எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

author
0 minutes, 46 seconds Read
This entry is part 1 of 6 in the series 23 டிசம்பர் 2018

 

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 22வது (2017) ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன.

1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது. 2017 ஆண்டின் விருதுக்குரியவர்களாக எழுத்தாளர் பா. வெங்கடேசன் (புனைவெழுத்து), பேராசிரியர். ஆ. இரா. வேங்கடாசலபதி (புனைவற்ற எழுத்து) ஆகிய இருவரையும் நாடக ஆசிரியர் ‘வெளி’ ரங்கராஜன், கவிஞர் பெருந்தேவி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். விழாவைப் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

பா.வெங்கடேசன்

புதினம், கவிதை, சிறுகதை, குறுநாவல் எனப் படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் தேர்ந்த, அழகுணர்வோடான ஆக்கங்கள் மூலம் கவனம் பெற்ற முதன்மையான படைப்பாளி பா. வெங்கடேசன். “மொழிக்குள் இயல்பாகவே இருக்கும் இசைமையை உணரும்வண்ணம் வார்த்தைகளின் லயத்தைப் பின்பற்றியே என் கதைமொழி உருவாகிறது,” என்று கூறும் வெங்கடேசன் 1962ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். தற்போது ஹோசூரில் வசிக்கிறார்.

வெங்கடேசனின் புனைவுகள் கனவின் வண்ணத்தையும் கவித்துவத்தையும் சேர்த்துக் குழைத்த மொழியிலிருந்து உருவாகுபவை. அவரது புனைவெழுத்தில் வரலாற்றின் யதார்த்தக் கண்ணிகள், தனித்துவக் கற்பனையோடு இயல்பாக இயைந்து, மாயயதார்த்தப் பரப்புகளில் விரிவாக்கம் பெறுவதைக் கண்டுணரலாம். தமிழ்ச் சூழலிலிருந்து அந்நியப்படாமல் அதில் பொருந்தும் வகையிலான மாய யதார்த்த வகை மீபுனைவாக்க முயற்சிகளுக்கு முன்மாதிரியாகவும் ஊக்கம் தருபவையாகவும் அவர் படைப்புகள் அமைந்துள்ளன.

வெங்கடேசனின் புதினங்கள் நேர்க்கோட்டுத் தன்மையிலிருந்து விலகிய கதைசொல்லும் முறை, சீரிய பரிசோதனை முயற்சிகளோடு கூடிய மொழிநடை போன்றவற்றால் தமிழிலக்கியப் பரப்பில் வடிவரீதியான பல்வேறு புதிய சாத்தியங்களைக் காட்டித் தந்திருக்கின்றன. நவீன தமிழிலக்கியப் பரப்பில் பாரதியின் படைப்புகளுக்குப் பிறகான “படைப்பின் பெருவெடிப்பு” என்றும், காப்ரியல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ புதினத்துக்கு நிகரானது என்றும் இளம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘தாண்டவராயன் கதை’யை எழுதியவர் அவர். அவருடைய ‘பாகீரதியின் மதியம்’ நாவல், இலக்கியத்துக்கும் ஓவியக் கலைக்கும் இடையிலான உரையாடல்வெளியில், பெண்ணை மையப்படுத்தி, வாழ்வின் அக, புறப் பரிமாணங்களை நவீன மொழியில் வரைந்து காட்டுவதாக இருக்கிறது.

உரைநடையோடு, கவிதையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார்.
சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், திரைப்படம் குறித்த கட்டுரை விமர்சனத் தொகுப்பொன்றையும் படைத்திருக்கிறார். மொழி எல்லைகளைக் கடந்து உலகப் படைப்புகளை நம் படைப்புகளாக அங்கீகரிக்கும் மனநிலையை வலியுறுத்துபவர் வெங்கடேசன். சூழலியல் என்பது இயற்கையின் சமனைச் சீர்குலைத்து மனிதமையப்
போக்கை வலியுறுத்துவதாக இருக்கக் கூடாது என்ற கருத்துநிலை கொண்டவர்.

அபாரமான கற்பனை வளத்தோடும் மொழித் திறத்தோடும் கூடிய புனைவெழுத்தால் நவீன இலக்கியத்தைச் செழுமைப்படுத்தி அதில் புதுப் பாதையைச் சமைத்திருக்கும் பா.வெங்கடேசனைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

பா.வெங்கடேசனின் நூல்கள்

வாராணசி (புதினம்) (அச்சில், 2019)
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் (கட்டுரைகள்) (2017)
பாகீரதியின் மதியம் (புதினம்) (2016)
நீளா (கவிதைகள்) ( 2014)
தாண்டவராயன் கதை (புதினம்) (2008)
ராஜன் மகள் (சிறு புதினங்கள்) (2002)
எட்டிப் பார்க்கும் கடவுள் (கவிதைகள்) (2000)
ஒரிஜினல் நியூஸ் ரீல் (சிறுகதைகள்) (1996)
இன்னும் சில வீடுகள் (கவிதைகள்) (1992)

ஆ. இரா. வேங்கடாசலபதி

வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ஆ. இரா. வேங்கடாசலபதி காலனியக் காலகட்டத்தில் தமிழ்ச் சமூகப் பண்பாடு மற்றும் இலக்கிய வரலாறுகள் பற்றிய ஆய்வுகளைச் செழுமையாக முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர், இலக்கிய, வரலாற்றுப் புலங்கள் சார்ந்து சீரிய பதிப்புப் பணியிலும் இடையறாது ஈடுபட்டுவருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் புலமைபெற்ற வேங்கடாசலபதி, “இலக்கிய வாசிப்பினூடாக வரலாற்று ஆராய்ச்சிக்குள் நுழைந்தவன் நான்” என்று கூறுகிறார்.

வேங்கடாசலபதி குடியாத்தத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பதிப்புலகத்தின் சமூக வரலாறு பற்றிய ஆய்வுக்காக, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கி, சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் எனச் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

வேங்கடாசலபதியின் எழுத்துப் பரப்பு, காலனியக் காலகட்டத்தில் புதிய இலக்கிய வடிவங்கள், கருவூலங்கள் உருவாகி, நிலைபெற்றதிலிருந்து தொடங்கி, அக்கால இலக்கிய, வரலாற்று ஆளுமைகளின் வாழ்க்கை, படைப்புகள் ஆகியவற்றைப் புதிய வெளிச்சத்தில் ஆய்வு அணுகுமுறையோடு திறம்பட எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இதற்கு முன் அறிவுச் சூழலில் கவனத்துக்கு வராத நவீன வாசிப்பு முறைகள், வாசிப்புப் பழக்கங்கள் தமிழ்ச் சமூகத்தில் உருவான வரலாற்றை எழுதியிருக்கிறார். ‘மேலோர்’ இலக்கியம், நாட்டார் இலக்கியம், இந்த இரண்டு வகைகளுக்கும் இடைபட்ட, இதுவரை பேசப்படாத, வெகுசன இலக்கியமான குஜிலி அல்லது முச்சந்தி இலக்கியம் குறித்த வேங்கடாசலபதியின் நூல் மிக முக்கியமானது.

பாரதியின் கருத்துப்படங்களைத் தொகுத்ததோடு அல்லாமல், ‘விஜயா’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ்களிலிருந்து பாரதியின் எழுத்தையும் திரட்டித் தொகுத்திருக்கிறார். பாரதியின் சர்வதேசப் பார்வை, பாரதியின் சுயசரிதைகளின் வாழ்க்கைப் பின்னணி போன்றவற்றைப் புதிய தகவல்களோடு விவரிக்கும் கட்டுரைகளின், நூலின் வாயிலாக பாரதியியலுக்குப் பெரும்பங்காற்றியிருக்கிறார். பாரதி நூல்கள் நாட்டுடமையாக்கம் பெற்றதன் வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.

அச்சிடப்படாத, தொகுக்கப்படாத புதுமைப்பித்தன் ஆக்கங்களைப் பதிப்பித்திருக்கும் பெருமை அவருக்கு உண்டு. புதுமைப்பித்தன் கதைகளைத் திருத்தமான பாடத்தோடும் பாட வேறுபாடுகளோடும், காலவரிசையில் வைத்துப் பதிப்பித்திருக்கிறார். காலவரிசையில் அமைந்த புதுமைப்பித்தன் கட்டுரைகளும் மதிப்புரைகளும் கொண்ட ஒரு நூல், பதிப்பியல் நோக்கிலான செறிவான முன்னுரையோடு, அவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தனின் புனைகதை மொழிபெயர்ப்புகளையும், அவற்றின் பதிப்பு விவரங்களோடும் பின்னிணைப்புகளோடும் பதிப்பித்திருக்கிறார்.

வேங்கடாசலபதி மொழிபெயர்ப்புத் துறையிலும் கால் பதித்தவர். பாரதிதாசனின் ‘அமைதி’ நாடகம், சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ ஆகிய நூல்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் அவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பாப்லோ நெரூதாவின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

திராவிடர் இயக்கத்தில் வேளாளரின் பங்கு பற்றிய அவரது நூல், நவீனத் தமிழ்ச் சமூகம் உருவாக அடித்தளம் போட்ட சமூக, பண்பாட்டு மாற்றங்களை விமர்சன நோக்கோடு ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகள், ஜி.யு. போப், உ.வே. சாமிநாதய்யர், ஆஷ் போன்ற பல்வேறு ஆளுமைகளைச் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து எழுதிய கட்டுரைகள் உட்பட பற்பல ஆக்கங்களோடு அவருடைய வரலாற்று எழுத்துப் பரப்பு விரிந்து பரந்திருக்கிறது.

தமிழ்ச் சமூக, பண்பாட்டு வரலாற்றுக்கும், இலக்கிய, பதிப்புலக வரலாற்றுக்கும், பதிப்புப் பணிக்கும் மிகப் பொருண்மையான, செறிவான பங்களிப்பைச் செய்திருக்கும் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

ஆ. இரா. வேங்கடாசலபதியின் நூல்கள்

(தமிழில்)
எழுதியவை
எழுக, நீ புலவன்! பாரதி பற்றிய கட்டுரைகள் (2016)
ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள் (2016)
பாரதி: கவிஞனும் காப்புரிமையும் (2015)
முச்சந்தி இலக்கியம் (2004)
முல்லை: ஓர் அறிமுகம் (2004)
நாவலும் வாசிப்பும் (2002)
அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள் (2000)
திராவிட இயக்கமும் வேளாளரும், 1927-1944 (1994)
பின்னி ஆலை வேலை நிறுத்தம் (ஆ. சிவசுப்பிரமணியனுடன்) (1990)
வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும் (1987)

பதிப்பித்தவை
உ.வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம், தொகுதி 1, 1877-1890 (2018)
புதுமைப்பித்தன் வரலாறு, தொ.மு.சி. ரகுநாதன் (2016)
அண்ணல் அடிச்சுவட்டில், ஏ.கே. செட்டியார் (2016, 2003)
சென்று போன நாட்கள், எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு (2015)
பாரதியின் சுயசரிதைகள் (2014)
வ.உ.சி.யின் திலக மகரிஷி (2010)
பாரதி கருவூலம்: ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (2008)
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் (2006)
பாரதி, ‘விஜயா’ கட்டுரைகள் (2004)
புதுமைப்பித்தன் கட்டுரைகள் (2002)
புதுமைப்பித்தன் கதைகள் (2000)
வ.உ.சியின் சிவகான போதவுரை (1999)
அன்னை இட்ட தீ, புதுமைப்பித்தன் (1998)
வ.உ.சியும் பாரதியும் (1994)
பாரதியின் கருத்துப்படங்கள்: ‘இந்தியா’: 1906-10 (1994)
மறைமலை அடிகளார் நாட்குறிப்புகள் (1988)
வ.உ.சி. கடிதங்கள் (1984)

மொழியாக்கம்
வரலாறும் கருத்தியலும், ரொமிலா தாப்பர் (2008)
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம், பாப்லோ நெரூடா (2005)

(ஆங்கிலத்தில்)
Ramanujan’s Lost Mark-sheet: Byways of History (Forthcoming)
Tamil Characters: Portraits, Personalities, Politics (Forthcoming)
Who Owns that Song?: The Battle for Subramania Bharati’s Copyright (2018)
(ed.) S. Venkatesan, S. Balashanmugam, Chandrahasam (2015)
(co-edited with Esther Fihl) Beyond Tranquebar: Grappling Across Cultural Borders in South India (2014)
The Province of the Book: Scholars, Scribes, and Scribblers in Colonial Tamilnadu (2012)
(trans.) Singai Ma. Elangkannan, Flowers at Dawn (2012)
(ed.) Red Lilies and Frightened Birds: ‘Muttollayiram’ (2011)
(ed.) Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry (2010)
Guest Editor (with Esther Fihl), Review of Development and Change, XIV (1–2), ‘Cultural Encounters in Tranquebar: Past and Present’ (2009)
In Those Days There Was No Coffee: Writings in Cultural History (2006)
(ed.) A.K. Chettiar, In the Tracks of the Mahatma: The Making of a Documentary (2006)
(ed.) Chennai, Not Madras: Perspectives on the City (2006)
(trans.) Sundara Ramaswamy, J.J.: Some Jottings (2003)
(ed.) Guest Editor, South Indian Folklorist, Special number on ‘Folklore in Print’ (1999)

Series Navigationதுயரின் இதழ்களில் விரியும் புன்னகை THE SMILE ON SORROWS LIPS மிர்ஸா காலிப் மொழிபெயர்ப்பில்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *