வினையன் எழுதிய ‘ எறவானம் ‘ —- நூல் அறிமுகம்

 

சென்ற மாதம் வெளியான புத்தம் புதிய கவிதைத் தொகுப்பு  இது ! வினையன் , கங்கை கொண்ட

சோழபுரத்தில் ஒரு குடிசை வீட்டில் வசிப்பவர். அந்த வீட்டுச் சூழல் எப்படிப்பட்டது ?  அவரே சொல்கிறார்.

இறந்து விட்ட தகப்பன் , ஆயா

உயிருள்ள தாய்

வாழ்க்கைத் துணை நிராகரித்த அக்கா

தப்பனை வெறுக்கும் அக்கா பிள்ளைகள்

தகப்பனாக்கிய மகள்

சம்சாரியாக்கிய மனைவி

நலனில் ப்ரியமுள்ள தமிழ் தென்றல் அண்ணா

தத்தெடுத்த அப்பா முத்தையன்

 

இவர் கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை.

தலைப்பு கொடுத்தால்

என்னால் எழுத முடிவதில்லை

ஆழ் கடலுக்குள் யார் ராகம் பாடுவது

—    என்கிறார் வினையன் . கடைசி வரி பொருள் பொதிந்தது. பெரும்பாலான கவிதைகள் பேச்சு வழக்கில் உள்ளன. பல கவிதைகள் கிராமத்தின் இயல்பை , உயித்துடிப்பைப் பேசுகின்றன. ‘ பார்த்ததைப்

பேசுகிறேன் ‘ என்னும் போக்கில் யதார்த்தம் தாங்கி நிற்கின்றன. ஆங்காங்கே காட்சிப்படுத்துதல்

நன்றாக அமைந்துள்ளன. மொழிநடையில் சில சொற்களைத் தவிர்க்கலாம் என்னும் பொதுப்போக்கு

இவரிடம் சில இடங்களில் இல்லை.

 

அஞ்சறைப் பெட்டியிலோ

சுவரோரத்தில் புதைத்த

மண் உண்டியலிலோ

எட்டு பானைகளின் அடுக்கில்

கீழிருந்து மூன்றாம்

பானையிலோ

தேடி எடுப்பதற்குள்

அடுத்த தெருவிற்குச்

சென்றிருப்பார்

ஐஸ் விற்பவர்

— என்று மிகவும் தற்செயலான , நாம் அறிந்த ஒரு செயலை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.

தாம்பத்தியம் பற்றிய ஒரு கவிதை ஐந்தே வரிகளில் அமைந்துள்ளது.

கேசங்கள் கோதவே

நேரங்கள் போதவில்லை

அதற்குள் விடிந்துவிட்டது

சேவலும் கோழியுமாய்

கூரை சீய்க்கிறது

—   கூரை மேல் உள்ளதும் ஒரு ஜோடி !

மனித உறவுகள் , மேலோட்டமாகப் பார்க்கும்போது வலுவானவை போலத் தெரியும். நெருக்கடி வந்தால் அதே உறவுகள் எவ்வளவு பலவீனமானவை என்று புரியும். இந்த மனித இயல்பை அழகாக

விளக்கும் ஒரு திரப்படப் பாடல் வரிகள்.

பானையிலே சோறிருந்தா

பூனைகளும் சொந்தமடா

சோதனையைப் பங்கு வச்சா

சொந்தமில்லே பந்தமில்லே

—- இக்கருத்தை விளக்குகிறது வினையனின் ஒரு கவிதை !

சாச்சுப் போட்ட பெஞ்சை

நிமுத்து கழுவியாச்சு

எழவு எட்டாந் துக்கம் பயினாறு

எல்லாம் முடிஞ்சு போச்சு

வந்த சனமும் வெந்தத தின்னுட்டு

நொந்த மாறி போயிடிச்சு

மனையாள் வேலைக்கு பூட்டா

மீச வழிச்ச நடு பய

மொட்ட போட்ட சின்னவன்

ரவுண்டு கட்டி எண்ணுரானுவோ

மொய்யி புடிச்ச காச

நாட்டாம் பணம்

ஊரு பணம்

வெட்டியாம் பணம் போவ

மீந்ததுக்கு வெட்டு குத்து

பேச்சு முடிஞ்சி சரிபாதி பிரிச்சு

போனவுனுங்க ஆத்தாள

பிரிச்சிக்கவுமில்ல  சேத்துக்கவுமில்ல

— இவ்வரிகளில் ஒற்றெழுத்து பல இடங்களில் காணப்படவில்லை. பேச்சு வழக்கு நடை சரளமாக

அமைந்துள்ளது.

மழையை நம்பித்தான் விவசாயம் . விவசாயி கவலைக்கு இணையாக எதைச் சொல்ல முடியும் ?

அழகரு ஆசாரிக்கு சொச்ச பணம் தரல

சம்முகம் மேஸ்திரிக்கும் பாக்கியிருக்கு

சித்தாளு உள்ளூரு மொவனுத்தாச்சின்னு போயிட்டா

கந்திஷ்டி பொம்ம மக்கி கெடக்கு

உள் பூச்சுயில்ல

சேட்ட மூட்டயெல்லாம் முடிஞ்சுபோச்சு

அய்ப்பசி வந்தா ஆச்சு ஆறு வருசம்

நெலப்படி சாஞ்சிருச்சி

செங்கல்லெல்லாம் தேஞ்சிருச்சி

இந்த வெளச்சல்லயாவது குடி போயிடணும்

மாரி மனசு வச்சா

 

மணவாழ்க்கைத் தடம் மாறிப்போக பணம் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த அவலத்தைச் சொல்கிறது ஒரு கவிதை.

கொற மாச புள்ளைக்கு

எளம்புள்ளவாதம்

கைப்பிள்ளையோ சவலை

ஆசையாய் முக்கியும்

இரண்டும் பெட்டை

காலத்துக்கும் கணவன்

அயல் நாட்டில்

ஆட்டு மாட்டுக்கு தண்ணி காட்டி

அசதியில் புரண்டயிடம் கொழுந்தனுக்கு

மாமன் ஒடம்பு அமுக்க

ஒரு வெள்ளக்காரி இல்லாமலா போவா

 

—- போஸ்டர் ஒட்டும் ஒரு சாதாரண தினக்கூலித் தொழிலாளி பற்றிப் பேசுகிறது ஒரு கவிதை.

போஸ்ட ரொட்டும் பொன்னம்பலத்துக்கு

கட்சித் தலைவர்கள் பெயர் அத்துப்படி

பகலில் மது மயக்க உறல்லம்

கையேந்தி பவங்கள் மூடிய இரவுகளில்

மைதா மாவு வயிறு நிரப்பும்

 

பழைய வண்ணாரப்பேட்டையில்

ப்ளாட்பார வீட்டில் உறங்கும் அவனுக்கு

திருநங்கை மனைவிகள் மூன்று

கட்சிக் கூட்டங்களில் அடுத்த

ஆர்டர் வாங்குமவனுக்கு

வேலைக்கு ஆட்கள் தேவை போஸ்டரும்

அவனே ஒட்டும் வேலை

திரண்டிருந்த எம் தமிழ்ச் சொந்தாங்களே – என

முழங்கிய அவன் குரலுக்கு

பல்லாயிரம் கைகள் தட்டி அடங்கியதில்

உறக்கம் கலைந்து பசை வாளி தூக்கி

கிளம்பினான் மூலம் பௌத்திர நோட்டீஸ் ஒட்ட

வினையன் கவிதைகளில் கிராமத்து நடை முறைகள் சிரத்தையோடு பதிவாகியுள்ளன. ஆச்சாரி ,

நாவிதர் , வட்டிக்குவிடுபவர் என எல்லோரும் வருகிறார்கள். எழுஞாயிறு என்ற கவிஞரும் வருகிறார்.

அவர் கவிஞராக மட்டும் இருந்தால் பிழைக்க முடியுமா ? அவர் லாடம் அடிக்கும் தொழிலாளி !

லாடமடிக்கச் செல்லும் சிற்றூர்களில்

உள்ள இதழ்களில்

பல படைப்புகள் வந்ததாய்ச் சொல்வார்

வெகு ஜென பத்திரிகை ஒவ்வாமை

மாட்டு சாணத்தைப் போல

—– போன்ற வரிகள் கவிஞரைத் தனித்துக் காட்டுகிறது.

 

புத்தகத்தின் தலைப்பு எறவானம். இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. ‘ எறவாணம் ‘ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டு எறவாணத்தில் அரிவாளைச் செருகி வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள். புத்தகத் தலைப்பு அச்சுப் பிழையா ? அல்லது பேச்சு வழக்கா ? தெரிந்தவர்கள்

சொல்லலாமே !

யதார்த்தக் கவிதைகளில் மொழியழகு , நயங்கள் இருக்காது. ஆனால் கிரமத்து ஜீவன் இருக்கிறது

என்பது சிறப்பு . கவிதைகளைப் படித்து முடித்ததும் அவை மனத்திலிருந்து நழுவும் இயல்பு பெற்றிருப்பதையும் உணர முடிகிறது. வினையன் கவிதைகள் கிராமத்து நேசத்தை வாசகர்கள் மனத்தில்

விதைத்துப் போகும் என்று உறுதியாகக் கூறலாம்.

வெளியீடு : மணல்வீடு , பக்கங்கள் 52 , விலை ரூ 80.

author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *