தொடுவானம் 167 வாழ்வை வெறுத்தவள்இது என்ன புது குழப்பம்? Treat என்னும் விருந்து வைக்கப்போய் அது tragedy என்னும் சோகத்தில் அல்லவா கொண்டுபோய் விட்டுவிட்ட்து? எனக்கு முன்பே இருந்த அனுபவங்கள் போதாதென்று இது வேறு புது அனுபவமா? பரவாயில்லை. இதுவும் எப்படிச் செல்லும் என்றுதான் பார்ப்போமே என்று துணிவு கொண்டேன். பின்னாளில் சுய சரிதை எழுதும்போது இதையும் சேர்த்துக்கொண்டால் அது மேலும் சுவையாக இருக்கும்.
முன்பே வேறொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள் மேரி. அவனும் அவளுக்காக காத்துள்ளான். இடையில் அது தெரியாமல் பிரவேசித்துள்ளேன். இதை என்னால்தான் தீர்க்கமுடியும். அவனையே திருமணம் செய்துகொள்ள அவளிடம் நாசூக்காகச் சொல்லவேண்டும். அதை அவள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள் என்பதே பிரச்னை.
நான் முன்பே இரண்டு அல்லது மூன்று பெண்களைக் காதலித்துள்ளேன். இறுதித் தேர்வு காரணமாக அவர்களை மறந்து படிப்பில் முழு கவனம் செலுத்தி தேர்ச்சியும் பெற்றுவிட்டேன். உடன் லதாவையோ வெரோனிக்காவையோ நான் தொடர்பு கொள்ளவில்லை. வெரோனிக்காவைப் பொறுத்தவரை அவள் என்னைவிட்டு சென்றுவிட்டாள். கோகிலமும் இறந்துவிட்டாள். லதா மட்டும் இன்னும் சிங்கப்பூரில் ஒருவேளை எனக்காக காத்திருக்கலாம். அவளுடன் பல மாதங்கள் தொடர்பு இல்லை. இந்தச்  சூழலில்தான் மேரி வந்தாள். அது நட்பாகத் துவங்கி காதலாக வெகு வேகமாக மலர்ந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் அவளிடம் உள்ள அழகும் கவர்ச்சியும் எனலாம். ஆனால் ஒரேயொரு குறை. அதுதான் எங்கள் கிராமம். கேரளாவில் வாழ்ந்தவள் தெம்மூர் கிராமத்தில் இருப்பது சாத்தியமா? நிச்சயம் அது முடியாது. அதைப்  பற்றியெல்லாம் யோசிக்காமல்  பழகியது நான் செய்த தவறுதான். அதை நிவர்த்திசெய்ய இது ஒரு சந்தர்ப்பம். அவளை எப்படியாவது சமாதானம் செய்து அவனையே மணம் செய்துகொள்ளச் செய்யவேண்டும். அவள் எங்கிருந்தாலும் வாழவேண்டும். இத்தகைய முடிவுடன் அவளை ஆறுதல் படுத்தினேன்.
” மேரி . உன் இக்கட்டான நிலை எனக்குப் புரிகிறது.சற்றும் எதிர்பாராத நிலையில் நாம் பிரசவ அறையில் சந்தித்து மனதைப் பறிகொடுத்ததும் அல்லாமல் நெருங்கியும் பழகிவிட்டோம். அவன் சொல்வதுபோல் நாம் இன்னும் படுக்கவில்லை. உடல் ரீதியாக நீ இன்னும் மாசுபடவில்லை. எதையும் இழக்கவில்லை. நாம் இப்போது இதே நிலையில் இருப்போம். இது எப்படி முடியும் என்று பார்ப்போம். ” என்றவாறு அவளை நோக்கினேன்.
” நீங்கள் பேசுவதைப் பார்த்தால் நீங்கள் பின்வாங்குவதுபோல் அல்லவா தெரிகிறது? நீங்கள் என்னிடம் சும்மாதான் பழகினீரா? என்னைக் காதலிக்கவில்லையா? ” அவள் நேரடியாக என்னிடம் கேட்டுவிட்டாள்.
” நாம் காதலர்களாகத்தான் பழகினோம். அதில் சந்தேகம் இல்லை. இதில் நீதான் தவறு செய்துவிட்டாய். முன்பே நிச்சயம் ஆகியிருந்து என் மீது உனக்கு காதல் உணர்வு வந்திருக்கக் கூடாது. ”
” நான்தான் அவனைக் காதலிக்கவில்லை என்கிறேனே? அதை உங்களிடம் துவக்கத்திலேயே சொல்லாமல் போனது என்னுடைய தவறுதான். அதற்கு இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதை பின்னால் சொல்லிக்கொள்ளலாம் என்றிருந்தேன். அது இப்படி ஆகிவிட்டது. என்னை இந்த நிலையில் என்ன செய்யச் சொல்கிறீர்கள்? உங்கள் மீது காதலை சூடிக்கொண்ட என் பெண் மனம் இப்போது தவிக்கிறதே? என் உள்ளத்தில் குடி கொண்டுள்ள முதல் ஆண் நீங்கள் ஆகிவிட்டீர்கள். உங்களை அங்கிருந்து இனி அகற்றிவிட்டு அதில் வேறொருவனை குடி வைக்க என்னால் முடியாது. அதைவிட ஒரேயடியாக செத்துவிடலாம்! ” கொஞ்சம் ஆவேசத்துடன்தான் கூறினாள்.
நான் உடன் அவளுடைய வாயை கையால் பொத்தினேன்.
” இனி இப்படி சொல்லாதே. நாம் வாழப் பிறந்தவர்கள். சாகும் வயது வரும்வரை வாழ்ந்து பார்க்கவேண்டும். நாம் மருத்துவச் சேவை புரிய இங்கு பயிற்சி பெற்றுள்ளோம். இதை ஏழை எளிய மக்களுக்கு சேவையாக வழங்கவேண்டும் என்பது நம் கடமை. இதை நிறைவேற்றாமல் இப்படி சாவப்போவதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம்.நீ இப்படி அவசரப்பட்டு விபரீதமாக ஏதும் செய்துவிடாதே. அது நம் இருவரையுமே பாதிக்கும். ”
” உங்களுக்கு பெண் மனம் புரியவில்லை. அது மென்மையுள்ளது. என்னை நீங்கள் தொட்டபோது என் மேனி பட்டு போன்றது என்றீரே. என் இதயம் அதைவிட மென்மையானது. அதனால்தான் எனக்கு இந்த தவிப்பு. ”
” சரி. சரி. அச்சமோ ஆவேசமோ கொள்ளவேண்டாம். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிப்போம். அவன் மீண்டும் அழைக்கிறானா என்பதையும்  பார்ப்போம். இங்கிருந்து யாரோ அவனுக்கு தகவல் கொடுப்பதுபோல்தான் தெரிகிறது. ” நான் தைரியமூட்டினேன்.
” எனக்கு என்னமோ இது விபரீதமாகும்போல் தெரியுது. அவன் எப்படிப்படடவன் என்பது எனக்குத் தெரியாது. என்ன செய்வான் என்பதும் தெரியவில்லை.அவனை நினைக்கவே எனக்கு பயமாக உள்ளது.” அவள் விம்மி அழுதாள். நான் கண்களைத் துடைத்துவிட்டேன்.
சிவந்த கண்களுடன் அவள் விடுதி நோக்கி நடந்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன்.
மறுநாள் அவள் வழக்கம்போல் வேலைக்கு வந்தாள். முகத்தில் எந்த சலனமும் இல்லை. பிரசவங்கள் பார்த்தோம். மதிய உணவுக்கு ஒன்றாகச் சென்றோம். அவனிடமிருந்து தகவல் இல்லை என்றாள். நான் நிம்மதி அடைந்தேன். இனிமேலும் ஏதும் பிரச்னை எனில் அவனால்தான் வரும். அந்த வார இறுதியில் அவளை அரசமரத்தடியில் காணவில்லை. சனிக்கிழமை மாலையில் நாங்கள் அங்குதான் சந்திப்பது வழக்கம். அரை மணி நேரம் நின்று பார்த்துவிட்டு நான் விடுதி அறைக்குச் சென்றுவிட்டேன்.
ஞாயிறு காலையில் நான் பிரசவ அறைக்குச் சென்றபோது அங்கே அவளைக் காணவில்லை. எனக்கு உதவ வேறொருத்தி வந்தாள். அவளிடம் மேரி எங்கே என்று கேட்டேன். அவள் சொன்னது கேட்டு நான் திடுக்கிட்டேன்.
” உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது? அவள் நேற்று இரவு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தாள். நினைவை இழந்து ஆபத்தான நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். ” அது கேட்டு நான் வெலவெலத்துப் போனேன்!
நிலைமை விபரீதமாகிவிட்டது! அவள் சாகத்துணிந்துவிட்டாள்! இது தற்கொலை முயற்சி. விசாரணை செய்தால் என் பெயரும் வெளிவரும்! இது தனியார் மருத்துவமனை என்பதால் காவல் துறைக்குச் செல்லமாட்டார்கள். இங்கேயே இதை சுமுகமாக தீர்க்கப்பார்ப்பார்கள். எப்படியும் விசாரணையின்போது என்னையும் அழைப்பார்கள்! நான் நிலை தடுமாறினேன்.
பிரசவங்களை முடித்துக்கொண்டு நேராக அவள் இருக்கும் தனி வார்டுக்குச் சென்றேன். என்னைக் கண்ட அங்கிருந்த தாதியர் ஒருவித ஏளனமாகப் பார்ப்பது போன்றிருந்தது. எங்களுக்குள்ள உறவு பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். நான் அதைக் கண்டுகொள்ளாமல் அவள் இருந்த அறைக்குள் நுழைந்தேன். அவள் நினைவிழந்த நிலையில் வாடிய மலரைப்போல் கட்டிலில் கிடந்தாள். ட்ரிப் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் அருகில் நின்று பார்த்துவிட்டு வெளியில் வந்தேன்.
அவளுடைய மருத்துவக் குறிப்பேட்டை எடுத்து புரட்டினேன். அவள் இரத்த அழுத்தமும், நாடித் துடிப்பும் நல்ல நிலையில் இருந்தது. நினைவுதான் இன்னும் வரவில்லை. அவள் எப்படியும் பிழைத்துக்கொள்வாள் என்றே தோன்றியது.
வார்டுக்கு வெளியே ஒரு வாலிபன் சோகத்துடன் நின்றிருந்தான். அவன் அருகில் பிரயாணப் பை இருந்தது.அவனைப் பார்க்க வெளி நாட்டிலிருது வந்திருந்தவன் போலிருந்தான். அவன்தான் லண்டனிலிருந்து வந்துவிட்டானா? அவன் திடீர் வரவைத் தாங்க முடியாமல்தான் மேரி இந்த முடிவுக்கு வந்தாளா? நான் அவனிடம் சென்றேன்.
” வணக்கம் டாக்டர். ” என்னை அவன் வரவேற்றான். என் கழுத்தில் ஸ்டெத்தெஸ்கோப் தொங்கியது.
” நீங்கள் யாரைப் பார்க்க வந்துள்ளீ ர்கள்? மேரியையா? ” நேரடியாக அவனிடமே கேட்டுவிட்டேன்.
” ஆமாம் டாக்டர். அவள் எப்படி இருக்கிறாள்? உயிருக்கு ஏதும் ஆபத்தா? ” அவன் பதறினான்.
” ஸ்டேபல் கண்டிஷன்தான். நினைவு வர நேரமாகலாம். ஆனால் இன்னும் கிரிட்டிக்கல்தான். ஆமாம் நீங்கள்தான் லண்டனில் இருந்து வந்துள்ளீரா? ” என்றேன்.
” ஆமாம் டாக்டர். அது உங்களுக்கு எப்படி தெரியும்? ”
” நீங்கள் யாரிடம் அவளை விட சம்மதிக்கவில்லையோ அந்த டாக்டர் நான்தான்.”
அவன் அதிர்ச்சியுற்றவனாக ஒரு கணம் என்னையே உற்று நோக்கினான்.
” டாக்டர்.. நீங்கள் மிகவும் நல்லவராகத் தெரிகிறீர்கள். வேண்டுமானால் நீங்களே அவளை வைத்துக்கொள்ளுங்கள்.அவள் சாகக்கூடாது. வாழவேண்டும். அவளை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள் டாக்டர். ” என்றவாறு என்னுடைய கைகளைப் பற்றிக்கொண்டான்!

( தொடுவானம் தொடரும் )

author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *