வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

This entry is part 4 of 14 in the series 26 பெப்ருவரி 2017

 

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

1.

அந்த இரண்டு படுக்கையறைகளும் இடையே ஒரு தாழ்வாரத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. பரந்த அவ்விரு அறைகளின் தரை விரிப்புகளும் ஜன்னல் திரைச்சீலைகளின் வண்ணக்கலவையோடு ஒத்துப்போகும் வண்ணம் அதே பாணியில் அமைந்துள்ளன.  அவற்றுள் ஓர் அறையின் பெரிய கட்டிலின் மீது விரிக்கப்பட்டுள்ள கனத்த மெத்தை விரிப்பும் தரைவிரிப்பு, ஜன்னல் திரை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வண்ணச் சேர்க்கையோடு காணப்படுகின்றன. அந்த மெத்தையில் கனத்த உடம்புடன் அகலமும் நீளமுமாய் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருக்கிறார். ஆழ்ந்த உறக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணமாய் மிக மெல்லிய குறட்டைகள் விட்டுக்கொண்டிருக்கிறார்..

அதற்கு எதிரில் உள்ள மற்றோர் அறையிலும் அதே போன்ற ஒரு மெத்தையில் ஓர் இளைஞன் இடப்புறமாக ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருக்கிறான். அவனும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாலும் குறட்டை விடவில்லை. அவன் இதழ்களில் சிறு புன்சிரிப்புத் தவழ்ந்துகொண்டிருக்கிறது.

அவ்விரு படுக்கையறைகளிலும் மங்கலான இரவு மின் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன. இரண்டுக்கும் இடையே உள்ள வராந்தாவிலும் அதே போல் மங்கலான இரவு மின்விளக்குகள் வெளிச்சம் தந்துகொண்டிருக்கின்றன. இரண்டு அறைகளிலும் உள்ள சுவர்க்கடிகாரங்களின் டிக்-டிக் ஓசையைத் தவிர அங்கே முழு அமைதி நிலவுகிறது. இரண்டு கடிகாரங்களும் மிகச் சில நொடிகளின் இடைவெளியோடு இரண்டு முறை அடித்து ஓய்கின்றன. அதன் பின் சில நொடிகளில் பெரியவர் ஒரு திடுக்கிடலுடன் எழுந்து தம் படுக்கையில் உட்காருகிறார்.  ஆனால் அவர் விழிகள் மூடி இருக்கின்றன. பயங்கரமான எதனாலோ பாதிக்கப்பட்டவர் போன்று அவர் திடீரென்று அலறுகிறார். ‘வேண்டாம்! வேண்டாம்! இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன். செய்ய மாட்டேன். என்னை அடிக்காதீர்கள். தயவு செய்து அடிக்காதீர்கள்! என்னை விட்டு விடுங்கள்…. சத்தியமாய் இனி அப்படிச் செய்யவே  மாட்டேன்… ’  – இந்த அலறலால் உறக்கம் கலைந்து விழித்தெழும் எதிர் அறை இளைஞன் பிரகாஷ் போர்வையை உதறி அதை உதைத்துக் கீழே தள்ளிவிட்டுப் பெரியவரின் அறைக்கு விரைகிறான்.

“அப்பா! அப்பா! கண் விழித்துப் பாருங்கள். எழுந்துகொள்ளுங்கள்!” என்றவாறு பிரகாஷ் அவரது கழுத்தைத் தன் கையால் வளைத்தபடி அவரது படுக்கையில் அவரருகே உட்கார்ந்து கொள்ளுகிறான். தொடர்ந்து, “அப்பா! என்ன இது? நானும் எத்தனை நாள்களாக டாக்டரைப் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்! நான் சொல்லுவதைக் கேட்கவே மாட்டேன் என்கிறீர்கள்! ஒரு சின்ன ஹிப்னாடிச மருத்துவம் மூலமாக உங்களைச் சரிசெய்துவிட முடியும். ஆனால் ஒரு முரட்டுப் பிள்ளை மாதிரி முரண்டு பிடிக்கிறீர்கள்!” என்று கூறிவிட்டு ஒரு வேதனைப் பெருமூச்சுடன் எழுந்து அருகில் இருக்கும் குட்டை மேஜையை அணுகி அதில் இருக்கும் கூஜாவிலிருந்து ஒரு கோப்பைத் தண்ணீரை எடுத்து  அலறிகொண்டிருக்கும்  அவரை நெருங்குகிறான். எனினும் அவரது அலறலின் ஒலி ஏதோ வலியின் பாற்பட்ட முனகலைப் போல் சன்னமாகி யிருக்கிறது. இன்னமும் கண்களை மூடிக்கொண்டிருக்கும் அவரை அவன் தண்ணீர் பருகச் செய்கிறான். அவரது முகத்தின் மீதும் சிறிது தண்ணீர் தெளிக்கிறான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டவர் போன்று அவர் ஒரு திடுக்கிடலுடன் கண் விழிக்கிறார். அவரது கழுத்தில் அரும்பியுள்ள வேர்வைத் துளிகளைப் பிரகாஷ் ஒரு துவாலையால் துடைக்கிறான். மீண்டும் தன் கையால் அவரது கழுத்தை வளைத்தபடி அவரருகே அமர்ந்து கொள்ளுகிறான். கிஷன் தாசின் இரைச்சலான மூச்சுகளையும், சுவர்க்கடிகாரத்தின் டிக்-டிக் ஓசையையும் தவிர அங்கே முழு அமைதி நிலவுகிறது.

கிஷன் தாஸ், “போய்ப் படுத்துக்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 கொள், பிரகாஷ்! வழக்கமாய் நடப்பதுதானே? அதைப் பற்றிக் கவலைப்படாதே. இப்போது சரியாகிவிட்டது! போய்த் தூங்கு, போ!” என்கிறார்.

தம் கழுத்தைச் சுற்றியுள்ள பிரகாஷின் கையை அகற்றிவிட்டு ஒரு பெருமூச்சுடன் அவர் படுத்துக்கொள்ளுகிறார்.

பிரகாஷ், “அப்பா! நீங்கள் ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? ஒரு ஹிப்னாடிஸ்ட்டைப் பார்க்க ஏன் மறுக்கிறீர்கள்? அவர் விரைவில் உங்களைச் சரிப்படுத்திவிடுவார். என் நண்பன் ஒருவனின் அப்பா இத்தகைய வல்லுநர். உங்கள் மனநோயை அவர் ரகசியமாய் வைத்துக்கொள்ளுவார். வெளியே பரப்ப மாட்டார்.  அது டாக்டர்களின் ஒழுக்கக்கோட்பாடு!” என்கிறான்.

கிஷன் தாஸ், போர்வையால் முகத்தை மூடியவாறு, “இந்தியாவின் தலைநகரத்துப் பெரிய மனிதனைப் பொறுத்த வரையில் அப்படி ஓர் ஒழுக்கக் கட்டுப்பாட்டையெல்லாம் எந்த டாக்டரும் பின்பற்ற மாட்டான்!” என்கிறார்.

“அப்படி நேராது என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன், அப்பா!”

“இதென்ன பிதற்றல்! நீயே ஒரு ஹிப்னாடிஸ்ட்டாக இருந்தால்  என்னை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு  உன் கூற்றை நான் நம்புவேன்!” என்கிற கிஷன் தாஸ் முகத்திலிருந்து போர்வையை அகற்றிவிட்டு, மகனைப் புன்னகையுடன் நோக்கியவாறு, “பிரகாஷ்! உன் கவலை எனக்குப் புரிகிறது. ஒரு வயோதிகனைப் பற்றி நீ இந்த அளவுக்கு அலட்டிக்கொள்ளக் கூடாது!” என்கிறார்.

பிரகாஷும் புன்னகை புரிந்த பின், “உங்களுக்கு ஐம்பத்தொன்பது வயதுதான் ஆகிறது. உங்களை வயோதிகன் என்று எப்படி நீங்கள் சொல்லிக்கொள்ளலாம்? எண்பது வயதான ஒருவர் எழுபது வயதான ஒருத்தியை மணந்துகொண்டதாய் நேற்று அமெரிக்க வார இதழ் ஒன்றில் வந்திருந்த செய்தியைப் படித்தேன்!” என்கிறான்.

கிஷன் தாஸ் சிரித்துவிட்டு, “இருவருக்கும் பயித்தியம் பிடித்திருந்திருக்க வேண்டும்! இருவரும் வெறும் நண்பர்களாகவோ ஒருவர்க்கொருவர் துணையாகவோ சேர்ந்து வாழ்வதுதான் சாத்தியம்! … அது கிடக்கட்டும்! நீ எப்போது என்னைத் தாத்தாவாக்கப் போகிராயாம்?” என்கிறார்.

“நீங்கள் ஒரு ஹிப்னாடிஸ்ட்டைப் பார்க்கச் சம்மதித்த உடனேயே!”

“அதற்கும் நான் தாத்தாவாக ஆவதற்கும் என்ன சம்பந்தம்?”

பிரகாஷ் சிரித்துவிட்டு, “நிறைய இருக்கிறது, அப்பா! நள்ளிரவுக்கு மேல் நீங்கள் இப்படிக் கூச்சல் போட்டுக் கத்தினால் உங்கள் பேரன் தூக்கம் கலைந்து, பயந்து போய் அழத்தொடங்குவானே?” என்கிறான்.

“சாமர்த்தியமாகத்தான் பேசுகிறாய்!”

“அப்பாவைப் போலப் பிள்ளை!”

“பாராட்டுக்கு நன்றி – அது பாராட்டாக இருந்தால்!… சரி, நீ போய்த் தூங்கு, பிரகாஷ்! என்னைப்பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டு தூக்கம் வராமல் புரளாதே! என்ன?”

புன்னகை மறைந்த முகத்துடன், “அதெப்படி, அப்பா? உங்களுக்கு ஒன்று தெரிந்திருக்குமே? மனம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் அப்படி ஒரு பாதிப்புத் தங்களுக்கு இருப்பதை ஒப்புக்கொள்ளுவதே இல்லை என்பது!” என்ற பிரகாஷைக் கிஷன் தாஸ் எரிச்சலுடன் இடைமறிக்கிறார்: “நான் நோயாளி இல்லை, பிரகாஷ்! என் பிரச்சினை என்னவென்பது எனக்குத் தெரியும். ஒருவேளை, என் சின்ன வயதில் நடந்த ஏதோ ஒரு கெட்ட நிகழ்வு நான் தூங்கும் போது உயிர்த்தெழுந்து என்னை வதைக்கிறது என்று நினைக்கிறேன்.  மனத்தத்துவ வல்லுநரைப் பார்த்தாக வேன்டிய அளவுக்கு நான் நோயாளி இல்லை. நான் தினந்தோறுமா தூக்கத்தில் அலறுகிறேன்? இல்லையே? இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தானே? அது ஒன்றும் பெரிய நோய் இல்லை!”

“நீங்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. டாக்டரைச் சந்திக்க மறுக்கும் உங்களைப் போன்ற மனப் பாதிப்படைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை யளிப்பது என்று நான் ஒரு டாக்டரிடம் விசாரித்தேன்….”

“அவருக்குத் தெரியாமல் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அவர் தூங்கும்போது ஆம்புலன்சில் இட்டு வரச் சொன்னாராக்கும்?”

“அதேதான்!”

“அது மாதிரி என்னையும் தூக்கிக்கொண்டு போக எண்ணி யிருக்கிறாயா என்ன?” என்பவர், சினம் பொங்கும் குரலில், “அப்படி யெல்லாம் செய்தால் நான் மூர்க்கனாகிவிடுவேன்! தெரிந்ததா? நள்ளிரவு கடந்த வேளையில் என்னைக் கத்த வைக்காதே!” என்று கூவுகிறார்.

பிரகாஷ், “சேச்சே! உங்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், அப்படியெல்லாம் செய்யமாட்டேன், அப்பா. என்னை நம்புங்கள்!” என்று கெஞ்சும் குரலில் பணிவாய்க் கூறுகிறான்.

அவன் கையை முத்தமிடும் கிஷன் தாஸ், “இந்த ராத்திரி நேரத்தில் சத்தம் போட்டதற்காக மன்னித்துக்கொள், பிரகாஷ்! இது கிடக்கட்டும்… நாளை நீக்கி மறுநாள் நீ ஸ்டேட்சுக்குக் கிளம்ப வேண்டுமல்லவா?” என்று பேச்சை மாற்றுகிறார்.

“ஆமாம், அப்பா. நான் ஜிம்மிலிருந்து திரும்பி வந்த நேரத்தில் நீங்கள் தூங்கப் போய்விட்டதால் ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்ல முடியவில்லை. அமெரிக்கா வைத்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற அந்த இரன்டு இந்தியப் பெண்களும் என்னோடு தொலைபேசினார்கள். என்னை மதராசுக்கு வருமாறும் மூவரும் ஒன்றாகப் பயணிக்கலாம் என்றும் கூறினார்கள். இது அவர்களுக்கு முதல் விமானப் பயணம் – அதிலும் அயல் நாடு ஒன்றுக்கு – என்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறதாம். நான் கிளம்பி வருவதாய்ச் சொல்லியிருக்கிறேன். மதராசில் சந்தித்து மூவரும் விமானத்தில் ஏறுவதாய்த் திட்டம்.”

“உன்னிடம் இருக்கும் எழுத்துத் திறமையை எண்ணி நான் பெருமைப் படுகிறேன், பிரகாஷ்! அமெரிக்கத் தூதரகம் வைக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாய் நீ சொன்னதைக் கேட்டதும் முதலில் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கையாகத்தான் இருந்தது. அது சரி, எப்போது நீ தில்லிக்குத் திரும்பிவருவாய்?”

“இரண்டு வாரங்கள் கழித்து, அப்பா.  நான் தினமும் உங்களோடு தொலைபேசுவேன், சரியா?”

“அந்தப் பெண்களின் பெயர்கள் என்ன?”

“ஒருத்தி மதராசில் வசிக்கும் சுமதி. இன்னொருத்தி ஹைதராபாத்தில் வசிக்கும் சுந்தரி. சுந்தரி முதலில் மதராசுக்கு சுமதியின் வீட்டுக்கு வருவாள். பிறகு இருவரும் விமான நிலையத்துக்கு வருவார்கள். நாங்கள் விமான நிலைய ஓய்வுக் கூடத்தில் சந்திப்போம். இங்கிருந்து நான் மதராஸ் போவதற்கான விமானச் சத்தத்தை இருவரும் தருவதாய்ச் சொன்னார்கள்…. ஆனால்….”

“நீ மறுத்துவிட்டாய்தானே?”

“பின்னே? இந்தியத் தலைநகரத்துப் புகழ்பெற்ற தொழிலதிபரின் மகனாக இருந்துகொண்டு அவர்களிடம் பணம் வாங்குவேனா என்ன?”

வாய்விட்டுச் சிரிக்கும் கிஷன் தாஸ், “அதுதானே? அவர்கள் பணக்காரப் பெண்களாய் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்திருந்தால், மறுத்திருப்பார்களே?” என்கிறார்.

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நடுத்தரக் குடும்பத்துப் பெண்களாய் இருக்கக்கூடும்!…சரி, அப்பா! தூங்குங்கள். நான் என் அறைக்குப் போகிறேன்… “

“நீங்கள் எப்படி உங்களை அடையாளம் தெரிந்துகொள்ளுவீர்கள்?”

“நான் பாக்கு நிறத்தில் கால்சராயும் சந்தன நிறத்தில் பாக்கு நிறத்தில் கோடுபோட்ட முழுக்கைச் சட்டையும், பாக்கு நிறத்திலேயே டையும் அணிந்திருப்பேன் என்று சொன்னேன். பச்சை நிறக் கண்ணாடியும் அணிவேன். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான ஆடை அணிந்திருப்பார்கள் – பச்சை-மஞ்சளில் சல்வார் கமீஸ்! எனவே அடையாளம் கண்டுகொள்ளுவதில் சிரமம் இருக்காது!”

“சரி.   அப்படியானால் இரண்டு வாரங்களுக்கு நான் தனியாக இருக்க வேண்டி வரும்!”

“அதுதான் தினமும் தொலைபேசியில் பேசிக்கொள்ளப் போகிறோமே! அப்புறமென்ன? சரி, அப்பா. நான் வரட்டுமா? குட் நைட்!” என்றவாறு எழும் பிரகாஷ் பிறகு புன்னகை செய்து, “குட் மார்னிங் என்று சொல்லியிருக்க வேண்டும். இப்போது மணி 2.25!” என்கிறான்.

“குட் மார்னிங்! சரி. போய் நிம்மதியாய்த் தூங்கப்பார். உன்  அப்பாவைப் பற்றி வீணாகக் கவலைப்படாதே. என்ன?”

பிரகாஷ் சிந்தனை தேங்கும் முகத்துடன் எதிர் அறைக்குச் சென்று பெருமூச்செறிந்தபடி படுத்துக்கொள்ளுகிறான்.

jothigirija@live.com

 

Series Navigationநெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”தொடுவானம் 159. இனி நான் மருத்துவன்!
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *