தொடுவானம் 141.நான் கொன்ற காதல் …

This entry is part 6 of 15 in the series 23 அக்டோபர் 2016
          அருமைநாதன் தன்னுடைய சோகக் கதையைக் கூறலானான்.
          காவலர்கள் கண்காணிப்பில் அவன் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டான். அவனுடைய கடப்பிதழைப் பயன்படுத்தி மீண்டும் அவனால் சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. காரைக்குடிக்கும் குன்றக்குடிக்கும் நடுவில் உள்ள பாதரக்குடி என்னும் கிராமம் அவனுடைய பூர்வீகம். அங்கு உறவினர்களுடன் தங்கவேண்டிய நிலை உண்டானது. ஒரு வருடத்தில் அவனுடைய அத்தை மகளை திருமணம் செய்து வைத்தனர். அதன்மூலம் அவனுடைய சிங்கப்பூர் திரும்பும் கனவு முற்று பெற்றது. ஒரு மகளும் ஒரு கைக்குழந்தை மகனும் உள்ளனர். பூர்வீக வீட்டில் தங்கிக்கொண்டு அப்பா வாங்கி வைத்திருந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையைத் தொடர எண்ணியுள்ளான். ஆனால் அது வானம் பார்த்த பூமி. ஆற்றுப் பாய்ச்சல் இல்லாத பகுதி. விவசாயம் செய்வது ஏமாற்றத்தையே தந்தது.
          மனைவியையும் பிள்ளைகளையும் காப்பாற்றும் பொறுப்பு. வருடம் ஒரு முறை செய்யும் விவசாயத்தை இனி நம்பி வாழ்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்து காரைக்குடியில் வேலை தேடியுள்ளான் . அங்கு ஒரு லாரி கம்பனியில் கிளீனர் வேலை கிடைத்துள்ளது. அதில் தொடர்ந்து பிரயாணம் செய்யவேண்டி வந்தது. பெங்களூர் வரை சென்று வரவேண்டும். வீட்டுக்கு தினமும் இரவில்கூட வரமுடியாத நிலை. வாரத்தில் ஓரிரண்டு நாட்கள்தான் வரமுடியும். வேலையும் நிரந்தரமில்லை. தினக்கூலியாகவே சம்பளம் தரப்பட்டது. அதுவும் மிகவும் குறைவானது!
          நான் இங்கிருப்பதை ஆனந்தன் மூலம் தெரிந்துகொண்டபின் வேலைக்குச் செல்வதையும் தள்ளிப்போட்டுவிட்டு நேராக வந்துவிட்டான்.
          அவனுடைய கதையைக் கேட்டு நான் கவலை அடைந்தேன். இவன் சிங்கப்பூரிலேயே ஓழுங்காக இருந்திருக்கலாம். படிக்கும் வயதில் படிக்கவில்லை. நான் அப்போது எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இப்போது வாழ வழியின்றி இங்கே கிராமத்தில் உழன்றுகொண்டிருக்கிறான்.என்னோடு சிறு வயதில் ஒன்றாக வளர்ந்தவன் இந்த நிலைக்குள்ளானது எனக்கு வருத்தத்தைத் தந்தது.
          அன்று இரவு என்னுடன்தான் தங்கினான். அவனைக் குளித்துவிட்டு வரச்  சொன்னேன். அவன் அணிந்துகொள்ள என்னுடைய பேண்ட் சட்டைகள் தந்தேன். அவற்றை அணிந்தபின் அவன் எனக்கு பழைய அருமைநாதனாக காட்சி அளித்தான். அணியும் ஆடை எப்படி ஒருவனை மாற்றிக் காட்டுகிறது! இருவரும் உணவுக்கூடம் சென்றோம். இரவு உணவு உண்டோம். என்னுடைய கணக்கில் அவனுக்கான தொகையைச் சேர்த்துக்கொண்டனர். மாத இறுதியில்தான் சாப்பாட்டுக்கான பணத்தைச் செலுத்தவேண்டும்.
 உணவுக்குப்பின் ஆரணி ரோட்டில் நடந்து சென்றோம். அவனுடைய துன்பம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி நிறைய கூறினான்.
          வெகு நேரம் கழித்தே விடுதி திரும்பினோம். அவன் தரையில் படுக்கை விரிப்பைப் போட்டு படுத்துக்கொண்டான்.
          காலையில் என்னுடன் பசியாற வந்தான். அங்கு உணவு பரிமாறும் பையனிடம் அருமைநாதனை அறிமுகம் செய்து வைத்து, என்னுடைய கணக்கில் மதிய உணவும், மலை காப்பியும் தருமாறு கூறினேன் .அறையின் சாவியை அவனிடம் தந்துவிட்டு நான் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன்.அவன் என்னுடன் இருப்பது பிடித்தது. அவன் விரும்பும் வரை  இருக்கட்டும்.  என்னுடன் அறையில் தங்குவதில் பிரச்னை இல்லை. அவனுக்கு உணவு வழங்குவதில் பிரச்னை உள்ளது. மாத முடிவில் உணவுக்க்கான கட்டணம் இரு  மடங்கு அதிகமாகும். அதைக் கட்டுவதில் சிரமம் உண்டாகும். அதே வேளையில் அவன் என்னுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவனை எத்தனை நாட்கள் என்னுடன் வைத்திருப்பது?
          மாலையில் விடுதி திரும்பியபோது அவன் அறையில் .இருந்தான். கையில் ஒரு தமிழ் நாவல் வைத்திருந்தான். நான் அடுக்கி வைத்திருந்த நூல்களில் அதை எடுத்துள்ளான். பரவாயில்லை, பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடுகிறான் என்று நான் நினைத்துக்கொண்டேன்.
          நான் குளித்து முடித்தபின் இருவரும் கீழே சென்றோம். விடுதியின் பின் பக்கமுள்ள விளையாட்டுத் திடலுக்குச் சென்றோம். நாங்கள் சிங்கப்பூரில் ஹெண்டர்சன் மலையில் இருந்தபோது விடியல் காலையில் சேர்ந்து ஓடுவோம். சில நாட்களில் பாசீர் பாஞ்சாங் வரை ஓடிவிட்டுத் திரும்புவோம். நான் வீட்டை விட்டு ஓடி அவனுடன் தங்கியபோது ஃபேரர் பார்க் மைதானத்தில் ஓடியுள்ளோம். அது பற்றியெல்லாம் நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம். இருட்டியபின் விடுதி திரும்பி உணவுக்கூடம் சென்றோம்.
          ” இங்கே வந்தபின் ஊர் செல்ல பிடிக்கலை. ” திடீரென்று கூறினான்.
           ” அது எப்படி? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே. பிள்ளைகள் உன்னை தேடமாட்டார்களா? ” நான் அவனைப் பார்த்து கேட்டேன்.
          ”  வேலூரில ஒரு வேல கெடச்சா நல்லா இருக்கும்.. ” தனது எண்ணத்தை வெளிப்படுத்தினான்.
          ” அப்படி கெடச்சாலும் நீ இங்கே தங்க முடியாதே. இது விடுதி. பிரச்னை வரும். ” உண்மையைச் சொன்னேன். அவன் என்னுடைய அறையில் அதிக நாட்கள் தங்கினால் நிச்சயம் விடுதி வார்டன் எச்சரிப்பார்.
          ” வேல கெடச்சுட்டா வெளியில வாடகைக்கு தங்கிக்கலாம். கடையில சாப்பிட்டுக்கலாம். “
          ” எதுக்கு இவ்வளவு தூரத்தில வேல? பேசாமல் காரைக்குடியிலேயே வேலை தேடலாமே? குடும்பத்தோடு வீட்டில இருக்கலாமே? வாடகை செலவும், சாப்பாடு செலவும் மிச்சமாகுமே? ” நான் திருப்பிக் கேட்டேன்.
          ” அதான் அஞ்சி வருஷமா  ஒண்ணும் சரிப்படல. அங்க அனாத வாழ்க்க. இங்கேயாவது நீ இருக்க. ஒன்ன பாத்த பெறகு அங்க போக மனசு வரல.'”
          ” அப்படி சொல்லாத. என்னைவிட இப்போ அவங்கதான் முக்கியம். நீ அங்க போவதுதான் நல்லது..”
          ” எந்த வேலையாக இருந்தாலும் செய்யறேன். கொஞ்ச நாள் இங்கே ஒன்னோட இருந்தமாதிரியும் இருக்கும் இல்ல? “
          எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னைப் பார்க்க வந்தவன் இப்படிக் கூறுகிறான். நான் அவனை உடனே போ என்றும் சொல்ல முடியாது. அதே வேளையில் அவன் தொடர்ந்து என்னுடைய அறையில் தங்கினாலும் எனக்குப் பிரச்னைதான். சாப்பாட்டுச் செலவும் அதிகமாகும்.அவன் மீது பரிதாபம் உண்டானது. ஆனால் நான் இருந்த நிலையில் எப்படி உதவுவது? நான் அப்பா அனுப்பும் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இவனையும் பராமரித்தால் இரட்டிப்புச் செலவாகுமே!
          ஒரு முடிவில்லாமல் ஒரு வாரம் கழிந்துவிட்டது. பகல் முழுதும் அவன்தான் அறையில் இருப்பான். இரவில் மாலையில் இருவரும் கொஞ்ச தூரம் நடந்து செல்வோம். இரவில் நான் பாடங்களைப் படிக்கும்போது அவன் நாவல் படிப்பான்.பேச்சு கொடுத்து தொந்திரவு செய்யமாட்டான்.
          நாங்கள் மாலையில் ஆரணி ரோட்டில் நடந்து சென்று திரும்பும்போது பாகாயம் பகுதியில் ஓர் உணவகத்தில் அமர்ந்து தேநீர் பருகுவோம். அந்த உணவக உரிமையாளர் எனக்குப்  பழக்கமானவர். அவர் அருமைநாதனைப் பார்த்தபோது அவனைப்பற்றி விசாரித்தார். நான் அவன் என்னுடைய பால்ய நண்பன் என்று கூறினேன். வேலை தேடி வந்துள்ளான் என்று கூறினேன். அவர் அப்போது ஒன்றும் சொல்லவில்லை.
          நாட்கள் சென்றுகொண்டிருந்தன. அருமைநாதன் என் அறையில்தான் தங்கியிருந்தான். அவனுடைய மூன்று வேளை உணவும் விடுதியில்தான்  அவன் செலவுக்கு பணம் தந்தேன்.அந்த மாதச் செலவு நிச்சயம் அதிகமாகும்.அவனுக்கு வேலையும் கிடைக்கவில்லை.
          அந்த மாத இறுதியில் விடுதியின் உணவு செலவு இரட்டிப்பானது. அதைக் கட்டியதால் பணம் பற்றாக்குறையானது. அப்பாவிடம் பணம் கேட்டபோது அவர் கணக்கு கேட்டார். என்னால் சரியான பதில் தர இயலவில்லை.
          ஒரு நாள் மாலை அருமைநாதன் உற்சாகமாகக் காணப்பட்டான். தனக்கு வேலை கிடைத்துவிட்டதாகக் கூறினான். அந்த உணவகத்தில்தான் வேலை. அவனே அவரிடம் வேலை  கேட்டுள்ளான். . அவரும் மூன்று வேளைச் சாப்பாடும் சம்பளமும் தருவதாகக் கூறியுள்ளார்.  மனைவிக்குக் கடிதம் எழுதிவிட்டானாம். இனி அந்தப் பக்கம் பாகாயத்தில் ஒரு அறை வாடகைக்குக் கிடைத்தால் அங்கு தங்கிக்கொள்ளலாம் என்றான். எனக்கு அது பரவாயில்லை என்று தோன்றியது.
          என்னுடைய நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு மிடுக்காக காலையிலேயே உணவகம் சென்றுவிடுவான். அங்கு கணக்குகள் எழுதும் வேலை  அவனுக்கு. இரவில் பத்து மணிக்குமேல்தான் திரும்புவான். அப்போதுதான் உணவகம் மூடுவார்களாம்.
          நான் இரவில் பனிரெண்டு மணி வரை பாடங்களைப் படிப்பது வழக்கம். அவனும் என்னுடைய தமிழ் நூல்களை எடுத்துப் படித்துக்கொண்டிருப்பான். முன்பெல்லாம் நாவல்களைப் படித்தவன் இப்போது கவிதைகள் படிக்கலானான். அவற்றில் சில கவிதைகளை ஒரு தாளில் எழுதிக்கொண்டிருந்தான். அவற்றைப் பார்த்தபோது அவை அனைத்தும் காதல் கவிதைகள். அவனைக் கவர்ந்த காதல் கவிதைகள் என்று நான் எண்ணிக்கொண்டேன்.
          சில நாட்களில் நீண்ட நேரம் எதையோ எழுதிக்கொண்டிருப்பான். நான் கதை எழுதுகிறான் என்று நினைத்தேன். எழுதியதை பத்திரப்படுத்திவிட்டு உறங்குவான். அப்படி என்னதான் கதை எழுதுகிறான் என்று அதைப் படிக்க ஆவல் கொண்டேன். அதை நான் தேடிப்பார்த்து படித்தேன். அது காதல் கடிதம்! மாலா என்ற பெண்ணுக்கு எழுதப்பட்ட காதல் கடிதம்!
          எனக்கு அவன் மீது சந்தேகம் உண்டானது. பிழைக்க வந்த இடத்தில் காதலா? மனைவியும் பிள்ளைகளும் அங்கிருக்க இங்கே இவனுக்குக் காதலா?  யார் அந்த மாலா என்பதை அறிய ஆவல் கொண்டேன்.
          ஒரு நாள் மாலையில் அந்த உணவகம் சென்றேன். அங்கு மேசை அருகில் அவன் அமர்ந்திருந்தான். அவன் அருகில் உணவக உரிமையாளரின் மனைவி குனிந்த நிலையில் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருந்தாள். அவள் இளம் வயதுடையவள். அழகானவள். கடையில் அப்போது வேறு யாரும் இல்லை.
         அவள்தான் அந்த மாலாவோ?
          என்னைக் கண்டதும் இருவருமே பரபரப்பானார்கள். அவள் உள்ளே சென்று எனக்கு தேநீர் கொண்டுவந்தாள். நான் புன்னகைத்தவாறு,
          ” உங்கள் பெயர் என்ன? ” என்று கேட்டேன்.
          அவள் நாணியபடி , ” மாலா ” என்றாள்.
          எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவனை நோக்கினேன்.
          ” கணக்கு பார்த்துக்கொண்டிருந்தோம். ” அவன் தடுமாறினான்.
          ” முதலாளி எங்கே “,  அவனிடம் .கேட்டேன்.
          அவர் மளிகை வாங்க வேலூர் சென்றுள்ளார் என்றான்.
          நான் தேநீர் அருந்திவிட்டு விடுதி திரும்பினேன்.
          அன்று இரவே அவனுடைய மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவனுடைய மகனுக்கு ஆபத்து என்று ஒரு தந்தி அனுப்புமாறு எழுதினேன்.
          மூன்று நாட்களில் தந்தி வந்தது. அதைக் கண்டதும் அவன் பதறிப்போனான். உடன் ஊருக்குப் புறப்பட்டான். நான் செலவுக்குப் பணம் தந்தேன். மகனைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாகக் கூறி விடை பெற்றான்.
          அதனபின்பு அவனுடைய தொடர்பு இல்லாமல் போனது!

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்வெளிச்சளிச்சம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *