என்.துளசி அண்ணாமலை
“அய்யா! உங்களுக்குக் கடிதம் வந்திருக்கு!”
வீட்டு வேலையாள் கண்ணன், தான் கொணர்ந்த தபால்களை காப்பிமேசையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அன்றைய செய்தித்தாளில் கண்களைப் பதித்திருந்த சின்னக்குழந்தை, அசுவாரஸ்யமாக செய்தித்தாளை வைத்துவிட்டு, கடிதத்தைக் கையில் எடுத்துப் பிரித்தார்.
அவ்வேளையில் அங்கு பிரவேசித்த கமலம், கையிலிருந்த தேநீர்க் கோப்பையை அவரிடம் நீட்டியவாறே, “யாரிடம் இருந்து வந்திருக்கின்றது? இந்தக் காலத்தில் ஆற அமர கடிதம் எழுதுவதற்குக் கூட சனங்களுக்கு நேரம் இருக்கிறதா, என்ன?” என்றாள் சலிப்புடன்.
“ஹூம்….நானுந்தான் ரெண்டு பிள்ளைகளைப் பெற்றேன்! ஒரு கடிதம் உண்டா, இல்லை கைப்பேசியில் அழைப்பு உண்டா? எல்லாம் நாமே கூப்பிட்டுப் பேசினால் தான் ஆச்சு. அதுவும் பல சமயங்கள்ல மிசினுதான் பதில் சொல்லும். எங்கே போய் இந்தக் குறைகளைச் சொல்லி மாளுவது?”
அவள் புலம்பியவாறே நீட்டிய கோப்பையை சின்னக்குழந்தை வாங்காமல், கடிதத்தையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். கமலம் பலமுறை அழைத்தபின்னரே அவர் தன்னுணர்வு பெற்றார்.
“என்னங்க, நான் பாட்டுக்குக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்க ஏதோ பேயறைஞ்ச மாதிரி அந்தக் காகிதத்தையே பார்த்துக் கொண்டு, சிலையாட்டம் உட்கார்ந்திருக்கீங்க? கொடுங்க அதை!”
தேநீரை அவரிடம் தந்துவிட்டு, கடிதத்தை வாங்கி வாசித்தாள் கமலம். கடிதம் உள்ளூரில் இருந்துதான் வந்திருந்தது. அதுவும் அவர்கள் வாழும் பணக்காரத் தாமானுக்கு வெகு தொலைவில் அமைந்திருக்கும் கம்பத்திலிருந்து வந்திருந்தது.
அதைப் பார்த்ததுமே கமலத்தின் விழிகள் பனித்தன. மௌனமாக வாசித்தாள்.
“அன்புள்ள அண்ணா, அண்ணிக்கு,
சாரதாவின் அன்பான வணக்கம். நான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு பல நாட்கள் சிந்தித்த பிறகுதான் எழுதுகிறேன். அண்ணா, நான் ஏழையாக இருப்பது என் குற்றமா? என் கணவர் திடீரென்று விபத்துக்கு உள்ளானதும், வருமானம் இல்லாமல் நாங்கள் வறுமையில் வாடுவதும் நாங்கள் கேட்டு வாங்கிய வரமா? நீங்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தானே? நான் எனக்கென்று எதையுமே உங்களிடம் கேட்டதில்லையே?
ஆனால் இப்போது உங்களிடம் கையேந்துகிறேன். என் கணவருக்கு ஏற்பட்ட விபத்தில், அவருக்கு நிரந்தரமாக கால் ஊனமாகிவிட்டது, நீங்கள் அறிந்ததுதானே? என் ஒருத்தியின் வருமானத்தில்தான் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான்கு பிள்ளைகளை
வைத்துக் கொண்டு நான் தினம்படும் வேதனையை உங்களைத் தவிர வேறு யாரிடம் சொல்லி ஆறுதல் தேடமுடியும்?
நான் பலமுறை உங்களோடு தொலைபேசியில் பேசமுயற்சித்து விட்டேன். ஆனால் நீங்கள் என் குரலைக் கேட்டதுமே பட்டென்று வைத்து விடுகிறீர்கள். உங்கள் வீட்டுக்கு வந்தாலும் நீங்கள் முன்வாசலைத் திறக்க மறுக்கின்றீர்கள்.
அண்ணா, என் குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள். தீபாவளிக்கு என் பிள்ளைகளுக்கு நல்ல உடை இல்லை என்றாலும் பரவாயில்லை. நல்ல உணவாவது கொடுக்கவேண்டும் என்று இந்தத் தாயுள்ளம் ஏங்குகிறது. எத்தனை நாட்களுக்குத் தான் அவர்களுக்கு சத்து குறைவான உணவைத் தருவது? நான் எடுக்கும் சம்பளம் குடியிருக்கும் வீட்டு வாடகைக்கே சரியாக இருக்கின்றது. இதில் நல்ல சாப்பாடுக்கு எங்கே போவது? அண்ணா, கருணை காட்டுங்கள். உதவி செய்யுங்கள். உங்களிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அன்புடன் தங்கை புவனா”
அந்த நீண்ட கடிதத்தின் வாசகங்கள் கமலத்தின் நெஞ்சில் பாரமாக அமர்ந்து கொண்டன.
சின்னக்குழந்தைக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை, தாய், தந்தை என்று பெரிய குடும்பம். சின்னக்குழந்தை கடுமையான உழைப்பாளி. மோட்டார் சைக்கிளில் துணிவியாபாரம் செய்ய ஆரம்பித்தார். பிறகு மலிவான வேன் ஒன்றை வாங்கி, அதில் வீட்டுக்கு அன்றாடத் தேவையான மளிகைப் பொருட்களையும் காய்கறிகளையும் விற்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் அவர் பல சிரமங்களை எதிர்நோக்கினாலும், கமலத்தின் துணையோடும், தங்கை, தம்பிகள் ஆகியோரின் கூட்டு உதவியோடும்தான் அவரால் உயரமுடிந்தது.
யாருக்குமே சம்பளம் என்று அவர் தந்ததில்லை. எல்லோருக்குமே மிகவும் சிக்கனமாக, கோவிலில் திருமணம் செய்துவைத்தார். அவர்கள் மணம் முடித்து சென்றபிறகு, அவருடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. கண்ணுக்கு அழகாக இரண்டு பிள்ளைகள். கமலம் சிக்கனமாக குடும்ப வரவு செலவுகளைக் கவனித்து, கணவருக்குப் பேருதவியாக இருந்தாள்.
தம்பிகள் இருவரும் மணமுடித்து, ஒருவர் ஜோகூரிலும், மற்றவர் கிள்ளானிலுமாக வாழ்கிறார்கள். இருவருமே தனியார் தொழிற்சாலைகளில் மிகக் குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள். புவனாவுக்கும் அவர்தான் வரன் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். ஆனால் தன்னுடைய சொத்திலிருந்து அவர் அவர்கள் மூவருக்கும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.
தம்பிகளும் அவரைத் தேடி வருவதில்லை. காரணம், சின்னக்குழந்தையின் செழிப்பான வாழ்க்கை தந்த ஆணவம்! அதேபோல புவனாவும் அவரைத் தேடவில்லை. அப்படியே அவள் வந்தாலும், தங்கை என்ற பாசவுணர்வு ஏதுமின்றி, அவளை வாசலுக்கு வெளியே வைத்தே பேசி அனுப்பிவிடுவார்.
கமலத்துக்கு அவருடைய குணம் பிடிக்கவில்லை என்றாலும், வெளியில் எங்காவது அவளைப் பார்க்க நேர்ந்தால், தன்னிடம் இருக்கும் பணம், காசைத் தந்து ஆதரிக்கத் தவறியதில்லை. அதேபோல, வெளியூரில் வாழும் கொழுநன்களோடு அடிக்கடி இல்லை
என்றாலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலாப்பேசியில் உரையாடுவாள். தாய், தந்தையர் ஒருவர் பின் ஒருவராக இறந்த பின்னர், உடன்பிறப்புக்களிடமிருந்து முற்றாகத் தன்னைப் பிரித்துக் கொண்டார். தன்னுடைய இரு பிள்ளைகளையும் பல்கலைக்கழகம் வரையிலும் பயிலச் செய்தார். அவருடைய ஆணவத்தையும் செருக்கையும் நூறு சதவீதம் அவர்கள் பின்பற்றி வந்தனர். ஆகவே அவர்களும் தம் தாய் தந்தையரின் உறவுகளைப் புறக்கணித்தனர். அவர்களைப் பற்றி கேவலமாக விமர்சனம் செய்தனர். கமலத்தால் அவர்களை சற்றேனும் மாற்ற இயலவில்லை. ‘இனி தெய்வம் விட்டவழி’ என்று அவளும் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
பிள்ளைகள் இங்குள்ள பல்கலைக் கழகத்தில் படித்து முடித்து, மேலும் கல்வி பயில ஆஸ்திரேலியா, கனடா என்று போனவர்கள், அங்கேயே மணம் முடித்து நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.
சின்னக்குழந்தைக்குத் தன் இரு மக்களைப் பற்றியும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. பார்க்கும் நண்பர்கள், அறிமுகமான மனிதர்கள் என்று யாரைப் பார்த்தாலும் தம் மக்களைப் பற்றி புராணம் பாடத் தவறுவதில்லை.
வருடத்தில் ஒருமுறை மனைவியோடு கனடாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் சென்று வருவார். அவர்களும் அவ்வாறே வருடம் ஒருமுறை தீபாவளிக்கு தம் பிள்ளைகளோடு ஒரு மாதம் அல்லது இருபது நாட்கள் விடுமுறையில் இங்கு வந்து தங்கிச் செல்வர்.
அப்போது பார்க்கவேண்டுமே, சின்னக்குழந்தையின் ஆர்ப்பாட்டத்தை! கால் தரையில் நிற்காது. வீட்டு வேலைக்கு ஏற்கனவே கண்ணனும், அவன் மனைவி ராஜியும் மேலும் இரு வேலையாட்களும் இருந்தாலும், தம் பிள்ளைகள் வரும்போது மட்டும் இன்னும் மூன்று வேலையாட்களை அமர்த்திக் கொள்வார்.
கமலத்துக்குத் தன் பேரப்பிள்ளைகளோடு பொழுதைக் கழிக்க வெகு ஆசை. ஆனால், மருமகள்கள் இலேசில் அவளை அவர்களிடம் நெருங்க அனுமதிப்பது இல்லை. அதுகுறித்து கமலம் சின்னக்குழந்தையிடம் முறையிட்டும், தன் மகன்களிடம் குறைபட்டுக் கொண்டும், எந்தப் பலனும் இல்லாமல் போயிற்று.
அதன் காரணமாகவே, கடந்த இருவருடங்களாக தன் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் பார்க்க கணவருடன் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. சின்னக்குழந்தை மட்டுமே சென்று வந்தார், அதே பெருமையோடும் ஆணவத்தோடும். கமலம் வராதது குறித்து அவர் கவலைப்படவேயில்லை.
கமலம் தன் கையில் இருந்த கடிதத்தை நான்காக மடித்து,, சுவர் ஓரமாக மாட்டப்பட்டிருந்த கூடையில் வைத்தாள். பின், கணவர் காலியாக வைத்த கோப்பையை எடுத்துக் கொண்டு, சமையற்கட்டுக்குச் சென்றாள்.
மனைவி கடிதத்தைப் படித்துவிட்டு எதுவுமே சொல்லாமல் சென்றது சின்னக்குழந்தையைப் பாதிக்கவில்லை. அவர் எப்போதுமே மனைவியின் உள்ளத்தில் எழும் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்தவரில்லை. அதனால், அலட்சியத்துடன் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தார்.
தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கும் மரங்களுக்கும் கண்ணன் நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தபோது, உள்ளத்தில் வெறுப்பே மிஞ்சியது. காரணம் அவன் முகத்தில் தெரிந்த புன்னகை.
‘இப்படி அடிமை வேலை செய்யும்போதே இவனுக்கு இவ்வளவு மகிழ்ச்சியும் புன்னகையும் ஏற்படுகின்றதே! இன்னும் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் இவனைப் பிடிக்க முடியுமா, என்ன?’
தோட்டத்தில் மெல்ல உலாவத் தொடங்கினார். தங்கையின் கடிதத்தில் கண்டிருந்த வாசகங்கள் அவருடைய மனக்கண் முன் தோன்றி மறைந்தன.
‘நான் எதற்காக புவனாவுக்கு உதவ வேண்டும்? தேவை இல்லை! அவளுடைய வாழ்க்கையில் கஷ்டம் வந்தால், அதற்கு நானா பொறுப்பு? கவனமாக இருந்திருந்தால், ஏன் விபத்து ஏற்படப் போகின்றது? எல்லாம் திமிர்!’
சின்னக்குழந்தை பலவாறாக சிந்தித்தவராக தோட்டத்தை வலம் வந்தார். பொழுது மறைந்து கொண்டு வந்தது. ‘சரி, வீணான சிந்தனை எதற்கு? போய்க் குளிக்கலாம்.’
இரவு உணவின்போது, கமலம் மௌனமாக உணவைப் பரிமாறியதைப் பார்த்து மனம் துணுக்குற்றது. எனினும், எதுவும் கேளாமல், அவரும் மௌனமாக உண்டு முடித்து கைகழுவினார்.
மொட்டைமாடியில் சற்று இளைப்பாறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மொட்டைமாடிக்கு வந்தபிறகுதான் இன்று பௌர்ணமி என்பது உறைத்தது! நிலா பால்போல ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. மனம் பிள்ளைகளைப் பற்றியே சிந்திக்க, மெதுவாக நடைபோட்டார்.. இன்னும் ஓரிரு நாட்களில் வரப்போகும் மகன்களுக்காகவும், மருமகள்களுக்காகவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் உள்ளம் ஏங்கியது.
உடனே உலாப்பேசியையை உயிர்ப்பித்து, ஆஸ்திரேலியாவில் இருக்கும் மூத்தமகனைத் தொடர்பு கொண்டார்.
“அப்பா, நாங்கள் தீபாவளிக்கு முதல் நாள் வருகின்றோம். கவலைப்படாதீர்கள். அம்மாவிடமும் சொல்லிவிடுங்கள்.” என்று இரத்தினச் சுருக்கமாகப் பேசிவிட்டு உலாப்பேசியின் வாயை அடக்கினான் மகன்.
அதேபோல, கனடாவில் வசிக்கும் இளையமகனோடு தொடர்பு கொள்ள முயன்றார். மறுமுனையிலிருந்து யாரும் எடுத்துப் பேசவில்லை அதுவே சின்னக்குழந்தைக்குப் பெரிதும் மனவருத்தத்தை அளித்தது.
ஒருகணம், இத்தனை வருடங்களில் இப்போதுதான் முதன்முறையாக மனதில் சிறிய பள்ளம் விழுந்தாற் போல உணர்ந்தார். மறுகணமே அந்த எண்ணத்தைத் தூக்கி எறிந்தார்.
‘இருக்கட்டும். ஏதாவது வேலையாக இருப்பான் போலும். நாளைக்குப் பேசலாம்.’ என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டார். மீண்டும் நடைபோடும்போது, கீழே தோட்டத்தில் இருந்து எழுந்த சிரிப்பொலி அவரைச் சலனப்படுத்தியது. மொட்டைமாடியின் சுவர் ஓரமாக வந்து நின்று பார்த்தார்.
அங்குதான் கண்ணனும் அவன் குடும்பத்தாரும் வாழும் வீடு இருக்கின்றது. அந்த வீடு முன்பு கார் நிறுத்தும் இடமாகப் பயன்பட்டது. கண்ணன் திருமணம் முடித்து, ராஜியோடு வந்தபோது, அவர்கள் தங்குவதற்காக கமலம் ஏற்படுத்திக் கொடுத்த இடம். ஒரே ஒரு அறையும் கூடமும் கழிவறையும் கொண்ட அந்த இடத்தை ராஜி அழகான இல்லமாக மாற்றியிருந்தாள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இரட்டையர்களாக இருபிள்ளைகளும் இருபெண்களும் அந்த வீட்டில்தான் பிறந்தனர்.
‘ஏழைக்கு எதற்கு வீடு நிறைய பிள்ளைகள்?’ என்று சின்னக்குழந்தை கமலத்திடம் சிலாகித்ததுண்டு. ஆனால் கமலத்துக்கு அந்தப் பிள்ளைகளிடத்தில் அலாதியான அன்பு விளைந்திருந்தது. அதனால் சில சமயங்களில் இனிப்புப் பண்டங்கள் செய்தால், அவர்களுக்கென்று தனியே எடுத்து வைத்திருந்து, சின்னக்குழந்தை வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து அவர்களை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு, தன் கையாலேயே ஊட்டிவிடுவாள். அதிலும் இரட்டையர்களான பெண்பிள்ளைகளிடத்தில்
இன்னும் கூடுதலான பாசத்தைப் பொழிந்தாள்.
சின்னக்குழந்தை தன்னுடைய மாளிகையின் மொட்டைமாடியில் இருந்து பார்த்தபோது, கண்ணன், வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். அவன் அருகிலும் எதிரிலும் அவனுடைய பிள்ளைகளும் மனைவியும் அமர்ந்திருந்தனர்.
மனைவி இரவு உணவைப் பரிமாற, அனைவரும் சிரித்துப் பேசியவாறு உண்டனர். இடை இடையே கண்ணனும் ராஜியும் தம் மக்களுக்கு உணவை ஊட்டிவிட்டனர், நிலாவொளியில் அந்தக் காட்சி மிகவும் துல்லியமாகத் தெரிந்தது.
அதைப் பார்த்து சின்னக்குழந்தையின் உள்ளத்தில் வெறுப்பும் ஆத்திரமும் தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் ஒருங்கே எழுந்தது.
‘பஞ்சப்பயலுக்கு நிலாச்சோறு வேண்டிக் கிடக்கின்றதோ? வெறும்பயல்!’ என்று உள்ளுக்குள் புகைந்தார். மேலும் அங்கு நிற்க விருப்பமின்றி வீட்டுக்குள் வந்தார். அவரால் கண்ணனும் ராஜியும் தம் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக நிலாவொளியில் உண்டு கழித்திருப்பதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
‘இருக்கட்டும்! நம்முடைய பிள்ளைகள் தீபாவளிக்கு வந்ததும், நாமும் இப்படி மொட்டைமாடியில் ஒரு பெரிய விருந்தே வைத்துவிடுவோம்! இவனுக்கு மட்டுந்தான் நிலாச்சோறு சாப்பிட முடியுமா? என்னால் முடியாதா?’
இவ்வாறு வெகுண்டு, வெகுநேரம் தூங்கமுடியாமல் தவித்து, விடியற்காலையில் தான் கண்ணுறங்கினார்.
மறுநாள் மாலையில் கனடாவில் வசிக்கும் மகனோடு மீண்டும் தொடர்பு கொள்ளமுயன்றார். அன்றும் மகனுடைய தொடர்பு எண் கிடைக்கவில்லை. உடனே ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகனை அழைத்து விபரத்தைச் சொன்னார். அவனும் தம்பியோடு பேசிவிட்டு, பின்னர் விபரம் தெரிவிப்பதாகச் சொன்னான். ஆனால், சொன்னபடி அவன் அன்று மட்டுமல்ல, அதற்கடுத்த மூன்று நாட்களிலும் அழைக்கவில்லை.
தீபாவளி நெருங்க நெருங்க, அவருடைய தவிப்பும் அதிகமாகியது. . தன்னுடைய தவிப்பை மனைவியிடமும் பகிர்ந்து கொள்ளமுடியவில்லை.
‘இன்னேரம் இரண்டு மகன்களும் குடும்பத்தோடு வந்திருக்கவேண்டியது. காணவில்லையே? என்ன ஆகியிருக்கும்?’ என்று கவலையில் ஆழ்ந்தார்.
அவர் இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் தொலைபேசியில் மாறி மாறி அழைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கமலத்துக்கு, சிமாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் ரசித்த வால்மீகி இராமாயண சொற்பொழிவு நினைவுக்கு வந்தது.
‘இராமனும் சீதையும் இலக்குவனும் கானகத்தில் வசித்த காலம் அது. அங்கே இராவணனின் அன்புத்தங்கை சூர்ப்பனகை வருகிறாள். இராமனின் கம்பீரமான தோற்றம் அவள் மனதைக் கொள்ளை கொள்கிறது. இராமனை நெருங்கி, தான் அவன்மீது மையல் கொண்டதாகக் கூறுகிறாள். உடனே இராமன், தான் மனைவியோடு வாழ்வதாகவும், தன் தம்பி தனிமையில் இருப்பதால், அவனிடம் அவளுடைய விருப்பத்தைக் கூறலாம் என்கிறான். உடனே சூர்ப்பனகை இலக்குவனிடம் சென்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றாள். அவன் மறுத்து, தன் அண்ணனிடமே செல்லுமாறு கூறுகிறான். இவ்வாறாக இராமனிடம் இலக்குவனிடமும் தன்னுடைய பெரும் விருப்பத்தை வெளியிட்ட அவளுடைய செயலானது, ஒரு நதியின் இருகரைகளையும் இங்குமங்கும் தொட்டுத் தொட்டு ஓடிய நதி அலைகளைப் போலிருந்தது. இச்செய்கையானது பயனற்ற ஒரு செயலாகவும் இருக்கின்றது!’
கமலம், இந்த நேரத்தில் அந்தக் காட்சியை மனதுக்குள் நினைத்துப் பார்த்தபோது, தன்னுடைய கணவருக்கும் அந்த சூர்ப்பனகைக்கும் வேறுபாடு ஏதுமில்லை என்ற முடிவுக்கு வந்தாள். ஆனாலும், தன்னுடைய கணவர் இப்போது யாருடைய ஆலோசனையையும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லையே!
ராஜியின் துணையோடு முறுக்கு பிழிவதில் ஈடுபட்டிருந்த மனைவியைப் பார்க்க சின்னகுழந்தைக்கு மனவருத்தம் ஏற்பட்டது.
‘என்ன மனுசி இவள்? பெற்ற பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மருமகள்களும் தீபாவளிக்கு வருவார்களா, மாட்டார்களா என்ற விபரம் தெரியாமல், முறுக்குப் பிழிந்துகொண்டிருக்கின்றாளே? சே!’ என்று மனம் கசந்தார்.
“கமலம், உன் பிள்ளைகள் இன்னும் வரவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால் நீயோ அதைப்பற்றிக் கவலையே படவில்லையே?”
அவரை நிமிர்ந்துப் பார்க்காமல் கமலம் பதில் சொன்னாள். கைகள் முறுக்கைப் பிழிவதில் தீவிரமாக இருந்தன.
“அவர்கள் வராவிட்டால் என்ன? ஒரு மாற்றமாக நீங்கள் அங்கு போய் தீபாவளியைக் கொண்டாடிவிட்டு வாருங்களேன். உங்களுக்குப் பணத்துக்கென்ன, பஞ்சமா? பலகாரம் நிறைய செய்து தருகிறேன். உடன் எடுத்துக் கொண்டு போங்கள், என்னை விட்டு விட்டு நீங்கள் மட்டும் போறது ஒன்றும் புதுசில்லையே?”
இதைக் கேட்ட சின்னக்குழந்தையின் மனம் துள்ளிக் குதித்தது. உடனே தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்து, கனடா செல்வதற்கான பயணச் சீட்டை வாங்க விரும்புவதாகச் சொன்னார்.
மறுகணமே முகம் வாடிவிட்டது. “மன்னிக்கவும். தற்போது எந்தப் பயணச் சேவையிலும் டிக்கட்டுகள் கிடைக்காது!” என்று மறுமுனையில் இருந்து பதில் வர, ஏறக்குறைய கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டார்.
“எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள். தீபாவளிக்கு முதல் நாள் நான் என் மகனோடு இருக்கவேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. தருகிறேன்.”
தீபாவளிக்கு மூன்று நாட்கள் இருக்கும்போது, மூத்தமகனிடம் இருந்து அழைப்பு வந்தது. வெகு ஆவலோடு எடுத்துப் பேசினார்.
“இந்த வருடம் தீபாவளிக்கு நாங்கள் மலேசியாவுக்கு வரவில்லை. நானும் என் குடுபத்தாரும் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இருக்கும் ஒரு தீவில் விடுமுறையைக் கழிக்கப் போகிறோம். அடுத்த வருடம் பார்க்கலாம்.” என்றான் மகன்.
அவனுடைய அழைப்புக்கு அவரிடமிருந்து பதிலையும் அவன் எதிர்பார்க்காமல் உடனே பேச்சைத் துண்டித்தும் விட்டான். அச்செயல் சின்னக்குழந்தைக்கு அதிர்ச்சியைத் தந்தது.
உடனே இளைய மகனைத் தொடர்பு கொண்டார். நல்லவேளையாக அவனே எடுத்துப் பேசினான். தனக்கும் தன் மனைவிக்கும் விடுமுறை கிடைக்கவில்லை என்றும் அவனும் அவரைத் தவிர்க்க, மனிதர் மேலும் வேதனையில் துவண்டார்.
இந்தச் செய்தியும் கமலத்தைப் பாதிக்கவில்லை.
ஒருவழியாக, தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவர் கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். உடன் அவள் தயாரித்துத் தந்த முறுக்கு, சிப்பி, அதிரசம் முதலான பலகாரங்களையும் எடுத்துச் சென்றார்.
கனடாவில் போய் இறங்கியதுமே கமலத்துக்குத் தான் பத்திரமாக மகனுடைய இல்லத்தில் போய் இறங்கியதையும், மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் சேமத்தையும் தெரியப்படுத்தினார். அவருடைய குரலில் உற்சாகம் பொங்கி வழிந்தது.
ஆயினும் தீபாவளி கழிந்த மறுநாளே வீடு திரும்பிவிட்டார். அவர் தான் புறப்பட்டு வருவதையும் கமலத்துக்குத் தெரிவிக்கவில்லை.
அவரை அன்புடன் வரவேற்ற கமலம், பொதுவாக கனடாவில் மகனும் மருமகலும் பேரப்பிள்ளைகளும் எப்படி இருக்கின்றார்கள் என்று விசாரித்ததோடு சரி! மேற்கொண்டு வேறு எதையுமே கேட்காதது அவருக்குத் தவிப்பையே ஏற்படுத்தியது.
பூசையறைக்குச் சென்றார். இப்போது அங்கு நிற்பதுதான் சற்று ஆறுதலைத் தரும் என்று தோன்றியது. கண்களில் நீர்வழிய பெருமாளை வணங்கினார். எவ்வளவு நேரம் அழுதார் என்ற உணர்வில்லை.
பின்னர், பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரின் படங்கள் மாட்டியிருந்த இடத்திற்கு வந்தார். அங்கு முன்னோர்களுக்குப் படையல் போட்டு, அவர்களுக்கான வேட்டி, சேலைகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். அது கமலத்தின் சேவை! கைகள் தாமாகக் குவிந்தன.
‘ஒரு மகனாக எங்களுக்கு சதுர்த்தசி திதியில் எங்களை நினைத்துப் பார்த்து, படையல் போட உனக்கு நேரமில்லாமல் போய்விட்டதா?’ என்று தாய், தந்தையர் கேட்பதைப் போலிருந்தது. நெஞ்சில் குற்றவுணர்வு எழுந்தது. கண்களில் மளுக்கென்று கண்ணீர் திரண்டது.
இதயம் கனடாவில் வசிக்கும் இளைய மகனிடம் தாவியது. அங்கு நடந்த சம்பவங்களை ஒருமுறை நினைத்துப் பார்த்தது..
ஆவலுடன் விமான நிலையத்தில் மகனைப் பார்த்து ஆரத்தழுவ முயன்றவரைத் தடுத்து, “இப்போது ஏன் வந்தீர்கள்?” என்ற கேள்வியால் அவரைத் துவளச் செய்துவிட்டான். அன்றிரவே மருமகள் தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டிவிட்டாள்.
தீபாவளிக்கு முதல்நாள் இரவு மகனுடைய இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் அவர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
‘அந்த விருந்தில் கலந்து கொள்ள உங்களுக்கு நாகரீகம் போதாது!’ என்று மனம் புண்படும் வார்த்தைகளை அள்ளி வீசினாள் மருமகள். பேரப்பிள்ளைகளை அவரிடம் நெருங்கவிடவில்லை. விருந்து முடியும்வரை அவர் தனியறையிலேயே இருக்கவேண்டும் என்ற கட்டளை வேறு! அது மட்டுமின்றி, அவருக்கு அவகாசம்கூட அளிக்காமல், மறுநாளே அவரை விமானத்தில் ஏற்றி அனுப்பியும் வைத்துவிட்டான்
மகன். சின்னக்குழந்தையின் இதயம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டது. இன்னமும்கூட அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
இரவு உணவை முடித்துக் கொண்டு, மொட்டைமாடிக்கு வந்தார் சின்னக்குழந்தை. எவ்வளவு முயன்றும், மனம் மகன்களைப் பற்றிய நினைவை மறக்க மறுத்தது.
‘அவர்கள் நடந்து கொண்ட விதத்தை அவ்வளவு இலேசில் மறந்துவிட முடியுமா, என்ன?
அவருடைய சிந்தனையை கண்ணனின் இல்லத்திலிருந்து வந்த இசையும் கலகலப்பும் தடைசெய்தது. சுவரருகே சென்று எட்டிப்பார்த்தார்.
கண்ணனின் இல்ல வாசலில் வண்ண விளக்குகளும் தோரணங்களும் தெரிந்தன. உறவினர்களின் நடமாட்டமும், பிள்ளைகளின் கூச்சலும் கேட்டன. அதைப் பார்த்து இப்போது பொறாமை உணர்வு வரவில்லை. மாறாக அழுகைதான் வந்தது.
‘என்னுடைய பிள்ளைகளூம் பேரப்பிள்ளைகளும் வந்ததும், அவர்களோடு “நிலாச்சோறு” உண்பேன் என்று கனவு கண்டேனே? அத்தனையும் வெறும் கனவுதானா?’ மெதுவாக இறங்கி, கூடத்துக்கு வந்தார்.
கமலம் இன்னமும் சமையலைறையில்தான் இருந்தாள். தீபாவளியை முன்னிட்டு வேலைக்காரர்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டிருந்ததால், அவள் தனியாகப் போராடிக் கொண்டிருந்தாள்.
ஒருவழியாக வேலைகளை முடித்துக் கொண்டு, கமலம் கூடத்துக்கு வந்து, சோபாவில் அமர்ந்தாள். அன்பு பொங்க அவளைப் பார்த்தார் சின்னக்குழந்தை. இத்தனை நாளும் அவளைத் தான் சரிவரப் பராமரிக்காமல், அன்பு செலுத்தாமல் போனோமே என்று மனங்கலங்கியது. பிள்ளைகளைப் பற்றி அவள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு தான் புரிந்து கொள்ளாமல், பேதையாகிப் போனோமே என்ற வெட்கமும் அவரை வாட்டியது.
தன்னுடைய வறட்டுப் பிடிவாதம், கௌரவம், ஆணவம் என்ற அனைத்துக் குணங்களுக்கும் ஈடுகொடுத்து, இந்தக் குடும்பத்தை வழி நடத்தும் கமலத்துக்கு, தான் இந்தத் தீபாவளி நாளிலாவது ஏதாவதொரு பரிசைத் தரவேண்டும் என்று தீர்மானித்தார்.
அன்புடன் அவளை அழைத்தார்.
“கமலம்! நாளைக்கு உன் தம்பி குடும்பத்தாரையும், உன் அம்மா, அப்பாவையும் நம்முடைய வீட்டுக்கு விருந்து சாப்பிடக் கூப்பிடு. அதே போல, என் தங்கை புவனாவையும் அவள் கணவன், பிள்ளைகளையும் கூப்பிடு!” என்றார்.
அவரை உற்றுப் பார்த்த கமலம், “ஏங்க? நீங்க அவங்க வீட்டுக்குப் போய் விருந்து சாப்பிட மாட்டீங்களா? இன்னமுமா உங்களோட பணக்கார பந்தா உங்களைவிட்டுப் போகவில்லை? உங்க வீட்டைத்தேடி வந்தவங்கள நீங்கதானே விரட்டி அடிச்சீங்க? அப்போ, நீங்கதான் அவங்களத் தேடிப் போகனும்!” என்றாள் உறுதியான குரலில்.
சின்னக்குழந்தையின் விழிகள் பனித்தன.
“சரி கமலம்! நீ சொன்னா சரிதான்! இப்பவே கூப்பிட்டு சொல்லிவிடுகிறேனே, நாளைக்கு வருகிறோம் என்று!”
“இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது. இந்தாங்க, உங்களுக்கு ரொம்பவும் பிடிச்ச அதிரசம் சாப்பிடுங்க!”
கமலம் நீட்டிய அதிரசத்தை ஆவலோடு வாங்கிச் சுவைத்தார் சின்னக்குழந்தை. பல நாட்களுக்குப் பிறகு மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் மத்தாப்புப் பூக்களாய் நிறைந்தன.
எழுத்து: என்.துளசி அண்ணாமலை, செனவாங், நெ.செ.
- கிளிக் கதை
- உணவு மட்டுமே நம் கையில்
- பயணம்
- ஆதல்….
- சொல்
- ‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்
- ஒரு மழைக் கால இரவு
- சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.
- நிலாச்சோறு
- நீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்
- வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்
- கிருதுமால்
- தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.
- மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி
- நறுமுகையும் முத்தரசியும்