் போத்தல் உடைச்சு வைச்சு சூடம் போடனும். கிடா வெட்டி தடபுடலா மக்களுக்கு விருந்து வைக்கிறதுதான் வழக்கம். புதுசா வந்திருக்கிற கோட்டையப்பன் சைவச் சாப்பாடுப் போடலாமுனு சொல்றாரு. அவர் சொல்றதப் பத்தி மற்ற கமிட்டிகள் என்ன சொல்றீங்க?” தைரியமா உங்க கருத்துகளாச் சொல்லுங்கப்பா என்கிறார் தலைவர்.

“தலைவரே…..கோட்டையப்பன் சொல்றது சரி என்றே எனக்குப்படுது.செலவைக் குறைக்கச்  சைவச் சாப்பாடு போட்டால் பெரும் பகுதிப் பணத்தை மிச்சப்படுத்தலாம். மிச்சப்படும் அந்தப் பணத்தை  இந்தக் கம்பத்துலப் படிக்கிற  ஏழை மாணவர்களுக்குக்  கல்வி நிதி கொடுக்கலாம்” என்கிறார் மற்றொரு புதிய கமிட்டி மருதன்.

“கமிட்டிகளே….நீங்க சொல்ற எல்லா கருத்துகளும் தப்புனு நான் சொல்ல மாட்டேன். வழக்கத்தில இருக்கிறதத் திடீரென மாற்றினா மக்கள் ஏற்றுக்கமாட்டாங்க.இந்த ஆண்டு தீபாவளி விருந்துக்கு ஒய்பி  வர்ராரு. அவரை வரவேற்கப் பெரியக் கூட்டத்தை நாமக் கட்டாயம் கூட்டியாகனும்.நமக்குக் கூட்டம் சேரனும்னா…..கிடா வெட்டிச் சாப்பாடு போட்டு பீர் போத்தல்களத் தாராளமா திறந்தாதான் மக்கள் கூட்டம் சேரும்.நமக்கு இளைஞர்களோடச் சப்போட்டு வேணும். இந்தக் கம்பத்துல அவங்கத்தான் அதிகமா இருக்காங்க!” தலைவர் தெளிவுடன் கூறுகிறார்.

“விருந்துல வயிறாரச் சாப்பிட்டுட்டுச் சந்தோசமா  ‘தண்ணீ’ போட்டுட்டு….மக்கள் ஆடிபாடினாதான் தீபாவளி விருந்து கலைகட்டும். பக்கத்துக் கம்பத்துக்காரங்க நம்பல மதிக்கனுமில்ல” பழைய கமிட்டி உத்தாண்டி உறுதியுடன் தமது கருத்தை முன்வைக்கிறார்.

“முட்டாள் தனமா, தலைவருக்குத் தாளம் போடுற உங்களப் போன்ற கமிட்டிகளால இந்தச் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் விளையப் போறதில்ல….! காலங்காலமா நாம குடிகாரச் சமுதாயமாகத்தான் இருக்கனுமா? இந்த நாட்டுல வாழ்ற மற்ற இனத்து மக்கள் சைவ சமயத்தைச் சேர்ந்த நம்மளப் பற்றி என்ன நினைப்பாங்க?” மருதன் ஆவேசமுடன் கூறுகிறார்.

“வாய மூடு மருதமுத்து….! பத்து வருசமா தலைவரா இருக்கிறரு மாயாண்டி. நேற்று வந்தவன் நீ, அவரையா கேள்வி கேட்கிறா….? அவர எதிர்த்துப் பேசினா ஒழுங்கா நீ வீடு போய்ச்சேர மாட்டே…..!” ஆத்திரமுடன் இருக்கையை விட்டு சடாலென்று எழுந்த உத்தாண்டி, மருதனைத் தாக்கப் பாய்கிறான்.

“கருத்துச் சொல்ல வந்தா…..என்னை அடிக்கவா வர்ரே….!” அங்கு கையில் கிடைத்த தடியால் உத்தாண்டியின் தலை மீது ஓங்கி அடிக்குகிறான் மருதன். “அய்யோ….!” என்ற அலறலோடு தலையைப் பிடித்தபடி தரையில் சாய்கிறான் உத்தாண்டி. அவனது மண்டையிலிருந்து இரத்தம் பீரிடுகிறது.

“மருதன்…. என்னப்பா இது? பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுமேல கையவைக்கிற?….நீ புதுசா வந்த கமிட்டின்னு பார்க்கிறேன்” கூட்டத்தை அவசரமாகக் கலைத்துவிட்டு கீழே சாய்ந்து கிடக்கும் உத்தாண்டியைப் பதற்றமுடன்  தூக்குகிறார் மாயாண்டி. பயத்தால் நடுங்கிப் போன மருதன் அங்கிருந்து விரைந்து வெளியேறுகிறான்.

அவசரகதியில் செய்த எந்த முதலுதவியும்  உத்தாண்டியைச் சுயநினைவுக்குக் கொண்டு வரமுடிய வில்லை. உத்தாண்டியைக் காரில் ஏற்றி உடனடியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார் தலைவர்.

அரை மணி நேரத்திற்குப் பின்னர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட உத்தாண்டியின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற தகவல் மாயாண்டிக்குப் போன உயிர் மீண்டது போல் இருந்தது.தலைவர் பழைய மாயாண்டியாக இருந்திருந்தால் நிலைமையே வேறு.  தலைவர் பதவி அவரை நிதானிக்கச் செய்தது. பெரும் நம்பிக்கைக்குரிய உத்தாண்டி தம் முன்னாலேயே தாக்கப்பட்டதை அவரது உள்ளம் ஏற்றுக்கொள்ளச் சிரமப்பட்டது.

இரவு மணி பத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது. அப்போது கோவில் வளாகத்தினுள் காவல் துறையின் வாகனம் ஒன்று வேகமாக நுழைகிறது.வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து காவல் துறையைச் சேர்ந்த சிலர் அலுவலகத்தை நோக்கி வேகமாக வருகிறார்கள்.

இந்த நேரத்தில் காவல் துறையினர் ஏன் இங்கு வருகிறார்கள்? உத்தாண்டியைப் பற்றி விசியமாக இருக்குமோ? மனக்குழப்பத்துடன்,  காவல் துறையினரை எதிர்கொள்கிறார் தலைவர்.வந்த நோக்கத்தைக் கூறிய காவல் துறையினர்,தலைவர் மாயாண்டியையும் அவரது கமிட்டிகளையும் வாகனத்தில் ஏற்றுகின்றனர். அடுத்த வினாடி வாகனம் அங்கிருந்து  வேகமாகப் புறப்படுகிறது!

சில நாட்களுக்குப் பின்னர், மாயாண்டியின் தலைமையில் கோவில் கூட்டம்  நடைபெறுகிறது. தலையில் அடிபட்ட உத்தாண்டியும்,புதிய கமிட்டி மருத முத்துவும் கூட்டத்தில் அருகருகே அமர்ந்திருக்கின்றனர்.அவர்களின் முகங்களில் இறுக்கம் காணவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு  ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். கூட்டம் அமைதியுடன் நடைபெறுகிறது.

வானவேடிக்கையின் இடி முழக்கத்தோடு  கோவிலில் தீபாவளி விருந்து தொடங்குகிறது. பஞ்சவர்ண ஒளியில் ஆங்காரமாய் வீற்றிருந்த ‘கம்போங் மிஸ்கின்’ கோவில் முனியாண்டிச்சாமிக்குப் படையல் போடப்படுகிறது. பக்திப் பரவசத்துடன் கம்பத்து மக்கள் அவரை வழிபடுகின்றனர்.

இந்த ஆண்டு முதல், மாயாண்டியும் முனியாண்டியும் சைவசாமியாகிவிட்டனர்!

 

முற்றியது

Series Navigationகுட்டி (லிட்டில்) இந்தியாவதந்திகளை பரப்புபவர்கள்!!
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *