சிங்கப்பூரில் இன்னொரு வேலை மீதமிருந்தது.அது தேசியச் சேவை ( National Service ). சிங்கப்பூர் குடிமகன்கள் அனைவருமே கட்டாயமாக இரண்டு வருடங்கள் இராணுவத்தில் சேவை புரியவேண்டும். . உயர்நிலைப் பள்ளி முடித்தவுடன் உடன் சேர்ந்தாகவேண்டும். இதன் மூலமாக ஒழுக்கமும் நாட்டு பற்றும் இளம் வயதிலேயே உருவாகும் வாய்ப்பு உள்ளதென்று நம்பப்படுகிறது. நான் உயர்நிலைக் கல்வியை முடித்ததும் தமிழகம் சென்றுவிட்டேன். அதனால் தேசியச் சேவையில் சேராமலிருந்தேன். தற்போது சிங்கப்பூர் வந்துள்ளதால் அதில் கட்டாயமாகச் சேர்ந்தாகவேண்டும்.இதை அறியாமலேயே விடுப்பில் வந்துள்ளேன். ஒருவேளை தேசியச் சேவையில் சேர்ந்துகொண்டால் நான் மீண்டும் தமிழகத்துக்கு இரண்டு வருடங்கள் திரும்பமுடியாது. சிங்கப்பூர் இராணுவத்தில் இரண்டு வருடங்கள் கட்டாயமாக இருந்தாகவேண்டும்.
அன்று மாலை நண்பர்கள் மூவரும் இரவு உணவின்போது சீனர் உணவகத்தில் ஒன்றுகூடினோம்.எதற்கும் தேசிய சேவை மையத்துக்குச் சென்று வரச் சொன்னான் கோவிந்த். அதை பன்னீரும் ஆமோத்தித்தான்.அதில் சேர்ந்தாலாவது ஒருவேளை என்னுடைய எம்.பி.பி.எஸ். பட்டத்தை அரசாங்கம் ஏற்கலாம் என்ற அற்ப ஆசை அவனுக்கு. அதில் சேர்ந்துகொண்டு தொடர்ந்து மருத்துவக் கழகத்தில் முயன்று பார்க்கலாம் என்று பன்னீர் விரும்பினான்.எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
சிங்கப்பூர், மலேசியாவில் இனிமேல் மருத்துவராகப் பணிபுரிவது இயலாத ஒன்றாகவே எனக்குத் தோன்றியது. இருப்பினும் முயன்று பார்க்கலாம். அதை முடிக்காமல் மீண்டும் தமிழகம் செல்ல விரும்பினால் அதன் காரணம் கேட்பார்கள். அதற்கு தக்க பதில் சொல்லியாக வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பின்பு என்றாவது தேசியச் சேவையில் சேர்ந்தேயாகவேண்டும். அதனால் அங்கு சென்று வருவதே நல்லது. நான் நண்பர்களிடம் சம்மதம் தெரிவித்தேன்.
கோவிந்த் மறுநாள் பள்ளியில் விடுப்பு எடுத்துக்கொண்டு என்னை தங்லின் ஹால்ட்டிலுள்ள தேசியச் சேவை மையத்திற்கு அழைத்துச் சென்றான். அந்த வளாகத்தினுள் அனைவருமே இராணுவ உடைகளில் மிடுக்காக சுறுசுறுப்புடன் இயங்குவதைக் கண்டேன். அனைவரும் இளம் வயதினர். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்தான்.அந்த இளம் பருவத்திலேயே இராணுவத்தின் கட்டொழுங்கில் வளர்வது நல்லதுதான். அவர்கள் நிச்சயமாக நாட்டுக்கு நல்ல குடிமக்களாக மாறுவது திண்ணம்.ஒருவருக்கு நாட்டுப் பற்றை ஊட்டுவதற்கு இதைவிட சிறந்த வழி இருக்க வாய்ப்பில்லை.
என்னுடைய அடையாள அட்டையைக் காட்டியதும் என்னைப் பதிந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். என்னுடைய எடை, உயரம் அளந்தபின்பு இரத்தமும் பரிசோதனைக்கு எடுத்தனர். அதன்பின்பு ஒரு மருத்துவர் பரிசோதித்தார். . அவர் சீன இனத்தவர். இளைஞர்தான் அவரிடம் நானும் ஒரு மருத்துவர்தான் என்று சொல்லவில்லை. மருத்துவப் பரிசோதனைக்குப்பின்பு என்னை இரண்டு நாட்களில் திரும்பவும் வரச் சொன்னார்கள்.நாங்கள் இல்லம் திரும்பினோம்.
அன்று இரவும் நாங்கள் சீன உணவகத்தில் வெகு நேரம் கழித்தோம். மருத்துவத் தேர்வில் தேர்ச்சியுற்றபின்பு தேசியச் சேவையில் சேர்ந்துகொண்டு சிங்கப்பூரிலே இருந்துவிடுமாறு அவர்கள் இருவரும் கூறினார்கள். நான் இராணுவத்திலேயே பணியாற்றலாம் என்றனர். சிங்கப்பூரில் தொடர்ந்து வாழ அது ஒரு முதல் படியாக இருக்கட்டும் என்றனர். ஆனால் எனக்கு மருத்துவத் தொழிலைவிட வேறு எந்த தொழில் மீதும் விருப்பம் எழவில்லை.மருத்துவத் தொழில் இல்லாத சிங்கப்பூரின் வாழ்க்கை எனக்குத் தேவையற்றதாகத் தோன்றியது. வாழ்நாள் கனவல்லவா மருத்துவராவது. அதற்காகத்தான் ஆறு ஆண்டுகள் பயின்றேன். அவ்வளவையும் விழலுக்கு இரைத்த நீராக்குவதா ?
இரண்டு நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் இராணுவ முகாம் சென்றோம். கோவிந்த் மீண்டும் எனக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தான்.நான் என்னுடைய எம்.பி.பி.எஸ். சான்றிதழை எடுத்துச் சென்றேன்.
தேசியச் சேர்வையில் புதிதாக சேர்வோரின் பகுதிக்குச் சென்றோம். அங்கு பலர் காத்திருந்தனர். அனைவரும் இளைஞர்கள்தான். நான்மட்டுமே வயதில் சற்று மூத்தவனாகத் தென்பட்டேன்.என் முறை வந்ததும் நான் அறைக்குள் நுழைத்தேன். அங்கு என்னை நேர்காணல் செய்ய இரண்டு சீனர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் இராணுவ உடையில் இருந்தனர்..
என்னை கைகுலுக்கி அவர்கள் வரவேற்றனர். நான் மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகக் கூறி என்னை வாழ்த்தினர். நான் நன்றி சொன்னேன்.
” வாழ்த்துகள். மருத்துவப் பரிசோதனையில் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிவிட்டீர்கள்.இனி நாளையே நீங்கள் தேசிய சேவையில் சேரலாம்.” ஆங்கிலத்தில் கூறினார் ஒருவர்..
” மிக்க நன்றி. நான் இங்கு சேருமுன் ஒரு சந்தேகத்தைக் கேட்கவேண்டும். ” என்றவாறு அவரை நோக்கினேன்.
” உம். ..சொல்லுங்கள். உங்கள் சந்தேகம் என்ன? “
” நான் இராணுவத்தில் எத்தகைய பதவி வகிப்பேன்? “
” இதில் என்ன சந்தேகம்? புதிதாக சேர்பவர்கள் அனைவருமே சாதாரண போர்வீரனாகவே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.”
” அவர்கள் அனைவருமே உயர்நிலைப் பள்ளி முடித்தவர்கள். அனால் நானோ பலகைக்கழகம் சென்று மருத்துவம் பயின்ற ஓர் பட்டதாரி. என்னை எப்படி அவர்களுடன் சேர்க்கிறீர்கள்? ” என்று சொன்னபோது கையில் வைத்திருந்த எம்.பி. பி. எஸ். சான்றிதழை அவரிடம் நீட்டினேன்.
அதை சற்றும் எதிர்பார்க்காத அவர் சான்றிதழை வாங்கி கூர்ந்து கவனித்தார்.
” ஆமாம். நீங்கள் ஒரு மருத்துவப் பட்டதாரிதான். ஆனால் இதை நம்முடைய மருத்துவக் கவுன்சிலில் காட்டினீரா? அவர்கள் உங்களுக்கு இங்கு வேலை தந்துவிட்டார்களா? “
” அங்கு சென்று இதைக் காட்டி மருத்துவக் கழகத்தில் பதிவு செய்ய வேண்டினேன். ஆனால் அவர்கள் இது செல்லாது என்கிறார்கள்> “
” செல்லாதா? ஏன்? எப்படி? ” அவர் வியப்புடன் என்னை நோக்கினார்.
” இந்தியாவில் பெற்றுள்ள பட்டங்கள் அனைத்தும் இங்கு இனிமேல் செல்லாதாம். அந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதல் பட்டம் என்னுடையது. “
” இதைக் கேட்கவே வருத்தமாக உள்ளது. இப்போது நான் என்ன செய்வது? உங்கள் பட்டம் இங்கே அங்கீகாரம் பெறவில்லையெனில் நீங்கள் சீனியர் கேம்பிரிட்ஜ் அளவு பயின்றுள்ளதாவே கருதப்படுவீர்கள். மருத்துவப் படிப்புக்காக வேறு எவ்விதமான சலுகையும் இங்கு வழங்கமாட்டோம். உண்மையைச் சொன்னால் இதுபோன்ற ஒரு பிரச்னையை இங்கேயும் நாங்கள் முதன்முதலாக சந்திக்கிறோம். அதனால் எங்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.”
” மருத்துவப் பட்டம் பெற்றுள்ள எனக்கு இங்கே சீனியர் கேம்பிரிட்ஜ் படித்தவர்களுடன் சேர்ந்து சாதாரண போர்வீரனாக செயல்படுவது எந்த வகையில் நியாயம்? “
” இங்கு நியாயம் அநியாயம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. சட்டப்படிதான் செயல்படுவோம். “
” நான் எனக்கு நியாயம்தான் கேட்கிறேன். நான் இந்தியாவில் படிக்கச் சென்றபோது மருத்துவப் பட்டம் இங்கே செல்லும் என்பதாலேயே அங்கு சென்றேன். ஆறு வருடங்கள் படித்து முடித்துவிட்டு இங்கு திரும்பியபோது அந்தப் பட்டம் செல்லாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ” நான் ஆவேசமானேன்.
” இதை நீங்கள் சிங்கப்பூர் மருத்துவக் கழகத்திடம் கேட்க வேண்டும். இங்கு அல்ல! உங்களுடைய எம்.பி.பி.எஸ். பட்டம் இங்கு செல்லாது என்ற பட்சத்தில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரைதான் உங்களுடைய கல்வித் தகுதியை அங்கீகரிப்போம். அதனால் நீங்கள் இங்கே சாதாரண பிரைவேட் ஆகத்தான் சேரமுடியம். வேறு வழியில்லை. “
” முடியாது. நான் மருத்துவம் பயின்ற ஒரு மருத்துவன். எனக்கு இங்கு மூன்று நட்சத்திரங்கள் கொண்ட கேப்டன் பதவிதான் தரவேண்டும். ” நான் அழுத்தம்திருத்தமாகக் கூறினேன்.
” அதை செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. நீங்கள் கேப்டன் தகுதி உள்ளவரா என்பதை சிங்கப்பூர் மருத்துவக் கழகமே முடிவு செய்ய வேண்டும். அவர்களே அது முடியாது என்று சொன்னபின்பு எங்களால் வேறு ஏதும் செய்யமுடியாது..”
” அப்படியானால் நான் தேசியச் சேவையில் சேர விரும்பவில்லை. எனக்கு அதிலிருந்து விலக்கு அளியுங்கள். நான் வெளிநாடு சென்று மருத்துவ முதுகலை படித்து எம்.ஆர்.சி.பி. அல்லது எப்.ஆர்.சி.எஸ். பட்டம் பெற்று திரும்புகிறேன். அப்போதாவது எனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று பார்க்கிறேன். ” நான் உரிமைக்கு .குரல் கொடுத்தேன்.
அங்கு அமர்ந்திருந்த இரண்டு சீன அதிகாரிகளும் சற்று தடுமாறினர்.நானும் அமைதியானேன். என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் தொலைபேசியின் மூலம் மேலதிகாரியிடம் பேசினார். எனக்கு விலக்கு அளிப்பது பற்றிதான் கேட்டார். அதன்பின்பு அவர் முகத்தில் மாற்றம் தோன்றியது.
” உங்களுக்கு பிரத்தியேக முறையில் தேசியச் சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் வெளிநாடு சென்று உங்கள் மேல்படிப்பைத் தொடரலாம். உங்களுக்கு பத்து வருட பாஸ்போர்ட் தரப்படும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சிங்கப்பூருக்குத் திரும்பலாம்.” அவர் புன்முறுவலுடன் விடை தந்தார்.
நன்றி கூறிவிட்டு கோவிந்தம் நானும் அந்த அறையைவிட்டு வெளியேறினோம்.
” பரவாயில்லையே! மிகவும் துணிச்சலாகவே வாதாடினாயே? கட்டாய இராணுவச் சேவையிலிருந்து விலக்குப் பெற்றது பெரும் சாதனை! இனி நீ சுதந்திரப் பறவை! ” கோவிந்த் என்னைப் பாராட்டினான்.
” பிறகு என்ன? உரிமை பறிபோகும் வேளையில் போராடிதானே ஆகவேண்டும்? என்னுடைய மருத்துவப் பட்டத்தை நான் எப்படி விட்டுக்கொடுப்பேன்? ” நான் பதில் சொன்னேன்.
” சரி. இனிமேல் என்ன செய்யப்போகிறாய்? ‘ வாடகை ஊர்தியில் அமர்ந்தபின்பு கோவிந்த் கேட்டான்.
” அதை இனிமேல்தான் முடிவுசெய்யவேண்டும். “
( தொடுவானம் தொடரும் )
- சூரியன் புறக்கோளான வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூனில் வைரக் கல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
- தொடுவானம் 184. உரிமைக் குரல்
- கம்பனின்[ல்] மயில்கள் -3
- ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது
- கவிதை
- இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!
- சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்
- காதலனின் காதல் வரிகள்
- சுதந்திரம்