யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 14

author
0 minutes, 17 seconds Read
This entry is part 2 of 14 in the series 15 ஜனவரி 2017

பி.ஆர்.ஹரன்

 

தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகப் புறநானூறு, குறுந்தொகை, பரிபாடல், பரணி வகை இலக்கியம்,  ஆகியவற்றில் யானைகள் பற்றிய பல்வேறு குறிப்புகளைப் பார்த்தோம். யானைகள் பற்றி மேலும் பல குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன.

 

போர்களில் யானைகள்

போர்களில் யானைகள்

காட்டு விலங்கான யானையை அரண்மனைகளிலும், கோவில்களிலும், போர்க்களங்களிலும் ஈடுபடுத்தும் அளவுக்கு அவற்றைப் பழக்கும் ஒரு அற்புதமான பாரம்பரியம் நமது பாரத தேசத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. யானைப்படை தமிழ் மன்னர்களின் நால்வகைப்படைகளில் ஒன்றாக இருந்தது. பகைவர்களின் கோட்டை மதில்களையும், கோட்டைக் கதவுகளையும் தாக்குவதற்கு யானைப் படையைப் பயன்படுத்தினர்.

 

தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிளை, தமிழர்களின் வீரத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: படைகளில் இருக்கின்ற யானைகளிலேயே மிகவும் அழகானதும், வலிமையானதுமான யானை அரண்மனை யானை என்றும் பட்டத்து யானை என்றும் பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப் பதவிக்கு உரியதாயிற்று. அரசன், நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படும்பொழுதும், படையெடுக்கும் பொழுதும் பட்டத்து யானைமீதேறிச் செல்வான். அவன் கொடி தாங்கும் தகுதியும் அதற்கே உண்டு.

 

 

சேரநாட்டு யானைப்படை

சேரநாட்டு யானைப்படை தமிழகத்தில் மலைநாடாகிய சேரநாடு யானைச் செல்வமுடையது. ஆதலால் அந்நாட்டுப் படையில் யானைப் படை சிறந்ததோர் அங்கமாக விளங்கிற்று. அந் நாட்டை ஆண்ட அரசன் ஒருவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று பாராட்டப்படுகின்றான். புலவர் பாடும் புகழுடைய வீரனாய் விளங்கிய அச்சேரன் வேழப்படையால் விழுமிய புகழ் பெற்றவன் என்பது வெளிப்படை.

சோழநாட்டு யானைப்படை


சோழநாட்டின் வேழப்படைத் திறத்தினைப் பிற நாட்டு அறிஞர் எழுதியுள்ள குறிப்புகளால் அறியலாகும். “சோழநாட்டு அரசாங்கம் அறுபதாயிரம் போர்க் களிறுகளை உடையது. போர்க்களத்திற் புகும் பொழுது அவற்றின் முதுகில் அமைந்த வீடுகளில் வீரர் நிறைந்திருப்பர்; தூரத்திலுள்ள பகைவர்கள்மீது வில்லம்பு துரப்பர்; ஈண்டிய பகைவர்மீது ஈட்டியைப் பாய்ச்சுவர். போர் முனையில் வீரம் விளைத்து வெற்றி பெரும் வேழங்களுக்கு விருதுப் பெயர் கொடுப்பதுண்டு. அப் பெயர்கள் அவற்றின் கொற்றத்தைக் குறிப்பனவாக அமையும். நாள்தோறும் போர்க் களிறுகளை அரசன் பார்வையிடுவான்” என்று சீனத்து அறிஞன் ஒருவன் எழுதிப் போந்தான்.

பாண்டிநாட்டு யானைப்படை
பாண்டி நாட்டை ஆண்ட வீரமன்னருள் ஒருவன் பெருவழுதி என்னும் பெயறினான். பகைவர்களை அறப்போரால் வென்று மறக்கள வேள்வி புரிந்தவன் அவன். யானைப்படை அவனிடம் சிறந்து விளங்கிற்று. கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாம் தவிர்த்த பெருவழுதிஎன்று வேள்விக்குடிச் செப்பேடுகள் அவனை வியந்துரைக்கின்றன. பாண்டி நாட்டு மீனக் கொடி அவன் பட்டத்து யானையின்மீது பெருமிதமாக நிமிர்ந்து பறந்த காட்சியைக் கண்ட கவிஞர் ஒருவர்.
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய
என்று மன மகிழ்ந்து வாழ்த்தினார்.  (தமிழர் வீரம்
ஆசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை, பி..,பி.எல்.http://kallarperavai.weebly.com/29802990300729962965-299729922994300629933009.html)

 

யானை மேலேறிப் பறையறிவித்தல்

 

மன்னர் ஆட்சி காலத்தில், பறையறிவித்தல் என்கிற காரியமானது யானை மீது அமர்ந்து அறிவிப்பதாகவும் பல சான்றுகள் காணக்கிடைக்கின்றன. அரண்மனை அறிவிப்புகள் மட்டுமல்லாமல் கோவில் திருவிழாக்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகளும் பறையர் சமூகத்தவரால் செய்யப்படும் தொழிலாக இருந்தது. அந்தச் சமூகத்தவர் யானை மீது அமர்ந்து முரசொலித்து அறிவிப்பைச் செய்தனர். அவர்கள் ‘வள்ளுவர்’ என வழங்கப்பட்டனர். வள்ளுவர் பறையறிவித்தலை கம்ப ராமாயணத்திலும் காணலாம். அயோத்தியா காண்டம் மந்திரை சூழ்ச்சிப் படலத்தில், ராமனின் பட்டாபிஷேகத்தை மக்களுக்குப் பறையறிவிக்குமாறு தசரதன் ஆணையிடுகிறான். அவன் ஆணையைச் சிரமேற்கொண்டு, வள்ளுவன் என்னும் செய்தி பரப்புவோன் யானை மீது ஏறி ஊரறியச் செய்தான்என்கிறார் கம்பர்.

 

செல்வச்சேனை வள்ளுவ முதுமகன்என்று முரசறிவிப்பு செய்யும் வள்ளுவனைப் பற்றி பெருங்கதை’ (2;28-33) கூறுகிறது.

 

அத்திகோசத்தார்

 

அத்திகோசத்தார் கல்வெட்டு - முன்புறத் தோற்றம்

கொங்கு தேசத்தில் கவையன்புத்தூர் பகுதியில் நல்லூர் என்கிற கிராமத்தில் ஒரு கல்வெட்டு காணப்பட்டுள்ளது. சேர மன்னன் இரவிகோதை காலத்தில் இவ்வூர்ச் சமணப்பள்ளிக்கு அளிக்கப்பட்ட கொடையைக் கல்வெட்டு குறிப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

அத்திகோசத்தார் கல்வெட்டு - பின்புறத் தோற்றம் - வட்டெழுத்துக்களுடன்

அத்திகோசத்தார் என்பவர் பண்டைய தமிழகத்தில் இருந்த வணிகக் குழுவினரைக் காக்கும் யானைப்படையினர் ஆவர். கல்வெட்டின் பின்புறம் யானைப்படை, குதிரைப்படை உட்பட வணிகக் குழுவின் குறிகள் பல பொறிக்கப்பட்டுள்ளன. நல்லூரிலோ அல்லது அருகிலுள்ள விண்ணப்பள்ளியிலோ கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சமணப்பள்ளி ஒன்று இருந்திருக்கவேண்டும். சேர மன்னர் இரவிகோதை காலத்தில் வணிகக் குழுவினரும்  அவர்களின் காவல் படையினரான அத்திகோசத்தாரும் அதற்குக் கொடை வழங்கியிருக்கலாம் என்பது கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.

 

அத்திகோசத்தார், யானை வணிகம் செய்பவர்கள் என்னும் ஒரு கருத்தும் உண்டு. எவ்வாறெனினும், இந்தப்பகுதியில் வணிகர் இருந்துள்ளமைக்கு இக்கல்வெட்டு சான்று. அத்திகோசத்தாரின் கல்வெட்டு ஒன்று ஆனைமலையிலும் உள்ளது. (http://kongukalvettuaayvu.blogspot.in/2016_12_01_archive.html )

 

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அத்திகோசத்தார் யானைப்படையினர் என்பது தான். ஹஸ்தி என்றால் யானை என்று பொருளுண்டு. ஹஸ்தி என்ற சொல்லே தமிழில் அத்தி என்றாகி, அத்திகோசத்தார் என்று யானைகளைப் பழக்கும் ஒரு தீரம் மிக்கக் குழுவினருக்குப் பெயராக ஏற்பட்டிருக்கிறது என்று நம்பலாம்.

 

யானை ஏறும் பறையர்

 

யானைகளை வணிகம் செய்பவர்களும் அத்திகோசத்தார் என்கிற கருத்தும் உண்டு என்பது தெரிகிறது. வணிகர் குலத்தைச் சேர்ந்த கோவலன்-கண்ணகி திருமணச் செய்தியும் யானை மேல் ஏறிய பறையரால் அறிவிக்கப்பட்டது என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.

 

பறையர் குலத்தவர் யானைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்பதற்கு மற்றுமொரு சான்றாக, திருவாரூர், தியாகராஜர் கோயிலோடு தொடர்பு கொண்ட பறையரை ”யானை ஏறும் பெரும் பறையர் என்று அழைக்கின்றனர்.  (http://www.tamilpaper.net/?p=8256).

 

 அகநானூறு - களிற்றியானை நிரை

முல்லைப்பாட்டில் யானை

 

பத்துப்பாட்டு இலக்கியங்களுள் ஒன்றான முல்லைப்பாட்டில் “மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை உயர்ந்து நிற்றலையுடைய கரும்புகளுடன் (நெற்)கதிரைச் செறிந்து கட்டிப்போட்ட வயலில் விளைந்த இனிய (அதிமதுரத்)தழையைத் உண்ணாது, (அவற்றால் தம்)நெற்றியைத் துடைத்து,

கூர்மையான முனையுடைய கொம்புகளில் (வைத்த)தம் துதிக்கையில் கொண்டு நின்றனவாக…” என்று குறிப்பிடப்படுகிறது. (http://sangacholai.in/10-5.html)

 

காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடிய பாடல் ஒன்றில், பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டத்தில் தோன்றும் காட்சிகளைச் சொல்கிறார். அப்பாடலில், “போரைப் பற்றிய நினைவு. அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை, வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு பதைப்பது போல் துடித்த காட்சி,…..” என்கிற குறிப்புகள் வருகின்றன. (http://vaiyan.blogspot.in/2014/11/blog-post_7.html )

 

 

அகநானூறு

 

சங்ககாலத்து “எட்டுத்தொகை” நூல்களுள் ஒன்றாகிய அகநானூறு அகத்திணை சார்ந்த நூலாகும். மூன்று பகுதிகள் கொண்ட இந்நூலின் முதல் பகுதி “களிற்றியானை நிரை” என்றே வழங்கப்படுகிறது. முதல் 120 பாடல்கள் இந்தப் பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல்கள் களிறு (ஆண் யானை) போல் பெருமித நடை கொண்டவை என்பதாலும், யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அமைந்துள்ளன என்பதாலும், களிற்றியானை நிரை என்று தொகுக்கப்பட்டதாகும்.

 

இந்தத் தொகுப்பில் உள்ளக் குறிஞ்சித்திணைப் பாடல்களில் யானைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பாட்டுடைத் தலைவி தினைபுனத்தைக் காத்து நிற்கும் காட்சிகளைப் பாடும்போது புலவர்கள் யானைகளைப் பற்றிய குறிப்புகளை ஆங்காங்கே கொடுத்துள்ளனர். தலைவன்-தலைவி காதலைப் பற்றிப் பாடும்போது, களிறு-பிடி உறவுகள் உருவகப்படுத்தப்படுகின்றன.

வேலனார்-வள்ளி - தினைப்புனத்தில் யானை

வள்ளி தினைப்புனத்தைக் காத்து நிற்கும்போது வேலனார் (முருகன்) அவளைக் காதலில் கவர்ந்த காதை குறிஞ்சித்திணையில் நடந்தது என்பதும், விநாயகப் பெருமான், யானை உருவம் கொண்டு முருகனுக்கு உதவியதும் இங்கே நினைவு கூரத்தக்கது.

 

இவ்வாறாக சங்க இலக்கியங்களில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் பலவற்றிலும் யானைகள் பற்றிய பல குறிப்புகளைக் காணலாம்.

 

(தொடரும்)

 

Series Navigation“இன்குலாப்’பின் அக்கினிச் சிறகசைத்த பா(நா)ட்டுப் பறவை- கே.ஏ.ஜி!” (கே.ஏ.குணசேகரன்)காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *