பாவண்ணன்
மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக கவனத்தைப் பெற்ற கமலாதாஸ் தன் நாற்பதுகளையொட்டிய வயதில் தன்னுடைய தன்வரலாற்றை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுபதுகளில் வெளிவந்து அவருடைய புகழ்வெளிச்சத்தை மேலும் அதிகமாக்கியது. ஏறத்தாழ நாற்பதாண்டுகள் கழித்து நிர்மால்யாவின் மொழியாக்கத்தில் அந்த நூல் தமிழ்வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது. சொந்த அனுபவம் சார்ந்து கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கும் முன்னுரை இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நிர்மால்யாவின் மொழியாக்கம் சிறப்பாக உள்ளது.
சிறுகச்சிறுக தன்னை ஓர் ஆளுமையாக வளர்த்துக்கொள்ளவும் நிறுவிக்கொள்ளவும் கமலாதாஸ் கடந்த பாதைகளும் பயணங்களும் வலிகளும் வேதனைகளும் இல்வாழ்க்கையில் அவர் கடந்துவந்த உறவுச்சிக்கல்களும் இப்புத்தகத்தில் பல்வேறு அத்தியாயங்களில் அடங்கியிருக்கின்றன. இன்றைய வாசிப்பில் அவை சற்றே நிறம் மங்கியவைபோலத் தோற்றம் தரக்கூடும். ஆனால் இவை அனைத்தும் அரைநூற்றாண்டுக்கும் முன்பாக நடைபெற்றவை என்பதை கருத்தில் கொண்டால் மட்டுமே, இந்தத் தன்வரலாற்று நூலில் நிகழும் உணர்ச்சிமோதல்களையும் சம்பவங்களையும் ஒரு வாசகன் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
‘ஒரு குருவியின் அவலம்’ என்ற தலைப்பில் உள்ள முதல் அத்தியாயம் கமலாதாஸின் மருத்துவமனை வாசத்திலிருந்து தொடங்குகிறது. ஐம்பதுகளின் இறுதியை ஒட்டிய வயதில் கல்லீரலும் நுரையீரலும் பாதிக்கப்பட்டு ஒருமுறையும் இதயமும் கருப்பையும் பாதிக்கப்பட்டு இன்னொருமுறையுமென இரண்டு முறைகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் தங்க நேர்ந்த சூழல்களே ஒருவேளை கமலாதாஸ் அவர்களுக்கு இந்தத் தன்வரலாற்றை எழுதுவதற்கான தூண்டுதலை வழங்கியிருக்கக்கூடும்.
ஏறத்தாழ நூற்றியைம்பது பக்கங்கள் உள்ள இந்த நூலில் தன் சொந்த வாழ்க்கை சார்ந்து பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களுக்கு நிகராக வாழ்நாள் முழுக்க பார்த்துப்பழகிய சிலரைப்பற்றியும் அவ்வப்போது சந்தித்து மறைந்துபோன சிலரைப்பற்றியும் கமலாதாஸ் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய தன்வரலாற்றில் கோட்டோவியங்கள்போல விழுந்திருக்கும் அம்முகங்கள் மறக்கமுடியாதவையாக உள்ளன. உதிர்ந்துபோன மலர்களாக இந்தத் தன்வரலாற்றுநூலில் அவை காணப்படுகின்றன. ஒரு புனைகதையின் பாத்திரங்கள்போல வாழ்ந்திருக்கும் அவர்களை ஒரு வாசகனால் ஒருபோதும் மறக்கமுடியாது. இருபத்தேழு அத்தியாயங்களாக நீளும் இந்தத் தொகுதியில் அத்தியாயத்தின் மையத்துடன் இணைந்தும் இணையாமலும் கவித்துவத்துடன் எழுதியுள்ள பல வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தக்க சித்தரிப்புகளுடன் உள்ளன. கமலாதாஸின் தனிப்பட்ட வாழ்க்கையைவிட, இந்த வாசிப்பு அனுபவங்களே இந்தப் படைப்பை முக்கியமானதாக்குகிறது.
புத்தகத்தின் முன்னுரைப்பகுதியில் போகிற போக்கில் ஒரு இளைஞனைப்பற்றிய குறிப்பைக் கொடுத்திருக்கிறார் கமலாதாஸ். புகைப்படம் எடுக்கும் இளைஞன் அவன். திருமணம் நிச்சயித்திருக்கும் பதினைந்து வயதான பெண்ணை வெளியே அழைத்துச் சென்று பல கோணங்களில் நிற்கவைத்து அவன் படமெடுக்கிறான். அப்பெண்ணின் அழகை மனமாரப் பாராட்டுகிறான். அவளுக்குத் திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணத்திலும் அவன்தான் படமெடுக்கிறான். திருமணத்தையொட்டி திடலில் ஒரு கதகளி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நிகழ்ச்சிக்கு அந்த மணப்பெண்ணை வரும்படியும் அப்போது நிறைய படங்களை எடுக்கலாம் என்றும் சொல்லி வைத்திருக்கிறான் அந்த இளைஞன். இரவு கவிந்ததும் குறிப்பிட்ட நேரத்தில் திடலில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேளச்சத்தம் கேட்கிறது. ஆனால் அவளால் செல்ல முடியவில்லை. எதிர்பாராத விதமாக அவளுக்குத் தெரியாமலேயே அவளுடைய முதலிரவு நிகழ்ச்சி அன்று குறிக்கப்பட்டிருக்கிறது. அவள் முதலிரவு அனுபவம் ஏமாற்றத்தில் முடிவடைகிறது. காதில் விழும் கதகளி மேளச்சத்தத்தில் ஆழந்தபடி அந்த இரவை அவள் கழிக்கிறாள். அதிகாலையில் அனைவரிடமும் விடைபெற்றுச் செல்வதற்காக வாசலில் வந்து நிற்கும் அந்த இளைஞனைப் பார்க்கிறாள். அவன் அக்கணமே அங்கிருந்து புறப்பட்டுவிடுகிறான். ஒரு சிறுகதைக்குரிய திருப்பத்துடன் எழுதப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி வாசிக்கும்போதே மனத்தில் பதிந்துவிடுகிறது.
இன்னொரு சித்திரம். ஒருமுறை கமலாதாஸின் சித்தி குருவாயூருக்குச் சென்று இறைவனை வழிபட்டு முடித்த பிறகு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார். அங்கே நடைக்கல்மீது நின்றிருந்த ஒரு பிச்சைக்காரக்கிழவி அவளை நோக்கிக் கைநீட்டிக் கெஞ்சுகிறாள். அவள் முகத்தை உற்றுப் பார்த்த சித்தி அவளை அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறாள். “நீங்க உண்ணி மாயம்மாதானே? ஏன் இந்தக் கோலம்?” என்று கேட்கிறாள். அந்தக் கிழவி ஓவென்று அழுகிறாள். நாலப்பாட்டுக்குடும்பத்துடன் தொடர்புவைத்திருந்த வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி அவள். அவளுடைய இரண்டாவது மகள் தாழ்ந்த சாதிக்காரன் ஒருவனுடன் ஊரைவிட்டு வெளியேறியபோது, வாழ வேறு வழியில்லாத மாயம்மாவும் அவர்களோடு சென்றுவிட்டாள். பின்னர் வறுமையின் கொடுமையால் அவர்களால் கைவிடப்பட்டு கோவில் வாசலில் பிச்சையெடுத்துப் பிழைக்க வந்துவிட்டாள். சித்தி அவள்மீது இரக்கம் கொண்டு தன்னோடு வீட்டுக்கே அழைத்து வந்துவிடுகிறார். வீட்டில் ஒரு இடம் ஒதுக்கித் தந்து அவளுடைய இறுதிக்காலம் வரைக்கும் வைத்திருந்து காப்பாற்றுகிறார்.
மற்றொரு காட்சி. நிறம் மங்கிய மல்மல் வேட்டியும் ரவிக்கையும் அணிந்து தன் வாழ்க்கையைக் கழித்தவர் கமலாதாஸின் பாட்டி. முப்பத்தாறு வயதில் விதவையானவர் அவர். நல்ல உடலழகும் சரும மினுமினுப்பும் கொண்டவர். ஒருநாள் அவர் குளிப்ப்தற்காக குளத்தில் இறங்கியபோது, அவர்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து தங்கியிருந்த வழக்கறிஞர் ஒருவர் குளப்புரையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துவிடுகிறார். கேரளம் முழுதும் நன்கு அறியப்பட்ட பெண்பித்தர் அவர். படிக்கட்டுகளில் இறங்கி தன்னை நோக்கி நெருங்கி வரும் அந்த மனிதனைக் கண்ட பாட்டி அஞ்சி நடுங்குகிறாள். பிறகு ஈரத்துண்டைச் சுற்றியபடி அங்கிருந்து ஓட்டமெடுக்கிறாள். அந்த அச்சமும் நடுக்கமும் சாகும் வரைக்கும் அவரைத் தொடர்ந்தபடி இருக்கின்றன. தனிமையில் இருக்கும்போதெல்லாம் அச்சம்பவம் அக்கணத்தில்தான் நிகழ்ந்தது என்பதுபோல தன்னிச்சையாக விவரிக்கத் தொடங்குகிறாள். அந்த அதிர்ச்சியிலிருந்து அவளால் ஒருபோதும் மீளமுடியவே இல்லை.
அந்தப் பாட்டிதான் கமலாதாஸின் குழந்தையை பிறந்ததில் இருந்து தன் பக்கத்திலேயே படுக்கவைத்து, கண்ணும் கருத்துமாகக் கவனித்து வளர்த்துக்கொடுத்தவள். ஒருமுறை பம்பாயிலிருந்து கிராமத்துக்கு வந்தபோது அந்தப் பாட்டி கமலாதாஸைச் சந்தித்து தன்னுடைய வீட்டிற்கு வந்து ஓரிரவு முழுதும் தங்கி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறாள். அது ஒரு சின்ன ஆசைதான். நிறைவேற்றிவைக்கக் கூடிய விழைவுதான் என்பதால் கமலாதாஸும் அத்திட்டத்துக்கு ஒத்துக்கொள்கிறார். ஆனால் அது கார்த்திகை மாதம். மழைக்கான எச்சரிக்கையை விடுத்தபடி அவ்வப்போது காற்று சீறிக்கொண்டிருந்தது. இரவு வேளையில் சாப்பிட்டுவிட்டு தன் வீட்டிலிருந்து பாட்டி வீட்டுக்குப் புறப்பட்டபோது அவருடைய தந்தையார் அவரைத் தடுத்துவிடுகிறார். சிதிலமடைந்துபோன அந்த வீட்டில் மகள் உறங்கச் செல்வதை அவர் விரும்பவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் அந்தப் புதிய வீட்டிலேயே படுத்துவிடுகிறார் கமலாதாஸ். நீண்ட மனப்போராட்டத்தில் எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிவிடுகிறார். நள்ளிரவில் விழிப்பு வந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது பாட்டியின் வீட்டில் விளக்கு எரிந்தபடியே இருப்பதையும் பாட்டி சுவரோடு சரிந்து உட்கார்ந்திருப்பதையும் பார்க்க நேர்கிறது. துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார் அவர். அங்கிருந்து கிளம்புவரைக்கும் அந்தப் பாட்டியின் விருப்பத்தை அவரால் ஈடேற்றமுடியவில்லை. ஊரைவிட்டு புறப்படும்போது அவரிடம் விடைபெறச் செல்லும்போது பாட்டி கண்கலங்குகிறாள். “விஷுவுக்கு வரணும் தெரிஞ்சதா?” என்று சொல்லி விடைகொடுக்கிறாள். ஆனால் துரதிருஷ்டவசமாக விஷுவுக்கு இரு வாரங்கள் முன்பாக அவர் உயிர் பிரிந்துவிடுகிறது.
இன்னொரு நிகழ்ச்சி. கமலாதாஸின் குடும்பநண்பர் தேஷ்முக் பல்கலைக்கழகத் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர். ஒருநாள் அங்கே சென்றபோது திடீரென ஒரு மரம் அங்கே பூத்துக் குலுங்குவதைக் காண்கிறார். ஒவ்வொரு கிளையிலும் பெரிய பூங்கொத்துகள். ஒவ்வொரு பூங்கொத்திலும் ரீங்கரிக்கும் வண்டுகள். வண்ணமயமான கோவில் திருவிழாவைப்போல அது காட்சியளிக்கிறது. மறுநாள் காலையில் அந்த அழகான காட்சியைக் காட்டுவதற்காக இரு நண்பர்களையும் அந்தத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். எங்கும் அமைதி. ஒரு பூ கூட இல்லை. எல்லாம் உதிர்ந்துபோயிருக்கின்றன. வெறும் மரம் மட்டுமே அங்கே காட்சியளிக்கிறது.
இப்படி ஒரு புனைகதைக்குரிய திருப்பங்களுடனும் ஆச்சரியங்களுடன் சில நிகழ்ச்சிகள் இத்தொகுப்பில் உள்ளன.
கமலாதாஸின் விவரணை மொழி ஆழ்ந்த வாசிப்புக்குத் துணைபுரிவதாகவே இருக்கிறது. அவர் வழங்கும் குறிப்புகளும் தீட்டும் சம்பவங்களும் வாசகர்களைக் கட்டிப் போடும் விதத்தில் உள்ளன. ஒருசில தருணங்களில் அவருடைய சித்தரிப்புமொழி கவித்துவச்சாயலுடன் அமைந்திருக்கின்றன. அவை இடம்பெறும் பத்தியிலிருந்து அப்பகுதியை தனியே எடுத்துப் படித்தாலும் கூட தனித்த கவிதைகளாக விளங்கக்கூடிய அளவுக்கு கச்சிதமாக உள்ளன அப்பகுதிகள். அத்தகு பகுதிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
’ஒரு காலத்தில் வரவேற்புகள் நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு பெரிய கட்டடத்தைப் போன்றிருந்தது என் உடல். நடனக்கலைஞர்கள் நடனமாடினார்கள். இசைக்கலைஞர்கள் இசை பாடினார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் நலவிவரங்களை உசாவினார்கள். இறுதியில் கட்டடம் இடிந்தபோது சேரிவாசிகள் தங்களுடைய மூட்டைமுடிச்சுகளுடன் வந்து குடியேறினார்கள்.ஒவ்வொரு காலடியைப் பதிக்கும்போதும் அவர்கள் மன்னிப்பு கோரினர்.’
‘நிலவு வானத்தில் விரைவாக நகர்ந்துகொண்டிருந்தது. தெருவோரக் குப்பைத்தொட்டியில் இரண்டு தெருநாய்கள் உணவைத் தேடிக்கொண்டிருந்தன. அம்பேத்கர் சாலை ஆரம்பமாகும் இடத்தில் பேருந்து ஓட்டுநர்கள் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் நின்றவாறு அங்குமிங்குமாகத் திரும்பி நடனமாடும் ஒரு பைத்தியக்காரன். நான் நான்கடி பின்வாங்கினேன். அந்தப் பைத்தியக்காரனின் தாளத்தைச் சட்டென்று என் கால்கள் வரவேற்றன. நான் என் கூந்தலை அவிழ்த்தேன். உலகில் தனிமை சூழ்ந்த வெண்மாடத்தின்மீது நடனமாடுவதாக எனக்குத் தோன்றியது. கடைசி மனிதனின் உன்மத்த நடனம்.’
’எனக்கு பூனையைப்போல ஒன்பது பிறவிகள் இருந்தன. நெருப்பில் விழுந்து சாம்பலான பிறகும் மீண்டும் உயிர்ப்புடனும் அழகுடனும் வெளிப்படும் ஃபீனிக்ஸ் என்னும் இதிகாசப் பறவையைப்போல மீண்டும் மீண்டும் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிறேன். வாழ்க்கையின் போதையில் மீண்டும் உன்மத்தமாகிறேன். இறைவனின் பெயர்களை உச்சரிக்கும் உதடுகளில் இளம் சிவப்பு வண்ணத்தைத் தீட்டுகிறேன். அவை வார்த்தைகளைத் தேடியெடூக்க இயலாமல் நிலவு வீசும் இரவுகளில் காதல் பாடல்கள் இசைக்கின்றன.’
வாழ்க்கை குறித்த கமலாதாஸுடைய கண்ணோட்டங்களும் கருத்துகளும் கலவையானவை. மாறுபட்ட உச்சங்களிடையே ஊசலாடியபடி உள்ளன. ஒரு தருணத்தில் கட்டற்ற சுதந்திரத்தை விரும்பும் அவர் மனம் மற்றொரு தருணத்தில் பாதுகாப்பானதொரு அரவணைப்பை விரும்பும் பறவைக்குஞ்சாகவும் இருக்க விழைவதை இந்தத் தன்வரலாற்றின் மூலம் உணரமுடிகிறது. ஒரே தருணத்தில் பறவையாகவும் குஞ்சாகவும் இருக்க விழையும் மனத்தின் விசித்திரம் ஒரு கவிதையைப்போலவே புதிர் நிறைந்தது.
(என் கதை. கமலாதாஸ். தன்வரலாறு. தமிழாக்கம்: நிர்மால்யா. காலச்சுவடு பதிப்பகம், 669. கே.பி.சாலை, நாகர்கோவில்.)
- பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்
- அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்
- பறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’
- நித்ய சைதன்யா கவிதைகள்
- தொடுவானம் 149. கோர விபத்து
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 13
- ‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா
- திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்
- 100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ?
- நல்லார் ஒருவர் உளரேல்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -4, 5, 6
- மார்கழியும் அம்மாவும்!
- ஊசலாடும் இலைகள்…