கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்

This entry is part 16 of 18 in the series 2 ஜூலை 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

கரசூர் பத்மபாரதி புதுச்சேரி மண்ணின் மகள். ‘ நரிக்குறவர்கள் இனவரைவியல் ‘ என்ற வாழ்வியல்
ஆய்வு நூலின் ஆசிரியை. ‘ சிசு ‘ இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இதில் உள்ளவை
அனைத்தும் துளிப்பாக்கள். பெண்ணியச் சிந்தனையாளரான பத்மபாரதியின் பல புதிய சிந்தனைகள்
இதில் காணப்படுகின்றன. இதைப் படக்கவிதைப் புத்தகம் என்றும் சொல்லலாம்.
கண்ணும் கண்ணும் பார்த்தால்
சாதல் என்றே அர்த்தம்
‘ பல்லிகளின் நடுவே கொசு ‘
— மேலோட்டமாகப் பார்த்தால் திரைப்படத் தாக்கத்தில் அமைந்த மெல்லிய நகைச்சுவை. ஆனால்
கொசுவுக்கோ உயிர் போகும் அபாயம்.
குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபனாகிப் பின் முதுமை வரும்போது குழந்தையின் செயல்பாடுகள்
மீண்டும் தலை காட்டத் தொடங்கும்.இதையே கவிஞர்
குழந்தைப் பருவத்தின்
இரண்டாம் பதிப்பு
‘ முதியோர் ‘ !
— என்கிறார். வித்தியாசமான சிந்தனையாய்க் கீழ்வரும் துளிப்பா.
பாதங்களின்
பாஷை
‘ நாட்டியம் ‘

தங்கம் விலையேற ஏற
காதோரம் வெள்ளி
‘ முதிர் கன்னி ‘
— இக்கவிதையின் தொனிப்பொருளில் உள்ள கனம் எல்லோருக்கும் வருத்தம் தரக்கூடியது. ஆனால்
தற்போது . ‘ பெண் கிடைக்கவில்லை ‘ என்ற குரல் எல்லா திசைகளிலிருந்தும் காதில் விழுகிறது. இதுவும்
இன்று சமுதாயப் பிரச்சனைதான்.
பேசாப்பொருள்களைப் பேச வைத்தல் உத்தியை பத்மபாரதி கையாண்டுள்ளார்.
கதறி அழுகிறேன்
வலிக்கிறது
‘ வெட்டுண்ட மரம் ‘
— கீழ்க்கண்ட கவிதை அறிவியல் உண்மையைச் சொல்கிறது.
இருண்ட வீட்டில்
அமைதி வாழ்க்கை
‘ கருவறை ‘
சமுதாயக் கவலையைச் சொல்ல ஒரு துளிப்பா.
ஆசிரமத்தின்
அகதிகள்
‘ பருவப் பெண்கள் ‘
‘ பளிச் ‘ சென்று மின்னுகிறது ஒரு துளிப்பா.
வலிகளின்
சுருக்கெழுத்து
வாழ்க்கை
மேற்கண்ட கவிதைக்கு விளக்கம் சொல்ல வந்ததோ இது ?
வீட்டுக்கு வீடு
மஞ்சள் காமாலை
‘ குழாய்த் தண்ணீர் ‘
அடுத்து ஒரு முக்கியமான சமூக அவலத்தின் மீது பலமாக அடிக்கிறார் கவிஞர்.
படித்தோர் அடிக்கும்
நாகரிகக் கொள்ளை
‘ சுயநிதிக் கல்லூரி ‘
— இப்பிரச்சனை பற்றி எழுதுபவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளை அடிப்பவர்கள்
அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு நாள் விடியும் என்று நம்புவோம்.
ஐந்து வேட்டிகளின்
ஒரே இடுப்பு
‘ பாஞ்சாலி ‘
— என்ற வெளிப்பாடு புதுமையானது ; எதிர்பாராதது. துளிப்பா வடிவத்தில் ஒரு கருத்தைப் பளிச்சென்று சொல்லிவிடலாம். அதற்கு மேலும் சிந்திக்க வைத்தால் அது சிறந்த துளிப்பாவாக அமையும். கவிதையில் வடிவத்தைவிட கூர்மையான சொல்லாட்சிதான் கவிதையின் வெற்றியைத் தீர்மானிப்பதில்
அதிக பங்கு வகிக்கிறது எனலாம். ‘ தன் உயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை / என் உயிர் பிரிவதைப்
பார்த்து நின்றேன் ‘ என்பது திரைப் படப்பாடல் வரிகள். ஆனால் இவ்வரிகளின் அர்த்த கனம் அற்புதமானது. கரசூர் பத்மபாரதியின் சுய சிந்தனைகள் நிச்சயம் நம்மையும் துளிப்பா எழுதத் தூண்டும்.

Series Navigationதி கான்ட்ராக்ட்வ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *