திருமணம் ஆனபின்பு ஒரு வாரம் கிராமத்தில்தான் இருந்தோம். அண்ணனும் அண்ணியும் , அத்தையும், அவரின் கடைசி மகன் அகஸ்டியனும் ஒரு வாரம் தங்கியிருந்தனர். தேன்நிலவை நாங்கள் இருவரும் தெம்மூரில்தான் கொண்டாடினோம்! கிராமத்துச் சூழல் இனிமையாகத்தான் கழிந்தது. செலவுகள் இல்லாத நிறைவான தேன்நிலவு!
மண் சுவர் வீடாக இருந்தாலும் குளுகுளுவென்றுதான் இருந்தது. இயற்கைச் சூழல் இதமாக இருந்தது. தென்னங் காற்றும், வேப்பங் காற்றும் தூய்மையானவை. வாய்க்கால்களும் வயல் வெளிகளும் நீர்க் காடுகளாய் காட்சி தருகின்றன. வயல்களை மூடியுள்ள இளம் நாற்றுகள் பச்சைப் பசேலென்று காற்றில் அசைந்தாடுவது கண்கொள்ளாக் காட்சிதான். வரப்புகளில் வெள்ளி நிறத்தில் மின்னும் கொக்குகள் நிற்பதும் பறந்து செல்வதும் தனி அழகுதான்.
கிராமத்து மண் சாலைகளில் நடந்து செல்வதுகூட நல்ல அனுபவம்தான். ஊர் மக்கள் அனைவரையும் நலம் விசாரிப்பதும் மகிழ்ச்சியானதுதான் உற்றார் உறவினரோடு உறவாடுவதும் உற்சாகம்தான். அவர்களின் அன்பான உபசரிப்பில் மகிழ்வதும் ஆனந்தமே.
அற்புதநாதர் ஆலயம் செல்வது மனதுக்கு அமைதியையும் ஆன்மிகத்தையும் தருகிறது. உபதேசியார் இஸ்ரவேலின் இறைவன் பற்றிய அருளுரை அருமையாகவே உள்ளது. கிராம சபையார மனப்பாடமாக பாமாலைகளையும் கீர்த்தனைகளையும் ராகத்துடன் பாடுவது இனிமையானது.
புது மனைவியுடன் இவ்வாறு எங்கள் சொந்த ஊரில் ஒரு வாரம் கழித்தது நல்ல அனுபவம். எங்கள் இருவருக்கும் இது சொந்த ஊர்தான். அவளுடைய தந்தை சாமுவேல் பிறந்து வளர்ந்தது இங்கேதான். எங்கள் இருவருக்கும் பூர்வீகம் தெம்மூர்தான். அவள் மலேசியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தெம்மூரில் இருப்பதில் எந்த விதமான அசௌகரியமும் கொள்ளவில்லை. வீட்டில் கழிவறைதான் முறையான வகையில் இல்லை.தோட்டத்தின் மூலையில் ஒரு மறைவான இடத்தைதான் பயன்படுத்த வேண்டும். குளிக்க கீற்றுகளால் கட்டப்பட்ட ஒரு மறைவான குளியல் அறை இருந்தது.. அங்கே அடிக் குழாய் இருந்தது.
படுக்க கட்டில் இல்லை. சாணி மெழுகியத் தரையில் மெத்தை போட்டு படுக்கவேண்டும். மின்சாரம் இல்லாத காரணத்தால் மின் விசிறி இல்லை. இதுபோன்ற குறைபாடுகள் இருந்தும் அவள் எதையும் பெரிதுபடுத்தாமல் எங்களுடன் சந்தோஷமாகவே இருந்தாள். ஆயிரம் ஆனாலும் அவள் எங்கள் வீட்டு பெண்தானே! உற்றார் உறவினர் ஊர் மக்கள் அனைவருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. அவளை ” ஆச்சி… ஆச்சி .. ” என்று ஆசையாக அழைக்கத் தொடங்கினர். ஆச்சி என்பதுதான் ஜெயராணியின் செல்லப் பெயர். சிறுமியாக இருந்தபோதே அப்படிதான் அவளின் பெற்றோரும் உடன்பிறந்தோரும் அழைத்து மகிழ்ந்தனர். அதே பெயரிலேயே தெம்மூரில் அனைவரும் அழைத்தனர். ஆச்சி என்று அவர்கள் வீட்டில் அழைத்ததற்கு ஒரு காரணமும் உள்ளது. அவள் தன்னுடைய பாட்டி ( அப்பா சாமுவேலின் அம்மா ) போன்று முகபாவம் கொண்டுள்ளதால்தான். அப்பா கூட ஆச்சி தன்னுடைய ஆயாள் போன்று இருப்பதாகக் கூறுவார். அந்த பாட்டியின் பெயர் அன்பாயி. அவர் கிரிஸ்துவர் ஆனதும் ஜெயராணி ஆனார். அதனால்தான் தன்னுடைய அம்மாவின் பெயரையே மகளுக்குச் சூட்டியுள்ளார் அவளின் தந்தை சாமுவேல்.
பெண்ணின் அப்பா சாமுவேல் தெம்மூரில் திருமணம் செய்துவிட்டு மலாயாவுக்குச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. இவள் அங்கு லாபீசில் பிறந்தபோது அப்பாவும் நானும் சென்று பார்த்துவந்துள்ளோம்.
எங்களின் திருமணம் இன்னொரு வகையில் சிறப்பு பெற்றிருந்தது. இதில் பெரியப்பா, அப்பா, சித்தப்பா ஆகிய மூன்று சகோதரர்களும் கலந்துகொண்டு எங்களை வாழ்த்தியது. எங்கள் திருமணப் படத்தில் அவர்கள் மூவரும் இருப்பது சிறப்பாகும். பெரியப்பா, அப்பாவின் தாயார் ஏசடியாளும், மோசஸ் சித்தப்பாவின் தாயார் தேவகிருபையும் உடன் பிறந்த சகோதரிகள். இவர்கள் இருவரும் பெண்ணின் தந்தை சாமுவேலின் உடன்பிறந்த அக்காள்கள். நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கிய உறவினர்கள்.
இப்படி மிகவும் நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொண்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில குறைபாடுகள் உண்டாகலாம் என்பதை நான் அறிவேன். குடும்பங்களில் உள்ள சில நோய்கள்கூட பிள்ளைகளுக்கு எளிதில் வரலாம் என்பதும் தெரியும். அதில் நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் ,முக்கியமானவை. இவை தெரிந்தும் அப்படியெல்லாம் நிகழாது என்ற ஒரு நம்பிக்கையில் இருந்தேன்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது உண்மையானால், இவளைத்தான் கடவுள் எனக்கு மனைவியாகத் தந்துள்ளார் என்றும் நம்பினேன். நான் பல பெண்களுடன் பழகியிருந்தாலும் அவர்களை கடவுள் எனக்கு நிர்ணயம் செய்யவில்லை. அதனால்தான் மலேசியாவில் பிறந்த இவளை எனக்கு மனைவியாகத் தந்துள்ளார். கடவுளின் சந்நிதானத்தில் நடந்துள்ள எங்களுடைய திருமணத்தை கடவுள் நிச்சயம் ஆசிர்வதிப்பார் என்பது திண்ணமாகத் தெரிந்தது
தெம்மூர் அற்புதநாதர் ஆலயத்தில் எங்கள் திருமணம் நடந்தேறியதில் இன்னொரு ஆசிர்வாதமும் உள்ளது. இதுவே எங்களின் பூர்வீக ஆலயம். இங்குதான் எனக்கு ஞானஸ்நானமும், திடப்படுத்தலும்தி, ருமணமும் நடந்துள்ளது. அதோடு பெரியப்பா, அப்பா, அண்ணன் ஆகியோரின் திருமணங்களும் இங்குதான் நடந்துள்ளது.. கடவுளின் பெரிதான கிருபை எங்களுக்குக் கிடைக்கும் என்று நம்பினேன்..
எங்களுக்கு ஊரிலுள்ள உறவினர் விருந்து வைத்து சிறப்பித்தனர்.பெரியப்பா வீடு, மோசஸ் சித்தப்பா வீடு. சாமிப்பிள்ளை தாத்தா வீடு, பெரிய தெருவில் செல்லக்கண்ணு மாமா வீடு, சாமிதுரை மாமா வீடு சென்று விருந்தில் கலந்து கொண்டோம்.
பின்பு வெளியூர் விருந்துக்குச் சென்றோம். அவளின் அம்மாவின் தங்கை எமிலியும் அவரின் கணவர் பொன்னையாவும் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்கோட்டை என்னும் கிராமத்தில் உள்ளனர். இருவரும் ஆசிரியர்கள். அவர்கள் அழைத்திருந்தனர். அங்குதான் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கங்கைகொண்ட சோழபுரம் கோவில் உள்ளது. அது தஞ்சைப் பெரிய கோவிலின் அச்சு எனலாம். நான் முன்பே அண்ணியுடன் அங்கு சென்றுள்ளேன். இப்போது இவளையும் அங்கு அழைத்துச் சென்று காட்டலாம். எனக்கும் அக் கோவிலை மீண்டும் காண ஆசைதான். ஆதலால் வாடகைக்கு ஊர்தி எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். முதலில் கோவில் பார்த்தோம். பின்புதான் உள்கோட்டை சென்றோம். கோவில் தாண்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஊர் இருந்தது. அவர்கள் காத்திருந்தனர். அவர்களின் பிள்ளைகள் மார்க், தேன்மொழி, மணிமொழி ,ஆகியோர் சிறு பிள்ளைகளாக இருந்தனர்.மண் சுவர் கூரை வீடுதான். தண்ணீர் வசதி இல்லை. தேன்மொழி அருகிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் செப்புக் குடத்தில் கொண்டு வந்து ஓர் அண்டாவை நிரப்பினான். அவள் இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பாள். அவளுக்கு இவள் அக்காள் என்பதால் எங்களை விழுந்து விழுந்து உபசரித்தாள்.
எமிலி கருத்த நிறத்தில் உயரமாக இருந்தார். பொன்னையா எப்போதுமே சிரித்த முகத்துடன் காணப்படடார். சரளமாக ஆங்கிலம் பேசினார். அவர் ஜெயங்கொண்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர். அன்று மதிய விருந்தை ருசித்து உண்டு மகிழ்ந்தோம். மாலையில் தெம்மூர் புறப்பட்டுவிட்டோம்.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். எங்களுக்கு ஒரு வாரம் ஆகிவிட்டது. இனி நான் வேலை தேடும் படலத்தை ஆரம்பிக்கலாம். கோயம்புத்தூரில் இனிமேல் வேலை இல்லை. நான் முன்பே முடிவு செய்ததுபோல் வேலூரில் சேரலாம் என்ற முடிவுடன் இருந்தேன். இவளுக்கு இந்த ஒரு வார அனுபவத்தில் கிராம வாழ்க்கையில் ஈர்ப்பு உண்டாகிவிட்டது போன்று தெரிந்தது. அண்ணனும் அண்ணியும் தரங்கம்பாடி சென்றுவிட்டனர். அத்தை மட்டும் தங்கிவிட்டார்கள். நான் அவளை ஊரில் விட்டுவிட்டு வேலூர் செல்ல முடிவு செய்தேன். அவளிடம் என்னுடைய முடிவைச் சொன்னேன். அவளும் சரியென்றுவிடடாள்.
எப்படியாவது எனக்கு உடன் வேலை கிடைத்தாக வேண்டும். திருமணமும் செய்துவிட்டு செலவுக்கு அப்பாவிடமோ அண்ணணிடமோ பணம் கேட்பது நல்லதல்ல. அப்பாவுக்கு நிலத்தில்தான் வருமானம் வந்தது. என்னுடைய திருமணத்துக்கு நிறைய செலவாகிவிட்டது. இனி அடுத்த அறுவடை வரை பணத் தட்டுப்பாடு இருக்கும். அண்ணன் அண்ணிக்கு மாதச் சம்பளம். கொஞ்ச நாட்கள் அவர்களிடம் பணம் எதிர்பார்க்கலாம்.
கூண்டு வண்டியை பால்பிள்ளை தயார் செய்தான். வேலை கேட்கத்தான் போகிறேன். அதனால் இரண்டு நாட்களுக்கான துணிமணிகளை மட்டும் ஒரு பிராயணப் பையில் கொண்டு சென்றேன். ஒன்றும் அவசரம் இல்லாததால் மாலையில் நாங்கள் புறப்பட்டு நேராக சிதம்பரம் தொடர்வண்டி நிலையம் அடைந்தோம்.
வேலூர் செல்லும் திருப்பதி துரித பயணியர் வண்டி வந்ததும் பால்பிள்ளை விடை பெற்றான். நான் வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.
( தொடுவானம் தொடரும் )