நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

This entry is part 12 of 15 in the series 23 அக்டோபர் 2016

img_20161023_181921854

பிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய சிற்றிதழ் சிறிய தடைகளுக்குப் பின் ‘நவீன விருட்சம்’ இதழாய்த் தொடர்ந்து இன்று (23.10.2016)அதன் நூறாவது இதழ் 250 பக்கங்களுக்கும் மேலான பெரிய இதழாக வெளியிடப்பட்டது. மேற்கு மாம்பலத்தில் ஒரு சிறிய அரங்கில் நண்பர்களும் எழுத்தாளர்களும் பங்கேற்ற இனிமையான மாலை விழா அது.

அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், திலகவதி, சா.கந்தசாமி, வைத்தீஸ்வரன் ஆகியோர் பங்கேற்ற விழாவில் கிருபானந்தன்  எல்லோரையும் வரவேற்று சிறப்பாக நடத்தினார்.

ஞானக்கூத்தனின் பங்களிப்பை தமது உரையில் அசோகமித்திரன் நினைவு கூர்ந்தார். தமிழவனைப் பற்றிக் குறிப்பிட்டு பேராசிரியர்களில் வெகு சிலரே படைப்பிலக்கியத்துக்கு வந்தார்கள். அது நல்லதே என்ற அங்கதத்துடன் ஞானக்கூத்தனின் குறுந்தாடி பராமரிக்க சிரமமானது என்றார். சிறு பத்திரிக்கை நடத்த அழகிய சிங்கருக்கு ஓரளவு பொருளாதார பலமிருந்தது என்றவர் சி.சு.செல்லப்பாவின் போராட்டமான ‘எழுத்து’ இதழ்க் காலத்தை நினைவு கூர்ந்தார். சா.கந்தசாமி, எஸ்.ராமகிருஷ்ணன் இருவருமே அரிய படைப்புக்களைத் தாங்கி வந்தது ‘நவீன விருட்சம்’ என்பதைக் குறிப்பிட்டார்கள். கவிதைகளுக்கு இடம் தந்த இதழ் சிறுகதைகள் குறைவாகவே தந்தது என்ற ராமகிருஷ்ணன், பிரமிள்-வெங்கட் சாமிநாதன் என்னும் இரு துருவங்கள் ஒரே இதழில் எழுதிய இலக்கியஸ் சூழலை ‘நவீன விருட்சம்’ தந்ததைப் பாராட்டினார். அழகிய சிங்கர் தமது துவக்க உரையில் குறிப்பிட்டதை திலகவதியும் ‘சிற்றிதழுக்குப் படைப்புக்களைப் பெறுவதும் சர்ச்சையின்றி நடத்துவதும் பெரிய சவால்’ என ஆமோதித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது ஒரு இலக்கியக் கூட்டத்துக்குப் பெரிய வெற்றிதான். அழகிய சிங்கரின் பேத்தி கர்நாடக சங்கீதத்தில் ‘மகாகணபதிம்’ என்னும் பாடலைப் பாடி கூட்டத்தைத் துவங்கி வைத்தார்.

எனது ஆரம்பக் காலத்தில் ஒரு கவிதை சுமார் 12 வருடங்களுக்கு முன் ‘நவீன விருட்சத்’தில் வெளி வந்தது. பல காரணங்களால் அச்சில் வரும் சிற்றிதழ்களுடன் எனக்குத் தொடர்பற்றுப் போனது. இணையத்தில் எழுதுவது குறித்த மனத்தடைகளைத் தமிழ்ச்சூழல் கடக்காத இந்த காலகட்டத்தில் நான் இணையத்தில் எழுதுவதைத் தொடர்ந்தேன். இந்த வருடத்துவக்கமே எனக்கு நவீன விருட்சத்துடன் அமைந்தது. அழகிய சிங்கர், பனுவல் புத்தகக் கடை அரங்கில் ‘சொல்வனம்’ இணைய ரவிசங்கருடன் இணைந்து நடத்திய இலக்கிய அமர்வில்  அசோகமித்திரன், ஜெயந்தி சங்கர் ஆகியோருடன் நானும் பங்கேற்றேன். நூறாவது இதழிலும் பங்களிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

அழகிய சிங்கரிடம் இன்று சுருக்கமாக ‘தொடர்ந்து சிற்றிதழ் நடத்துவது பெரிய சவால். மிகப் பெரிய சாதனை’ என்று குறிப்பிட்டேன். நூறாவது இதழில் 58 படைப்பாளிகளின் படைப்புக்களை ஆறுமாத காலத்தும் மேலாகத் தொடர்பு கொண்டு வெளியிட்டிருப்பது அழகிய சிங்கரின் அர்ப்பணிப்பை, அயரா உழைப்பை, இலக்கிய உலகில் அவரது மகத்தான பங்களிப்பை எடுத்துக் காட்டுவது.  அந்தப் படைப்பாளிகள்- படைப்புக்களின் பட்டியல் இது:

  1. பெருந்தேவி கவிதைகள்
    2. கா ந கல்யாணசுந்தரம் – என் கிராமத்து சுமைதாங்கி கல்
    3. வேல் கண்ணன் கவிதைகள்
    4. மறதியின் பயன்கள் – ஞானக்கூத்தன்
    5.தூரம் சிறுகதை ஜெயந்தி சங்கர்
    6. பொன் தனசேகரன் கவிதைகள்
    7. நடப்பியல் – நீல பத்மநாபன்
    8. அம்ஷன் குமார் கட்டுரை
    9. அகலிகைப் படலம் – போயோன்
    10. தமிழவன் சிறுகதைத் தொகுதியைப் பற்றி விமர்சனம்
    11. லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
    12. ரோஸ் ஆன்றா கவிதைகள்
    13. தமிழவன் சிறுகதை – காந்தி லிபி
    14. ராமலக்ஷ்மி கவிதைகள்
    15. எஸ் சுதந்திரவல்லி கவிதைகள்
    16. தொடாத பூ – ந பெரியசாமி
    17. சௌந்திரத்தின் ரோஜாப் பூ – ஸிந்துஜா
    18. பிரபு மயிலாடுதுறை கவிதைகள்
    19. காந்தி வாழ்க்கை – கட்டுரை – பிரபு மயிலாடுதுறை
    20. அழகியசிங்கர் கவிதைகள்
    21. ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு – கவிதை
    22. சாந்தி மாரியப்பன் கவிதை
    23. வைதீஸ்வரனும் நானும் – அசோகமித்திரன்
    24. வைக்கோல் கிராமம் – இலா முருகன்
    25.தற்காலிகம் கவிதை சத்யானந்தன்
    26. டபுள் டக்கர் – அழகியசிங்கர்
    27. வரைதலும் பேசுதலும் – அ மலைச்சாமி
    28. ரசிகன் – ந கிருஷ்ணமூர்த்தி
    29. பிரதாப ருத்ரன் கவிதைகள்
    29. பேயோன் கவிதைகள்
    30. எஸ் வி வேணுகோபாலன் கட்டுரை
    31. எனக்கு படம் வரைய வராது – புலியூர் அனந்து
    32. வே நி சூர்யா – கடிகாரம் சொன்ன கதை
    33. எங்கே அவன் ? – வைதீஸ்வரன் கவிதை
    34. காத்திருக்கும் சூரியன் – தெலுங்கு கதை தமிழில்
    35. கடற்கரைக் காற்று பலமாக வீசுகிறது – ஷாஅ
    36. சிறகா கவிதைகள்
    37. புதிய கானம் – ஆனந்த்
    38. முதுவேனில் – எஸ் சங்கரநாராயணன்
    39. ஒரு தவறு செய்தால் – சுந்தரராஜன்
    40. இயங்கியல் – ச.விஷ்ணுதாசன்
    41. ஐ சி யூ – அதுல் பிஸ்வாஸ்
    42. ஸ்ரீதர் – சாமா கட்டுரை
    43. நெருப்புப் பூச்சி – பானுமதி ந
    44. நெனப்பு – கலைச்செல்வி
    45. பிலிம் நியூஸ் ஆனந்தன் – அம்ஷன் குமார்
    46. புகை – பானுமதி ந
    47. அந்த போட்டோவில் – ஜெ ரகுநாதன்
    48. ஜெமினி அருகில் இழந்த சொர்க்கம் – மாதவபூவராக
    மூர்த்தி
    49.நந்தாகுமாரன் கவிதைகள்
    50. லாவண்யா சுந்தராஜன் கவிதைகள் குறித்து ஆனந்த் கட்டுரை
    51. மரணத்தின் கண்ணாடி – 3 – க்ருஷாங்கினி
    52. ஆர் ராஜகோபாலன் கவிதைகள்
    53. அபராஜிதா கவிதைகள்
    54. லாவண்யா கவிதைகள்
    55. அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்
    56. புதுமைப்பித்தனின் காஞ்சனை – பெருந்தேவி
    57.இலவசம்தானே – ஜெ பாஸ்கரன்
    58. ஜான்னவி கவிதைகள்

இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்த முப்பது ஆண்டுகளில் அவர் செய்துள்ளது என்றும் இலக்கிய உலகால் அர்ப்பணிப்புக்காக நினைவு கூறப்படும். மேலும் அவர் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

 

Series Navigationவெண்சிறகுகள் …….கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்.
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *