நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”

This entry is part 3 of 14 in the series 26 பெப்ருவரி 2017

சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்ட்து. படிப்பதா? இல்லை அங்கேயே விட்டுவிடுவதா என யோசித்துப் பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். நூலாசிரியரின் முன்னுரை என்னைப்படிக்கத்தூண்டியது. அடக்கமும் எழுத்தின்மீது அக்கறையும் கவனமும் தொனித்த நடை அவர்மீதான மரியாதையைக்கூட்டியது. அதனாலயே தொடர்ந்து இருக்கையிலும் இருகையிலிருந்த நூலிலும் கவனம் பதிந்தது. மலாய்மொழிக்கவிதைகளையும் மலாய்க்கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பையும் தமிழில் பெயர்த்து தந்திருந்தார் ஆசிரியர் பா. சிவம். கவிதை நூலில் ஒரு புதிய சொல் விளைந்திருப்பதைக் உணர்ந்தேன். அது ‘நகர்ச்சி’. நுகர்ச்சி நமக்கு அறிமுகமான சொல். ஆனால் இது நகர்ச்சி. பல கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
“ இரத்தக்கறை படிந்த
நினைவுகளைக் கழுவுவதற்காக
நானும் திரும்பவேண்டும்
நதியிடம்”-
இது அவாங் அப்துல்லாவின் கவிதை. நதியில் கழுவும் அளவுக்கு இரத்தக்கறையென்றால் அந்தக்கனமான நினைவுகளை எண்ணி மனம் அசைபோட்த்தவறவில்லை. அவருடைய இன்னொரு கவிதை:
“ இரவின் மெல்லிய துணி
காயத்திற்கு
ஒருபோதும் மருந்தாகாது”. இது அழகாக மிக அழகாக மனதைச்சீண்டுகிறது. நிலவின் ஒளியை ஆடையாய்ப்போர்த்திய கற்பனை நம்முடையது. இது இரவையே போர்த்திய சிந்தனை இங்கே. இதன் பன்முகப்பார்வையைப் பதிவுசெய்யாமல் தப்பிக்கிறேன் நான்.
இன்னொரு அழகிய கவிதையைத்தந்திருக்கிறார் அப்துல்கபார் பகாரி.
“அமைதியில்தான்
எல்லாம் இருக்கிறது
அடங்கியும் போகிறது”
எத்துணை உண்மை. வாயைத்திறக்காதவரை சொல்லின் மகிமை அலாதிதான். அமைதி ஒருவனை ஞானியாகக்காட்டுகிறது. பலரை ஏமாற்றியும்; ஏமாறவும் செய்துவிடுகிறது. அவசரக்கார்ர்கள் பலமிழந்துபோய்விடுகிறார்கள் ஞானியின் முன். அமைதியில் எல்லாம் இருக்கிறது என்று மிக எளிமையாய்; அழகாய்; ஆழமாய்ப் பதிகிறார் கவிஞர் பஹாரி. எல்லாக் கலைஞர்களும் புல்லாங்குழல் வாசிப்பதில்லை. ஒவ்வொரு கலைஞரிடமும் ஒவ்வொரு கருவி. அது வேறு வேறானது. கருவியின் வழி நமக்கு நிம்மதியை வழங்கினாலும் அவரவர்க்குரிய வலி என்பது அலாதியானது. வலியை மறைத்துத்தான் இசையை வழங்குகிறார்கள். அதற்காக அவர்கள் செலவிடும் மூச்சில் அவர்களுடைய வலி வெளியாகிறது என்பதை நுட்பமாக வெளிப்படுத்துகிறார் சித்தி சைனூன் இஸ்மாயில். இதோ….
“ ஒவ்வொரு கலைஞனின் வலியும்
அவனது புல்லாங்குழல் துளைகளில்
வந்து கசிகிறது”. அடுத்து ஒரு கவிதை என் கண்ணில் பட்ட்து. —–
“ நிறைவேறாத காதலின்
ஞாபகம்
நல்ல கவிதை”. இது மிக் மிக எதார்த்தமானது. நிறைவேறிய காதல் கரையேறியதா என்பது கேள்வியாகிற காலத்தில் வாழ்கிறோம். நிறைவேறிய காதலில் காதல் அதே ஈர்ப்போடு நீட்டிக்கிறதா? என்பதெல்லாம் இப்போது கேள்வி. காதலித்தோர் எல்லாம் திருமணமாகி வாழ்ந்துவிட்டால் கவலையில்லை. அவை சிறந்த காதலெனெ அடைமொழிகொடுத்து முடித்துவிடுகிறோம். சமூகப்பயனும் அதுவாகத்தானே இருக்கமுடியும். அவை நிறைவேறாதபோது கவிதையாகி நிலைபெறுவதை உணர்கிறோம்.

காதலுக்கு புது விளக்கம் தரும் கவிதையொன்று இத்தொகுப்பில் கிடைத்தது. அது இதுதான்….
“காதலென்றால்
எது வென்பதே
காதல்”. இது செசில் ராசேந்திராவின் கவிதை.
காதல் என்றால் என்ன? என்று கேட்டால் காதலித்துப்பார் என்று சொல்வதுபோல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கிறது எனக்கருதுகிறேன். இத்தொகுப்பில் ஒரு நல்ல கவிதையென நான் அடையாளம் கண்ட்து…..
“ இரவுக்கும் பகலுக்குமிடையிலான
ஊடல்…” என்ற கவிதை. எழுதியவர் ஒமார்மொஹமட்நோர். என்னவியப்பு என்றால் எந்தத்தொகுப்பை எடுத்துக்கொண்டாலும் விரைவாக படிப்பதில்லை நான். நேரம் எடுத்துக்கொள்வேன்.தேசிய நூலகத்திலேயே இருந்து அமர்ந்து படித்து முடித்த நூல் “ பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” என்ற கவிதை நூல். மலேசிய நாட்டின் வல்லினம் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 62 பக்கத்தில் என்னைக்கொஞ்சம் புரட்டிய, புரட்டவைத்த நூல். ஆசிரியரின் எதிர்பார்ப்பு அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
“மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்கிறேன் என்று உணராதவகையில் கவிதையை வாசித்தேன்” என்று வாசிப்பவர் உணர்ந்தால் அது தன்மொழிபெயர்ப்புக்கும் படைப்பாற்றலுக்கும் அங்கீகாரம் எனக்கருதுகிறார் ஆசிரியர் பா. சிவம்.
மொழிபெயர்ப்புக்கவிதையாக நான் வாசிக்கவில்லை என்பதை வாக்குமூலமாக்குகிறேன்.
அவரவர்க்கு வாய்த்தவகையில் படைப்பை வழங்கிறார்கள். வாசிக்கும்போது நாம் பெறுவதைப்பொறுத்தே அது எடைபோடப்படுகிறது. வடிவத்தைவைத்தே எடைபோடும் பழக்கம் இப்போது ஓங்கிஒலிக்கிறது. ஆர்ப்பாட்டமின்றி வெளிவந்திருக்கும் இந்நூலை உங்களுக்கு நினைவூட்டி விடைபெருகிறேன்.
( நூலகத்திற்குள் நுழைந்த நாள் 16.2.2017.)

Series Navigationபிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II கலையும் இலக்கியமும்வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *