தொடுவானம் 157. பிரியாவிடை உரை

This entry is part 15 of 18 in the series 12 பெப்ருவரி 2017
 

விடுதியில்  கடந்த ஐந்தரை ஆண்டுகள் கழித்துவிட்டோம். இது எங்களுக்கு இன்னொரு வீடு போன்றது.அனைத்து மாணவர்களும் உறவினர் போன்றவர்கள்.இங்கு எங்கள் வகுப்பு மாணவர்களுடன், எங்கள் சீனியர் ஜூனியர் மாணவர்களுடனும் நெருங்கியே பழகினோம். இது எங்கள் குடும்பம் போன்றே வாழ்ந்தோம். இப்போது பிரியும் காலம் நெருங்கிவிட்டது.

இறுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் விடுதியை விட்டு வெளியேறிவிடுவார்கள். தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் தொடர்ந்து ஆறு மாதங்கள் இங்கேயே தங்கியிருப்பார்கள்.

ஆறரை வருடங்கள் தங்கியபிறகு திடீரென்று வெளியேறுவது எப்படி. அது கவலையைத் தரும். அதனால் முறைப்படி பிரிய விடுதியில் ஒரு பாரம்பரியம் இருந்தது. அதுதான் பிரியாவிடை விருந்து ( Farewell Dinner ).

இதை ஒரு விழாவாகவே கொண்டாடுவோம். பிரியாவிடை என்றாலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இது வெற்றி விழாதான். இத்தனை வருடங்கள் படித்து முடித்து எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளாக வெற்றி பெறுவது பெருமைதானே!

அதனால்தான் இதை விடுதி விழா போன்றே சிறப்புடன் கொண்டாடினோம்.அனால் விடுதி விழா போன்று அறையை அலங்காரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாணவியரை கட்டாயமாக அறைக்கு அழைத்து வந்து உபசரிக்க வேண்டிய அவசியம் இல்லை.அனால் அவர்களை அன்று விருந்துக்கு அழைக்கலாம். அவர்கள் விரும்பினால் அறைக்கும் அழைத்துச் செல்லலாம்.முதலாம் இரண்டாம் ஆண்டுகளில்தான் எந்த பெண்ணை விருந்துக்கு அழைப்பது என்பதில் தடுமாற்றம் இருந்தது. அதனால் வகுப்பு கூட்டம் போட்டு சீட்டு போட்டு மாணவிகளைத் தேர்ந்தெடுப்போம்.இப்போதோ அது தேவை இல்லாமல் போனது. யாருக்கு யாரை  அழைப்பது என்பது எல்லாருக்குமே தெரிந்த ஒன்றாகிவிட்டது.யார் யார் யாரைக்  காதலிக்கிறார்கள் என்பது திறந்த இரகசியமாகிவிட்டது.

இந்த விருந்துக்கு நாங்கள் வேறு வகையில் தயார் செய்தோம். விருந்தினரை அவரவர் விருப்பப்படி அழைத்துக்கொள்ளலாம். ஆனால் விருந்தின்போது மேடையில் ஒவ்வொருவராக ஏறி ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும்! அதுவும் ஆங்கிலத்தில்! அதற்குப் பெயர் பிரியாவிடைச் சொற்பொழிவு ( Farewell speech ).

அதில் கட்டாயமாக ஒவ்வொருவரும் மூன்று கேள்விகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும். உடனடியான திட்டம் முதல் கேள்வி. எப்போது திருமணம் என்பது இரண்டாம் கேள்வி. ஜூனியர்களுக்கு என்ன அறிவுரை என்பது மூன்றாவது கேள்வி.இந்த மூன்று கேள்விகளும் அடங்கிய ஒரு சொற்பொழிவை அன்று மேடையில் ஆற்றவேண்டும்.

அந்த விருந்துக்கு கல்லூரி முதல்வரும், மருத்துவமனை இயக்குநரும், விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், வருவார்கள். அத்துடன் பெண்கள் விடுதி மாணவிகள் அத்தனைபேரும் வந்திருப்பார்கள்.எங்கள் விடுதியின் அத்தனை மாணவர்களும் பங்கு பெறுவார்கள்.ஆதலால் இது கல்லூரி விழாவாகவே பெரிய அளவில் நடைபெறும்.

தேர்வுகள் ஒருவாறாக முடிவடைந்துள்ளன. இந்த விழாவுக்குப் பின்பு விடுமுறைதான்.ஆதலால் சொற்பொழிவு தயார் செய்ய ஒரு வாரம் இருந்தது. நன்றாக யோசித்து நிதானமாக தயார் செய்யலாம்.

சொற்பொழிவை எழுதலானேன்.

முதல் கேள்வி உடனடித் திட்டம். இதில் என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள விரும்பினேன். என்னை என் வகுப்பினர் அனைவரும் டி.எம்.கே . என்றுதான் அழைப்பார்கள். நான் தீவிர தி. மு.க. பற்றாளன் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் நான் அதில் எதற்காக அவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளேன் என்பது பெரும்பாலருக்குத் தெரியாது. அதிலும் தமிழர் அல்லாத அனைவருக்குமே ஏதும் தெரியாது – சம்ருதியைத் தவிர. அவன் ஆந்திராவைச் சேர்ந்தவன் என்றாலும், அவனிடம் நான் பல சந்தர்ப்பங்களில் தி. மு. க. பற்றி நிறையவே சொல்லியுள்ளேன். அதனால் அவனுக்குக் கூட திராவிட உணர்வு உண்டானது. ஆனால் அதுபோல் நான் மலையாளிகளிடம் சொல்ல வாய்ப்பு கிட்டவில்லை. அன்று பிடியாவிடை விருந்துக்கு வருபவர்களில் நிறைய பேர்கள் மலையாளிகள் இருப்பார்கள்.அவர்களுக்கெல்லாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தி. மு. க. பற்றிய ஓர் அறிமுகம் செய்ய விரும்பினேன். அதில் தந்தை பெரியார் பற்றியும், அண்ணா பற்றியும், கலைஞர் பற்றியும் சொல்லலாம். இனிமேல் தமிழகத்தில் திராவிடரின் ஆட்சியே தொடரும் என்பதால் இது பற்றி சொல்வது நல்லது என்று தோன்றியது. இதில் எனது வருங்காலத் திட்டத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். மற்ற இரண்டு கேள்விகள் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. அந்த நேரத்தை இந்த முதல் கேள்விக்கு செலவிடலாம் என்றும் முடிவு செய்தேன்.

இப்படி செய்தால் என்னுடைய சொற்பொழிவு ஓர் அரசியல் சொற்பொழிவாக தனித்துவம் பெற்று அனைவரையும் ஈர்க்கும். அவர்கள் கேள்விப்படாத புதுமைகள் நிறைந்ததாகவும் இருக்கும்.

தி.மு.க. பற்றி பேசுவதென்றால் நான் எழுதிவைத்து வாசிக்கவேண்டிய அவசியமும் இல்லை. நேரடியாக எதிரே அமர்ந்துள்ளவர்களைப் பார்த்து பேசிவிடலாம். அப்படிப் பேசுவது மேடைப் பேச்சுக்கு சிறப்பையும் உண்டுபண்ணும். ஆதலால்  இத்தகைய முடிவுடன் நான் சொற்பொழிவிற்கான  சில முக்கிய குறிப்புகளை மட்டும் ஒரு தாளில் எழுதிக்கொண்டேன். அதில்கூட தலைப்புகளை மட்டுமே குறித்துக்கொண்டேன். அதைப் பார்த்துக்கொண்டால் போதுமானது.சொற்பொழிவைப் படிக்கத் தேவையில்லை.

ஒரு சிலர் அறையிலிருந்த  கண்ணாடி முன் நின்று பேசியும் பழகினர். எனக்கு அது தேவையில்லை.

ஆவலோடு எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. மாலையிலேயே சூட் அணிந்துகொண்டு தயார் ஆனோம். விடுதியின் வெளியே திறந்த வெளியில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூச்செடிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதிகம் வெளிச்சம் இல்லாமல் நிலவொளியில் அந்த இடம் ரம்மியமாக காட்சி தந்தது. இனிமையான இன்னிசை மாலைத்  தென்றலில் தவழ்ந்தது. புல் தரையில் போதுமான அளவில் மேசைகளும் இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.

விருந்தினர் வந்துகொண்டிருந்தனர். விடுதி மாணவர்கள் அவர்களை வரவேற்று இருக்கைகளுக்கு அழைத்துச் சென்றனர். நாங்களும் எங்களுடைய இடத்தில் அமர்ந்துகொண்டோம். சம்ருதியும் நானும் எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தியை விருந்தினராகப் பகிர்ந்துகொண்டோம்.

விழா ஆரம்பமானது. அச்சன் ஊமன் பிரார்த்தனை செய்தார். அதில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து விடுதியைவிட்டு வெளியேறப்போகும் எங்களுக்காக மன்றாடினார்.

விடுதி செயலர் அனைவரையும் வரவேற்று பேசினார். விடுதி வார்டன் தாமஸ் பானு வாழ்த்துரை வழங்கினார். விடுதித் தலைவர் எங்களை அகர வரிசையில் பெயர் சொல்லி அழைத்தார்.
முதலில் ஏபல் ஆறுமுகம் மேடை ஏறினான். ஏபல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த மலேசிய தமிழன். அவன் எங்கள் வகுப்பில் எல்லாராலும் கவரப்பட்ட கதாநாயகன் ( Hero ). அதற்குக் காரணம் அவனிடம் காணப்படும் நகைச்சுவை. அவை சில வேளைகளில் ஆபாசமாக இருந்தாலும் வகுப்பு பெண்கள் உட்பட நாங்கள் யாவரும் அது கேட்டு கைகொட்டி சிரிப்போம். அவன் மூன்று கேள்விகளுக்கும் நகைச்சுவைத் ததும்பும் வகையில் உரையாற்றி அனைவரின் கைதட்டுதலைப் பெற்றான்.

          இரண்டாவதாக அசோக் தயால் சந்த் அழைக்கப்பட்டான். இவன் பஞ்சாப் மாநிலத்தவன். அருமையான ஓவியன். இவன் வரைந்த சுஸ்ருத்தா என்னும் பண்டைய இந்திய மருத்துவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் பெரிய ஓவியம் மருத்துவமனையின் குழந்தைகளை வார்டில் மாட்டப்பட்டுள்ளது. இவனும் நகைச்சுவை ததும்ப பேசுபவன். இவனுடைய சொற்பொழிவில் ஓவியக் கலையும் கலந்திருந்தது.
          அடுத்து பாலாஜி நாயுடு அழைக்கப்பட்டான். இவன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். நன்றாக தமிழ் பேசுவான். இந்துவாக இருந்தாலும் கிறிஸ்துவ கோட்பாடுகளுக்கு ஏற்ப நடந்து அனைவரின் அன்பைப்  பெற்றவன். நன்றாக வாதிடுவான். கல்லூரி தொடர்புடைய கூட்டங்களிலும் விடுதிப்  பொதுக்குழுவிலும், வகுப்புக்  கூட்டங்களிலும் நிறைய பேசுபவன். அவன் தனக்குரிய பாணியில் பேசி அனைவரையும் கவர்ந்தான்.
          டி.ஆர். பெஞ்சமின் மேடை ஏறியதும் பலத்த கை தட்டல் ஒலித்தது. காரணம் இவன் விடுதி உடற் கட்டழகன் போட்டியில் முதல் பரிசு வென்றவன். தமிழன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். நாங்கள் இருவரும் இணைபிரியா ஜோடி என்ற காரணத்தினால் எங்களை நிழல்கள் என்று அழைப்பார்கள். நல்லொழுக்கம் மிக்கவன். ஆன்மிகக் கூட்டங்களுக்கு என்னை அழைத்துச் செல்வான். நன்றாகத் தயார் செய்து வந்து சிறப்பாக தனது உரையை ஆற்றினான்.

அடுத்து மேடை எறியவன் பாபி தாமஸ். கேரளாவைச் சேர்ந்த மலையாளி. மிகவும் அன்பானவன். காரணம் அவன் எஸ்.டி.ஏ. ( S.D. A. ) என்னும் வழிபாட்டு அமைப்பைச் சேர்ந்தவன். இதை Seventh Day Adventist என்பார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமையை புனித நாளாக அனுசரிப்பார்கள். ( பொதுவாக கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையைதான் புனிதமாக ஆசரித்து ஆராதனை செய்வார்கள்.) இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காப்பி, தேநீர் கூட அருந்தமாட்டார்கள். மிகுந்த பக்தியுடன் காணப்படுவார்கள். பாபி தாமஸ் பக்தியின் அடிப்படையில் தன்னுடைய சொற்பொழிவை நிகழ்த்தினான்.

அடுத்தது சார்லஸ் பிரேம்குமார். ஆந்திராவைச் சேர்ந்தவன். இவனும் ஏபலைப் போன்று நகைச்சுவை உணர்வு மிக்கவன். ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளைக் கூறி எங்களை விழுந்து விழுந்து சிரிக்கவைப்பவன். அவனுடைய சொற்பொழிவிலும் நகைச்சுவை கலந்திருந்தது. இவன் எங்களுக்கு சீனியர் மாணவியான பிரமிளாவைக் காதலித்தான். அவள் அப்போது பயிற்சி மருத்துவர். இரண்டாவது கேள்விக்கு அவர்களுக்கு விரைவில் திருமணம் என்று சொல்லியபோது கரகோஷம் எழுந்தது.

கிளமண்ட் தீனதயாளன் தமிழகத்தைச் சேர்ந்தவன். தமிழன். இவன் மிகுந்த சாதுவானவன். அதிகம் பேசமாட்டான். பணிவான குரலில் மெல்ல பேசும் சுபாவமுள்ளவன்.பக்தி மிக்கவன். தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்தவன். வேதத்தில் மேற்கோள்கள் காட்டி தன்னுடைய சொற்பொழிவை கச்சிதமாக முடித்துக்கொண்டான்..

          டேவிட் ராஜன் தமிழன். பாளையங்கோட்டையிலிருந்து வந்துள்ளவன். அமைதியானவன். ஹாக்கி விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவன். கல்லூரி ஹாக்கிக் குழுவில் அங்கம் பெற்று பல போட்டிகளுக்கு சென்று வந்தவன். அவனும் நன்றாக உரையாற்றினான்.

அதன்பின்பு போரஸ் டாபர் பேசினான்.அவன் வட இந்தியன். ஜேம்ஷெட்பூரிலிருந்து வந்தவன்.

பின்பு ஜார்ஜ் ஜேக்கப் ( கேரளா ), ஜேக்கப் கோருளா ( கேரளா ), வி. ஜெகதீஸ் ( புது டில்லி ) , ஜெயமோகன் ( கேரளா ), ஜெயரத்தினம் ( ஸ்ரீ லங்கா ), எல்மோ பாஸ்கர் ஜான்சன் ( தமிழ் நாடு ) ஆகியோர் உரையாற்றியபின்பு ஜி. ஜான்சன் என்று நான் அழைக்கப்பட்டேன்.

நான் கம்பீரமாக மேடை ஏறி ஒரு முறை என் எதிரே அமர்ந்திருந்த விருந்தினரைப் பார்த்தேன். பின்பு என் உரையைத் துவங்கினேன்.

” I feel elated to stand in front of this august body of eminent medical faculty, my beloved class mates, hostel mates and distinguished guests to deliver my farewell speech. ” என்று நான் துவங்கியதும் பலத்த கை தட்டல் ஒலித்தது.

” உடனடித் திடடம் பற்றி கூறுமுன் என்னைப்பற்றி சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்னை இங்கே விடுதியில் டி.எம்.கே. என்று அழைக்கிறீர்கள். இதன் பொருள் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது. அதாவது Dravidian Progressive Party என்பது. யார் இந்த திராவிடர்? அவர்கள் தென்னாட்டவர்.அதாவது தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் திராவிடர். இப்படி யார் சொன்னது. மறைத்திரு கால்டுவெல் என்னும் மேல்நாட்டு பாதிரியார். இவர் இயேசுவின் நற்செய்தியை இந்தியாவில் பரப்ப வந்த இறைத்தூதர். இவர் தென்னிந்திய மொழிகளைக் கற்று திராவிட மொழிகளின்  ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியுள்ளார். இவர்தான் முதன் முதலாக திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தி அறிமுகம் செய்தவர்.. திராவிட மொழிகளுக்கு தமிழ்தான் வேர் என்று உறுதியுடன் ஆராய்ச்சிபூர்வமாக கூறியவர்.

இந்த திராவிடர் இனம் தென்னாட்டுக்கு எங்கிருந்து வந்தனர்? இதற்கும் விடை தந்தவர் இன்னொரு கிறிஸ்துவ பாதிரியார். அவர் மறைத்திரு ஹீராசு பாதிரியார். இவர் வடக்கே பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ள அகழ்வாராய்ச்சியில் சிந்து நதி பள்ளத்தாக்கிலே ஒரு பழமையான நாகரீகம் இருந்துள்ளதை மேற்கோள் காட்டி, சந்தேகத்துக்கு இடமின்றி அது 5000 வருடங்களுக்கு முன்பு அங்கு வாழந்த திராவிடரின் நாகரீகம் என்பதை முதன்முதலாக உலகுக்கு எடுத்துச் சொன்னவர்.

ஆரியரின் ஊடுருவல் காரணமாக அந்த திராவிடர்கள் இந்தியாவின் தென் பகுதிக்கும்,கிழக்குப் பகுதிக்கும், வட பகுதிக்கும் சிதைந்து ஓடி குடியேறினர். இன்று தென்னாட்டில் வாழ்பவர்கள் அந்த திராவிடர்களின் வழித்தோன்றல்கள். அதனால்தான் அவர்களை அதாவது எங்களை திராவிடர் என்று இன்று பெருமை பேசுகிறோம். ( பலத்த கைதட்டல் )

இந்த உண்மையை வைத்துதான் தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் திராவிடர் இயக்கத்தை உருவாக்கி தமிழகத்தில் திராவிடர் உணர்வை உண்டுபண்ணி இன்று கலைஞர் ஆட்சி இங்கு நடை பெறுகிறது.( மீண்டும் கைதட்டல் ) “

அதன்பிறகுதான் நான் அந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தொடங்கினேன்.

இவ்வாறு நான் பேசி முடித்ததும் பலத்த கரகோஷம் எழுந்தது! திராவிடரின் சரித்திரம் பலருக்கு அன்றுதான் தெரிந்திருக்கும் என்பது திண்ணம்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *