லதா ராமகிருஷ்ணன்
வைதீஸ்வரன் கவிதைகள்
1961 – 2017…
அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு
முதல் பதிப்பு : செப்டெம்பர் 2017
விலை : ரூ 450
சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தமிழ் இலக்கிய நூல்களில், குறிப்பாக இலக்கியத்திற்கான மாற்றிதழ்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் மூலம் அவருடைய எழுத்தாக்கங்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன; வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
முன்பொரு காலத்திலே, ஒரே ஒரு ஊரிலே, …………………. என்ற மாபெரும் கவிஞர் இருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை யாருமே கவனிக்கவில்லை……’ என்பதாய்த் தொடங்கும் உண்மைக்கதைகள் எவ்வளவோ கேட்டாயிற்று. அப்படி அங்கலாய்த்தபடியே, அவ்விதமாய்த் தொடர்ந்திருப்பதே இன்றளவுமான, பரவலான நடப்புண்மையாக இருந்துவருகிறது. கவிஞர் வைதீஸ்வரனுக்கு கவனமும், அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை உரிய கவனமும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது. (ஒரு படைப்பாளியாக, படைக்கும்போது கிட்டும் மன நிறைவே அவருக்குப் பெரிது என்று உறுதியாகச் சொல்ல முடியும். சக படைப்பாளியாக, எனக்கும்கூட. ஆனால், ஒரு வாசகராக, மேற்குறிப்பிட்ட வருத்தம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிறது.)
1935-ம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் பிறந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.. இவ்வருடம் அவருடைய பிறந்தநாளின்போது அவருக்கு செய்யும் எளிய மரியாதையாக அவருடைய முழுநிறைவான கவிதைத்தொகுப்பை வெளியிடுவதில் மனநிறைவடைகிறேன். அனுமதியளித்த கவிஞர் வைதீஸ்வ ரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
30 வருடங்களுக்கும் மேலாக கவிஞர் வைதீஸ்வரனை எனக்குத் தெரியும். மிக அளவாகவே பேசுவார். படைப்புகள் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர். கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அறிவுரை தருவதைத் தவிர்ப்பவர். சமகாலக் கவிஞர்கள், கவிதைப்போக்குகள், படைப்புவெளியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றிய விழிப்பும், விவரஞானமும் இவரிடம் நிறையவே உண்டு. தனக்குப் பிடித்த கவிதைகளை, கவிஞர்களை – பழைய கவிஞர் புதிய கவிஞர் பிரபல கவிஞர், முகவரியற்ற கவிஞர் என்றெல்லாம் பேதம் பாராமல் – தனது வலைப்பூவிலும், முகநூல் பக்கத்திலும் அடையாளங்காட்டி வருபவர்.
கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகளை முழுமையாகத் தொகுக்கும்போது பக்கங்கள் அதிகமானாலும் பரவாயில்லை, கவிதைகளை நெரிசலாக வெளியிட லாகாது என்று முடிவெடுத்தேன். (நான்கு வரிகளுக்குள் அண்டசராசரத்தையும் அடக்கிக்கொண்டிருக்கும் கவிதைக்கு முழுப்பக்கத்தையும் ஒதுக்க வேண்டும் என்ற நியாயமான பேராசை முழுமையாக நிறைவேறியிருக்கிறது என்று சொல்ல முடியாது!)
கவிஞர் வைதீஸ்வரனுடைய, இதுகாறும் வெளிவந்துள்ள, தொகுதிகளில் அவருடைய அற்புதமான கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. (வேறுசில ஓவியர்களுடையவையும் உள்ளன என்றாலும் பெருவாரியானவை வைதீஸ்வரனு டையவை). அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்த முழுத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் அட்டைப் படமும் கவிஞர் வைதீஸ்வரனுடைய கைவண்ணம்தான்! அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடுகளுக்கு கருப்பு-வெள்ளையில் தான் முகப்பு அட்டை அமைப்பதுதான் வழக்கம் என்றாலும், அது கவிஞர் வைதீஸ்வரனுடைய ஓவியத்திற்கு நியாயம் சேர்ப்பதாகாது என்பதால் முகப்பு அட்டை பல்வண்ண அட்டையாக உருவாகியுள்ளது.
கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள் சில இந்த முழுத்தொகுப்பில் கட்டாயம் விடுபட்டுப்போயிருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது. ஆனாலும், இதில் இடம்பெறும் கவிதைகளடங்கிய பட்டியலை அவரிடம் காட்டி ஒப்புதல் பெறும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில் நிறைவேற்பட்டது. நண்பராகிய சக கவிஞரின் மேல் கொண்ட அன்பு, மரியாதை காரணமாய் நண்பரின் அகால மரணத்திற்குப் பிறகு பெருமுயற்சி எடுத்து தனியொருவராய் அவருடைய கவிதைகளைத் திரட்டித் தொகுத்துத் தன் கைப்பணத்தைச் செலவு செய்து நூலாக வெளியிட்ட கவிஞரொ ருவரின் ஆர்வமும், உழைப்பும் சிலரால் எப்படியெல்லாம் இங்கே கொச்சைப்படுத் தப்பட்டது, துச்சமாகப் பேசப்பட்டது என்பதைப் பார்த்து அதிர்ந்துபோயிருந்த என் மனதிற்கு இது பெரிய ஆறுதல்; ஆசுவாசம்.
இந்தத் தொகுப்பை குறித்த காலத்தில் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்திருக்கும் ‘விக்னேஷ் ப்ரிண்ட்ஸ்’ நட்புள்ளங்களுக்கு என் என்றுமான நன்றி உரித்தாகிறது.
(நூலின் விலை ரூ.450. பிரதியை வாங்க விரும்புவோர் ramakrishnanlatha@yahoo.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்)
- பிராந்தியவாதம், சிவசேனா, திமுக பாஜக – சில குறிப்புகள்
- தொடுவானம் 191. சீனியர் ஹவுஸ் சர்ஜன்
- உயரம்
- 2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்.
- உன்னைக் காதலிப்பது சிரமம் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- ”இயற்கையில் தோயும் வானம் பாடி” [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]
- புரியாத கவிதை
- சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு
- ஏன் இந்த நூல்? (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)
- இலக்கிய சோலை. 8ஆவது ஆண்டுவிழா அழைப்பிதழ்
- பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – ஓடும் நதி -நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்