வளவ. துரையன்
தம் தொகுப்பான முதல் தொகுப்பான,”மெல்ல விரியும் சிறகுகள்” என்னும் கவிதைத் தொகுப்பிலேயே நம் கவனத்தை ஈர்க்கிறார் பரிமளாதேவி. காரணம் இவரது கவிதைகளின் எளிமைத்தனம்தான். எந்தவித மறைபொருளோ, படிமம், மற்றும் இருண்மையோ இல்லாமல் நேரிடையாகக் கைப்பிடித்துத் தம் கூடவே வாசகனை அழைத்துச் செல்கின்றன இவர் கவிதைகள்.
பெண்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டு வீதிகளுக்கு வந்து ”ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என்று பாரதி சொன்னதற்கேற்ப பல்துறை வித்தகராய் விளங்கும் காலம் இது. ஆனாலும் கூட எல்லா மகளிருக்கும் இது கை கூடி இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னமும் கூட பல்வேறு சூழல்களினால் பெண்கள் தாங்கள் எண்ணியவற்றைச் செயல்படுத்த இயலாமல் கூண்டுக்கிளிகளாய் இருப்பதை நாம் இச்சமூகத்தில் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாய்த்தாம் இருக்கிறோம். ஆனாலும் பெண்கள் பலிக்கிறாதோ இல்லையோ தாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் கனவு கொண்டுதாம் இருக்கிறர்கள். அப்படிக் கனவு கண்டு அக்கனவு நசித்துப் போன ஒரு பெண்ணின் மனஓசைதான் ‘கனவு ஊர்வலம்” என்னும் கவிதை. கவிதை அவள் தான் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எண்ணியவற்றை அடுக்கிக்கொண்டே வருகிறது. இறுதியில் அவை ஏன் நிறைவேறவில்லை என்னும் விடை வருகிறது.
”இக்கனவு ஊர்வலங்கள் / ஊர்கின்றன / ஓசையின்றி / இடுக்கான / அடுக்களையில் / ஏங்கிக்கிடக்கும் / என்னிடமிருந்து”
இந்த அடிகளில் உள்ள ’இடுக்கான’ மற்றும் ’ஏங்கிக் கிடக்கும்’ என்னும் சொற்கள் அவளின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் காட்டி நம் மனத்தின் ஆழத்தில் அவளுக்காக ஒரு பரிதாப அலையை எழுப்புகின்றன.
ஆனால் இப்படி அடைந்து அல்லது அடைக்கப்பட்டுக் கிடக்கும் பெண்களுக்கு இவரின் ”விண்ணைத் தொடு பெண்ணே!” கவிதை விடியலுக்கான் ஒரு வழியையும் காட்டுகிறது. துணிவைக் கொடுத்து நம்பிக்கையின் நாற்றங்காலை விதைக்கச் செய்கிறது. அக்கவிதையில் உள்ள
“அடிமை செய்வோரை அடக்கி விடு
ஆணவம் கொண்டோரை ஒடுக்கிவிடு
பொங்கும் கண்ணிரைத் தடுத்து விடு
பாய்ந்து பதுங்கும் புலியாகிவிடு”
என்னும் வரிகள் பெண்களின் உள்ளத்துக்கு உரமேற்றும் வைரவரிகளாகும். இப்போது பெண்கள் மாற்றம் முழுமையானது அன்று; இன்னும் 50 சதவீத இடஒதுக்கிடு என்பது விவாதத்ததுக்கு உரியதாகவே இருக்கும் காலம் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். “இன்னும் விண்ணையும் ஆட்சிசெய்து, பொருளாதார நிபுணர்களாய், அரசியல் தலைவர்களாய், தொழில் அதிபர்களாய்ப் பெண்கள் மாற வேண்டும் என்கிறார் கவிஞர். அதைத்தான், “பெண்களே / இதுதானா மாற்றம் / வேண்டும் இன்னும் / சிறகை விரிப்போம் / வானில் விரிப்போம்” என்று “சிறகை விரிப்போம் கவிதையில் பாடுகிறார்.
ஒரு நல்ல சிறுகதையைக் கவிதையாக்கி அதற்கு “ஏன் படைத்தாய் இறைவா” என்று பெயர் சூட்டி உள்ளார். அம்மாவைத் தெய்வமாகவும், அப்பாவைக் குடித்துவிட்டு வரும் மிருகமாகவும் கருதுகிறாள் ஒரு பள்ளிச் சிறுமி. அவள் வெளி வீதிகளில் படும் பாடெல்லாம் இக்கவிதையில் நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் ஒரு நாள் மாலை அவள் பள்ளி விட்டு வருகையில் அவள் அம்மா இறந்துபோய் மாலை போட்டு வைக்கப்பட்டிருக்கிறாள். அக்கவிதை இப்படி முடியும்போது நம் மனம் ஐயோ! ஐயோ! என்று அரற்றுகிறது.
”அதிகமாப் படிக்கணும் ஆபீசு போகணும்னா
அரைகுறையாய்ப் போயிட்டா
ஆளானா என்ன செய்வோம்?
எங்களை என்ன் படைத்தாய் இறைவா?”
அதுபோலவே “முதுமை” கவிதை தன் கணவனை இழந்த ஒரு பெண்ணின் ஒப்பாரிதான். இக்கவிதை அடுத்த ஜென்மத்திலெ இருவரும் ஆளுக்கிரண்டா பிள்ளை பெறுவோம் என அழுவதாக் முடிகிறது. இக்கவிதையின் தலைப்பு புலம்பல் என்றே இருக்கலாம்.
இயற்கையின் வளங்களைக் கொள்ளையடித்துப் பணம் சேர்க்கிறான் மனிதன். அதற்குச் சட்டத்தையும், அரசாங்கத்தையும் பக்க பலமாகக் கொண்டு விடுகிறான். தான் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்கிறான். வானம், நிலம், நீர், காற்று எல்லாவற்றையும் கெடுத்த நீ, ”நெருப்பை என்ன செய்வாய்? திருடிவிடுவாயோ” எனக் கேள்வி கேட்கிறது “ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்” கவிதை. அவன் நெருப்பைத் திருடப் போய் அதனாலேயே அழிந்தொழிஅதாலும் பரவாயில்லை என இக்கவிதை நினைக்கிறதோ?
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது படைப்போம் புது உலகம்” கவிதை. அதில் உள்ள,
“தாய்தந்தை தன்னுடனாக்கி / முதியோர் இல்லம் / மூடச் செய்வோம் / தாய்மொழி தமிழ் கற்றுத் / தரணியெங்கும் ஒலி கேட்க / முழக்கமிடுவோம்”
என்னும் அடிகள் காலகாலமெல்லாம் நாம் இன்றைய தலைமுறைகளுக்குச் சொல்லி வருபவை. ஆனால் இன்னும் அவை செவிடர் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறதே? என் செவோம்? கவிதாயினி பரிமளாதேவியின் குரலாவது நிறைவேறட்டும்.
மரங்களை வெட்டுவதைக் கண்டிக்கிறது “மரங்களே பேசுங்கள் “ கவிதை. மரங்களே பேசுவதைப் போல அக்கவிதையில் “உயிர் மூச்சுத்தருவதும் உடல் எரிக்கத்தருவதும் நாங்கள்தாம்” என்று அவை சொல்வது கவிதையின் உயிர் நாடிகளான அடிகள். மேலும் ஆதிமனிதனுக்கே நாங்கள்தாம் ஆடைகள் தந்தோம் என்பது புதியசிந்தனை. “நாங்கள் இல்லையென்றால் ஆதிமனிதனென அம்மணமே நீங்கள்” என்னும் அடி மிக முக்கியமானது.
எளிமையான சின்னஞ்சிறிய பொருள்களெல்லாம் தனிப்பாடல்களாக வருவதே கவிதைக்கழகு. அவ்வகையில் கால் கொலுசையும் ஒரு கவிதையாக்கி இருக்கிறார். கைக்குட்டை இவரின் பாடுபொருளாக இருக்கிறது. கொசு கூட இவரின் கவிதையில் அகப்பட்டு மிளிர்கிறது.நூலை மிக் நேர்த்தியாகக் கொண்டு வந்துள்ள பதிப்பகத்தாரைப் பாராட்டித்தானாகவேண்டும். அழகான நவீன ஓவியங்கள் தேவையான அளவு இருப்பது படிக்க சுவாரசியம் தருகிறது. சின்னச் சின்னக் கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம். அவை வாசகனின் ஓட்டத்தைத் தடை செய்கிறது.
மொத்தத்தில் எளிமை, இனிமை, துணிவு அவற்றுடன் சிறந்த பாடுபொருள் ஆகியவற்றினால் மிளிர்கிரது இத்தொகுப்பு
[”மெல்ல விரியும் சிறகுகள்—வ. பரிமளாதேவி; வெளியீடு : ஓவியா பதிப்பகம்,
17-13-11. ஸ்ரீராம் காம்ப்ளக்ஸ்,காந்திநகர் முதன்மைச் சாலை. வத்தலக்குண்டு624 202; பேச : 766 755 7114, 96 296 526 52; பக் : 96; விலை: ரூ 90]
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17
- சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்
- வெய்யில்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- அருவம்
- பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை
- தொடுவானம் 176. முதல் காதலி
- இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது
- தந்தையர் தினம்
- ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை
- நித்ய சைதன்யா கவிதைகள்
- கவிநுகர் பொழுது-16 கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017
- இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா?
- தி கான்ட்ராக்ட்
- கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்
- வ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 19