பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்

This entry is part 5 of 12 in the series 10 செப்டம்பர் 2017

 

பாச்சுடர் வளவ. துரையன்

தலைவர், இலக்கியச் சோலை

கூத்தப்பாக்கம்,

கடலூர்—607 002

 

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார்.

பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவன்றி, “வெந்ததைத் தின்று விதி வந்தால் மடிவோம்”என்று வாழ்தல் வாழ்வாகாது. வாழவேண்டிய முறைப்படி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களைத் தான் “வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வாழவேண்டிய முறை என்பது ஒவ்வொருவர்க்கும் மாறுபடலாம். ஆனால் வாழ்வில் கூடி வாழ்தலே இன்றியமையாதது ஆகும்.

”மனிதன் ஒரு சமூக விலங்கு” என்றார் அரிஸ்டாட்டில். மேலும் “மக்கள் இயற்கை அமைப்பை நோக்குழி அவர்கள் தனித்து வாழும் இயல்பினரல்லர் என்பது புலனாகும்” என்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க. எனவே ஒருவரோடு ஒருவர் கூடி வாழ்ந்து,  அன்பைப் பகிர்ந்துகொண்டு, அந்த அன்பைத் தம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களிடத்தும் செலுத்தி இன்பநிலை பெறுவதே இப்பிறவியில் வாழ்ந்ததன் பயனாகும்.

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கூடிவாழத்தான் அவர்களுக்கிடையே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஆண் மற்றும் பெண் என்னும் ஈருயிர்களையும் அன்பு என்னும் கயிற்றால் பிணித்து ஒருமைப்படுத்தும் இயற்கை நிகழ்வே திருமணம் ஆகும். இரண்டாறுகள் ஒன்றாகிக் கலந்து ஓடத் தொடங்கிய பின்னர் அவற்றில் வேறுபாடு காண இயலாது. அதுபோலவே திருமணம் என்னும் கூட்டால்தான் ஆண் பெண் என்னும் இருமை கெட்டு ஒருமை உண்டாகிறது.

இப்படி இருமை கெடுத்து ஒருமையை உண்டாக்கும் திருமணத்தில் பல்வகைகள் பண்டைக்காலந்தொட்டே காணப்படுகின்றன. நக்கீரனார் தம் இறையனார் அகப்பொருள் உரையிலும், நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையிலும் எட்டுவகைத் திருமண முறைகளைக் காட்டி உள்ளார்.

அவற்றுள் ‘பிரமம்’ என்பது நாற்பத்தெட்டாண்டாண்டுள்ள ஆண்மகனுக்கு பன்னிரண்டாண்டு அகவை கொண்ட பெண் ஒருத்தியை அணிகலன் அணிவித்துக் கொடுப்பதாகும். இரண்டாவதான பிராசபத்தியம் என்பது மணமகனின் பெற்றோர் அளிக்கும் பரிசத்தைப்போல இருமடங்கு கொடுத்துப் பெண்ணைக் கொடுப்பதாகும். மூன்றாவதான ஆரிடம் என்பது காளை மாடு, மற்றும் பசுமாடுகளின் கொம்புகளுக்கும், குளம்புகளுக்கும் பொன்னால் பூண் அணிவித்து, அவற்றின் நடுவில் மணமக்களை நிறுத்தி, இவர்களுக்கும் பொன்னாலான அணிகளை அணிவித்து, “ நீவீர் இருவரும் இவை போலப் பொலிந்து வாழ்வீராக” என வாழ்த்தி நீர்வார்த்துப் பெண்ணைக் கொடுப்பதாம்.

நான்காவதான தெய்வம் என்பது வேள்வியை செய்விக்கும் ஆச்சாரியருக்கு, அவ்வேள்வித் தீ முன்னர் பெண்ணைக் காணிக்கையாகக் கொடுப்பதாம். ஐந்தாவதான கந்தருவம் என்பது ஆணும் பெண்னும் எதிர்ப்பட்ட இடத்தில் மனமொத்துக் கூடிப் பிரிவதாகும். ஆறாவதான அசுரம் என்பதில் காளையை அடக்கிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளல், வில்வளைத்துப் பெண்ணை மணம் செய்து கொள்ளல், மூன்று காட்டுப் பன்றிகளை ஓரம்பால் வீழ்த்திப் பெண் கொள்ளல் போன்றவை அடங்கும்.

ஒரு பெண்ணை அவள் விரும்பாவிடினும், அவளது பெற்றோர் கொடாவிடினும் ஆண் அவளை வலிதிற் சென்று கொண்டுவந்து மணமுடிப்பது இராக்கதமாகும். தம்மைவிட மூத்தவளையும், கள்ளுண்பவளையும், தூங்குபவளையும், இழிந்தவளையும் சேர்வது பைசாசம் எனப்படும்.

இத்தகைய திருமணங்களில் ஒரு சிலவற்றை இலக்கியங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் பாமுகில் இரா. துரைக்கண்ணன் மிக விளக்கமாக இந்நூலில் எடுத்துக் காட்டி உள்ளார்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலம்பில் காணப்படும் கோவலன் — கண்ணகி திருமணத்தை அறிமுகம் செய்யும்போது அதை மட்டும் செய்து விட்டுப்போவதில்லை இவர். அதற்கு முன் கோவலனும் கண்ணகியும் வாழ்ந்த பூம்புகார் எப்படி வளமாக இருந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறார். அந்நகரத்தின் துறைமுகத்தில் பல நாடுகளிலிருந்து வந்த பொருள்களெல்லாம் மலைபோல் குவிக்கப்பட்டிருந்ததை சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையைச் சான்றாக வைத்து நூலாசிரியர் விளக்கும்போது இவரின் சங்க இலக்கியப்புலமை தெளிவாகிறது. இளங்கோவடிகள்  காப்பிய நாயகனைத்தான் மரபுப்படி முதலில் அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆனால் சில்ப்பதிகாரத்தில் கண்ணகிதான் முதலில் காட்டப்படுகிறார். ஏனெனில் சிலம்பின் முக்கியமான அறிவுறுத்தல்களில் ஒன்றான “உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்” என்ற இலக்கணத்துக்கே இலக்கியம்தான் கண்ணகி. ”அந்தக்கருத்துக்கு மதிப்பளிக்கும் நோக்கில் கண்ணகி ‘கற்பின் கனலி’ என்பதால் முதலில் அறிமுகம் செய்திருக்கலாம்” என்ற துரைக்கண்ணனின் எழுத்து கண்ணகிக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

நூலின் நடை மிக எளிமையாக இருப்பதைக் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். எந்த இடத்திலும் வலிந்த பண்டித நடையை நாம் காண முடியாததால் படிக்கின்ற வாசகர்கள் நூலோடு ஒன்றிப்போய் விடுவார்கள் என்று துணிந்து கூறலாம். எடுத்துக்காட்டுகள் கூட ஏற்கனவே சாதாரண மாந்தனுக்குத் தெரிந்தவைதாம். ”திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்” எனத் தொடங்கும் திரைப்படப்பாடலை தெய்வயானை திருமணம் பற்றி எழுதும்போது எடுத்துக்காட்டி அருமையான பொருளாழம் விளக்கப்படுகிறது.

நூலில் ஆங்காங்கே ஒரு சில இலக்கிய நயங்களைப் பார்க்க முடிகிறது. வேட்டுவ குலத்தில் தோன்றிய வள்ளி அவர் குலவழக்கப்படி தினைப்புனம் காக்க அனுப்பப்படுகிறார்.

ஒரு தூக்கணாங்குருவிக்குக் காட்டில் எளிதாக ஒரு இரத்தினமணி கிடைத்தது. அதன் மதிப்பை அறியாத அக்குருவி அம்மணியைக் கொண்டு போய் தன் கூட்டின் இருளகற்ற வைத்ததாம். அதுபோல பெறற்கு அரிய பேறாம் வள்ளியம்மையாரைத் தினைப் புனம் காக்க அனுப்பினார்கள் என்ற உவமையைக் காட்டுவது மனம் இன்புறும் இலக்கிய நயமாகும்.

மேலும் முருகன்—தெய்வயானை திருமணம் முடிந்ததும் அவர்கள் இருவரும் பார்வதி, பரமசிவனின் அடிகளிலேயே வீழ்ந்து ஆசி பெறுகிறார்கள். கச்சியப்பர் அக்காட்சியை இப்பாடலில் காட்டுகிறார்.

”அடித்தலத்தில் வீழ் மக்களை இருவரும் ஆர்வத்[து

எடுத்த ணைத்தருள் செய்துதம் பாங்கரில் இருத்தி

முடித்த லத்தினில் உயிர்த்[து உமக்கு எம்முறு முதன்மை

கொடுத்தும் என்றனர் உவகையால் மிக்கொள் கையினார்”

இப்பாடலில் மூன்றாம் அடியைக் காட்டும் நூலாசிரியர் அந்த அடியின் மூலம் புது மணமக்களுக்கு அப்போதே தந்தையும் தாயும் பொறுப்பையும் அளித்தனர் என்று எழுதுவது பாராட்டத்தக்கது.

இன்றைக்குப் பண்டைய இலக்கியங்களை வாசிக்கும்பொழுது அவற்றை ஓர் அளவிற்கு  மீள்பார்வைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. முருகப்பெருமான் இருவரை மணம் புரிந்தது சரியா என்ற ஒரு வினாவை எழுப்பிய நூலாசிரியர் நல்ல தீர்வையும் எழுதுவது நவீன இலக்கியப் போக்காகும். இதேபோல ஒரு சாதாரண மனிதன் நினைப்பதுபோல பார்வதி அம்மையாரின் தாய் சிவபெருமானுக்குப் பார்வதியைப் பெண் கேட்க வரும்போது அச்சப்படுகிறார். காரணம் ஏற்கனவே சிவபெருமான் ஒருமுறை தன் மாமனார் என்றும் பாராமல் தட்சனையே அழித்தாரன்றோ? அதை எண்ணி அவர் அச்சப்படுவதும் நியாயந்தானே என்று நாமும் எண்ணுகிறோம். அதற்கு நல்ல விடையும் இந்த நூலில் நமக்குக் கிடைக்கிறது.

பார்வதி-சிவபெருமான் திருமண ஏற்பாடுகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மணமகன் வீட்டார் செய்யும் மணம் எனில் மணமகனின் நெருங்கிய உறவினர் சென்று மணமகளின் பெற்றோரிடம் திருமணத்திற்குப் பெண்ணை அனுப்பி வைக்குமாறு அழைப்பதும், இதேபோல மணமகளின் வீட்டார் நிகழ்த்தும் திருமணம் என்றால் மணமகனை அழைப்பதும் இன்றைக்கும் நம் கலாச்சாரமாக இருக்கிறது. இது சிவபெருமான்—பார்வதி திருமணத்திலும் நடப்பதைக் காண முடிகிறது. மேலும் இத்திருமணத்தில் ஒரு விந்தையான காட்சியை நாம் பார்க்க முடிகிறது. சிவபெருமானுக்கு மாப்பிள்ளைத் தோழர்களாக இருபுறமும் திருமாலும் பிரமனும் வருகின்றனர். இப்படித் தந்தையும், மகனுமே மாப்பிள்ளைத் தோழர்களாக வலம் வருவது மிகப்பெரிய பாக்கியம் என்பதையும் நூலில் பார்க்கிறோம்.

மணமக்களின் முன்னால் இரு குடங்கள் வைத்து மங்கல நாண் அணிவிக்கப்படும்பொழுது ஒரு குடத்திலிருந்து மற்றொரு குடத்திற்கு நீர் ஊற்றும் சடங்கு, மற்றும் தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற சடங்குகள் எந்தெந்தத் திருமணங்களில் உள்ளன என்றும் அறிய முடிகிறது. கம்பன் காட்டும் இராமன்-சீதை திருமணத்தில் தாலி கட்டியதற்கான சான்றுகள் இல்லை. ‘பதியிலார்’ என்பதற்குச் சிவனையன்றி வேறு பதியில்லாதவர்கள் என்று பொருள்.. திரௌபதி ஐவரை மணந்தும் பத்தினியாக வணங்கப்படுவது ஏன்? என்பனவற்றையெல்லாம் எழுதும் நூலாசிரியரின் உழைப்பு பாராட்டத்தக்கது.

அதிகமாக யாரும் அறியாத சுந்தரமூர்த்தி நாயனார் இருவரை மணந்த வரலாறு நூலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

நளனும் தமயந்தியும் காணும் திருமணத்தை ஆசிரியர் ஒரு குறுநாவல் போலப் படிக்க ஆர்வமூட்டும் வண்ணம் படைத்துள்ளார். ஆண்டாள் திருமணத்தை எழுத வந்தவர் ஆண்டாளின் கனவைக் காட்ட “நாச்சியார் திருமொழி”ப் பாடல்களை ஆங்காங்கே நயத்துடன் வடித்துள்ளார்.

துஷ்யந்தன்—சகுந்தலை ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் யார் என அறியாமல் கண்டவுடனே காதல் கொள்கின்றனர். இந்த இடத்தில் மிகப்பொருத்தமாக “யாயும் ஞாயும் யாரா கியரோ” என்ற குறுந்தொகைப் பாடலை நாம் காண்கிறோம். தேவையான இடங்களில் திருக்குறள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது நூலாசிரியரின் பல்நூல் புலமையைக் காட்டுகிறது.

நம் புராணங்களும், பழந்தமிழ் இலக்கியங்களும் நம்முடைய பண்பாட்டைக் காட்டும் கண்ணாடிகள் என்பது இந்நூல் வழி மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. காலங்கள் மாறினாலும் அன்றுமுதல் இன்றுவரை மாறாதது தமிழ்ப் பெருமக்களின் பண்பாடு என்பதும் புலனாகிறது. பண்பாடு என்பதே அன்பையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான். இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அவைதானே என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போலக்காட்டும் இந்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு உள்வாங்கி மகிழும் எனத் துணிந்து கூறலாம்.

==============================================================================

Series Navigationமுகமூடிவிதை நெல்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *