கதைக்கும் முகங்கள்

author
2
0 minutes, 4 seconds Read
This entry is part 11 of 14 in the series 26 பெப்ருவரி 2017

 

சோம.அழகு

பெரிய எழுத்தாளர்கள் பலரும் தமது பயணங்களை ரசனையான எழுத்தாக வடிக்கும் போது அதை ஒரு நல்ல கற்பனையாக மட்டுமே நான் புரிந்துகொண்டதற்குக் காரணம், பயணம் என்பதை வெயில், வியர்வை, குமட்ட வைக்கும் காரின் ரெக்சின் வாடை போன்றவற்றோடு பிணைத்துப் பார்த்ததால்தான். இதுவரை நான் பெரிதாய்ப் பயணப்பட்டதில்லை……

 

பயணங்கள் சுவாரஸ்யமான ஒன்றாக இருப்பதற்கு மலைகளும் புல்வெளிகளும் மட்டுமல்ல…..சந்திக்க நேரும் மனிதர்களும் காரணம் என்ற ஞானோதயம் (இத்தனை வருடங்கள் கழித்து) இந்த 25வது வயதில்தான் பிறக்கிறது. சமீப ரயில் பயணத்தில் என் எதிரில் இருந்த ஜூலி அக்கா எனக்கான போதி மரமானார். மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்த அவர் வங்காள மொழி கலந்த இந்தியிலும் நான் எனது ஓட்டை இந்தியிலுமாக பேசிக் கொண்டிருந்தது நள்ளிரவு தாண்டியும் நீண்டது. தன்னுடன் பணிபுரியும் அலுவலகப் பெண்களுடன் சுற்றுலா வந்திருப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் இப்படிச் செல்வதாகவும் உற்சாகம் பொங்கக் கூறினார். டார்ஜிலிங், காஷ்மீர், ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத், நேபாளம் என பல ஊர்களுக்குச் சென்று விட்டதாகவும் தற்போது கன்னியாகுமரி சென்று கொண்டிருப்பதாகவும் கூறி, ஒரு ஐந்து வயதுக் குழந்தையின் உற்சாகத்தோடு கண் சிமிட்டினார். பேச ஆரம்பித்த பதினைந்தாவது நிமிடத்திலேயே தன் குடும்பக்கதை மொத்தத்தையும் தன் தங்கையிடம் கொட்டித் தீர்ப்பது போல் என்னிடம் கொட்டினார். தனக்கு மூன்று வயது இருக்கும் போதே தந்தை தவறியது, தாய் பத்து வருடங்களுக்கு முன்பு தவறியது, நான்கு மூத்த சகோதரிகள் வாழ்க்கைப்பட்ட ஊர்கள், அண்ணன் மகனின் சுட்டித்தனங்கள், கடைக்குட்டியாகிய தனக்குக் கிடைக்கும் செல்லம் – முதல் முறை சந்திக்கும் பிரக்ஞையே இல்லாமல் அந்நியோன்யமாக அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது வியப்பை உண்டாக்கினாலும் ரசிக்கவே செய்தேன். “கல்யாணம் கில்யாணம்லாம் அப்புறம் பண்ணிக்கலாம். அடுப்படியில அவிஞ்சு வேகுறதுக்கு முன்னாடி வாழ்க்கையை அணு அணுவா ரசிச்சு வாழ்ந்துக்கலாமே…..” என்று கண்கள் மினுங்க வாழ்க்கை தரப்போகும் ஆச்சர்யங்களை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கும் ஜூலி அக்காவுக்கு வயது 35. “கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பொண்ணு வாழ்க்கையை ரசிக்க இயலாது; நேரம் இருக்காதுனு யார் சொன்னா? அது ஒரு புது வாழ்க்கையாக்கும். அந்தப் பொறுப்புகளை ஏன் சுமைன்னு நினைக்கணும்?……..வழ வழ……கொழ கொழ…….” என்றெல்லாம் விதண்டாவாதம் செய்ய நான் என்ன உண்மை நிலவரம் அறியாத அந்தக் காலத்து கிழத்தியா?

 

“வாழ்க்கையில எனக்குன்னு பெரிய ஆசையெல்லாம் கிடையாது. பொன்னு பொருளுனு எந்த எழவும் வேண்டாம். சாகற வரைக்கும் புதுப்புது மனுசங்கள சந்திச்சு அவங்கள படிக்கிற வாய்ப்பு கிடைச்சாலே போதும். இடையிடையே மானே தேனே பொன்மானேன்னு இலவச இணைப்பா மலை, காடு, ஆறு, அருவின்னு கண்ணுக்குக் குளிர்ச்சியா பார்க்கக் கிடைச்சுட்டா வேற எதுவுமே வேணாம்.” – பன்னிரெண்டாவது வகுப்பு தாண்டாத ஒரு மனுஷியின்(ஜூலி அக்கா) யதார்த்த வார்த்தைகள் தொ.பரமசிவன் அவர்களை நினைவுபடுத்தியது ஆச்சர்யப்பட வேண்டிய ஒன்றா? இல்லை தொ.ப அவர்களே யதார்த்தமான மனிதர்களுக்குரியவர்தானே என அதை ஒரு இயற்கை நிகழ்வாக எடுத்துக் கொள்வதா?….. எப்படியோ!

 

ஒரு நாள் வங்கி வாசலில், “சார், வாங்க போலாம். வேலை முடிஞ்சிட்டு” என்றதும், “கொஞ்சம் அமைதியா உக்காந்து இதைக் கவனி” என்றார் தொ.ப.  பக்கத்து கிராமத்திலிருந்து வந்திருந்த 75 வயது மதிக்கத்தக்க தாத்தா ஒருவர், தனது பத்து வயது பேரனிடம், “டேய்! தாத்தா சாவுக்கு எப்பிடி ஆடுவே?” எனக் கேட்க அவனும் நன்றாகவே ஆடினான். அவனை உற்சாகப்படுத்தும் வகையில் கையில் தாளம் போட்டு அவன் ஆடுவதைப் பார்த்துக் களிப்படைந்தார் தாத்தா. “ ‘வாழ்க்கையில எல்லாமே கொண்டாடப்பட வேண்டியதுதான்…… தன் சாவு உட்பட’ங்கிறத இந்த மனுஷனுக்கு யார் சொல்லி குடுத்திருப்பா? இவரை விடவா வாழ்க்கையை ரசிச்சு அர்த்தமுள்ளதா வாழ்ந்துட முடியும்?” என்றார் தொ.ப.

 

ஜூலி அக்காவும் நானும் இன்னும் என்னவெல்லாமோ பேசினோம். நான் ரயிலில் இருந்து இறங்கும் நேரத்தில் அவர் தூங்கிக் கொண்டிருப்பார் ஆதலால், தூங்கச் செல்லும் முன் ஒருவருக்கொருவர் பிரியாவிடை பெற்றுக்கொண்டோம். கடைசியாக, “வாழ்க்கையை எப்படி ரசிச்சு வாழ்றதுன்னு உங்ககிட்டதான் அக்கா கத்துக்கணும்” என்றதற்கு சிரிப்பை  மட்டுமே பதிலாக உதிர்த்துவிட்டு உறங்கிப் போனார் ஜூலி அக்கா. எவ்வளவு நீண்ட பயணமாக இருந்தாலும் கூன் விழுந்த முதுகும் நிலை குத்திய கண்களுமாய் அந்த ஐந்து அங்குலத் திரையை விட்டு அகலாது அதில் மட்டுமே உலகத்தையும் அனுபவங்களையும் தேட முயலும் என் தலைமுறையினருக்கு மத்தியில் எதிர்பாராமல் கிடைத்த அந்த சந்திப்பின் தாக்கம் ஆயுசுக்கும் போகாது.

 

கால்களில் கட்டப்பட்டிருக்கும் மிகக்குறைந்த வேகத்திலான சக்கரத்தோடு, காலையில் வீ(கூ)ட்டை விட்டுச் செல்லும் போதும் மாலையில் மீண்டும் வீ(கூ)ட்டை அடையும் போதும் ஆன பயணத்திலேயே என்னைத் தேட முற்படுகிறேன். ஜூலி அக்கா சொன்னதைப் போல் புதிய முகங்கள் – அவர்களுடன் பேசும் வாய்ப்பு என்றெல்லாம் கிட்டுவதில்லை. எனினும் கடக்கும் பாதையில் காணும் சில முகங்கள் அந்நாளை உயிர்ப்பித்து முழுமையாக்குகின்றன.

 

(கீழ்வரும் பெயர்களில் சில உண்மையானவை; சில நான் சூட்டியவை)

 

பூமியே ஒரு நிமிடம் சுற்ற மறந்தாலும் காலை சரியாக 9:30 மணிக்கு வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள அடுமனையைத் திறக்கும் ஊழியரான ஆசீர் அண்ணா; காலையில் வயிறு முட்டச் சாப்பிட்டுச் சென்ற அன்றும், விஞ்சை விலாஸின் இட்லி மற்றும் நன்னாரி பாலின் சுவையை நினைவுபடுத்தி நாவில் எச்சில் ஊறச் செய்யும் அக்கடையின் ஊழியர்கள்; நெல்லையப்பர் கோவில் வாசலில் கையில் ஒரு துணிக்கடைப் பையும் பல நாட்களாக எண்ணெய் வைக்காத கலைந்த தலையுமாய் பூப்போட்ட நைட்டி அணிந்து, ‘இன்னிக்குக் காலைல சாப்பிட்டாங்களோ என்னவோ?’ என தினமும் என் மனதில் கேள்வியை எழுப்பி கவலை கொள்ளச் செய்யும் மனநலம் பிறழ்ந்த தேவி அக்கா; சந்திப் பிள்ளையார் கோவிலின் பத்தடிக்கு முன்பிருந்தே சாமிப்பாட்டை வாயில் முணுமுணுத்துக் கொண்டும் கன்னத்தில் போட்டுக் கொண்டும், ஜடை நுனியின் ஈரம் மண் வாசனையைக் கிளப்ப, இந்த மண்ணின் யதார்த்தமான முகத்துடனும் பழக்கவழக்கங்களுடனும் இருக்கும் கடைசி தலைமுறையினள் தான்தான் என அறிவிக்கும் லட்சுமி அக்கா…..இல்லை! லட்சுமி அத்தை; தெற்கு மவுண்ட் சாலையில் உள்ள மதிய உணவு மையத்துக்கு காலை 10 மணிக்கே காட்சி மண்டபத்தில் இருந்து, ஒரு கோலின் உதவியுடன் தன்னுடன் ஒத்துழைக்காத குட்டைக் காலை இழுத்துச் செல்லும், கனகாம்பரப் பூ வைத்து மங்களகரமாகத் தோற்றமளிக்கும் காமாட்சி பாட்டி; காஜா எண்டர்பிரைஸஸ் அருகில் சிறிய மேசையிட்டு மஞ்சள் பூசிய முகமும் நெற்றியை நிறைக்கும் குங்குமமுமாக அமர்ந்து பூ கட்டிக்கொண்டே பூ விற்கும் மலர் அக்கா; வழுக்கோடையைத் தாண்டி குற்றாலம் சாலையில் உள்ள டீக்கடையில் கடன் சொல்லும் வாடிக்கையாளர்களிடம் கூட எப்போதும் சிரித்துப் பேசிக் கொண்டே டீ ஆற்றிக் கொடுக்கும் காதர் பாய்; குறைகளற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல் தினமும் புன்னகையுடன் வரவேற்கும் பல்கலைக்கழக காவலாளி முகமது  அண்ணா; இறைத்தொண்டிற்காய் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, பலருக்கும் வாரி வழங்கி உதவி செய்து, கடைசி காலத்தில் தனது சேமிப்பு முழுதும் நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் கைகளில் சேர்ந்த அதிர்ச்சியில் சுய நினைவை இழந்து, சுற்றி நடக்கும் எதையும் அறியாதவராய், வாழ்க்கையின் வெறுமையை முகத்தால் உணர்த்தும் அடுத்த வீட்டு ராஜா பாதிரியார்; பாதிரியார் தனக்குச் செய்த உதவியை மனதில் கொண்டு , தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு, வீட்டு வேலை பார்த்து அவரைத் தனது தந்தையைப் போல் பார்த்துக் கொள்ளும் எலிசா அம்மா; ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது  அறிமுகமாகி பின் அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் என்னைக் கடந்து செல்லும் சக்தி அக்கா.

 

வழியில் காணும் இம்முகங்களில் ஏதேனும் ஒரு முகம் இரண்டு நாட்கள் தென்படவில்லை என்றால் சிறிய பதற்றம் தொற்றிக் கொள்வதும் மூன்றாம் நாள் காண்கையில் என்னையும் அறியாமல் பெருமூச்சுடன் நிம்மதியடைவதும் வாடிக்கையாகிவிட்டது. இப்படி ஒருத்தி நம்மைத் தேடுவாள் என்று இவர்கள் கற்பனை கூட செய்ய மாட்டார்கள். ஏனெனில் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்னைத் தெரியாதே! இம்முகங்கள் தாம் அறியாமலேயே என் வாழ்வின் ஒரு பகுதி ஆகிவிட்டன. இவையனைத்தும் என் மனதில் தங்கிவிட்ட முகங்கள். மனதில் சரியாகப் பதியாவிடினும் உணர்வுகளைச் சரியாகக் கடத்தி விடும் சில முகங்களும் உண்டு. அவை……….

 

சுற்றுலா வந்த போது மனநலம் பாதித்த தான் குடும்பத்தினரால் இரக்கமில்லாமல் நெடுஞ்சாலையில் இறக்கிவிடப்பட்டதை, ‘இந்த உலகத்தில் மனிதாபிமானமற்ற மோசக்காரர்களும் உண்டு…..அது உறவினர்களாகவும் இருக்கலாம்’ என மிரட்சியுடனான பார்வையில் எச்சரிக்கும் முகங்கள்.

உழுதுண்டு வாழ்வாங்கு வாழ்ந்த காலம் போய் ஓர் ஆழாக்கு அரிசிக்காக தொழுதுண்டு வாழவும் வழியின்றி ஒரு முழம் கயிற்றில் வாய்க்கரிசியைப் பெற முனையும் விவசாய முகங்கள்.

ரயில் நிலைய பிளாட்ஃபாரத்தில் அட்டினக்கால் போட்டு கைகளை மடக்கித் தலைகாணியாக்கி மல்லாக்கப் படுத்துத் தன் நெஞ்சில் அமர்ந்து விளையாடும் குழந்தைக்கு நட்சத்திரங்களைக் காட்டிக் கொஞ்சியவாறே, ‘அடுத்து எங்க போகப் போறோம்? அங்க பொழப்பு நடக்குமா? அடுத்த வேளைச் சோறு எங்கோ? நம் பிள்ளைகளுக்குச் சொத்து சேர்க்க முடியுமா?’ போன்ற கேள்விகளுக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என உலகுக்கு அறிவிக்கும் அந்த நாடோடி முகங்கள். மதிப்பெண்கள், தரவரிசைப் பட்டியல், பொறியியல், மருத்துவம் போன்ற எதையும் தெரிந்து வைத்திருக்காத ஒரு தகுதி போதுமே…..இந்த முகங்கள் மகிழ்ச்சியாய் இருக்க. உலகில் யாரைப் பார்த்தாலும் வராத பொறாமை இவர்கள் மீது வருவதைத் தடுக்கமுடியவில்லை.

குனிய வேண்டிய இடத்தில் குனிந்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்த பின்னும் தமது பிழைப்பில் எப்போது யார் மண்ணை வாரி இறைக்கப் போகிறார்களோ என நித்தமும் நொடியும் ஒரு கலக்கத்துடனேயே வாழ்க்கை நடத்தும் சாலையோர கடைக்காரர்களின் முகங்கள்.

இயற்கையின் ஓர் அற்புதப் பிழைக்காக, வலுக்கட்டாயமாக தம்மை யாசகத் தொழிலுக்குத் தள்ளுவதிலேயே முனைப்பு காட்டும் இச்சமூகத்தின் புறக்கணிப்பையும் அது தரும் வலியையும் சுமந்து கொண்டு தமக்கான அங்கீகாரத்துக்காக ஏங்கித் தவிக்கும் திருநங்கை சகோதரிகளின் முகங்கள்.

அடுத்த வேளை என்ன ஒரு ரணகளமான கலவையில் உணவு கிடைக்கப்போகிறதோ என்ற கவலையில்லாமல் ரசத்தையும் பரோட்டாவையும் பிசைந்து சாப்பிட்டுக் கொண்டே என்னிடம், “உனக்கெல்லாம் வாழ்க்கையில என்ன பெரிய கவலை?” என கண்களால் கேட்டு “ஒரு கவலையும் இல்லை” என என்னை உணர வைக்கும் யாசகர்களின் முகங்கள். எனக்கென்னவோ உலகியற்றியான் பரந்து கெடுவதாகத் தெரியவில்லை. பரந்து விரிந்து கிளை பரப்புவதாகவே/ பரப்பப்படுவதாகவே தோன்றுகிறது.

‘எவ்வளவு உடம்பு சரியில்லாமல் போனாலும் வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்’ – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள எழுதப்படாத இவ்விதியால் காலை 5 மணிக்கு அலைபேசியின் அலறலில் அடித்துப் புரண்டு எழுந்து ஓட்டமும் சாட்டமுமாய் சமைத்து, வீட்டினரைக் கிளப்பி, தானும் கிளம்பி 9 மணிக்கு பேருந்தில் அமருகையில் 4 மணி நேரம் நின்றதை உணர்த்தும் கால் வலி மெதுவாக உடல் முழுதும் பரவ, காலையிலேயே சோர்வோடு காணப்படும் பணிக்குச் செல்லும் பெண்களின் முகங்கள். பண்டிகை நாட்களில்…….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…..விடுங்க பாஸ்!

மரங்களையும் விலங்குகளையும் மாமன் மச்சான் உறவாக்கி இயற்கையோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை, கேவலம்…பணம் என்னும் காகிதத்தைக் காட்டி பூமித்தாயுடனான தொப்புள்கொடி உறவை அறுத்தெறிய முனையும் சில கொழுத்த பணப்பேய்களால், தமது வேர்கள் அரசின் அராஜகத்தால் பிடுங்கப் படுவதை நிராதரவாக கனத்த இதயத்தோடு எதிர்கொண்டு நம்மையும் பதைபதைக்க வைக்கும் மலைவாழ் பழங்குடியின முகங்கள்.

தினமும் ஊசி கோபுரம் பேருந்து நிறுத்தத்தில் எனக்காகவே காத்திருந்து எனது குழந்தைப்பருவத்தை நினைவூட்டி என் ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் குறும்புத்தனத்தையும் குதூகலத்தையும் மீட்டெடுத்து என்னை நான் தொலைத்து விடாமல் பார்த்துக் கொள்ளும் பள்ளிச் சிறுவர் சிறுமியரின் முகங்கள்.

 

“என்னத்ததான் இப்பிடி ஓடி ஓடி விரட்டிக்கிட்டே இருக்கே? எல்லா தருணங்களையும் ரசிச்சு நிதானிச்சுதான் வாழ்ந்துட்டு போயேன்…..” – பல கனவுகளையும் பொறுப்புகளையும் சுமந்து என்னைக் கடந்து செல்லும் அனைத்து முகங்களும் இப்படி வாஞ்சையோடு கதைத்துச் செல்கின்றன. அழகு நிலையங்களில் பழியாகக் கிடந்து சில ஆயிரங்களைக் கொட்டி, எண்ணெய் வழியும் முகத்துடன் (ஷைனிங்கதாம்பா அப்படிச் சொன்னேன்!) ஏ.சி. காரினுள் கூலிங் கிளாஸ் அணிந்து வலம் வரும் முகங்களைக் காட்டிலும், ஜூலி அக்கா முதல் பள்ளிச் சிறுமிகள் வரையிலானவர்களைப் போல திராவிட நிறத்தில் எவ்வித ஒப்பனையுமின்றி யதார்த்தமாக இருக்கும் முகங்களே வசீகரமாய்த் தோன்றுவது எனக்கு மட்டுந்தானா?

 

 

  • சோம.அழகு

 

Series Navigationவாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் ​ வையவன்.பொருனைக்கரை நாயகிகள் – திருக்குறுங்குடி சென்ற நாயகி
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    தாரா says:

    பயணிக்கும் முகங்கள்..இனியும் பொருத்தமான தலைப்பாய் இருந்திருக்கும். பயணங்கள் பொதுவாகவே விதவிதமான அனுபவங்களை நமக்கு அளிக்கும்…பயணிப்பவரை பொறுத்து அது உற்சாகமானதாகவோ அல்லது சுவாரஸ்யம் இல்லாததாகவோ அமையும்…நம்முடன் பயணிக்கும் சகமனிதரும் ஒரு முக்கிய காரணி ஆவார். பகிரும் விஷயங்கள் நம்மை ஈர்க்கவில்லை என்றால் பயணங்கள் அலுப்பை தருகிறது…இடங்களை மட்டுமே காண்பதும் முழுமை ஆவதில்லை…வெவ்வேறு மனிதர்கள் ,அவர்களுடைய பழக்கவழக்கங்கள்,உணர்வுகள்……இவை விதவிதமான அனுபவங்களை அள்ளி தரும்..சோம. அழகு பயண அனுபவங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்த மாதிரி இருக்கும்.உன்னிப்பாக கவனித்து இருப்போமா என்றால் சந்தேகம்தான்.ஒரு சிலரால் மட்டுமே இத்தகைய சிறுசிறு நிகழ்வுகளை அவருடன் இணைத்து வாழ்வோட்டத்தில் கொண்டு செல்ல முடியும்.அத்தகைய ஒரு உணர்வு பூர்வமான கட்டுரை அற்புதமாக அமைந்துள்ளது…வாழ்க!!

  2. Avatar
    அன்னம் says:

    மனித வாசிப்பு என்பது நம்மை மனிதனாக்குகிறது.

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை. – குறள் 315

    இரக்க குணம் நல்லதுதான்! (sympathy). ஆனால், ஒருவர் காட்டும் இரக்கம், அத்துன்பத்தில் உள்ளவரை சங்கடப்படுத்துவதான் நடப்பு. ஆனால், அத்துன்பம் நமக்கே வந்தால், நாம் எப்படி அத்துன்பத்தைக் களைவோமோ, அதேபோல் எண்ணி, செயல்பட்டால், அது துன்பப்படுபவருக்கு உண்மையில் உதவியாக இருக்கும். தையே ஆங்கிலத்தில் “EMPATHY” என்பர். இந்நிலை அடைவதற்கு, மனித வாசிப்பே துணை செய்கின்றது. கட்டுரையாளர் தந்த பதிவுகள் அவர் மனநிலையைக் காட்டுவதோடு, மற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்கின்றன. அதுவே எழுத்தாளராக ஒருவர் பெறும் வெற்றி. வாழ்த்துக்கள் அழகு!

    திருமதி.அன்னம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *