வான்மதி செந்தில்வாணன்.
மழை நாளொன்றில்
நடைவாசல் திண்ணையில் அமர்ந்தவாறு
வேடிக்கை பார்த்த எனக்கு
சட்டென ஒரு யோசனை .
வீட்டிற்குள் ஓடி
சர சரவெனக்
காகிதங்களைக் கிழித்து
சிறிதும் பெரிதுமாய்
சில கப்பல்கள் செய்து
மிதக்கவிட்டேன்
அக் கிடைமட்ட அருவியில்.
நீரோட்டத்தின் திசையில்
ஒன்றையொன்று விலகி
மூழ்கிவிடாமல் பயணிக்கும்
அந்நிகழ்வை
விழிகள் விழுங்கிய அதேநேரம்
மிக அழகாய் மிதந்துபோனது
இதுவரை நான் செய்திடாத
ஒரு கப்பலாய்
“நீர்க்குமிழி”.
******************
பள்ளி முடிந்து
ஒட்டிய வயிற்றோடு
வீடு திரும்பிய
மாலைப்பொழுதொன்றில்
பருவமெய்தி
அறுப்பிற்குத் தயாராகி நின்ற
கம்புப் பசுங்கதிர்கள்
சிலவற்றை இணுங்கி
புத்தகப்பையுள் பத்திரப்படுத்தினேன்.
வீடடைந்ததும்
முற்றத்து விறகடுப்பில்
அக்கதிர்களைத் தீயிலிட்டு வாட்டும்போதுதான் கவனித்தேன்.
அந்தியின் ஆகாசப் பறவைகளாய்
இப்போது இருள்கிழித்துப்
பறக்கத் துவங்கியிருந்தன
“அக்கினிக் குஞ்சுகள்”
**************************
நீ சுகித்த
என் இதழ்கள்
அறுசுவையெனும் பொய்யினை
இன்னொரு முறை
சொல்லிப்போ.
ஆனால்
இம்முறை
இன்னும் வன்முறையாய்.
*****************************
- கம்பனின்[ல்] மயில்கள் -4
- கருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்
- கவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)
- மின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள் – கவிஞர் இரா.இரவி
- தொடுவானம் 185. கனவில் தோன்றினார் கடவுள்
- மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை
- சென்னை தினக் கொண்டாட்டம்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்டு 2017
- காதலி இல்லாத உலகம்.
- கவிதைகள்