கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)

This entry is part 11 of 15 in the series 23 ஜூலை 2017

palmuran

பால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல் அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நிர்வாணப் படுத்துகிற கவிதைகள் நிறைந்த தொகுதி இது.

கட்டுரையின் தொடக்கத்திலேயே கடைசி வரிபோல சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வாசித்ததும் வாசித்தபின் இதை எழுதத் தொடங்குவதற்குமான கால இடைவெளியில் என்னுள் எழுந்த உணர்வின் தொகுப்பாய் இவ்வரிகளைச் சொல்லி விட்டு எழுது என்கிறது என்மனம்.

தொடர்ந்து கவிதைகள் வாசிப்பவனாக இருக்கிறேன். எழுதுபவனாக இருக்கிறேன். கவிதை குறித்து விவாதிப்பவனாகவும் உரையாடுபவனாகவும் அறியப்பட்டிருக்கிறேன். முனைவர் பட்ட ஆய்விற்காக ஒரு சேர 250 நவீன கவிதைத் தொகுப்புகளை முதன்மை நூல்களாக வாசித்திருக்கிறேன். அதனூடாக பல பெண்கவிஞர்களின் கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். பல பெண் கவிஞர்களோடு தோழமையும் அவர்களின் கருத்தியல் சார்ந்த செயல்பாட்டுத் தீவிரத்தையும் தெரிந்தவன் .

பெண்ணியம் சார்ந்து எழுதும் பெண்களின் எழுத்துகளில் பெண்ணுடல் குறித்த மொழியாடல் முக்கியமானதாக இருப்பதை அறிவேன். ஏனெனில் அங்கிருந்து தான் ஆணாதிக்கத்தின் ஊற்று தொடங்குகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். நிறைய பேர் உடல்மொழியின் தீவிரத்தைத்  தன் படைப்புகளில் முன் வைத்து அதற்கான அவசியத்தை உறுதி செய்திருக்கிறார்கள்.

அப்படியான பெண்ணின் ஆவேச மனக் குரலாய் இவரின் பல கவிதைகள் இருப்பதை உணர முடிகிறது. இன்னும் சொல்லப் போனால், சொல்வதில் எந்த ஒரு சிறு தடையுமற்ற, வார்த்தைகளின் மடையைத் திறந்து விட்டவராகத் தென் படுகிறார், கனலி விஜயலட்சுமி.

பெண்ணியம், பெண் அடையாளம், பெண்மொழி, பெண்ணெழுத்து, பெண்ணரசியல், பெண்ணிலை அறிவு என்பவை பற்றியெல்லாம் பேசவும் விவாதிக்கவும் செய்கிற சூழல் உருவாகியிருப்பது ஆரோக்கியமானது தான்,என்ற போதிலும் இங்கே பெண்ணுடல் என்பது என்ன? பெண்ணுடல் மீதான சமூகத்தின் பார்வைஎன்ன? பெண்ணுடல் குறித்த ஆணின் பார்வை என்ன? ஏன்? பெண்ணுடல் குறித்தான பெண்ணின் பொதுப்புத்தியாக சூழல் உருவாக்கியிருக்கும் கருத்தியல் தான் என்ன?

தொகுப்பின் முதல் கவிதை.

காலக் கண்ணாடிக்குள்

கடந்துசென்று

தேடத் தொடங்கினேன்

ஆதித்தாயை

 

எனத்தொடங்கும் கவிதையில் ஆதித்தாயிடம் பேசும் போது பெண்ணின் உடல் என்னவாக பாவிக்கப்படுகிறது என்பதை,

 

காமத்தின் கண்டுபிடிப்பும்

கருவியாய்ப் பெண்

உடலமைப்பும் ஆனதன்

கதை சொன்னேன்

 

ஆமாம். இங்கே பெண்ணுடம்பு ஒரு கருவி. கருவி மட்டுமே.  ஆணின் இச்சை தணிக்க ஒரு கருவி. கலவி என்பது கூட ஆண் விருப்பு சார்ந்த ஒன்றாக, மன நோய்க் கூறுள்ள சமூகத்தில் ஒரு கருவி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல.

 

இங்கே பெண்ணுடம்பு என்பது போகத்திற்கானது. ஆணின் ஐம்புலன்களுக்கும் விருந்தும் விழைவைத் திருப்திப்படுத்தும் கருவி.

அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்கக் கூடாது. இருந்தால் அதைத் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயம் ஆணுக்கு நேருமே. அதற்காக பண்பாட்டின் பேரால் கலாச்சாரத்தின் பேரால் கட்டமைக்கப் பட்ட கருத்தியல்கள். பெண்ணியச் செயல்பாட்டில் அத்தகைய கருத்தியல் மீதான கேள்விகளை முன்வைப்பதும் அதனை விமர்சனத்திற்கு உட்படுத்தி அதன் உள்ளீடுகளில் உறைந்திருக்கும் பாலினச் சமனின்மையை வெளிப்படுத்துவதுமே முக்கியமான அம்சமாகும். அதிலிருக்கும் கோபம் நியாயத்தின் பாற்பட்டதாகும்.

பண்பாட்டு வெங்காயம் என்றொரு கவிதை.

அடக்கம் ஒடுக்கம்

அச்சம் நாணம் என

மிச்சம் மீதி முட்டுக்கட்டைகள்

அனைத்தையும்

மொத்தமாய் சேர்த்து

கற்புக்கயிற்றால்

கட்டி எடுத்து

மிதந்து வந்தது

மீண்டும் மீண்டும்

பண்பாட்டுக் காவலர்

பதறி எடுத்தனர்

பாங்காய் அதனைப்

பதியம் போட்டனர்

 

இங்கே பெண்களுக்கானதாக பண்பாட்டுக் காவலர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாமே தன் கட்டுப்பாட்டில் பெண் இருக்க வேண்டும் என்பதற்கான கற்பிதங்கள்.

அச்சம் என்பது எதற்கும் பெண் அஞ்சுபவளாக இருக்க வேண்டும்.

மடம் என்பது எந்த ஒரு பொது விஷய ஞானமும் அற்றவளாக பெண் இருக்க வேண்டும்.  அப்பத்தானே இவன் மங்கலம் பாடலாம்.

நாணம் என்பது எதற்கும் வெட்கிக் குனிபவளாக இருக்க வேண்டும்.

பயிர்ப்பு தான் எல்லாவற்றிலும் கொடுமை. தவறுதலாக பிற ஆடவர் அருகில் வந்தாலே அசூயை அடைய வேண்டும்.

பெண் என்பவள் ஆணின் தனியுடைமையாக வைத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் இவை. பண்பாட்டு வெங்காயங்கள். நல்லாருக்கு கனலி விஜயலட்சுமி, இந்தத் தலைப்பே.

’கற்புக் கயிற்றால் கட்டி எடுத்து’, என்கிறார். இங்கே கற்பு என்பது கற்பிக்கப் பட்டது.  கற்பித்தபடி ஒழுகுவது கற்பு. யார் கற்பித்தபடி? யார் ஒழுகுவது? என்பது தான் பிரச்சனை.

கற்பு எனப்படுவது கரணமொடு புணர,
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே.

(தொல்140)

கற்பும், காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல் இயல் பொறையும், நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்,
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்           (தொல்150)

என்று கற்பு குறித்து தொல்காப்பியம் பேசும். கேட்க வேண்டும் .எவை குறித்தும் கேள்வி கேட்க வேண்டும்.

தீண்டாமை என்னும் கவிதையில் போகத்திற்குப் பெண்ணுடலைக் கருவியாக்கும் அதே ஆண் அவ்வுடலின் மீது எத்தகைய தீண்டாமையைப் புகுத்தியிருக்கிறான் என்பதைப் பேசுகிறது.

பின் நவீனத்துவக் காலத்திலும்

நாங்கள் தீண்டப்படாதவர்கள்

உனக்கு மட்டுமல்ல

உன்கடவுளர்களுக்கும்

என்னும் வரிகள் கவனத்திற்குரியவை.

சமூகத்தில் ஆண்கள் ,பெண்கள், படித்தவர்கள் , படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பது மட்டுமல்லாது அதனைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் ஆண் மையச் சிந்தனையை வெளிப்படுத்தும் வரிகள்.

எந்நாடு போனாலும்

தென்னாடுடைய சிவனுக்கு

மாதவிலக்கான பெண்கள் மட்டும்

ஆவதே இல்லை

என்று எழுதுவார் கவிஞர் கனிமொழி.

 

ஆண்களின் பார்வையில் பெண் ஒரு பொருளாகிப் போனதால் அதனைப் பாதுகாப்பதே பெரும்பாடாய் இருக்கிறது. இங்கே இலக்கிய கதாபாத்திரங்கள் கூட என்னாவாய் நுகரப்படுகின்றனஎன்னும் புனைவாய்,

சிந்தாமணியின் முலைகள்

மாதவிப் பெண்ணின் இடைகள்

கண்ணகி மாதின் தொடைகள்

இலக்கியப் பெண்ணின்

இணையற்ற வளைவுகள்

எல்லாம் உன் குறிக்கானவை

இன்ப வெறிக்கானவை

என்னும் மனோ நிலையில் இருக்கும் ஆணியச் சிந்தனையில் சராசரிப் பெண்ணின் நிலை என்னவாக இருக்கும். தப்பித்தலே பெரும்பாடு. இப்படியெல்லாம் நடந்துகொள்வோம் என்பதைச் சொல்வது தான் பயிர்ப்போ?தொல்லை என்பது இந்த உடம்புக்கானது எனில் அந்த உடம்பை எப்படி ஒரு பெண் இயல்பாய் தூக்கிச்செல்வது.

இரண்டு முலைகளையும்

இடுப்புச்சரிவில்

தெரியும் தொப்புளையும்

மறப்பதிலேயே

என் ஆயுசு

அடியோடு முடிந்து விட்டது

சேலை இழுத்துவிடும்

காமப் பார்வைகளின்

கதிர்வீச்சை மீறி

உரசல் தொல்லைகள்களின்

உபாதைகள் கடந்து

அப்பப்பா என்

சிந்தனைகள் உடலையே

கடக்க முடியவில்லை

இதில் உயரப் பறப்பது எப்படி?

இந்தத் தளத்தில் இது விளக்கமாகப் பேசப்பட வேண்டிய கவிதை.  இது ஏதோ இலக்கிய மாந்தர்களைக் கூட  இப்படியா பார்க்கிறது ஆண்புத்தி எனத் தோன்றும்.  ஆம்.இங்கே அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல அரசிகளுக்கும் முலைகளுக்கென ஜிகினா உடை வடிவமைக்கிற புத்தி. இப்படியான சூழலில் உடல் மறைப்பதே ஒரு பெரும் பணியாக அனிச்சை செயலாக மாறிப் போய் விடுகிறது. எதை மறைப்பது.  உடம்பில் பெண்கள் ஆண்பார்வையிலிருந்து எதை மறைப்பது. தலை மயிரிலிருந்து கால் கட்டை விரல் வரை பெண்ணின் அங்கம் யாவும் அவனுக்கு காம நிலையங்கள் தாம். இந்த லட்சணதில் இந்த உடலைச் சுமந்து கொண்டு தரையிலேயே இருக்க பிரயத்தனப் படும் சூழலில் பறப்பதெப்படி. இந்த ஆண் திமிர் எதில் இருக்கிறது. பரம்பரையை உருவாக்க வழங்கும் விந்தில் தானா? அது தான் இத்தனைத் திமிருக்கும் காரணமா? அவ்வாறெனில் அதைத் தவிர்க்க வழியில்லையா? இருக்கிறது இவரின் பார்வையில் க்ளோனிங்.

விந்தின் வீரியத்தில்

கொக்கரித்த கொட்டத்திற்கு

மரணஅடி

கருவறை மகிமையை

உலகிற்கு உணர்த்திட்ட

உன்னத படைப்பு

என்கிறார்.  ஆண்மையத் திமிர் விந்து வழங்குதலில் இருக்குமாயின் அதற்கு மாற்றை ஆதரிக்கிற முதல் பெண்குரலாக இதனைப் பார்க்கிறேன்.

இங்கே கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்கிற சித்தாந்தத்தில் தான் பல குடும்பங்கள் ஓடுகின்றன. கணவனும் மனைவியும் இணக்கமாய் வாழ்வதாய் ஊர் சொல்கிறது. உற்றார் பாராட்டுகிறார்கள். அனால் உண்மை என்ன என்று அங்கதமாய்ப் பேசும் கவிதை, ’இணக்கம்’,.

காக்கும் செருப்பே

காலைக் கடித்தது

காலப்போக்கில்

ஒவ்வாமல் இருந்த

செருப்பும் காலும்

ஒத்துப் போய்விட்டன

அரம்போனது

செருப்பிற்கா

மரத்துப் போனது

காலுக்கா

என்ற கேள்விக்கு விடையளிக்க முடியாத தாம்பத்யம் தான் இணக்கமான பல இல்லற வாழ்க்கைகளின் நிலைமை என்பதே நிதர்சனம்.

பெண்கல்வியின் தேவை குறித்துப் பேசுகிறார். அதுவொன்றே கெட்டிதட்டிப் போன ஆணாதிக்க படிநிலைகளில் இருந்து பெண் வெளியேறுவதற்கான கதவுகளைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்.

‘தலை வாரி பூச்சூடி உன்னை,
பாடசாலைக்கு போ என்று சொன்னாளே அன்னை.
சிலை போல ஏன் இங்கு நின்றாய்?
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?’

என்பார் பாவேந்தர்.

நீ உணர்ந்து வர வேண்டும் முன்னே

உள்ளம் கிளர்ந்து எழவேண்டும் பெண்ணே

பொறுத்தது போதும் கண்ணே-நீ

பொங்கியெழுந்திடு முன்னே

என்கிறார்.

 

இவரது கவிதைகள் வெறும் கோபாவேசக் கவிதைகல் என்றுமட்டும் சொல்லிவிட முடியாது. அழகான உவமைகள் அங்கங்கே காணக்கிடைக்கின்றன. நல்ல சொல்லாட்சிகள் நிறைந்த வரிகள் விரவிக்கிடக்கின்றன.

கட்டுரையை முடிக்கும் போது தொடக்கவரியைக் கொண்டே முடிக்க விரும்புகிறேன்.

 

பால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல், அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நிர்வாணப் படுத்துகிற கவிதைகள் நிறைந்த தொகுதி இது.

தொடர்ந்து கவிதைகளிலும் காத்திரமான கருத்தியல் கொண்ட மனத்திற்கு சொந்தக்காரராய் கவிதைகள் மூலம் அறியப்படும் கனலி விஜயலட்சுமி களப்பணியிலும் பெண்களின் உரிமைக்காகவும் பாலியல் சமனுக்காகவும் செயலாற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

 

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017மொழிவது சுகம் 23 ஜூலை 2017
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *