ஒரு படைப்பு அது சிறுகதையோ அல்லது கவிதையோ எதுவாயினும் எதை அது மையமாக்கி உருவானது என்று பார்ப்போமானால் அதற்கு எந்தவித வரையறையையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சாதாரண ஓர் அமாவாசை விரதம் குறித்தும் அது ஒருவரைப் பாடாய்ப் படுத்தி வைப்பதையும் நாஞ்சில் நாடன் ஒரு சிறுகதையாக்கியிருப்பார். ஒரு பெண் எதிர்பாராவிதமாக ஒரு பணக்காரனால் கெடுக்கப்பட்டதை மையமாக வைத்து ஜெயகாந்தன் எழுதியிருப்பார். அப்பாவின் அஸ்தி கரைப்பதை மனத்தைக் கனமாக்கும் விதத்தில் ஜெயமோகன் எழுதியிருப்பார். திருவிழாவில் பொம்மைக்கடை போட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் பற்றிய கதைதான் பாவண்ணனின் பொம்மைக்காரி.
காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்துத் தாயின் மரணத்துக்குப் போகும்போது நான் எப்படி வாழ்கிறேன் பார்த்தீர்களா?” என்று ஒருத்தி கேட்கும் கதைதான் அண்மையில் எஸ். சங்கரநாராயணன் எழுதிய சிறுகதை “அவ்ட் ஆஃப் சிலபஸ்”. ஒரு சாஸ்திரியின் மிதிவண்டி காணாமல் போனதை நகை உணர்வுடன் காட்டியிருப்பார் விருத்தாசலம் சபாநாயகம்.
ஏன் இவற்றை எல்லாம் காட்டுகிறேன் என்றால் எதுவும் சிறுகதை ஆகலாம் என்பதைச் சொல்வதற்காகவே. ஆமாம்; காற்றில் பறந்துகொண்டே போகும் காகிதமும் கூட ஒரு கதை சொல்லலாம்; தானே புயலில் வீழ்ந்து கிடக்கும் அடர்ந்த புளியமரமும் ஒரு கதை சொல்லலாம்.
எஸ்ஸார்சியின் புதிய சிறுகதைத் தொகுப்பு “சொல்லில் நிரம்பிய குளம்” இன்னமும் ஒரு படி மேலேபோய் இதுவெல்லாம் கதை எழுதத் தூண்டுமா என வியக்க வைக்கிறது. எழுதும் வல்லமை இருக்கும் எழுத்தாளனின் கை பட்டால் எல்லாம் சிறுகதைதான் என்கிறது இத்தொகுப்பு. எல்லாமே “அட! நாமே இதை எழுதியிருக்கலாமே” எனக் கூற வைக்கும் கதைகள்தாம். ஒன்றிரண்டு விதிவிலக்கு.
பொங்கலுக்குப் படைக்க இரண்டு கரும்புகள் வாங்கி வருபவனுக்கு பொங்கல் முடிந்தபின்னர் அவை சுமையாகின்றன. அவற்றை என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு கரும்பைப் பக்கத்து வீட்டுப் பையனிடம் “நீ சாப்பிடு” என்று கொடுக்கிறான். அந்தப் பையன் பதிலுக்கு, “கரும்பைச் சாப்பிடறதா? இல்லை தின்றதா?” எனக் கேட்க அது பொட்டில் அறைந்ததுபோல் ஆகிறது அவனுக்கு. காசு போட்டு வாங்கி வந்த கரும்பை வீணாக்க மனமில்லாமல் அவனே பாதிக் கரும்பைக் கடித்துத் தின்கிறான். அதனால் மறு நாள் பல்லின் ஈறு வீங்கி மறுநாள் மகனுடன் பல் மருத்துவரிடம் போய் பன்னிரண்டாயிரம் செலவாகிறது.
வீட்டுக்கு வந்ததும் “இனிமே பொங்கலுக்கு கருப்பங்கழி மட்டும் வாங்கக் கூடாதுன்னு கண்டிஷனா இருப்பேன்” என்கிறான். பதிலுக்கு அவன் மனைவி, “கரும்பு கழிய வாங்கணும், அத சாமிக்குப் படைக்கணும், நாம வாய மட்டும் ரவ பூட்டு போட்டுக்கணும்.” என்கிறாள். எல்லாப் பண்டிகைகளுமே ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவுதான் செய்து கொண்டிருக்கின்றன.
அதற்காகப் பண்டிகைகளின் சடங்குகளை எல்லாம் விட்டுவிட முடியுமா? என்பது கேள்விக்குறியாகச் “சின்னத்தனம்” என்னும் கதையில் மறைந்து கொண்டு பயமுறுத்துகிறது. பொங்கலுக்குக் கரும்பு கண்டிப்பாக வேண்டும் என்பது சின்னத்தனமா? என்ற கேள்வி எழுந்தால் அதற்கு ஆசிரியர்,”சோலை இல்லாத கரும்பு சூரியனுக்குப் படைக்க முடியாது என்பது உலகமகா நீதி” என்று முன்னமே கூறி விடுகிறார். பிறகு காசுகொடுத்து வாங்கிய கரும்பை வீணாக்க வேண்டாம் எனக்கருதித் தின்றதுதான் சின்னத்தனம் எனக் கருத வைக்கிறது. பல வீடுகளில் சமைத்த சோறும், வாங்கிவந்த தின்பண்டங்களும் வீணாகி விடுகிறதே என்று சாப்பிட்டுவிட்டு மருத்துவரை நாடும் அவலம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
ஒரு சிறுகதை வாசகனுக்குத் தீர்வு சொல்லித்தான் ஆக வேண்டும் எனும் கட்டாயம் எதுவும் நவீன இலக்கிய உலகில் இல்லை. பாட்டி–காக்கை—வடை—நரி கதையில் கூட நீதியை நாம்தானே வருவித்துக் கொள்கிறோம். நரி ஏமாற்றியது என்று ஒரு சாரார் கூறினால் மற்றவரோ பாட்டி மற்றும் காக்கையின் கவனக்குறைவுதானே காரணங்கள் என்கிறார். வாசகனின் ஊகிக்க வைக்கும் கதைதான் திருமணம் செய்து கொடுத்த தங்கை மீண்டும்வரும் “கடமையைச் செய்” சிறுகதை.
மணமாகிப் போன பிறகுதான் தெரிகிறது கட்டினவனுக்கு முன்னமே திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் இருக்கிறதென்று. தெரிந்த தங்கை திரும்பி விட்டாள். அம்மா அழுகிறாள். அப்பாவின் நெஞ்சு படபடக்கிறது. ஆனால் அவனோ அலுவலகத் தணிக்கைபற்றி வகுப்பெடுக்கக் குறிப்புகள் தயாரித்துக் கொண்டுள்ளான். கதையும் முடிந்துவிட்டது. ஒரு திருமணத்தில் பல திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன என்பது போல இக்கதையானது பல கதைகளை எழுதச் செய்யும் எனலாம். அவள் வாழ்வு என்ன ஆயிற்று? அவளைக் கட்டியவன் உண்மையிலேயே முதலில் திருமணமானவன்தானா? பாவம், அந்த ஏழைப் புரோகிதருக்கு ஏன் இந்தச் சோதனை? என்றெல்லாம் வாசகனை கதை யோசிக்க வைத்து வெற்றி அடைகிறது.
கதையின் பெயர் “கடமையைச் செய்” என்பதுதான் யோசிக்க வைக்கிறது. இளமையில் வறுமையின் பிடி இறுகினாலும் படித்து ஒரு கௌரவமான வேலைக்கு வந்தபின் தன் கடமையான அவன் தங்கையின் திருமணத்தைச் செய்து வைக்கின்றான் அவன். இப்போது என்ன நேர்ந்தாலும் பலனைப் பற்றிக் கவலையின்றி அலுவலகக் குறிப்புகளில் மூழ்கிவிட்டானோ? மனு என்பவன் க்ஷத்திரியன், இராவணன் ஒரு பார்ப்பனன் போன்ற செய்திகள் எல்லாம் கதையில் ஒட்டாமல் துருத்திக்கொண்டு நிற்கின்றன என்பதைச் சொல்லித்தானாக வேண்டும்
இதேபோல்தான் ஒரு குறுநாவலாக வந்திருக்க வேண்டிய சிறுகதை “பலி”. எல்லார்க்கும் நல்லவளாகத் தெரியும் எபனேசரும் அவள் மகனும் வரதட்சணைக் கொடுமைக்காகக் கைது செய்யப்படுவது வள்ளுவரின் “செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” என்பதை நினைவூட்டுகிறது. ஒருவேளை எபனேசருக்கு மறுபக்கம் இருக்குமோ என்று வாசகனை யோசிக்க வைக்கிறது கதை. ஆனால் கதையின் இறுதி வரியான “வாய்மை எப்போதாவது வெல்லட்டும்” என்பதுதான் நம்மை இன்னும் சற்றுத் தீவிரமாக யோசிக்க வைக்கிறது.
முடிவைச் சற்று கூட எண்ண விடாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கச் சொல்லும் கதைதான் “பந்தம்” வீட்டுக்கு வந்த மாரியம்மன் கோயில் பூசாரிக்குப் பணம் கொடுக்காமல் பேசித் திருப்பி அனுப்புகிறாள் அவன் மனைவி. அன்று இரவே வீட்டில் திருடு போகிறது. வந்த போலீஸ் நாயோ மாரியம்மன் கோயில்வரை போய் நிற்கிறது. ”பணம் கொடுக்காதற்கும், திருடு போனதற்கும் கொஞ்சமும் சம்பந்தம் கிடையாதுதானே” என்று கதையின் இறுதி வரி நம்மைக் கேட்கிறது. வாசகராகிய நாமும் திணறுகிறோம்.
எழுத்தாளரின் சொந்த அனுபவமான கதைதான் நூல் தலைப்பான “சொல்லில் நிரம்பும் குளம்”. ஆசையுடன் மிகவும் எதிர்பார்க்கும் அவரின் நூல் நிறைய அச்சுப்பிழைகளுடன் வருகிறது. அந்நூலுக்கு வந்த விமரிசனமும் அவரையும் நூலையும் கேலி செய்கிறது. ஆனால் அந்த நூலுக்கு நூலக ஏற்பு கிடைக்கிறது. பதிப்பகத்தார், விமர்சகர், அரசாங்கம் எல்லாரையும் எள்ளலாகப் பார்க்கும் கதை இது. எஸ்ஸார்சி தம்மை எழுத்தாளராகப் பாவித்து எழுதிய மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என்று துணிந்து கூறலாம்.
”வொலகம்” சிறுகதை ஒரு பதிவாகவே நின்று விட்டிருக்கிறது. சாதாரணமானவனை அதிகாரமும் பணமும் சேர்ந்து கொலை செய்கிறது. எதுவும் செய்ய முடியாமல் நியாயம் வேடிக்கை பார்க்கிறது. கதையின் கடைசி வரி இப்படி அமைந்துள்ளது. “என்னடா வொலகம்டா இது; சாமி, பூதம் எல்லாம் செத்துதான் பூடுச்சு.” இதை சாதாரணமான கதைக்கு எடுத்துக்காட்டலாம்.
எத்தனை யுகங்கள் மாறினாலும் ”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் தவிர்க்கவே முடியாது” என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. இதற்குச் சாதாரண எழுத்தாளன் எந்தத்தீர்வு சொல்ல முடியும்? வள்ளுவனே ”நினைக்கப்படும் என்றுதானே கூறிவிட்டுச் சென்றுதானே போய்விடுகிறான்?
“விழிப்பு” சிறுகதை மீண்டும் ஓர் எழுத்தாளர் படும் பாட்டை எள்ளலாய்ச் சொல்லும் கதை. இதுபோன்ற கதைகள் எழுதுவது எஸ்ஸார்சிக்குக் கைவந்த கலை. இந்நூலின் தலைப்புக்கதையும் அதுபோலத்தானே? முன்னர் ஒரு தொகுப்பில் அரசின் சிறந்த நூலுக்கான விருது வாங்கியதை நகை உணர்வுடன் எழுதி இருப்பார்.
கனவு வேறு யதார்த்தம் வேறு என்னும் கதைதான் “பூசை”. இரண்டையும் ஒன்றாகவே நினைத்து வாழ்ந்து விடுவான் ஓர் எழுத்தாளன் எனில் அவனைக் காலம் காயடித்து விடும் என்பது நாம் இதற்கு முன்னர் கண்ட மாபெரும் உண்மை. புதுமைப்பித்தனுக்கும் அதற்கு முன்னம் பாரதியாருக்கும் என்ன நிகழ்ந்தது என்பதைத்தான் நாம் அறிவோமே?
“முல்லைப் பெரியாறு அணை உசந்து போனது, மலாலா நோபெல் வாங்குனது எல்லாம் தெரியுது; ஆனா கையில இருக்கற மஞ்சப்பை அடி கிழிஞ்சு போனது மட்டும் அய்யாவுக்குத் தெரியல” என்று ரேஷன் கடையில் எடைபோடுபவர் எழுத்தாளன் வாங்கிய சர்க்கரை கிழிசல் வழியாய்க் கீழே போய்விட்டதைப் பார்த்துக் கூறும்போது நாம் இன்னும் நடைமுறை உலகத்தில்தான் இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. கனமான செய்தி அதற்கான உருவப்பாட்டை நிகழ்த்தாமல் காற்று போன போக்கில் எள்ளலாய்ப் போய்விடுவது இக்கதையின் பலவீனம். நவீன எழுத்தாளர்கள் அறிய வேண்டிய கருத்தை மையமாகக் கொண்டுள்ள கதை இது.
”பிசகு” மற்றும் “வடு” ஆகிய சிறுகதைகளும் இயங்கும் தளங்கள் வேறு வேறு எனினும் முடிவு ஒன்றாகவே இருப்பதாகத்தான் சிந்திக்க வைக்கிறது. அதாவது வாசகனுக்குக் கேள்விகளை எழுப்ப வழி வகுத்துக் கொடுக்கிறது. முடிவு எதையுமே இரு கதைகளும் சொல்லவில்லை; ’பிசகு’ கதையில் பெரியசாமியின் மனத்தில் என்ன தோன்றியது என்பது பல ஊகங்களைத் தோற்றுவிக்கிறது. ’வடு’ சிறுகதை பேச வந்த பேச்சாளர் பெண்மணி ஏன் ஒன்றும் சொல்லாமலே போய்விட்டார் என்று ஊகிக்க வைத்துப் பல கேள்விகளை எழுப்புகிறது. இவை மிகவும் அசாதாரண கதைகள். இன்னும் தீவிர வாசிப்புக்கு உரிய கதைகள் சில உள்ளன.
மொத்தத்தில் வாசகனின் மனத்தில் ஆழப்படியும் தொகுப்பு இது என்று துணிந்து கூறலாம்.
[சொல்லில் நிரம்பும் குளம்—சிறுகதைத் தொகுப்பு—எஸ்ஸார்சி—வெளியீடு : சொல்லங்காடி; 10, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர்; சென்னை—600 011; பக் : 144; விலை; ரூ130]
- புனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.
- தொடுவானம் 158.சிதைந்த காதல்
- கோடிட்ட இடங்கள்….
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 நிகழ்வு அழைப்பிதழ்
- இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ஏவு கணையில் 104 துணைக் கோள்களை ஏவியுள்ளது.
- படித்தோம் சொல்கின்றோம்: இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆவணப்படுத்திய நூல்
- சாதாரணதும் அசாதாரணமானவையும் – எஸ்ஸார்சியின் புதிய சிறுகதைத் தொகுப்பு “சொல்லில் நிரம்பிய குளம்”
- பொருனைக்கரை நாயகிகள் (திருப்புலியூர் சென்ற நாயகி)