திருடன்

author
2
0 minutes, 1 second Read
This entry is part 10 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

குருமூர்த்தி பழனிவேல்

“இவனா, இவன் ஒரு திருடன்ல…..!!”, ஜோசப் தைவோ தன் அருகில் இருந்த சக பயணியிடம் அவர் படித்துகொண்டிருந்த கார்டியன் செய்தித்தாளை பார்த்து சொன்னார். அவர் சுட்டிய படம் ஒரு மத்திய அமைச்சருடயது. அவருடைய வெளிநாட்டு பயணம் பற்றிய செய்தியில் அவர் நைஜீரிய பாரம்பரிய உடையில் சிரித்துக்கொண்டிருந்தார்.
ஜோசப் தைவோவுக்கு டிசம்பர் வந்தால் நாற்பத்தைந்து வயது முடிகிறது. ஜோசப் நைஜீரியாவில் லாகோஸ் நகரில் இசல்லோ இண்டஸ்ட்ரியல் பகுதியில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் டெலிவரி வாகன ஓட்டியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நகரத்தில் வேலை செய்யும் மக்களில் முக்கால்வாசிப்பேர்போல ஜோசப்பும், லாகோஸில் இருந்து 17 கிலோமீட்டர் வடக்கே இருக்கும் சாங்கோ ஒட்டாவில்தான் தங்கியிருந்தார்.
காலையில் சங்கோ ஒட்டாவில் இருந்து வேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள் என்று மக்கள் கூட்டம் கிடைக்கும் பஸ்களிலோ சொந்த கார்களிலோ லாகோஸ் வந்து சேர்வார்கள். பிறகு மாலையில் நீண்ட கியூக்களில் நின்று பஸ்களில் சங்கோ ஒட்டாவிற்கு திரும்புவார்கள்.
சங்கோ ஒட்டாவில் ஜோசப் வீட்டில் அவருடை மனைவி புகோலாவும் ஒரு மகனும் இரண்டு மகள்களும் என்று விரிவான குடும்பமாக இருந்துகொண்டிருந்தார்கள். மனைவி வயிற்றில் சுமக்கும் நான்காவது குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதென்று ஏற்கனவே விவாதம் தொடங்கியாகிவிட்டது. யுருபா குடும்பங்களில் இது ஒரு சாதாரண எண்ணிக்கைதான். நைஜீரிய குடும்பப்பெண்களைபோல புகோலா, வீட்டு வாசலிலேயே ஒரு சிறிய சாப்பாட்டுக்கடை நடத்திக்கொண்டிருந்தாள்.
குழந்தைகள் படுக்கையில் புரண்டுகொண்டிருக்கும் காலை ஆறு மணிக்கே ஜோசப் சங்கோ ஒட்டா வீட்டில் இருந்து புறப்பட்டுவிடுவார். தெருகோடி புதர்ககளில், உதிக்கும் சூரியனின் கதிர்கள் ஊடுருவும் முன்னலேயே பஸ் நிறுத்தத்திற்கு வந்துவிடுவார்.
மோசமான ரோடுகளாலும், அகலம் குறைந்த சாலைகளிலும் கடைகள் போட்டு குறுக்கி வியாபாரம் செய்யும் கோசுலோ (go slow) வியாபாரிகளாலும் உச்சநேரங்களில் வாகனங்கள் மில்லி மீட்டர் மில்லி மீட்டராகத்தான் நகரும்.
ஆமை வேக ட்ராபிக்கில் சங்கோ ஒட்டாவில் இருந்து லாகோஸ் வந்து சேரவேண்டும் என்றால் காலை ஆறு மணிக்கு கிளம்பினால்தான் அலுவலக நேரம் 8.30க்கு முன் அலுவலகத்துக்கு வந்துசேர முடியும். சங்கோ ஓட்டாவில் இருந்து ஓஷோடி வந்து அங்கிருந்து இசல்லோ சென்று சேரும்போது காலை 7.45 ஆகி இருக்கும். காலை 8.30 மணிக்கு மேனேஜர் வந்து அலுவலக அறையை திறக்கும் முன், வெளியில் நடையில் போட்டிருக்கும் பெஞ்சில் படுத்து ஜோசப் ஒரு குட்டித்தூக்கம் போட்டு விடுவார்.
ஜோசப், பேருந்து சங்கோ ஓட்டாவிலிருந்து வரும்போது பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு வருவார். அரசியல், விலைவாசி, அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல்கள், என்று அவருடைய பேச்சு இருக்கும். அரசியல் பற்றி வருத்தம் அடைவார், கோபம் கொள்வார், கவலை தெரிவிப்பார். பள்ளி இறுதிவரை படித்திருந்ததால் ஜோசப்புக்கு செய்தித்தாள்கள் படிக்கும் வழக்கம் இருந்தது. மற்றவர்களிடம் நாட்டு நடப்புகளை, விலைவாசிகளைப் பற்றி விவாதிப்பதில், அவருடைய சர்ச்சில் ஞாயிற்று கிழமைகளில் சிற்றுரை ஆற்றுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
அன்றும் பக்கத்தில் பேருந்தில் சகபயணி படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளில் இருந்த மத்திய அமைச்சருடைய படத்தைச் சுட்டிக்காட்டித்தான் ஜோசப் தைவோ சொன்னார், “இவனா, இவன் ஒரு திருடன்ல…..!!” .
மத்திய அமைச்சர் ………… நாட்டுக்கு செல்கிறார்.
“வெளிநாட்டுப் பயணம்…..!! . ஒரு வருசத்துக்கு எத்தனைமுறை வெளிநாடு போவார்கள்?”, ஜோசப்.
“யார் வீட்டு காசு?!….. எல்லாம் பெட்ரோல் காசு!”, சக பயணி.
“இவனுங்க வெளிநாடு போறதே இங்க சுருட்டுன காச சேப்டி பண்ணத்தான்!”, ஜோசப்.
‘உண்மைதான் ஓகா (முதலாளி/ தலைவர்),…. இந்தாளுக்கு சுவிஸ் பாங்கில் பணம் இருக்கு. சவுத் ஆப்பிரிக்காவில் சொத்து வாங்கியிருக்கிறதா சொல்ராங்க”, பயணி.
“என்ன பன்றது…! எல்லாம் பிராடு பயல்கள்!, திருட்டு பயல்கள். மக்களுக்குகாக சேவை செய்யணும்னு ஒருத்தனுக்கு எண்ணம் கிடையாது. பதவிக்கு வரானுங்க, காச சுருட்டுறானுங்க, சேப்டி பன்றானுங்க…………… பெட்ரோல் காசு!…. சாப்…சாப்..சாப்….(chap chap –ஒரு நைஜீரிய வட்டார வழக்கு)”, பக்கவாட்டில் தலையை குலுக்கிக்கொண்டே சொன்னார், ஜோசப்.
ஜோசப்பும் சகபயணியும் தங்களுடைய கவலையை வெளிப்படுத்தினர்கள். இப்படியே பேசிக்கொண்டிருக்க அவர்களுக்கு கோபம் ஏறியது. மக்கள்மேல் இரக்கமும் இயலாமையின் பரிதாபமும் அவரை ஆட்கொண்டது.
ஜோசப் தொடர்ந்தார், “நல்ல ரோடு இல்ல!, கரண்டு இல்ல!… சாப்பாடு இல்ல!… போக்குவரத்து இல்ல!…… எல்லாம் காசு!……, இங்க ஏழை ஏழையாவே இருக்கான், பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகுறான்”.
அவர்களுடைய இயலாமையும், அதிருப்தியும், சேர்ந்து கசந்தது. “பச்ச்..”, என்று உதடுகளை அழுத்தி ஒலி எழுப்பி மவுனம் ஆனார்கள். வெளியில் லாகோஸின் புறநகர்ப்பகுதிகள் தெரிய ஆரம்பித்தது.
ஜோசப் கம்பனிக்கு வந்து சேர்ந்தவுடன் வழக்கம் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தார். அலுவலகம் திறந்து அவர் ஓட்டும் (மிட்சுபிஷி பிக் அப்) வாகனச் சாவியை எடுத்துக்கொண்டு, தன் சக டிரைவர்களிடம் பேசியபடி வாகனத்தை கழுவி துடைத்து முடித்தபோது காலை மணி ஒன்பதரை ஆகியிருந்தது. டெலிவரி எதுவும் போக வேண்டியது இருந்தால் அவருடைய மேனேஜர் உடோ கூப்பிடுவார். அதுவரையில் ஆபீசுக்கு வெளியில் இருக்கும் பெஞ்சில்தான் சக டிரைவர்களிடம் பேசியபடி, காலை சாப்பிடுவதற்கு தன்னுடைய பிளாஸ்டிக் மக்கில் தயாரித்த டீயை கலக்கியபடி போகும் வரும் ஆட்களிடம் பேச்சுக் கொடுத்தபடி இருப்பார்.
ஜோசப் தைவோ ஒரு திறமையான டிரைவர். லாகோஸின் மூலை முடுக்குகளில் எங்கிருந்தாலும் கம்பெனியின் பொருட்களை கொண்டு சேர்த்து விடுவார். அவருக்கு லாகோஸின் ரோடுகளும் சத்துகளும் அத்துப்படி. யுருபா இனத்தவரானதாலும் பேச்சுத் திறமையாலும் ஜோசப்புக்கு காரியம் சாதிப்பவர் என்ற நல்லபெயர் இருந்தது. எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் லாகோஸின் பேராசை பிடித்த லாஸ்ட்மாக்களிடமும்(LASTMA), போக்குவரத்து போலீசிடமும் கம்பனி வண்டியையும், வண்டியில் இருக்கும் பொருட்களையும் காப்பாற்றுவதற்கு அவருடைய சாமர்த்தியம் உதவியது.
சரக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, தன்னுடன் டெலிவரி பையன் சலாக்கோவையும் அழைத்துக்கொண்டு கம்பனியை விட்டுக் கிளம்பியபோது மணி காலை 11மணி ஆகியிருந்தது. வண்டியில் பெட்ரோல் அளவு பார்த்து காலையிலேயே மேனேஜர் உடோவிடம் தினமும் சொல்லிவிட வேண்டும். அதற்கேற்ப மேனேஜர் உத்தரவுகளைக் கொடுப்பார். ஜோசப் வெளியில் கிளம்பும்போது மூவாயிரம் நைரா கொடுத்திருந்தார்கள். கம்பனி இருந்த இடம் இசல்லோ. அது லாகோசின் மெயின்லேன்ட்ல் இருந்தது. அங்கிருந்து அவர்கள் லாகோஸ் தீவு செல்லவேண்டும். லாகோசின் மெயின்லேன்டையும் லாகோஸ் தீவையும் நடுவே புகுந்து அட்லான்ட்டிக் கடலின் தண்ணீர் பிரித்தது. லாகோஸ் தீவு எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் இடம். போலீஸ், லாஸ்ட்மா கண்காணிப்பு அதிகம். ஏதாவது ஒரு வாகனம் நின்றுவிட்டால் அவர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். அவர்களுக்கு பின்னாலேயே ஒரு டோவிங் வாகனம் வைத்திருப்பார்கள். எதாவது ஒரு காரணம் சொல்லி காசு கேட்பார்கள். அவர்கள் கேட்பதை கொடுக்காதவர்களை அவர்கள் விடுவதில்லை. இரும்பு முள்ளுடன் இருக்கும் நீண்ட கைப்பிடி வைத்த ஸ்டாப்பரை வாகனத்தின் டயர் முன்னால் வைத்து வாகனத்தை நகர விடமாட்டார்கள். லாகோஸில் மற்றும் ஒரு பிரச்னை ‘ஏரியாபாய்ஸ்’ என்று அழைக்கப்படும் லோக்கல் இளைஞர்கள். அவர்களுக்கு வேலை என்று எதுவும் கிடையாது. ஏதாவது ஒரு வாகனம் நின்று விட்டால் உடனே ஏரியாபாய்ஸ் வந்துவிடுவார்கள். வாகனத்தை தள்ளி ஓரமாக நிறுத்த உதவுவார்கள். அவர்களுக்கு நூறு இருநூறு வேண்டும்.
கம்பனியில் இருந்து வெளியில் கிளம்பியதும் அதே சாலையில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில்தான் கம்பெனியின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவது வழக்கம். ஜோசப் அந்த பெட்ரோல் நிலையத்துக்கு வண்டியுடன் நுழைந்தபோது அங்கே இருந்த உதவியாளன் கையில் கத்தை கத்தையாக நைரா நோட்டுக்களை இடுக்கியபடி ஒரு காலை வணக்கத்துடன் ஜோசப்பை வரவேற்றான். ஜோசப் வண்டி எஞ்சினை அணைத்துவிட்டு அவன் அருகே சென்று கிசுகிசுத்தார். பெட்ரோலை நிரப்பிவிட்டு அவனிடத்தில் இருந்து எதுவும் எழுதாத ஒரு பில்லை வாங்கிக்கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
லாகோஸ் தீவில் நுழையும் போதே அங்கிருந்த டிராபிக் அவர்களை திகைக்க வைத்தது. ஜோசப் சாலைக்கோவிடம் ட்ராபிக்ப்பற்றி அலுத்துக்கொண்டார்.
உடலெங்கும் புண்வந்து நொந்து சிவந்துபோன ஒரு பிச்சைக்காரன், ஹைட்ரோசில் வந்து விதைகள் பெருத்து தொங்கி அதைக்காட்டியே பிச்சையெடுக்கும் ஒரு பிச்சைக்காரன், ரோட்டின் ஓரத்தில் மழை தண்ணீர் செல்ல வெட்டியிருக்கும் கால்வாயில் ஒரு குடை நிழலில் வாழைப்பழங்களை தணலில் வாட்டி விற்கும் நடுத்தரவயது பெண், அருகிலேயே அக்காரவும் (எண்ணெயில் பொறித்த நம் போண்டா போன்ற ஒரு தின்பண்டம்), பண்ணும் (மைதா மாவை சர்க்கரை சேர்த்து குழைத்து எண்ணெயில் பொறித்த ஒரு தின்பண்டம்) பொரித்து விற்கும் ஒரு மம்மா (வயதான நைஜீரிய பெண்), சிறு அட்டை பெட்டிகளில் காலாவை (கொத்திய மாட்டு இறைச்சியை மாவில் சுருட்டி பேக் செய்த பண்டம்) அடுக்கி விற்கும் இளைஞன் என்று காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன.
லாகோஸ் தீவில் மார்ட்டின் தெருவில் அந்த டெலிவெரியை செய்யவேண்டி இருந்தது. ரோடுகள் குறுகி நெரிசலாக இருந்ததால் தனியார் பார்க்கிங்கில் வண்டியை பார்க் செய்துவிட்டு டெலிவரியை முடித்துவிட்டு பார்க்கிங்குக்கு ஐம்பது நைரா கொடுத்து தொகை எதுவும் எழுதாத ஒரு பார்க்கிங் டிக்கெட்டை அங்கிருந்த ஆளிடம் வாங்கிக்கொண்டு ஜோசப்பும், சலாகோவும் அங்கிருந்து கிளம்பினார்கள். லாகோஸ் தீவி இருந்து தேர்ட் மெயின்லேண்ட் பாலம் வழியாக இசல்லோவில் இருக்கும் கம்பனிக்கு வந்து சேர்ந்தபோது மணி இரண்டரை ஆகியிருந்தது.
ஜோசப் தைவோவும் சலாக்கோவும் பிளாஸ்டிக் மக்குகளில் தண்ணீர் நிரப்பி வரும்வழியில் வாங்கி வந்த கசாவா குருனையையும் சர்க்கரையும் கொட்டி கரைத்து காரி (இனிப்பு கஞ்சி) தயாரித்து குடித்துக்கொண்டே அங்கே இருந்த மற்றவர்களிடம் அன்றைய நடப்புகளைப்பற்றி பேசி சிரித்துக்கொண்டார்கள்.
மாலை நான்கு மணிவாக்கில் தன்னிடம் இருந்த பில்களை எடுத்துகொண்டு எடுத்துக்கொண்டு ஒரு கேஷ் வவுச்சர் வாங்கிவந்து செலவுகளை எழுத ஆரம்பித்தார். மாலை 5.30க்குள், அக்கௌன்டன்ட் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்னர் அன்றைய கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.
ஜோசப் தைவா எழுத ஆரம்பித்தார். பெட்ரோல் 2000 நைரா, லோக்கல் கவர்மன்ட் நுழைவு வரி 200 நைரா, ஏரியா பாய்ஸ் 200 நைரா, பார்கிங் 1௦௦ நைரா, அலுவலகத்தில் இருந்து 3௦௦௦ நைரா வாங்கியதில் மீதம் 500நைரா. தன்னுடைய பர்சில் இருந்து 5௦௦ நைராவை எடுத்துக்கொண்டு கணக்கை ஒப்படைத்துவிட்டு திரும்பிவந்தார். அவருடைய கண்ணும் அங்கே குந்தியிருந்த சலாக்கோவுடைய கண்ணும் சந்தித்துக்கொண்டன. இருவரும் ஒரு புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.
கம்பெனி முதலாளி ஒரு இந்தியர். மாலை 5 மணி வாக்கில் அவருடைய ட்ரைவர் கம்ப்யூட்டர் பையையும், சாப்பாடு பையையும் வெளியில் எடுத்துக்கொண்டு ஜோசப்பையும், சலாக்கோவையும் பார்த்து கையசைத்துவிட்டு வாகன பார்க்கிங் நோக்கி சென்றான். பின்னாலேயே வரப்போகும் முதலாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஜோசப் எழுந்து நின்றார்.
முதலாளி புறப்பட்டபின் ஜோசப் அங்கிருந்து கிளம்பியபோது மாலை 5.3௦ ஆகியிருந்தது. கூடவே சலாக்கோவும் புறப்பட்டான். அங்கிருந்து பஸ் நிறுத்தம் வந்தவுடன் ஜோசப் அவனிடம் ஒரு 1௦௦ நைரா நோட்டை கொடுத்துக்கொண்டே, “சலாக்கோ இன்னைக்கு ரொம்ப வேலை, இல்ல…!”, என்றார்.
“ஒகா நன்றி”, என்றவாறு சலாக்கோ அந்த நோட்டை வாங்கி தன் பேன்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டே முழந்தாள்களை ஒரு சேர இணைத்து சற்று வளைத்து ஒரு வணக்கம் செய்தான்.
அன்று அலுவலகத்தில் இருந்து வாங்கிய 3௦௦௦ நைராவில் 1800க்கு பெட்ரோல் போட்டிருந்தார். அதில் 200ம், பார்க்கிங் செய்ய 5௦ கொடுத்து 1௦௦ என்று எழுதி இருந்தார். அதில் 50. லோக்கல் கவர்ன்மென்ட் நுழைவு வரி என்று எழுதி 100 ம், ஏரியா பாய்ஸ்க்கு கொடுத்ததாக எழுதி 200ம், ஆக மொத்தம் 550 நைரா அன்றைக்கு வரும்படியாக கிடைத்திருந்தது. இதெல்லாம் இங்கே இருக்கும் டிரைவர்களுக்கு சகஜம். சலாக்கோவுக்கு 100 நைரா கொடுத்தது போக மீதி 450நைரா சரியாக இருக்கிறதா அவருடைய பர்சை சரிபார்த்துகொண்டார்.
இசலோவில் இருந்து ஒஷோடி பஸ் நிறுத்தத்துக்கு சென்று அங்கே சங்கோ ஓட்டா செல்லும் பஸ் பிடிக்க காத்திருந்த ஒரு நீண்ட கியூவில் இணைத்தார். அருகில் பிளாட்பாரத்தில் விற்பனைக்காக செய்தித்தாள்கள் பரப்பப்பட்டிருந்தது. காலையில் செய்தித்தாளில் பார்த்த அதே மத்திய அமைச்சர் நைஜீரிய பாரம்பரிய உடையில் கையசைத்துக்கொண்டிருந்தார்.
“திருட்டுப்பயல்!”, என்று ஜோசப் அதைப் பார்த்து முணு முணுத்தபடி கியூவுடன் நகர்ந்து கொண்டிருந்தபோது சங்கோ ஓட்டா செல்லும் ஒரு பஸ் அங்கே வந்து நின்றது.

———————-

Series Navigationவெறி
author

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *