இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா?

author
3
0 minutes, 1 second Read
This entry is part 14 of 18 in the series 2 ஜூலை 2017

மணிகண்டன் ராஜேந்திரன்

இன்று நாம் விவாதிருக்க வேண்டிய களம் வேறு..ஆனால் வேறொன்றை பற்றி ஆழமாகவும் தீவிரமாகவும் விவாதித்து கொண்டிருக்கிறோம்.. நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மதுரையில் 463 இடங்களில் “இரட்டை குவளை” நடைமுறையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது..

பிராமணர்களையும் பிராமினியத்தையும் எதிர்த்து இங்கே தான் முதலில் பிராமணர்கள் அல்லாதோர் இயக்கம் தொடங்கப்பட்டது..பின்பு இது நீதிக்கட்சியாக பரிணமித்து பிறகு அய்யா பெரியார் தலைமையில் திராவிடர் இயக்கமாக வீறுகொண்டெழுந்தது..மற்ற மாநிலத்தவர்கள் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு முன்பே சாதிஒழிப்பில் நாம் வெகுதூரம் பயணித்திருந்தோம்..

நாமெல்லாம் இது பெரியார் மண்ணென்று மார்தட்டிக்கொள்ளும் இதேமண்ணில்தான் இன்று சாதி ஆணவப்படுகொலைகளும் தீண்டாமைகளும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது என்பது வேதனையின் உச்சம்..

நமக்கே கூட சாதி ஒழிப்பையோ அல்லது தீண்டாமையை பற்றியே பேசுவதற்கு இன்று சலிப்பு தட்டிவிட்டதாக தோன்றுகியது..அதன் வெளிப்பாடுதான் நாம் இரட்டைக்குவளையை பற்றி பேசாமல் எஸ்.வி.சேகரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.. எழுத்தாளர்கள் கூட இரட்டை குவளையை பற்றி பேசாமல்
எஸ்.வி.சேகரை பற்றி தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..

ஏனென்றால் இங்கு யாரும் திராவிட இயக்கங்களின் சரிவை பற்றியோ திராவிட கட்சிகள் விழுந்த குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றியோ யாரும் பேச முன்வருவது இல்லை..மாறாக எல்லோரும் திராவிட கட்சிகளின் வளர்ச்சியை மட்டுமே பேசவிரும்புகிறார்கள்..

ஏனென்றால் திராவிட கட்சிகளை பற்றி பேசத்தொடங்கினாள்.. எம்ஜிஆர், கலைஞரை பற்றி பேச வேண்டும்..பிறகு ஜெயலலிதா ஸ்டாலினை பற்றி விவாதிக்க வேண்டும்..50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் லாப -நஷ்டங்களை பற்றி விவாதிக்க வேண்டி இருக்கும்..இங்கு கட்டி எழுப்பப்பட்டிருக்கும் சிலரின் புனித பிம்பங்கள் நொறுங்குவதை நம்முடைய கண்களாலே காணவேண்டிய சூழல் ஏற்படும்..அதை யாரும் விரும்புவதில்லை..அதிலிருந்து லாபகமாக தப்பித்து கொள்வதையே நாம் விரும்புகிறோம்..
அதையும் மீறி விவாதித்தால் சிலர் மற்ற மாநிலத்தவர்கள் இன்னும் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை போட்டுகொண்டு திரிகிறார்கள்.. ஆனால் நாம் அப்படி இல்லையே எப்போதே அதிலிருந்து விடுபட்டுவிட்டோம் என்பார்கள். அவர்களின் கூற்று உண்மைதான்..

ஆனால் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக்கொள்ளாமல் இருப்பதைவிட சகமனிதனை தீண்டாமையின் பெயரால் ஒதுக்கிவைக்காமல் இருப்பதே உண்மையான சமூக விடுதலை என்பதை சொல்லி புரியவைப்பதற்கு இன்னொரு பெரியார் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் போல..

அன்புடன்
meera.mani25@gmail.com

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017தி கான்ட்ராக்ட்
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    smitha says:

    It is because of EVR that caste clashes are very high in Tamilnadu. He spread the poison of hatred against Brahmins & ruined the tamil society.

    He did not raise a word of protest against the caste hindus when dalits were massacred in keezhvenmeni in 1968.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திண்ணையில் வெளிவந்த என் கதை : நான்கு குவளை

    https://jayabarathan.wordpress.com/2009/09/19/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/

    ஒரு பனை வளைகிறது !

    சி. ஜெயபாரதன், கனடா

    பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தினுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள் தாகம் தணியவில்லை. இரண்டாம் தடவை உள்ளே விடும்போது, அங்கு வந்த ஜானகி அதைப் பார்த்து விட்டாள்.

    “அடி கழுதை! சிரட்டையிலேயா தண்ணீர் எடுத்துக் குடிக்கிறே!”, இந்து முதுகில் இரண்டு அடி விழுந்தது.

    “அப்புறம் வாய் வச்சுக் குடிச்சி, அந்த அழுக்குச் சிரட்டையை மறுபடியும் குடத்துக்குள்ளேயா விடுவது?” என்று சிரட்டையைப் பிடுங்கி, ஜன்னல் வெளியே விட்டெறிந்தாள், ஜானகி. இந்து அழுது கொண்டு உள்ளே ஓடினாள்.

    உச்சிப் பொழுதில், நெற்றிக் கண்ணைத் திறந்து, தீப்பிழம்பைக் கக்கி உயிரினங்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தான், சூரியன்! வியர்வை சொட்டச் சொட்ட வேலையில் மூழ்கி இருந்த ஜானகி, முகத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.

    அவள் மாதர் குலத்தின் தனித்துவ மடந்தை! கோடியில் ஒருத்தி! நிரம்ப சுத்தம் பார்ப்பவள். ஆசார குல மாது! கணவன் வாய் வைத்துக் குடித்த தம்ளரில்கூடத் தான் நீர் அருந்த மாட்டாள்! வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தம்ளர்! பெயர்கூட எழுதப் பட்டிருக்கும்! அவ்வளவு சுத்தக்காரி ஜானகி!

    மனிதர்களின் பிறப்பையும், தரத்தையும் நிறுத்துப் பார்த்துப் பழகுபவள், ஜானகி!. படைப்பிலே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்பவள். ‘எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர்நிலை’, என்றால் அவள் ஒப்புக்கொள்ள மாட்டள். அதுஅது அந்தஅந்த இடத்தில்தான் இருக்க வேண்டும், என்று சொல்பவள், ஜானகி! கடவுளே பல இனங்களையும் பல நிறங்களையும் பல வடிவங்களையும் காரணமாகத்தான் படைத்திருக்கிறது! என்று நியாயம் பேசுவாள்.

    ஒரே ஒரு பெண் குழந்தைதான் ஜானகிக்கு. ஆறு வயது வந்த செல்லப் பிள்ளை இந்திரா. அந்த அறியாச் சிறுமிகூட அவளது சுத்த இலக்கண விதிகளுக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும்!

    மொம்பையிலிருந்து வேலை மாற்றலாகி, அவர்கள் சென்னை கல்பாக்கத்திற்கு வந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. இருபது ஆண்டுகள் கழித்து, மீண்டும் தமிழ் நாட்டுக்கு விஜயம்! பிறந்த மாநிலமானாலும் சொல்லில், செயலில், முறையில் பல மாற்றங்கள் முளைத்து, ஆல விழுதுகளாய்த் தொங்குவதை அவர்கள் கண்டார்கள்.

    இந்துவை அங்குள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து மூன்று நாளாகிறது. அன்று மாலை பள்ளியிருந்து திரும்பிய இந்து,“அம்மா…அம்மா…! என்று ஆசையோடு ஜானகியின் கால்களைக் கட்டிக் கொண்டாள். பகலில் தாயிடம் வாங்கி அடிகளை எல்லாம் எப்போதே மறந்து விட்டாள், இந்துக்குட்டி!

    சுட்டும் விழிச் சுடர்களைக் சுழற்றிக் கொண்டு, “அம்மா, இன்னைக்கு அஞ்சாம் கிளாஸ் மஞ்சு என்னைப் பார்த்து, நீ என்ன சாப்பிடுவே? மாமிசமா? அல்லது மரக்கறியா? என்னு கேட்டாள். ஏம்மா! மரக்கறின்னா என்ன? மாமிசமென்னா என்ன?”

    “மஞ்சு! அது எந்த நாய்? உன்னைப் பார்த்து, ‘என்ன சாப்பிடறே’ ன்னு கேட்டது?”

    “அப்புறம், ‘இந்து! நீங்க என்ன குலம்?’ என்னு இன்னொரு பிள்ளை கேட்டது. தெரியாதுன்னு சொன்னேன். அம்மா! நாமெல்லாம் என்ன குலம்? குலமுன்னா என்ன?”

    “அது எந்தக் கழுதை? சின்னப் பிள்ளையைப் பார்த்து குலம், கோத்திரம் கேட்குது! இரு! நாளைக்கு உன்னோடு ஸ்கூலுக்கு நானும் வர்றேன். வந்து உன் டீச்சரிடம், ‘ஒன்னும் தெரியாத சின்னஞ் சிறிசிடம், பிள்ளைகள் இப்படியா கேட்பது?’ என்னு புகார் பண்ணுறேன்”, என்று ஆத்திரத்தில் பேசினாள்.

    இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரவி, மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான். “ஜானகி! நானும் ஸ்கூல் பிரின்ஸ்பாலிடம் இதைப் பற்றிக் கேட்கிறேன். என்ன குப்பை ஸ்கூல் இது? மிகவும் பிற்போக்கான சுற்றுப்புறம் இது! பம்பாயை விட்டு நாம் சென்னைக்கு வந்ததே தப்புன்னு இப்போ தெரியுது. அங்கே இந்த மாதிரி யாரும் குலம் கேட்கலே! சாப்பிடுற ஆகாரத்தைக் கேட்கலே! இது புது அனுபவம் நமக்கு! நம்ம தலையெழுத்து!” என்று தலையில் அடித்துக் கொண்டான், ரவி.

    மறுநாள் பள்ளியிலிருந்து வந்த இந்து இன்னொரு அருவருப்பான கதையைச் சொன்னாள்.

    “அம்மா! இன்னைக்கு என் கிளாஸ் டீச்சர் என்னைத் தனியாகக் கூப்பிட்டு, ‘உன் அப்பா பேரு என்னான்னு’ கேட்டாங்க. ‘ரவிச்சந்திரன்’ ன்னு சொன்னேன். அப்புறம் அம்மா பேரைக் கேட்டாங்க. நான் ‘ஜானகி’ ன்னு சொன்னேன். நான் போகத் திரும்பும் போது, மெதுவா …. ‘நீங்க என்ன ஜாதி’ ன்னு கேட்டாங்க…. நான் ‘தெரியாது’ ன்னு முழிச்சேன்…. அம்மா! நாம என்ன ஜாதி? ஏம்மா! ஜாதின்னா என்ன?” என்று ஆர்வமாய்க் கேட்டாள், இந்துக்குட்டி.

    ஜானகிக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. “இங்கே கொஞ்சம் கூட கூச்ச மில்லாமல் டீச்சர் கூட சின்னப் பிள்ளையிடம் இப்படி பச்சையாய் கேட்டிருக்காளே! வெட்கக் கேடு! படிச்சுப் பட்டம் வாங்கின டீச்சரே இப்படி ஜாதி கேட்பாளா?….சீ! சீ! …’பிள்ளைகளைப் பத்தி புகார் செய்யலாம்’ என்றால், இப்போ டீச்சரே அசிங்கமா கேட்கிறா…… பிரின்ஸ்பாலும் இப்படித்தான் இருப்பார்”.

    ரவி எதுவும் சொல்லாது சற்று யோசித்தான். “பழைய தலைமுறைப் பாரதியார், ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடினார்! இப்போ புதிய காளான்கள் முளைத்த உடனே, ‘ஜாதிகள் உள்ளதடிப் பாப்பா’ என்று தேடுதுகள்!” என்று வருந்திக் கொண்டு வெளியே சென்றான் ரவி.

    “ஏம்மா! நாமெல்லாம் என்ன ஜாதி? சொல்லம்மா!” என்று ஜானகியின் கண்களை நோக்கினாள், இந்து.

    ஜானகிக்கு பற்றிக் கொண்டு வந்தது. “சீ! போடி!” என்று மறுத்து, சமையல் அறைக்குள் போய் புகுந்து கொண்டாள். இந்து விடுவதாய் இல்லை. அவளைப் பின் தொடர்ந்தாள்.

    “ஏம்மா! ஜாதின்னா உங்களுக்கும் தெரியாதா?”

    “போடீ மண்டு! இதை எல்லாம் நீ தெரிஞ்சிக்கப்படாது, இந்த வயசிலே!”

    “அப்புறம் ஏம்மா டீச்சர் என்கிட்ட ஜாதி கேட்டாங்க?” என்று அம்மாவை மடக்கினாள், இந்து. ஜானகிக்கு எப்படி, என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. ரவி போய்விட்டானா என்று வெளியே பார்த்துக் கொண்டு, அங்கும் இங்கும் எதையோ தேடினாள். அடுக்கியுள்ள அலமாரிப் பாத்திரங்கள் அவள் கண்ணில் பட்டன. பளிச்சென்று அவளுக்கு உதய மானது!

    “அதோ பார் அலமாரியில். அது என்ன சொல், இந்து?”

    “அது எனக்கு தெரியுமே. எவர்சில்வர் தம்ளர்”

    “இது என்னவென்று சொல் பார்க்கலாம்?”

    “இதுவா, இது கிளாஸ் தம்ளர்”

    “கறை படிஞ்சிருக்கே அதோ, அது என்ன?”

    “பித்தளைத் தம்ளர், அம்மா!”

    பின்பு ஜானகி குனிந்து குப்பைக் கூடையில் ஒன்றைத் தேடினாள். “இதுதான் உனக்கு நல்லா தெரியுமே!”

    “எது? ஓ! அதுவா? ….அது கொட்டங்கச்சி” என்றாள் இந்துக்குட்டி.

    ஜானகியின் முகம் பொங்கியெழும் முழு நிலவாகி, புன்னகையை மின்னியது! இந்து எதுவும் புரியாது விழித்தாள். “ஏம்மா இந்த தம்ளர் பேரை எல்லாம் கேட்கிறீங்க?” என்றாள்.

    “இந்துக்கண்ணு! ஜாதி நான்கு! நாமெல்லாம் எவர்சில்வர் மாதிரி நினைச்சுக்கோ……!”

    “எவர்சில்வருன்னா, நாமெல்லாம் பளபளன்னு இருக்கோமா…….?”

    “அதெல்லாம் இல்லே. எவர்சில்வருன்னா ஸ்டெயின்லஸ் ஸ்டீலுன்னு அர்த்தம். அதாவது கறை பிடிக்காத வெள்ளி!” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே.

    “ஏம்மா! அப்போ கிளாஸ் தம்ளருன்னா யாரு? பித்தளைன்னா யாரு? கொட்டங்கச்சின்னா யாரு?” என்று ஆர்வமோடு கேட்டாள், இந்து.

    “இதை எல்லாம் நானுனக்குச் சொல்ல மாட்டேன். நீயே தெரிஞ்சுக்குவே….! பள்ளிக் கூடத்திலே டீச்சரும் பிள்ளைகளுமே சொல்லிக் கொடுப்பாங்க! போ! போயி வெளியே விளையாடு!”

    இந்து விளையாடப் போக வில்லை. முற்றத்தில் நின்று சிந்தித்தாள். மற்ற மூன்று தம்ளர்களும் யாருன்னு இப்பவே தெரிஞ்சாக வேணும்! யாரிடம் கேட்கலாம்?…… இருக்கவே இருக்கார் அப்பா. நேரே மாடிக்கு ஏறினாள்.

    மாடி அறையில் சோபாவில் அமர்ந்து கொண்டு பத்திரிக்கையை வாசித்துக் கொண்டிருந்தான், ரவி.

    “அப்பா!” என்று கூவி ஓடிப்போய், பேப்பரைப் பிய்த்துக் கொண்டு ரவியின் மடியில் பொத்தென விழுந்தாள், இந்துக்குட்டி. வந்த கோபத்தை விழுங்கிக் கொண்டான், ரவி.

    “ஜாதி எத்தனைன்னு சொல்லுங்க பார்க்கலாம்?…. எனக்குத் தெரியும், அப்பா! அம்மா சொல்லிக் கொடுத்தாங்க!….”

    “அடி சக்கை! இப்போ அம்மாவே உனக்கு அந்தப் பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாளா, வீட்டிலே! பலே ஜோர்! …. இந்து! ஜாதிப் பிரிவுகள் சொல்லி குலத், தாழ்த்தி உயர்ச்சி சொல்லல் பாவம்!” என்கிறார், பாரதியார்.

    “அப்பா! எனக்கு பாரதியாரைத் தெரியாது. இதுதான் தெரியும். ஜாதி நான்கு!” என்று வெகு அழுத்தமாகச் சொன்னாள், இந்து. “நாலையும் சொல்லட்டா? இப்போ!”

    “கேள் இந்து! ஜாதி இரண்டு! அம்மா நாலுன்னு சொன்னது தப்பு! தப்பு! தப்பு!” என்று கனிவாகச் சொன்னான், ரவி.

    “இல்லை! இல்லை! இல்லை! ஜாதி நான்கு! இரண்டுன்னு சொல்ற நீங்கதான் தப்பு! தப்பு! தப்பு!” நாலையும் நான் சொல்றேன்; கேளுங்க! முதல்லே எவர்சில்வர் தம்ளர்! ரெண்டாவது கிளாஸ் தம்ளர்! மூன்றாவது பித்தளை தம்ளர்! நாலாவது கொட்டாங்கச்சி! ஆக ஜாதி நாலு!” என்று நான்கு விரல்களைக் காட்டினாள்.

    ரவி தன்னையும் அறியாது சிரித்து விட்டான். இந்துவை அணைத்துக் கொண்டு அவளது மாம்பழக் கன்னத்திலே இரண்டு முத்தமிட்டான். இந்து திணறிக் கொண்டே, “நாமெல்லாம் எவர்சில்வர்! அப்படின்னா, கறை பிடிக்காத வெள்ளி”.

    “அடி மண்டு! ஜாதி இரண்டொழிய வேறில்லை! ஒன்னு ஆண் ஜாதி! இன்னொன்னு பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான்! ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள்! மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி!”

    கால வெள்ளத்தில் கரை புரண்டு, மக்களை எல்லாம் அடித்துக் கொண்டு போய் மூழ்க்கிய, இந்த ஜாதிப் பெருக்கத்தை, இந்துவுக்கு புரிய வைப்பது எப்படி?

    அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அப்பா ஜாதின்னா என்ன?” என்று மறுபடியும் அவனைக் குடைந்தாள், இந்து.

    ரவிக்கு கோபம் வந்து விட்டது. “இந்து! ஜாதி ஒரு தொத்துநோய்! இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய்! அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை! அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை! புனிதமான உன் இள மனதைக் கெடுத்து விட்டாள் உன் அம்மா! அத்தனையும் ஒரே அபத்தம்”.

    இந்துவுக்கு தொத்துநோய், புற்றுநோய், மருந்து இதெல்லாம் எதுவும் புரியவில்லை! “அப்பா! இதைச் சொல்லுங்க, யாரு கிளாஸ் தம்ளர்? யாரு பித்தளை? யாரு கொட்டங்கச்சி?”

    “அசடு மாதிரி கேட்காதே! எனக்கு இதெல்லாம் பேசப் பிடிக்காது. நீயும் இந்த வயசிலே இதைத் தெரிஞ்சு கொள்ளக் கூடாது”.

    இந்து மெதுவாகப் படியில் இறங்கினாள். அவள் மூளை வேலை செய்யத் தொடங்கியது! சட்டென ஒன்று நினைவில் வந்தது. மீண்டும் படியேறி ரவியிடம் வந்தாள்.

    “அப்பா! எதிர்வீட்டு மாமா போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்து உங்களோடு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் கிளாஸ் தம்ளர்! ஏன்னா? அம்மா கிளாஸ் தம்ளரில்தான் அவருக்கு காஃபி கொடுத்தாங்க!” என்று சொல்லிக் கொண்டே கீழே ஓடினாள், இந்து.

    இரண்டு நாட்கள் கழிந்தன. பகல் பனிரண்டு மணி இருக்கும். மதிய உணவு சாப்பிட இந்து வீடு நோக்கி வரும்போது, வாசலில் ஜானகி கூடைக்காரியிடம் காய்கறி வாங்கிக் கொண்டி ருந்தாள். பணத்தைப் பெற்றுக் கொண்டு எழுந்த கூடைக்காரி, குடிக்கத் தண்ணீர் கேட்கவே, ஜானகி உள்ளே சென்று ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்தாள். தவ்வித் தவ்வி வந்த இந்து, சட்டென பொம்மைபோல் சிலையானாள்.

    பித்தளைத் தம்ளரில் நீரைக் குடித்துக் கொண்டிருந்த கூடைக்காரியைப் பார்த்து, “ஓகோ! இவள்தான் பித்தளையா?” என்று மனதில் பதித்துக் கொண்டாள், இந்து.

    சிறிது நாட்களாக வீட்டில் வேலைக்காரிப் பிரச்சனை இருந்து, ஜானகிக்குச் சிரமத்தைக் கொடுத்தது. வேலை பார்த்து வந்தவள், திடீரென்று விலகி நின்று விட்டாள். பைத்தியம் பிடித்ததுபோல், ஜானகி திணறியபோதுதான், எதிபாராத விதமாக பார்வதி வந்து சேர்ந்தாள், வேலைக்கு.

    பார்வதி காக்கை நிறம்! பத்துப் பதினொரு வயதிருக்கும். மெலிந்த உடல்கட்டு. கிழிந்த பாவாடை. காற்றோட்டம் மிகுதியான மேல்சட்டை. எண்ணை தோயாத தலை மயிர். வறுமைக் கோலத்திலும் முகத்தில் தோன்றியது ஒரு லட்சணம்! ஜானகி பார்வதியை வேலைக்கு வைத்துக் கொண்டாள்.

    முதல் நாள் துள்ளி குதித்து, ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு பம்பரமாய் வேலை செய்தாள், பார்வதி. வீட்டை துப்புரவாய்த் துடைத்தாள். பளிச்சென வாசலைக் கழுவினாள். முகம் தெரியும்படி பளபளவென பாத்திரங்களைத் தேய்த்தாள். சுத்தமாய்த் துணிகளை எல்லாம் துவைத்தாள். ஜானகிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.

    அன்று, அவள் டீ தயார் செய்து, பார்வதியை கனிவாகக் கூப்பிட்டாள்.

    “வா! பார்வதி! வா! இதைத் தின்னு, டீயைக் குடி! அலுமினியத் தட்டில் நாலு இட்லியும் சிறிது சாம்பாரும் இருக்கு. சாப்பிடு! நான் போய் டீ கொண்டு வர்ரேன்”.

    பார்வதியின் முகம் மலர்ந்தது. தயங்கித் தயங்கி வந்து, வாசற் படியில் உட்கார்ந்தாள். ஈரக் கையைப் பாவாடையில் துடைத்துக் கொண்டு, அவக் அவக்கென்று ஒரு நொடியில் தின்று முடித்தாள். இட்லியும் சாம்பாரும் ருசியாய் இருந்தது. ஜானகி எவர்சில்வர் பாத்திரத்தில் டீயைக் கொண்டு வந்தாள்.

    “பார்வதி! அந்த கொட்டாங்கச்சியை எடு! அதிலே டீயை வாங்கிக்கோ! சூடாக இருக்கு”.

    பூரித்துப் போனாள், பார்வதி. இதுபோல் யார் அவளை உபசரித்தார்கள்? டீயை ஊதி ஊதிக் குடித்தாள். சிரட்டையில் இருந்த டீ தேனாய் இனித்தது!

    சிட்டுக் குருவிபோல் பாய்ந்து வந்த இந்து, பார்வதி சிரட்டையில் டீக் குடிப்பதைப் பார்த்து, கண்ணிமைக்காது நின்றாள். அவளது நாலாவது புதிரும் தீர்ந்தது!

    “ஓ! இவள்தான் கொட்டாங்கச்சியா?” இந்துவின் மீன்விழிகள் இரண்டும் விரிந்தன. இந்தப் புதிய கண்டுபிடிப்பை உடனே அப்பாவுக்குச் சொல்லியாக வேண்டுமே, என்று மாடிக்கு ஓடினாள்!

    ரவி காலையில் குளித்துவிட்டு தலை வாரிக் கொண்டிருந்தான். மூச்சு இழைக்க ஏறிவந்த இந்து, “அப்பா! கொட்டாங்கச்சின்னா யாரு தெரியுமா?….பார்வதி!…புதுசா வேலைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்காளே, அவள்தான்” என்றாள்.

    “ஏய் இந்து! நீ என்ன சொல்றே?”

    “இன்னைக்கு அம்மா பார்வதிக்கு சிரட்டையிலே டீ கொடுத்தாங்க……!”

    கேட்டவுடன் சிலையாய் நின்றான், ரவி.

    “என்ன கேவலம்? பார்வதிக்கு, சிரட்டையிலேயா டீயைக் கொடுத்தாள், உன் அம்மா?” ரவி கோபத்தோடு கீழே விரைந்தான். இந்துவும் புரியாமல் அவனைத் தொடர்ந்தாள்.

    ஜானகி சமையல் அறையில் தன் பின்னழகைக் காட்டிக் கொண்டு தோசை சுடுவதில் ஈடுபட்டிருந்தாள்.

    “ஜானகி! என்ன கீழான புத்தி உனக்கு! பார்வதிக்கு சிரட்டையிலேயா டீ கொடுத்தே? இது அநாகரீகச் செயல்!” என்று கத்தினான், ரவி.

    “பின்னே என்ன, வெள்ளித் தம்ளரிலா அவளுக்கு டீ தருவாங்க”, என்று வெடுக்கென வெடித்துப் பேசினாள், ஜானகி.

    “இது தகாத செயல், ஜானகி! ஒரு மனிதப் பிறவிக்குச் செய்யும் அவமானம் இது! நீ இப்படிச் செய்தது எனக்கு அசிங்கமாகத் தெரியுது!”

    “டீ கொடுப்பதா தகாத செயல்? யார் இட்லியும், சுடச்சுட டீயும் தர்ராங்க? எது அவமானம்? வயிறு நிறைய அன்னம் தருவதா? இது தர்மம்! இது சன்மானம்!” என்று விளக்கம் தந்தாள், ஜானகி.

    “சுடச்சுட டீ தருவது மனிதாபிமானச் செயல்தான்! சந்தேகமில்லே. ஆனால் அதைச் சிரட்டையிலே நீ கொடுத்ததால், அந்த தர்மம் அழிஞ்சி போச்சு! உன் சன்மானம் அவமானமாச்சு!”

    “பார்வதியே சந்தோஷமாக சிரட்டையிலே குடிக்கும் போது, உங்களுக்கு ஏன் அது அநாகரீகமாகத் தோணுது? அவமானமாகத் தோணுது? அதுதான் எனக்குப் புரியலை!”

    “ஜானகி! பசி கண்ணை அடைக்கும் என்று சொல்வாங்க. பார்வதி பசியில், நீ தந்த டீயைத் தான் கண்டாள்! சிரட்டை அவள் கண்ணுக்குத் தெரியலை! என் கண்ணுக்கு நீ தந்த சூடான டீ தெரியலை! நார்நாராகத் தொங்கும் அந்த கீழான சிரட்டைதான் தெரியுது!”

    “கொட்டாங்கச்சின்னா கேவலமா? நாமெல்லாம் இளநீர் குடிக்கிற தில்லையா?”

    “ஜானகி! தேங்காய்லே நாம் இளநீர் குடிப்பது வேறு. நல்ல தம்ளர் இருக்க சிரட்டையிலே டீயைக் கொடுப்பது வேறு. சிரட்டை ஒரு கீழ்மையின் சின்னமாகத் தெரியுது, எனக்கு! நாய், கோழிகளுக்குத்தான் அதிலே தீனி வைப்பாங்க!”

    “இதோ பாருங்க! இது என் ஏற்பாடு! சமையல் துறை என் ஆட்சிக்குக் கீழ்பட்டது! அதில் நீங்க தலையிட வேண்டாம்! தர்மம், அதர்மம் என்னவென்று எனக்குத் தெரியும்!” என்று வெடித்துவிட்டு வீட்டினுள்ளே மறைந்தாள், ஜானகி.

    இந்த தர்ம யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இந்து மேலும் குழப்ப மடைந்தாள். நாலாவது புதிருக்குள் ஏதோ சிக்கல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அப்பாவும் அம்மாவும் ஏன் சிரட்டை வைத்துச் சண்டை போடுகிறார்கள்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பள்ளிக்குச் செல்லும் நேரம் நெருங்கவே, அவள் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.

    அன்று ஆபீஸில் இந்த நிகழ்ச்சி, ரவியின் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. ‘ஏதோ ஒரு பாபத்தைச் செய்துவிட்டோம்’, என்ற குற்றம் அவனை வாட்டியது. இரவில் தூங்கிய போதுகூட அவனால் அதை மறக்க முடியவில்லை.

    பொழுது விடிந்தது. தூங்கி எழும்போது அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, ரவி ஆபீஸ் போகத் தயாரானான்.

    அப்போது ‘தடதடவென’ யாரோ மாடிப் படியில் ஏறி வரும் அரவம் கேட்டது. இந்துக்குட்டி மூச்சுவாங்க மாடி நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

    “அப்பா! கீழே வந்து பாருங்கோ! மறுபடியும் அம்மா சிரட்டையிலே பார்வதிக்கு, டீ தர்ராங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

    ரவியின் உதிரம் கொதித்தது! அவனது இரத்த அழுத்தம் ஏறியது! நேற்று உபதேசித்த தெல்லாம் வீண்தானா? ஜானகியின் மண்டை ஓட்டில் அறிவுரை எதுவுமே நுழையாதா? பார்வதியை மனுச ஜென்மமாய்க் கருதாமல், ஒரு நாயைப்போல் நடத்துவதை, எப்படிப் பார்த்து சகித்துக் கொண்டிருப்பது?….மாடிப் படிகளை எல்லாம் மின்னல் வேகத்தில் கடந்து, ரவி பின்புறத் தோட்டத்தை அடைந்தான்.

    பார்வதி பல்லெல்லாம் தெரிய மகிழ்ந்து, சிரட்டையில் டீயை வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் குடிப்பதற்குள், ரவி பாய்ந்து சென்று சிரட்டையைக் கையிலிருந்து பிடுங்கி, தூர வீசினான். கீழே கொட்டிய டீயை மண்தரை உறிஞ்சிக் குடித்தது! ரவி சட்டென உள்ளே சென்றான்.

    அப்பாவித்தனமாக ஓடிப்போய், பார்வதி கீழே விழுந்த சிரட்டையை மீண்டும் எடுத்து, மண்ணைத் தட்டி விட்டு, ஜானகியிடம் மறுபடியும் நீட்டினாள். ஆவி பறக்க இன்னமும் டீ பாத்திரத்தில் இருந்தது.

    வெளியே வந்த ரவி. “பார்வதி! சிரட்டையிலே டீ குடிக்காதே!” என்று தடுத்தான். வெடுக்கென அதைப் பிடுங்கி, தரையிலே போட்டு பூட்ஸ் காலால் மிதித்து உடைத்தான். தான் எடுத்து வந்த எவர்சில்வர் தம்ளரிலே டீயை ஊற்றி பார்வதியின் கையில் கொடுத்தான், ரவி.

    அதிர்ச்சி அடைந்த ஜானகி பிரமித்து நின்றாள். பார்வதி நடுங்கிக் கொண்டே டீயை குடித்தாள்.

    “இதைக் கேட்டுக்கோ, ஜானகி! இனி பார்வதிக்கு நீ சிரட்டையிலே டீ கொடுத்தால், நானும் தினமும் காஃபியை சிரட்டையிலேதான் குடிப்பேன், தெரிகிறதா?” என்று காதில் அறைந்தால் போல் சொல்லிவிட்டு ஆபீஸ் நோக்கிக் கிளம்பினான், ரவி.

    முதன்முதலாக ரவியின் சொற்கள் அவள் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தன! நின்று சிந்தித்தாள்.

    மறுநாள் பொழுது புலர்ந்தது! புள்ளினம் ஆர்த்தன! பார்வதிக்கு டீ தரும் நேரமும் வந்தது! ஒரு கிளாஸ் தம்ளரில் டீயை ஊற்றிக் கொண்டு வந்தாள், ஜானகி! … இதைப் பார்த்த இந்து, ஓடிப்போய் ரவியிடம் சொல்லவில்லை!

    “இந்து! பார்வதி இப்போ பார்வர்டு கிளாஸ், தெரியுமா?” என்றாள் ஜானகி, சிரித்துக் கொண்டே!

    இந்துக்குட்டிக்கு இந்தப் புதிர் புரியவில்லை!

    *********************

    (1980 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

    “ஜாதி இரண்டொழிய வேறில்லை! ஒன்று ஆண் ஜாதி ! இன்னொன்று பெண் ஜாதி. கடவுள் படைச்சது இந்த இரண்டு ஜாதியைத்தான் ! ஆணும் பெண்ணும்தான் ஆண்டவன் உண்டாக்கிய மாறுபாடான ஜீவன்கள் ! மனுசன்தான் அதை நாலாக்கி. பின் நாற்பதாக்கி, அப்புறம் அதை நானூறாக்கி, இப்போ நாலாயிரத்துக்கும் மேல் போயிருச்சி !”

    “ஜாதி ஒரு தொத்துநோய் ! இந்த நாட்டு மக்களைப் பல நூறு ஆண்டுகளாகப் பற்றிக் கொண்டு ஆட்டிப் படைக்கும், ஒரு புற்றுநோய் ! அதை ஒழிக்க இங்கு மருந்தே இல்லை ! அந்த நோயால் துன்பப்படாத மானிடரே இல்லை !”

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) September 19, 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *