பொருனைக்கரை நாயகிகள் – திருக்குறுங்குடி சென்ற நாயகி

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 14 in the series 26 பெப்ருவரி 2017

எஸ். ஜயலக்ஷ்மி

திருக்குறுங்குடி என்ற ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நம்மாழ்வார், திருக்குறுங்குடிப் பெருமான் திருவருளால் உடைய நங்கைக்குத் திருமகனாக அவதரித்தார் என்பது வரலாறு. இது வாமன க்ஷேத்திரமானதால் குறுங்குடி என்று பெயர் பெற்றது. இவ்வூர் சொல்லில் திருவேயனையார் வாழும் ஊர்

செங்கால் அன்னம் தண்பணையில் பெடையோடும்
கமலத்தலரில் சேறும் குறுங்குடி

ஏழைச் செங்கால் இன்துணை நாரைக்கு இரைதேடிக்
கார்வயல் மேவும் திருக்குறுங்குடி.

இப்படி அன்னமும் நாரைகளும் இனிது வாழும் ஊர் அது.

நம்பியைக் கண்ட நாயகி
குருகூர் நாயகி குறுங்குடி செல்கிறாள். அங்கு கோயில் கொண்டிருக்கும் குறுங்குடி நம்பியைக் காண்கி றாள் . நம்பி என்றால் எல்லோராலும் விரும்பப் படுபவன் என்று பொருள். பெருமை செல்வம், குணம் எல்லாம் நிறையப் பெற்றவன் என்றும் பொருள் கூறுவர். கண்டதுமே தன்னை முற்றிலும் இழந்து விடுகிறாள். அவனுடைய வில்லும் தண்டும், வாளும், சக்கரமும் இவளைக் கொள்ளை கொண்டு விடுகின்றன. அவனையே எண்ணி ஏங்குகிறாள். இரவும் வந்து விட்டது. ஊர் ஓசை அடங்கி விட்டது. ஊரெல்லாம் தூங்கி உலகெல்லாம் நள்ளிருளாகி விட்டதால் நீர்நிலைகளிலுள்ள உயிரினங்களும் உறங்க ஒலி அடங்கி விட்டது.

ஆனால் இந்தப் பாம்பணையான் இன்னும் வரவில்லையே! என்னை இப்படித் தவிக்க விடுகிறானே! என்னைக் காப்பவர் யார்? இந்த இரவும் வல் இருளாய் நீண்டு கொண்டே போகிறதே! நெஞ்சமே நீயும் எனக்கு ஆதரவாக இல்லை.

இரவும் ஊழிக்காலம் போல் நீண்டு கொண்டே போவதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை, மாயும் வகையும் அறியேன். பெண் ணாகப் பிறந்தவர்கள் அடையும் துன்பத்தைக் காணமாட்டேன் என்று சூரியனும் மறைந்து விட்டானோ? மண்ணளந்த மாயவனும் வரவில்லை. என் துயர் தீர்ப்பார் யார்?

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராதொளித்தான். இம்மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய், நம் காரேறு வரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?

என்று அரற்றுகிறாள்

நாயகியின் தவிப்பு.
”ஆபத்துக் காலத்தில் உதவ வேண்டிய என் அன்னையரும் தோழியரும், “உனக்கு என்ன பிரச்சனை? என்று கேட்கிறார்களா? அவர்களுக்கென்ன? என்னைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நிச்சிந்தையாய்த் தூங்குகிறார்கள். அவர்கள் எப்படி யாவது போகட்டும். இந்தக் கண்ணனும் அல்லவா பராமுகமாக இருக்கிறான்? காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளவனே இப்படி யிருந்தால் வேறு யார் தான் வருவார்கள்? இரவோ நீண்டு கொண்டே போகிறது. சங்கு சக்ர தாரியான அவன் வராதபடி நான் என்ன பாவம் செய்தேனோ?

தெய்வங்காள் என் செய்வேன்? ஓர் இரவு ஏழ்
ஊழியாய்
மெய்வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தைவந்த தன் தென்றல் வெம்சுடரில் தான் சுடுமே

என்று பரிதவிக்கிறாள். இந்த இரவு போகாமல் நீண்டு கொண்டே யிருக்குமா? சூரியனுடைய நெடுந்தேர் வரவே வராதா? தாமரைக் கண்ணனும் வரமாட்டானா? என் மனக் கவலையை யார் தீர்ப்பார்

கள்? நான் இப்படி உருகித் தவிக்கிறேனே! ஆனால் இந்த உலகமோ, இப்படி உறங்குகிறதே! என்று வருத்தமும் கோபமும் அடைகிறாள்.
ஒரு வழியாகச்சூரியனுடைய தேர் வர பொழுதும் விடிகிறது.

தாய், தோழி, எச்சரிக்கை
நாயகியின் முகத்தையும் கலக்கத்தையும் கண்ட தாயும் தோழியும், நீ இப்படிக் கலங்குவது சரியல்ல. உன் பெண்மைக்கும், நம் குடிக்கும் இது தக்கதல்ல என்று எச்சரிக்கிறார் கள். இதைக் கேட்ட நாயகி,

நாயகியின் பதில்

எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான்
கண்டபின்
சங்கினோடும், நேமியோடும், தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்
நெஞ்சமே

என்கிறாள். உடனே தாய், தோழி இருவரும், ”பெண்ணே! நீ மட்டுமா குறுங்குடி நம்பியைக் கண்டாய்? நாங்களும் தான் பார்த்தோம். சேவித்தோம். ஆனால் நீ மாத்திரம் ஏன் இப்படித் தவிக்கிறாய்? ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது.” என்று கோபிக் கிறார்கள். நீ மட்டும் அப்படி என்ன சிறப்பாகக் கண்டாய்?” என்று கேட்க தோழி, தாய் இருவரிடமும் நாயகி “தயவு செய்து என்னைக் கோபிக்காமல் என் நெஞ்சினால் அவனை அனுபவித்துப் பாருங்கள். உங்கள் பார்வை வேறு, என் பார்வை வேறு

மின்னு நூலும், குண்டலமும், மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே

என் நெஞ்சினால் பார்த்தால் உங்களுக்கும் புரியும்” என்கிறாள் “இவள் செய்வதறியாது திகைத்து நிற்கிறாள் கலங்குகிறாள். பின் விம்மி விம்மி அழுகிறாள்” என்றெல்லாம் என்னைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டே யிருக்கிறீர்கள். தாயே!

வென்றி வில்லும், தண்டும், வாளும், சக்கரமும், சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா, நெஞ்சுளும் நீங்காவே

நான் என்ன செய்வேன்? வேண்டுமென்று நான் இப்படிச் செய்ய வில்லை. இவளுக்கென்ன? எப்பொழுதும் கண்ணீர் விட்டுக் கொண்டே யிருக்கிறாள் என்று உறவினரிடம் தாயார் சலித்துக் கொள்கிறாள். இதைக் கேட்ட மகள் (நாயகி) “அம்மா ! நீ அப்படிச் சொல்லக் கூடாது. நான் வேண்டுமென்றே நீலிக் கண்ணீர் வடிக்க வில்லை.

தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை
நான் கண்டபின்
பூந்தண் மாலையும் பட்டும் நாணும் பாவியேன்

பக்கத்திலேயே இருப்பது போல் தோன்றுகிறதே! அந்தத் திருத்துழாய் வாசனையும் பட்டாடையும் என் கண்களில் நீரை வரவழைக்கின்றன.

தாயின் வருத்தம்.
தன் மகள் இப்படி குறுங்குடி நம்பியையே நினைத்து ஏங்குவதைக் கண்ட தாயும் வருந்துகிறாள்.

பாலனாய் ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார்
தாளிணைமேல் அளி தண் அம் துழாய் என்றே
மாலுமால், வல்வினையேன் மடவல்லியே

என் பெண் பெருமான் மேல் மோகம் கொண்டதால் அவனுடைய திருவடிகளில் சூடியிருக்கும் துழாய் மாலைக்கு ஆசைப்படுகிறாள்.. இவளை இப்படியே விட்டு விட்டால் சரிப்பட்டு வராது. நம் குடிக்குப் பழி வந்து விடும். என்ன செய்யலாம் என்று யோசிக்கிறாள்.

தாயின் தடை உத்திரவு
திருக்குறுங்குடிப் பெருமானைப் பார்த்த தால் தானே இவள் இப்படிப் பிச்சியானாள்? இனிமேல் அப்பெரு
மானைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானிக்கிறாள். எனவே பெருமாளைச் சேவிக்கத் தடை உத்திரவு போடுகிறாள். அவ
னைக் காண அனுமதிக்க வில்லை. மகள் என்ன செய்கிறாள்.?

மகளின் (நாயகியின்) தீர்மானம்
மகளிடம் அந்தத் தடையுத்தரவு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவள் அதைக் கண்டு கொள்ள வேயில்லை. பொருட்படுத்தவும் இல்லை. என்ன சொல்கிறாள்?

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை
காணக்கொடாள்
சோலைசூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள கொடி மூக்கும், தாமரைக் கண்ணும், கனிவாயும்
நீலமேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன்மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அங்கை உளதே

நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், செய்து கொள்ளுங்கள். அவையெல்லாம் என் நெஞ்சில் நிற்கப் போவ தில்லை

மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கன்னல், பால், அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே

அவன் தான் என் நெஞ்சில் நிரந்தரமாகக் குடியேறி விட்டானே! அவனைக் காண அன்னை அனுமதித்தால் என்ன? அனுமதி தரா விட்டால் தான் என்ன? அவனைக் கண்ட பின் அவன் வடிவழகு என் நெஞ்சமெல்லாம் நிறைந்து அங்கே தங்கியிருப்பதை வேறு யாரா லும் உணரவோ, அறியவோ முடியாது.தேவர் கூட்டங்கள் கை தொழ

அவர்கள் நடுவே அவன் ஈடு இணை யில்லாத அழகுடன் பிரகாசிக் கிறான். அவனுடைய இந்த அழகு நிறைந்த உருவமே என் மனத்துள் பதிந்து வியாபித்திருக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்?

கூடு காத்த தாய்

இதே போன்ற ஒரு காட்சியை முத்தொள் ளாயிரத்திலும் காண்கிறோம். பாண்டிய மன்னன் உலா வரும் போது அவனைக் கண்டு காதல் கொள்கிறாள் ஒரு பெண். இதையறிந்த தாய் மறுநாள் மன்னன் உலா வரும்போது தன் மகள் பார்க்கா வண் ணம் மகளை வீட்டினுள்ளே வைத்துக் கதவை அடைத்து விட்டாள். மகளோ மன்னனையே நினைத்த வண்ணம் இருந்தாள். உலா வீட்டைக் கடந்து சென்ற பின்னரே தாயார் கதவைத் திறந்தாள். மகளுக்கு ஒரே வருத்தம், கோபம். தன் ஆற்றாமையைத் தோழி யிடம் சொல்கிறாள்
”தோழி! வேடர்கள் காடை என்ற பறவை யைப் பிடித்து வந்து அன்போடு வளர்ப்பார்கள். ஆனால் அதனுடைய மனமோ எப்பொழுதும் வயற்பரப்பிலே சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டும் என்றே நினைக்கும். அதே போல என் மனமும் பாண்டிய னோடு சென்று விட்டது. ஆனால் என் தாயோ, அந்த வேடன் போல் என் வெற்றுடலை, வெறும் கூட்டைத்தான் பாதுகாக்கிறாள்

கோட்டெங்கு சூழ் கூடற் கோமானைக் கூடவென
வேட்டாங்குச் சென்ற என் நெஞ்சறியாள்—கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை
வெறுங்கூடு காவல் கொண்டாள்.

என்று அன்னையின் அறியாமையைத் தெரிவிக்கிறாள். அதனால் அன்னையையும், தோழிகளையும் விளித்து ஆண்டாள் நாச்சியார், “துவராபதிக்கே என்னை உய்த்திடுமின்” என்று வேண்டிக் கொண்டது போல் இவளும் வேண்டிக் கொள்கிறாள்.

என் நலம் ஐந்தும் கொண்டு போன குவளை மலர்நிற வண்ணன்
மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.

என்கிறாள். இந்த வாடையோ என் உயிரை முடித்து விடும் போலி ருக்கிறது.

பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக
பெய்வளையார்
கோதை நறுமலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே
என்னை உய்த்திடுமின்

குறுங்குடிக்குச் சென்று அவனை அடைந்து விட்டால் இவள் தாபம் குறையுமாம். எருதின் கழுத்து மணி ஓசையும், தென்றலும், மாலைப் பொழுதும், பிறையும் கூடி என் ஆவியை வாட்டம் செய்கிறதே! அதனால்

கொண்டல் மணிநிற வண்ணன் மன்னு குறுங்குடிக்கே
என்னை உய்த்திடுமின்

என்று இறைஞ்சுகிறாள்.

ஏந்திழையார் ஏசிலும் ஏசுக. நாண் மட, அச்சம்
நமக்கிங்கில்லை நானோ மணி வண்ணரை மறக்க
மாட்டேன்

அதனால் முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் என்று துணிச்சலோடு பேசுகிறாள்.

இவ்வளவு தீவிர பக்தியும் காதலும் கொண்ட இந்த நாயகி நிச்சயம் திருக்குறுங்குடி சென்று அவள் விரும்பியபடி நம்பியின் அடியை அடைந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை

===========================================================================

Series Navigationகதைக்கும் முகங்கள்சனிக்கோளின் துணைக் கோள் தென்துருவத்தில் ஒளிந்துள்ள உப்புக்கடலைச் சமிக்கை மூலம் காஸ்ஸினி விண்ணுளவி கண்டுபிடித்தது
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    BSV says:

    //திருக்குறுங்குடி என்ற ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நம்மாழ்வார், திருக்குறுங்குடிப் பெருமான் திருவருளால் உடைய நங்கைக்குத் திருமகனாக அவதரித்தார் என்பது வரலாறு//

    திருக்குறுங்குடி நெல்லை மாவட்டம். சரி. நம்மாழ்வார் இத்தலப்பெருமாளின் திருவருளால் உடைய நங்கைக்குக் திருமகனாக அவதரித்தார் என்று நான் படித்த வரலாற்றில் இல்லை.

    நெல்லை மாவட்டத்தில் (இப்போது தூத்துக்குடி மாவட்டம்) தாமிரப்பரணிக்கரையிலுள்ள திருவைகுண்டத்தருகில் ஆழ்வார் திருநகரியே நம்மாழ்வார் அவதாரம் செய்த ஊர். அன்னாரின் தந்தை காரிமாறன் அவ்வூரில் ஒரு நிலச்சுவாந்தார் – பாண்டியனுக்குக் கப்பம் கட்டி வந்த ஒரு குறுநிலமன்னன் என்றும் சொல்வர். மனைவியின் பெயர் உடைய நங்கை. உடைய நங்கையாரின் பிறந்தவூர் நாகர்கோயிலிருந்து நெல்லை செல்லும் நெடுஞ்சாலையில் நாகர்கோயில் எல்லையில் உள்ள திருப்பதி சாரம் என்ற ஊர் (நம்மாழ்வார் காலத்தில் அதன் பெயர் திருவெண்பரிசாரம்) மலைகளும் பச்சைபசேல் என்ற வயல்வெளிகளும் அங்கேயே உட்கார்ந்து விடலாமா என்று தோன்றும்.. அச்சிற்றூரில் உறையும் பெருமாளின் திருப்பெயர் திருவாழ்மார்பன். உடையநங்கையார் கருவுற்றிருந்த போது நித்தம்நித்தம் வணங்கியது இத்தெய்வத்தைத்தான். அத்தெய்வத்தினருளாலே அவதாரம் செய்தவர்தான் நம்மாழ்வார். தமிழ்ப்பெண்கள் முதல் பிரவசத்திற்காக‌ தாய் வீடு அனுப்பப்படுவர். அதன்படி உடையநங்கையார் தன் பெற்றோரின் வீட்டிலேயே தங்கி நம்மாழ்வாரைப்பெற்றவுடன் கணவனூர் ஏகினார். எனவே நம்மாழ்வார் திருப்பதிசாரத்திலேயே அவதாரம் செய்ததாகத்தான் எடுக்க வேண்டும். வரலாறு எழுதுவோர் எப்படி ஆழ்வார்திருநகரியில் அவதாரம் செய்தார் என்று சொல்கின்றனர் என்று எனக்கு வியப்பு. ஆயினும் பிறந்த குழந்தை மாதங்களாகியும் ஊமையாக இருந்தபடியால் பெற்றோர் ஆழ்வார் திருநகரி பெருமாளின் கோயிலில் விட்டனர். அக்குழந்தை அக்கோயில் புளியமரத்தின் ஒரு பெரிய பொந்தில் ஏறு உட்கார்ந்து கொண்டது. இதற்கு மேல் நான் சொன்னால் கடையில் நூலை வாங்கும் பழக்கமே வராது. சிரமமெடுத்து காசு செலவழித்து வாங்கிப்படியுங்கள். அதாவது அதற்கு மேல் சடகோபன் எப்படி நம்மாழ்வார் ஆனார் என்ற வரலாற்றை.

    திருக்குறுங்குடி பெருமாளின் திருப்பெயர் வடிவழகிய நம்பி. பின்னாளில் இப்பெருமாளின் மீது காதல் கொண்டவர் நம்மாழ்வார். இப்பெருமாளின் அருளால் பிறந்தவர் என்பது தவறு. பராங்குச நாயகி என்ற பெண் பாவனையில் நம்மாழ்வார் இப்பெருமாளின் மேல் பாடிய பாடல்களையே விதந்தோதும் இக்கட்டுரையாசிரியை, பாடலாசிரியர் பெயரைக்கூட போடவில்லை. நம்மாழ்வார் கோபிக்க மாட்டார். ஆனால் நான் கோபித்துதான் ஆக வேண்டும் அவரது புகழ்பெற்ற சீடர் மதுரகவி பாண்டியனவையில் பொங்கியெழந்த்தைப்போல…

  2. Avatar
    BSV says:

    //பராங்குச நாயகி என்ற பெண் பாவனையில் நம்மாழ்வார் இப்பெருமாளின் மேல் பாடிய பாடல்களை..//

    இன்னொருவரும் இப்படி இதே பெருமாளின் மேல் மையல் கொண்டு எழுதியவை மெத்த புகழ்வாய்ந்தது. அவற்றை எடுத்தெழும்போது இக்கட்டுரையாசிரியை மறக்காமல் பாடலாசிரியர் பெயரைக்குறிப்பிடவேண்டுமெனப்தை இப்போதே சொல்லிவைக்கிறேன்: திருமங்கையாழ்வார். One of the most sensual poetry in Tamil literature. நம்மாழ்வார் தன் காதலை அடக்கி வாசிக்க, திருமங்கையாழ்வார் அடங்காமல் வாசிக்கிறார்.

    உடைய நங்கையார் நித்தம்நித்தம் திருவாழ்மார்பனை தான் பேறுகால நாட்களில் வழிபாட்டார் என்றேன். இதை நான் மறந்தாலும் – அதான் கட்டுரையாசிரியையே மாற்றப்பார்க்கிறாரே அதே போல – நம்மாழ்வார் மறக்கவே இல்லை. தன் தாயே தன்க்குப் பெருமாள்மீது பற்றை உருவாக்கினார் என்கிறார் இப்படி:

    //கருவரங்கத்தில் கிடந்து கைதொழுதேன்//

    இவ்வரியில் யாரைத்தொழுதார்? தன் தாய் தொழம்போது தானும் தொழதது திருவாழ்மார்பனையே. இவ்வரியில் புதை பொருளும் இருக்கிறது. அதாவது பிள்ளைகளுக்கு தெய்வப்பற்றினை அவர்கள் சிறுபிராயத்திலேயே ஊட்ட வேண்டியது பெற்றொரின் கடமை. I don’t mean religious indoctrination. Just do yourself – if it is sincere, genuine and awesome with the goodness of humanity as a whole, your children will value it and take it for themselves. அவர்கள் வழிபாடு உண்மையாக இருப்பின் பிள்ளை அதைப்பிடித்துக்கொள்ளும். நம்மாழ்வார் என்ற ஆழ்வார் உருவாகக்காரணமே அவர் தாயே என்பதும் சரி. திருமங்கையாழ்வாருக்கு அவர் மனைவி; அருணகிரிநாதருக்கும் அப்பருக்கும் அவர்கள் தமைக்கைகள்; நம்மாழ்வாருக்கு அவர் தாய். The inspiration and instigation came from women.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *