சோம.அழகு
இது பயணக் கட்டுரை அல்ல ; பயணம் பற்றிய கட்டுரை. பயணம் – இது வெறும் வார்த்தையல்ல…ஓர் அற்புதமான உணர்வு. (இதை பாரதிராஜாவின் பாணியில் சொல்லிப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும். Travel – It’s not just a word. It’s a beautiful emotion !).
இருபது வயதிற்குப் பிறகு அவ்வப்போது என்னுள் எட்டிப் பார்க்க முனைந்த பயணிக்கும் ஆவலைப் படிப்பைக் காரணம் காட்டித் தள்ளிப் போட்டிருக்கிறேன். அது சொத்தைக் காரணம் என அறிந்தும் மனம் அதை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், எனது பயண ஆசையை வெளிப்படுத்திய பின் வீட்டினர் சொல்லப் போகும் ‘முடியாது’ என்னும் சொல்லின் வலியைத் தாங்கும் துணிவின்மைதான். இருபத்து நான்காம் வயதில் இருந்து இணையத்தில் மேயும் போது பயணம் பற்றிய வாசகங்கள் என்னைக் கண்டமேனிக்கு உசுப்பிவிட , இருபத்து ஆறாம் வயதில் அவ்வாசையைப் புறந்தள்ளும் முயற்சியில் மனதிடம் தோற்று நின்ற அந்தக் கணம் அற்புதமானது. அளவில்லா ஆனந்தத்தை அள்ளித் தந்த தோல்வி. முதன்முறையாக தோல்வியைக் கொண்டாடும் மனநிலையைப் பெற்றேன். முன்னரே அத்தோல்வியை ஆரத் தழுவியிருக்கலாம் என என்னை நானே கடிந்து கொண்டேன். இதற்கு மேலும் தாமதம் கூடாது என வீட்டினரிடம் எனது பயண விருப்பத்தைத் தெரிவித்தேன். எதிர்பார்த்தது போலவே அவர்களது அக்கறையும் பயமும் ‘முடியாது’ என்னும் வார்த்தையாக வெளிப்பட்டது. சமூகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொடூரங்களைச் செய்தியாகப் பார்க்கும் போது, பிள்ளைகளின் கைகளை இறுகப் பற்றி அவர்களைப் பாதுகாப்பாகத் தமது சிறகுகளுக்குள் அரவணைத்திருப்பதன் அவசியத்தை உணரும் பெற்றோரின் கவலை அறிவுக்கு எட்டினாலும் இந்தப் பாழாய்ப் போன மனது கேட்டுத் தொலைய மாட்டேன் என்கிறதே. அம்மா எனது கனவுகளையும் ஆசைகளையும் கேட்டு மகிழ்ந்தாள் எனினும் என்னை ஊக்கப்படுத்தவோ அதற்கான ஒப்புதல் அளிக்கவோ இயலாமல் குழம்பி நின்று தான் இடைப்பட்ட தலைமுறையினள் என்பதை உணர்த்திக்கொண்டிருந்தாள். ஆச்சி, “உனக்கு கோட்டி புடிச்சுருக்கா என்ன? இருபத்து ஆறு வயசுல பொம்பள புள்ள தனியா அவ்ளோ தூரம் போறேங்குற?” என அநியாயத்துக்குப் பொங்கி எழுந்தாள். “அப்போ எந்தெந்த வயசுல எங்க வரைக்கும் தனியா போலாம்னு அட்டவணை போட்டு குடு ஆச்சி” என்றேன். முறைத்துக் கொண்டே அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள். காணப் பருப்பைப் புடைத்துக் கொண்டிருந்தவளிடம், “ ஆச்சி! முறத்தால் புலியை விரட்ட வேண்டிய நீயே இப்படிப் பேசலாமா?” என்று பாவமாக மூஞ்சியை வைத்துக் கொண்டு கேட்டேன். “அதெல்லாம் நான் விரட்டிக் கிழிச்சுக்கிறேன். நீ ஒழுங்கா இங்க இருந்து படிக்குற வேலய மட்டும் பாரு” என்று முறத்தால் என்னை எனது அறைக்குள் விரட்டினாள். நமக்குதான் வாய் சும்மா கிடக்காதே! அதுவும் இப்பொ ஷனி பகவான் நாக்குல ஷம்மணம் போட்டு உக்காந்துண்டு ஊஞ்சல் ஆடிண்டுருக்கார். “புலிய கூண்டுல பாத்துருப்ப…. களக்காட்டுல பாத்துருப்ப…. தைரியமா திருநெல்வேலில இருந்து வெளிநாட்டுக்குப் போறத பாத்துருக்…..” – முடிக்கும் முன்னரே காணப் பருப்பு காற்றில் மிதக்க, முறம் பறந்து என்னை நோக்கி வந்தது. இறுதியில், எனது பிடிவாதத்திற்கு வேறு வழி இல்லாது வளைந்து கொடுக்க வேண்டியதாயிற்று அவர்களுக்கு.
அப்பா இருபத்து ஆறு வருடங்களுக்கு முன் இத்தாலியில் இருந்த போது தமதுடன் பணிபுரிந்த ஒரு தோழியின் உதவியை நாடினார்கள். அப்பாவின் தோழி – எலெயனோரா பியாட்ரிஸ் சிரிஸா, பல காலம் கழித்து அப்பாவிடம் இருந்து சென்ற மின்னஞ்சலால் மிகவும் மகிழ்ந்து என்னைத் தமது வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்வதாகவும் தாம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளிக்க, அப்பா ஒருவித சமாதானத்தோடு என்னை அனுப்பி வைக்கத் தயரானார்கள். எனது பயணத்திற்கான ஏற்பாடுகள் இனிதே ஆரம்பமாயின.
சாமி வரம் கொடுத்தாயிற்று. விசா ஆபீசர்கள் பூசாரி ஆனார்கள். பயண தேதி நெருங்கிக் கொண்டே வர நம்பிக்கையைக் கைவிடச் சொல்லி கட்டளையிட்டது அறிவு. ஆனாலும் ‘எப்படியோ எல்லாம் சரியாகி நான் இத்தாலிக்குச் செல்லப் போகிறேன்’ என மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வலுவான தொனியில் சன்னமாகக் குரல் கசிந்து கொண்டிருந்தது இப்போதும் ஆச்சர்யம்தான். விசா வருவதற்குத் தாமதமாகவே, ‘ஏன் இப்படி நடக்கிறது?’, ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?’, ‘ஏன் எனக்கு மட்டும் இப்போது பார்த்து இப்படி நடக்கிறது?’ எனப் பல கேள்விகள் மண்டையைக் குடைந்து பிளந்தெடுத்த பின் உலகைப் பற்றிய சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டேன். சோகமும் வலியும்தான் ஆழமான சிந்தனைகளுக்கு வழிவகுத்துத் தத்துவங்களை ஈன்றெடுக்குமோ?! சோகத்தில் மூழ்குவதைக் காட்டிலும் அதில் நீச்சல் அடித்தபடி சோகத்தைக் கடக்க நினைத்தேன். மொழி, நாகரிகம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிந்து கிடக்கும் இனக்குழுக்கள் எல்லைகளை வரையறுத்துத் தமக்கென தேசங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. இதற்கு ஏன் இவ்வளவு கெடுபிடிகள்? ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும் பணமதிப்பும் விசா நடைமுறைகளும் கிறுக்கு பிடிக்க வைத்தன.
விசாவும் பணமும் அர்த்தமற்ற வார்த்தைகளாகிப் போன எவ்விதப் பிரிவினைகளும் இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்யத் துவங்கினேன். (இது வெறும் கற்பனைதான். எனது கற்பனை உலகில் கயவர்கள், சமூக விரோதிகள், அதிகாரப் பேய் பிடித்து ஆடும் சர்வாதிகாரிகள் கிடையாது. எனவே அகதிகள் உருவாவதற்கு வழி இல்லாமல் போன அன்பான உலகம் அது. ‘இந்தக் கற்பனை உலகம் நிஜத்தில் சாத்தியம் கிடையாது, ஏனென்றால்…….’ என்றெல்லாம் பொறுப்பாக நிதர்சனம் பேசி நிரூபிக்க முனைபவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவே இந்தப் ‘பொறுப்புத் துறப்பு’) யாரும் எங்கும் சென்று வரலாம். இதுவரை மனிதனின் கால்தடம் படாத இடங்களில் முதற்சுவட்டைப் பதித்து நடக்கலாம். மனிதனைக் கண்டிராத நீர்நிலைகளுக்குக் கைகளே துடுப்புகளாகும் விந்தையைக் காட்டலாம். (மறுபடியும் சொல்றேன்! மனுஷனே போகாத இடம்னா அங்க ஆபத்தான மிருகங்கள்லாம் இருக்கும், ஊனுண்ணிச் செடிகள் இருக்கும்னு யோசிச்சுப் படுத்தாதீங்கப்பா!) எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விரும்பிய இடத்தில் தங்கிக் கொள்ளலாம். அவ்விடத்தில் வாழும் மக்களோடு மக்களாகக் கரைந்து போகலாம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டே அவர்களது பண்பாடு பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
கணிக்க முடியாத வேகத்தோடு துள்ளி வரும் அலைகளோடு விளையாடி ஓய்ந்து எந்தக் கடற்கரையின் மடியிலும் விழுந்து கிடக்கலாம். அவ்வாறு கிடந்தவாறே கடலினுள் வானம் கரையத் துவங்கும் இடத்தைக் கண்டறிய முயன்று தோற்றுப்போய் கண்ணயரலாம். ஆழ்கடலின் அமைதியை வென்றெடுக்கும் அற்புதமான பவளப் பாறைகளைப் பல அரிய அழகிய மீன்களின் இடையே நீந்தியபடியே கண்டு வரலாம். 600 அடி உயரமும் கண்களால் அளக்க இயலா அகலமும் கொண்ட பனிமலையின் முன் குளிரால் அல்லாமல், கனவா நனவா என ஆச்சர்யத்தில் உறைந்து போகலாம். தரையை முத்தமிடுவதால் ஏற்படும் வெட்கத்தில் அதைக் காண விடாது புகையைக் கொண்டு மறைத்தவாறே கண்முன் கொட்டும் உயரமான நீர்வீழ்ச்சியைக் கண் கொட்டாமல் கண்டு வியக்கலாம். மூச்சிரைக்க உலகின் எந்தச் சிகரத்தையும் அடைந்து, மலையைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்களோடு களித்துக் கிடக்கலாம். உச்சியிலிருந்து கண்ணுக்கெட்டும் தூரம் வரை கண்களைச் செலுத்தி இப்பெரிய உலகில் தான் ஒரு மிகச்சிறிய புள்ளியாகிப் போனதை உணரலாம். அந்நேரம் வானவில் தோன்றுமாயின் அதன் நிறங்களைக் கோரியெடுத்துக் கையில் ஊற்றிக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் முன்னரே ரசிக்காததற்காய் நம்மீதே கோபம் கொள்ளலாம். இவ்வாறாக எனது அறையில் இருந்தவாறே புற்களின் ஸ்பரிசத்தை, கடற்காற்றின் உப்பை, மலைமுகடுகளின் வாடைக்காற்றை எல்லாம் நுகர்ந்து உணர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்த என்னை மீண்டும் என் அறைக்கே அழைத்து வந்தது, ஜன்னலின் வழியாக என்னைத் தீண்டிச்சென்ற வேப்பமரக் காற்று.
அய்யய்யோ! எனக்கு இன்னும் விசாவே வரலயா? ‘எனக்கு சனி திசை நடப்பது இத்தாலிய ஆபீசர்களுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை சனி பகவான் இத்தாலிய தூதரகத்திற்கே மின்னஞ்சல் அனுப்பி இருப்பாரோ?’ – அடுத்தடுத்து வந்த தடங்கல்கள் குறித்து ராசி பலனில் நம்பிக்கை இல்லாத என்னையே இப்படிச் சிந்திக்க வைத்துவிட்டார்களே என ‘உச்’ கொட்டிக்கொண்டிருந்த பொழுதில், எலெயனோராவின் தலையீட்டினால் எனது கடவுச்சீட்டில் ‘சுபம்’ என்பது இத்தாலிய விசாவாக அச்சடிக்கப்பட்டு வந்து சேர்ந்தது. அப்பக்கத்தைப் பார்த்து நனவுதானா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவோ விண்ணுக்கும் மண்ணுக்குமாகத் துள்ளிக் குதிக்கவோ கூட நேரமில்லாமல் பயண ஏற்பாடுகள் தொடங்கின.
முதற்கட்டமாக சென்னைக்கு இரயில் பயணம்.
- வீறிட்டு அழும் குழந்தை
- சிந்துபைரவி ராகத்தை சிவரஞ்சனி ராகத்தோட மிக்ஸ் பண்ணி அட்டானா ராகத்தை ஆரோகணத்துல புடிச்சு தொண்டையிலும் மூக்கிலும் ஆதிதாளம் போட்டு…… எனக் குறட்டையிலேயே கச்சேரி நடத்தும் பெரியப்பா வயதை ஒத்த ஒருவர் (அல்லது) ஜலதோஷத்தால் அம்பாஸிடர் எஞ்சினைப் பல முறை இயக்க முயலும் தாத்தா ஒருவர்.
எந்தவொரு ரயிலிலும் எந்தவொரு பெட்டியிலும் இவ்விரண்டு பிரிவுகளில் இருந்து ஒருவரேனும் கட்டாயமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என இந்திய ரயில்வே துறை சமீபத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஏற்ப எனக்கெதிரில் ஒரு குழந்தை. நான் வாசித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையில் “கவிதைகள் சத்தம் போடக் கூடாது” என்ற கவிஞர் விக்கிரமாதித்தனின் வரிகளுக்கு நேர் மாறாக என் எதிரில் இருந்த அந்த 2 அடி ஹைக்கூ கவிதை உரக்க சத்தம் போட்டு கரைந்து கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தது. “அக்கா என்ன பண்றாங்க பாரு? அக்கா பேர் கேளு..” என்று கொஞ்சியவாறே உணவூட்டிக்கொண்டிருந்த அத்தாய் எனக்கு மணமாகிவிட்டதா என எனது கழுத்தையும் நெற்றியையும் தன் கண்களால் துழாவி ஆய்வுக்குட்படுத்தி, ‘இல்லை’ என்று தெளிந்த பின் பேச்சுவாக்கில், ‘நான் எப்போது முதுகலை முடித்தேன்?’, ‘ஆய்வு மாணவியாக சேர்ந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது?’ போன்ற கேள்விகளின் மூலம் என் வயதை அறிவதற்கான முயற்சியில் இறங்கினார். அவரை விட நான் ஒரு வயது மூத்தவள் எனத் தெரிந்ததும் சற்றும் தாமதிக்காமல், “ ‘ஆன்டி’ நீ சாப்பிட்டாதான் உன்னோட விளையாடுவாங்க” என்றார். இருபத்து ஆறு வயதில் ‘ஆன்டி’ என்று அழைக்கப்படுவதை எல்லாம் பக்குவமாய் எடுத்துக் கொள்ளும் ஜென் நிலையை அடைந்து விட்டேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவர்களின் குசும்பு இருக்கிறதே ! ஸ்ஸ்ஸ்…..
மாம்பலம் இரயில் நிலையத்தில் இறங்கியதும் தாமாகவே எனது பெட்டியைத் தூக்கிய ஆட்டோகாரரிடம் மாமாவின் வீட்டு முகவரியைச் சொல்ல, “திருவான்மியூருக்கு 200 ரூபாய்” என்றார். வாழ்க்கையில் அதுவரை பேரம் பேசிப் பழக்கம் இல்லாததால் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்த என்னுள் ‘இத்தாலி வரை தனியா போகப்போறோம். நிறைய பேர் ஏமாற்றக்கூடும். ஜாக்கிரதை…விழித்திரு…” என மனது அலாரம் அடிக்க, “120 ரூபாதான் சொன்னாங்க… சரி 150 வாங்கிக்கோங்க. 200 ரூபாய் ரொம்ப ஜாஸ்தி” என்று கறாராக (இருப்பதாக நினைத்துக் கொண்டு) பேரம் பேசுதலுக்குப் பிள்ளையார் சுழி இட்டேன். நான் கூறியதை முழுமையாகக் கூட கவனிக்காமல் பாதியிலேயே பெட்டியைப் போட்டு விட்டு அடுத்த ஆளை நோக்கிச் சென்றுவிட்டார். பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்று, ஒரு ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து ‘திருவான்மியூர்…’ என்று மட்டும்தான் சொன்னேன். ஏற இறங்க என்னைப் பார்த்தவர், “ அந்த 120 பார்ட்டிதானே…. எந்த ஊர்ல இருந்துபா வருது இந்தப் பொண்ணு? தூர நகருமா…..” என்று எல்லோரின் கவனத்தையும் இங்கு திருப்பினார். என்னா ஸ்பீடு? நான் பாலம் ஏறி இறங்கி வருவதற்குள் என் புகழ் பரவியிருக்கிறது போலும் ! சுற்றி இருப்பவர்களின் ஏளனப் பார்வையிலிருந்து தப்பிக்க அப்போது 500 ரூபாய் கூட கொடுப்பதற்குத் தயாராகி ஒரு ஆட்டோவில் ஏறினேன். ஆட்டோவின் குறுக்கும் நெடுக்குமாக சர்ர்ர்ர்புர்ர்ர்ரென்று பாய்ந்த வண்டிக்காரர்களைப் பல அருமையான தமிழ்ச்சொற்களால் விளித்து எனது சொல்வளம் பெருக உதவினார், ஆட்டோக்காரர். மாமா வீட்டில் இறங்கியதும் தொலைபேசியில் அப்பாவிடம், “அநியாயமாக 200 ரூபாய் வாங்கீட்டார் பா…” என்று கூற, “பரவாயில்லயே, இருபது ரூபாய் கொறச்சு வாங்கீருக்காரே” என்றார்கள். 220 ரூபாய் என்பதைத்தான் 120 என்று மறந்து கூறிவிட்டதாக அசடு வழிந்த அப்பாவிடம் நான் அங்கு அசிங்கப்பட்ட கதையை விவரிக்கும் பொறுமையில்லாமல் ‘பை பை’ சொல்லி இணைப்பைத் துண்டித்தேன். அப்பாவின் ஞாபக மறதியினால் இக்கட்டுரையில் ஒரு பக்கம் நீண்டதே மிச்சம். என்னை எவ்வளவு பெரிய முட்டாளாகப் பார்த்திருப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்த நொடி ‘முதன்முறையாகப் பேரம் பேச முனைந்ததே இறுதி முயற்சியாகக் கடவது’ என்று பேரம் பேசும் கலைக்கு மங்களம் பாடினேன். அலுவல் காரணமாக அம்மாவும் அப்பாவும் ஒரு நாள் கழித்து சென்னை வந்தார்கள் என்னை மறுநாள் வழியனுப்ப. நான் விமானம் ஏறும்வரை அனைவரும் எனக்கு 120 என்று பட்டம் சூட்டி மகிழ்வடைந்தார்கள்.
தூரம்தான் பிரிவாற்றாமையின் அளவையும் தீர்மானிக்கிறது. இரயில் நிலையங்களைக் காட்டினும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் பலவற்றைச் சேமித்து வைத்திருப்பது விமான நிலையங்கள்தான்.
- திருமணத்தன்று வைத்த மருதாணியின் நிறமும் சுகந்தமும் மங்க ஆரம்பிக்கும் முன்பே தலைவனை வெளிநாட்டிற்கு அனுப்ப நேர்ந்த சோகத்தையும் அதன்கண் பெருகிய கண்ணீரையும் வேறு புறமாகத் திரும்பி தனது செக்கச்சிவந்த விரல்களால் துடைத்து மறைக்க முனைந்த தலைவி.
- குடும்பச்சூழல் காரணமாக குவைத் அல்லது அரபு நாடு செல்லும் தனது மகனை இறுக அணைத்து உச்சி முகர்ந்து குரான் ஓதி ஆசீர்வதித்து வழியனுப்பும் தாய். அந்தக் கறுப்புத் திரைக்குள்ளிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் ஆயிரம். கண்ணீர் ததும்பி நின்று குளமான கண்கள், தனது மருத்துவ செலவிற்காகவும் மகளது திருமணச் செலவிற்காகவும் விடைபெறும் மகனின் பிரிவிற்காய் அருவியென ஆர்ப்பரிக்கத் தொடங்கிற்று. அந்நாட்டில் மகனது பாதுகாப்பைப் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கியதைப் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்க ஆரம்பித்த பயம் அறித்துக் கொண்டிருந்தது. ‘படித்த படிப்பிற்கேற்ற வேலைக்குத்தான் அனுப்பப்படுகிறானா? அல்லது தரகரின் கைங்கர்யத்தில் ஒட்டகம் மேய்க்க அனுப்பப்பட்டு கொத்தடிமையாக்கப்படுவானா?’ – இவ்வெண்ணம் எழுந்ததாலோ என்னவோ அல்லாவை நோக்கிக் கைகளை ஏந்தியபடியே அதில் சிந்திய கண்ணீர்த்துளிகளையும் பொருட்படுத்தாது வேகமாகப் பிரார்த்திக்கத் தொடங்கினாள். மகன் விமான நிலையத்தினுள் செல்லவிருந்த நொடி, ஓடிச் சென்று மீண்டும் மகனை ஆரத் தழுவி நெற்றியில் முத்தமிட்டு அல்லாவின் மொத்தக் கருணையையும் அவனோடு அனுப்பிவைத்தாள்.
- “இனி இந்த மழலைப் பேச்சை அடுத்த வருடம்தான் கேட்க முடியுமா? நான் செய்யும் நெய் உருண்டையை இம்முறை போலவே அடுத்த முறையும் ரசித்து உண்பாளா? அடுத்த வருடம் வருகையில், நான் கற்றுத்தந்த ‘நிலா நிலா ஓடி வா’ பாடல், தமிழ்ச்சொற்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவை மாறாமல் இம்மண்ணுக்குரியவளாகவே வருவாளா அல்லது பாசமும் அன்பும் பழமைவாதமென ஆங்கிலம் மட்டுமே பேசி என்னிடம் இருந்து அந்நியப்பட்டு போவாளா?” – பேத்தியைத் தற்போது பிரியப்போகும் கவலையோடு அடுத்த வருடத்திற்கும் சேர்த்து கவலைப்படும் ஓர் ஆச்சி.
இப்படி ஆங்காங்கே குட்டிக்குட்டியாகப் பல கவிதைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. நான் உரைநடையாகவே விடைபெற்றுக் கொண்டேன். இருபது நாள் பிரிவுக்கெல்லாம் என்ன கவித்துவம் வேண்டிக்கிடக்கு?! “என் கண்களைப் பெற்றவள், இருபத்து ஆறு வருடங்களுக்கு முன் நான் இத்தாலி சென்றபோது எனது கண்களில் இருந்த மிரட்சியையும் தயக்கத்தையும் துடைத்தெறிந்து, எனக்கும் சேர்த்துத் தனது கண்களில் தைரியத்தையும் நம்பிக்கையையும் மிளிர விட்டு, மகிழ்ச்சியை முகமெங்கும் பூசி உலகம் காணச் செல்கிறாள்” – எனக்குச் சிரித்துக் கொண்டே ‘டாட்டா’ காட்டிய அப்பாவின் மனவோட்டம் அவர்களது முகத்தில் பிரதிபலித்தது.
விமானம் புறப்பட்டு மெதுவாக மேலெழும்பி கட்டிடங்களைத் தீப்பெட்டிகளாகவும் மனிதர்களை எறும்புகளாகவும் உருமாற்றிக் கொண்டிருந்த போது, மொட்டை மாடியில் தான் காத்திருப்பதாகவும் தனக்கு மறக்காமல் ‘டாட்டா’ காட்டவும் மழலையில் குயிற்றிய சமி குட்டியின் ஆணை ஞாபகத்திற்கு வர, மேகங்கள் ஜன்னலை மறைக்கும் வரை ‘டாட்டா’ காண்பித்தேன். அதுநாள் வரை எப்போது விமானத்தைப் பார்த்தாலும், கழுத்து வலிப்பதையும் கண்கள் கூசுவதையும் பொருட்படுத்தாது, அது பார்வையிலிருந்து மறையும் வரை பார்ப்பது போல இப்போதும் தூரமாகப் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தை ஜன்னல் வழியாக (இம்முறை கழுத்து வலியில்லாமல்) அதே குதூகலத்துடன் ரசித்துக் கொண்டிருந்தேன், நானே விமானத்தில்தான் இருக்கிறேன் என்பதை மறந்து. நிறையபேர் சொல்வதைப் போல், முதன்முறையாக விமானத்தில் செல்லும்போது வயிற்றுக்குள் ஏதோ உருள்வது, நெஞ்சு படபடவென அடித்து பயம் கொள்வது – அட, ஒரு மண்ணும் இல்ல ! நன்றாகத்தான் இருந்தது.
முயல், பறக்கும் யானை, திமிங்கலத்தைக் கொத்தித் திங்கும் நாரை என மேகங்கள் உருவெடுத்ததைக் கீழிருந்து ரசித்த நானே தற்போது மேகங்களைச் செதுக்கிச் செல்வது போன்ற உணர்வு. திரண்டிருந்த மேகங்களில் தோன்றிய சிங்கத்தின் பிடரியைக் கலைத்து, அர்ஜுனனின் அம்பைப் போல் பிரம்மராக்ஷஸ்ரின் வயிற்றைக் கிழித்து, பட்டாம்பூச்சியின் றெக்கையில் சிறிய துளையிட்டுப் பறந்து கொண்டிருந்தேன். ஜன்னல் வழியாகத் தெரிந்த விமானத்தின் றெக்கை சட்டென்று எனது முதுகிற்கு இடம்பெயர்ந்து ஒட்டிக் கொண்டு படபடக்க ஆரம்பித்து நிஜமாகவே நான்தான் பறந்து கொண்டிருப்பதாகப் பறைந்தது. மேகங்களுக்கும் மேலே மிதந்து கொண்டிருக்கும் உணர்வை கீழ்கண்டவாறு எழுதி ஒன்றிரண்டு படங்களுடன் இணைத்து அனுப்பியதற்கு அப்பா மற்றும் தங்கையின் பதில்களை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.
நான் : “அலை நுரைத்துப் பொங்கி நிற்கும் வான் கடலில் பருத்தி விதைகளைத் தூவிச்
சென்றது யார்?”
அப்பா : அதெல்லாம் தெரியாது… வேணும்னா விசாரிச்சு சொல்றேன். நீ ரோமுக்கு
போன உடனே குறுஞ்செய்தி அனுப்பு.
தங்கை : அருமையான படங்கள். கண்களுக்கு மட்டும் வேலை கொடு. மூளையைப்
போட்டுப் படுத்தாதே. இல்லனா இப்பிடிதான் ஏதாச்சும் மண்டகஜாயம் மாதிரி
யோசிக்க வரும்.
தில்லியிலிருந்து ரோமுக்குப் பறக்கையில் இடைப்பட்ட நாடுகளுக்குச் சிற்சில மணித்துளிகளைத் தானம் செய்ததை மறந்ததன் விளைவாக ரோமில் இறங்கிய போது மூன்றரை மணி நேரத்தை எங்கே தொலைத்தேன் என்பதை உணரவில்லை. அதற்கு Jet lag என நாமகரணம் சூட்டி சமாதானம் அடைந்து கொள்ளவேண்டியதுதான்.
“இந்த இருபது நாட்களும் உனக்கே உனக்கானவை. அனுமதி, முடிவு, யோசனை – உன் மனதை மட்டுமே கேட்டால் போதும். ஒவ்வொரு நொடியையும் முழுமையாக ரசித்து அனுபவித்து வாழ்ந்துவிடு” என்ற கட்டளையோடு ரோமாபுரி என்னை வரவேற்றது. எலெயனோரா என்னை முதன்முதலாகப் பார்த்த மகிழ்வில் குறுக்கே இருந்த கயிற்றைத் தாண்டி ஓடி வந்து என்னை இத்தாலிய முறையில் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு வரவேற்க முனைந்தார்கள். அது புரியாத நான் அவர்களை நமது வழக்கப்படி ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இத்தாலிய இந்திய முறைகளைக் குழைத்து அன்பைப் பரிமாறிக்கொண்டோம். முதல் நாள் மட்டும் பேருந்து மற்றும் மெட்ரோ நிலையத்தின் வழியைக் காட்ட உடன் வந்தார்கள். அடுத்த நாளிலிருந்து இத்தாலி நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவளைப் போலத் தனியாகச் செல்ல ஆரம்பித்தது நானே எதிர்ப்பார்க்காத ஒன்று.
காலை கிளம்பி பள்ளி/கல்லூரி செல்வது, படிப்பிற்கு இடையிடையே வெட்டி அரட்டை, மாலை வீடு அடைந்து உணவிற்குப் பிறகு சோர்வில் சுருண்டு முடங்கி தூங்கிப் போவது – இத்தனை வருடங்களில் பெரும்பாலும் எல்லா நாளும் இப்படித்தான் கழிந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளுக்கான நிகழ்வுகளும் கால அட்டவணையும் முன்னரே தயார்செய்யப்பட்டு கணினியில் பதியப்பட்டு எனக்கு தினமும் மின்னஞ்சல் அனுப்பப்படுவது போல எந்திரத்தனமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் , அந்த இருபது நாட்களின் ஒவ்வொரு நாள் காலையும் புதிதாகவே புலர்ந்தது. மனத்திரையில் ஆயுசுக்கும் தங்கப்போகும் காட்சிகள், நிகழப்போகும் சந்திப்புகள், உரையாடல்கள், கிடைக்கப் பெறும் அறிமுகங்கள், அனுபவங்கள் என எதையும் அறிந்திராத ஒவ்வொரு நாளின் விடியலும் இவ்வளவு உற்சாகத்தையும் புத்துணர்வையும் தரவல்லதா? இவ்விருபது நாட்களே வாழ்க்கையாகிப் போகாதா என்னும் ஏக்கம் வராமலில்லை.
ஒவ்வொரு மனிதனின் உயிர்நாடிக்கும் மிக அத்தியாவசமாகப் போய்விட்ட அந்த வஸ்துவை உள்ளங்கைகளுக்கிடையில் தவழவிட்டு, தம்மைச் சுற்றியிருப்பவற்றில் உள்ள அழகியலைக் காண மறு(ற)க்கும் ஒரு கூட்டத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் வாகனம் ஒன்று (அது நிலத்தின் அடியில் பறக்கும் குட்டி ரயிலாகவோ நிலத்தின் மேல் மிதக்கும் பேருந்தாகவோ இருக்கலாம்), எனது முன் வந்து நிற்கிறது. தாமாகத் திறக்கப்பட்ட கதவுகள், அவ்வாகனம் என்னைத் தன்பால் உள்ளிழுத்துக் கொண்ட பின் தாமாகவே மூடிக்கொண்டன. புதிய நாடு, புதிய மக்கள், புதிய கலாச்சாரம் என புத்தம் புதிய அனுபவங்கள் பலவற்றிற்காய்க் காத்துக்கொண்டிருந்த மனதிற்குச் சின்னஞ்சிறிய ஏமாற்றத்தை அளித்த அந்த நிமிரா முகம் கொண்ட கூட்டத்தையும் ரசிக்கவே செய்தேன். எனினும் நிமிர வேண்டிய நேரத்தில் நிமிர்ந்து இன்முகத்துடன் உதவினார்கள். சாலையோரங்களில் இசைத்துக்கொண்டோ பாடிக்கொண்டோ இருக்கும் கலைஞர்களை அவ்வப்போது நின்று ரசித்துப் பாராட்டித் தள்ளுகிறார்கள். இளையராஜாவையும் ரஹ்மானையும் கேட்ட பிறகு எனக்கு அது அவ்வளவாக ரசிக்காமல் போனது நியாயம்தானே? எனினும் சில சமயம் அவர்களின் இசையை மெல்லிய நடனத்தோடு ரசித்துக் கடந்தது புதிய அனுபவம். அங்கே ஊடுருவிப் பார்க்கும் கண்கள் இல்லாததே காரணம் என நினைக்கிறேன்.
தினமும் காலை நான் காண வேண்டிய இடங்களின் பட்டியல் எலெயனோராவால் தயார் செய்யப்பட்டு எனக்காகக் காத்திருக்கும். ரோமாபுரியின் பேரழகை ரசிக்க ஒரே வழி அந்நகரின் தெருக்களைக் கால்களால் அளப்பது மட்டுமே என்று தெளிந்த போது கால் வலி பெரிதாய்த் தெரியவில்லை. பழமையை நோக்கிய எனது ஈர்ப்புக்கு முழு நியாயம் செய்த அந்நகரைக் கண்டதும் காதலில் விழுந்தேன். புதிய கட்டிடங்கள் இருந்தாலும் இடையிடையே, இயன்ற வரை மாற்றம் செய்யப்படாமல் பழமையைத் தாங்கி நின்ற கட்டிடங்கள் அந்நகரின் அழகை வெகுவாகக் கூட்டியது.
அகழாய்வுத் துறையினர் ரோமா நகர் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்திருப்பார்கள் போலும். ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட பழம்பொருட்கள் பலவற்றால் நிரம்பி வழியும் பல அருங்காட்சியகங்கள் இருப்பினும் தொடர்ந்து இன்னும் பல இடங்களில் அகழாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் கிடைக்கும் உடைந்த தூண்கள், வேலைப்பாடுடைய கற்கள், சிலைகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடத்தில் அப்பொருட்களைக் கொண்ட கட்டிடம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் கண்டறிந்து அதை மீழ் உருவாக்கம் செய்ய முயல்கிறார்கள். ஒரு தேவாலயத்தின் அருகில் புதைந்து கிடந்த கட்டிடங்கள் மீட்டெடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நிலத்தின் அடியில் பல தளங்களாக இருக்கும் அக்கட்டிடங்களின் கீழ் தளங்களுக்குச் செல்லச் செல்ல காலமும் பின்னோக்கிச் சென்று இறுதியில் ஒன்றாம் நூற்றாண்டை அடைந்த போது புல்லரித்தது. சமீபத்தில் ஓர் இடத்தில் பழம்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதற்காக ஊகித்ததற்கே, அவ்விடத்தின் மேலே நின்ற மூன்று பெரிய கட்டிடங்கள் தரைமட்டமாக்கப் பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும் கீழடிக்கும் ஆதிச்சநல்லூருக்குமாய் ஏங்கியது மனது. தங்களது வரலாற்றைக் குறித்த பெருமையும் அதன் நீட்சியாகப் பழமையைப் போற்றிப் பாதுகாக்கும் அம்மக்களின் அக்கறையும் பொறாமை கொள்ளச் செய்தது.
மக்கள் தத்தமது வீடுகளுக்கென மார்பிள் கற்களை உருவிச் சென்ற பின்னும் கூட ஆங்காங்கே துளைகளோடு கம்பீரமாய் நின்றது கொலொசியம். அக்கட்டிடத்தின் ஒவ்வொரு இடத்திலும் நின்று மீண்டும் மீண்டும் பார்த்து அலுப்புத் தட்டிய பிறகே கிளம்ப வேண்டும் என நெடு நேரம் சுற்றிக் கொண்டிருந்தேன். அதன் பிரம்மாண்டத்தை ரசிக்கவும் வியக்கவும் இரண்டு கண்களும் ஆறு மணி நேரமும் கூட போதவில்லை. அலுப்பு வருவதற்கான காத்திருப்புதான் அலுப்பைத் தந்ததே ஒழிய, கொலொசியம் அல்ல. அலுப்பே வராத அலுப்பில் ஓரிடத்தில் அமர்ந்து நடுவில் இருந்த மேடையைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சண்டையிடும் கிளாடியேட்டர்களில் ஒருவரின் இறப்பே போட்டியை நிறைவடையச் செய்யும் என்னும் விதி; உணவு இடைவேளையின் போது தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த குற்றவாளிகளையும் அடிமைகளையும் மேடைக்குக் கொணர்ந்து சிங்கம்/சிறுத்தை/முதலை/காண்டாமிருகம்/மதங்கொண்ட யானையை விட்டுக் கொல்லச் செய்து கண்டு களிப்பது; பல அடிமைகளின் வியர்வையில் விளைந்த கொலொசியம் கொலை செய்யும் களமாகிப் போன அவலத்தைச் சுமந்து நிற்கும் கட்டிடமாக உணர்ந்த தருணம், அவ்வுணர்வால் தரதரவென்று பிடித்து வெளியே தள்ளப்பட்டேன். கொடூரமான கொலைகள் யாவும் கேளிக்கைக்குரியதாய் இருந்த அந்த காலகட்டம்; விண்ணதிரும் கைதட்டல்களோடு சிறிதும் உதறலின்றி ரசிக்கப்பட்ட பல கொலைகள்; ஒவ்வொரு துளையினுள்ளும் ஆண்டாண்டு காலமாகப் பொதிந்து கிடந்த வலியும் மரண ஓலமும் மெல்ல மெல்லக் காற்றில் கசியத் தொடங்கி மக்களின் ஆரவாரத்தையும் தாண்டி வந்து எனது செவிகளை அடைந்(த்)தது.
வெயிலின் காரணமாகப் புருவங்களைச் சுருக்கியவாறே, அங்கு நடத்தப்பட்ட இரக்கமற்ற சண்டைகளையும் உயிரிழப்புகளையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது முகத்தில் தானாகவே அந்த கருணையில்லாத கூட்டத்தின் மீதான வெறுப்பு கோபமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் அறியவில்லை. அப்போது தலைகீழ் ஊசலைப் போல் இருபுறமும் சரிந்து சரிந்து நடந்து மெதுவாக என்னைக் கடந்து சென்ற சற்றே வளமான ஒருவர் (பார்ப்பதற்கு மார்டின் லூதர் கிங் போல இருந்தார்), தமது வாயின் ஓரங்களில் இரு ஆள்காட்டி விரல்களாலும் மேல் நோக்கி ஒரு வளைவை வரைந்து ‘SMILE….’ எனச் சொல்லிச் சென்றார். முன்பின் தெரியாத அம்மனிதரின் முகத்தில் தவழ்ந்த புன்னகை எனக்குத் தொற்றிக் கொண்டு விட்டதா எனத் திரும்பிப் பார்த்து உறுதிபடுத்திக் கையசைத்து விடைபெற்றார். ‘சும்மா இருக்கும் போது யாராவது புன்னகைத்துக் கொண்டே இருப்பார்களா?’ என்ற கேள்விக்கு ‘ஏன் கூடாது? ’ என்ற அவரது பதில் கேள்வியே ‘புன்னகை செய்’ என்று வெளிப்பட்டதாக அனுமானிக்கிறேன். சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அந்த மனிதரின் முகம் சரியாக நினைவில்லை. ஆனால் ஆயுசுக்கும் நான் புன்னகைப்பதற்கான காரணத்தைத் தந்து சென்ற அம்மனிதருடனான அவ்விரண்டு நொடிகளும் அப்பயணத்தின் வானவில்லாய் அமைந்தன. இப்போதும் நான் கண்களை மூடினால், காலத்தை எனது கட்டுப்பாட்டிற்குக் கொணர்ந்து , இயற்பியல் விதிகள் அனைத்தையும் பொய்யாக்கி, ஒளியியல் கோட்பாடுகளைத் தகர்த்தெறிந்து, ஒளியை விட வேகமாகப் பயணித்து …….. கொலொசியத்தில் அன்று அமர்ந்திருந்த அதே இடத்தில் இருக்கிறேன். அம்மனிதரும் அன்பாகக் கட்டளை இட்டுச் செல்கிறார். எவ்வளவு சோகமாய் இருந்தாலும் இமைகளைத் திறக்கையில் மகிழ்ச்சி ததும்ப புன்னைகையணிந்து இருக்கிறேன். ‘ஏன்?’, ‘எப்படி?’ என்றெல்லாம் இப்புன்னகைக்கான காரணத்தை உடைத்துப் பார்த்தால் வறட்டுத்தனமாக இருக்கலாம். எனவே, அவர் ஒரு தாய்க்குரிய பரிவோடு சொல்லிச் சென்ற விதம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
பாதி தூரம் மிதந்து மீதி தூரம் நடந்து என வாழ்ந்த அந்த இரண்டு வெனீசிய நாட்கள் ஆப்லங்கேட்டாவில் அடி பட்டாலும் மறக்காது. குறுகலான தெருக்கள்….. இடையிடையே குட்டிக் குட்டிக் கால்வாய்கள்….. மகிழுந்துக்குப் பதில் படகைக் கட்டி வைத்திருக்கும் வீட்டின் வாசல்கள்…… இப்படி ஒரு நகரை எவ்வாறு கட்டமைக்க முடிந்தது ? குடியுரிமையை மாற்றிக் கொண்டு அங்கேயே இருந்து விடச் சொல்லி வசியம் செய்தது வெனீசியா. ‘இங்கேயே இருப்பவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் ?’ என்ற பொறாமை சற்று நேரம் கூட நீடிக்கவில்லை. வெனீசியாவின் குடிமகளாகக் கற்பனை செய்த அந்த நொடி, என்னைச் சுற்றிப் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் பிற நாட்டு முகங்கள். வெறும் 55,000 பேர் வாழும் ஊரில், ஆண்டுக்கு மூன்று கோடி சுற்றுலாப் பயணிகள் வந்திறங்குவதால் அளவுக்கு அதிகமாகச் சேரும் குப்பையை அகற்றுவது அவர்களுக்குப் பெரும் சவால்தான். ‘எனது ஊர், எனது தெரு…. நான் நிம்மதியாக நடந்து செல்ல முடியாதபடி எந்நாளும் பாழாய்ப் போன திருவிழாக் கூட்டம்’ – எந்நேரமும் எங்கும் நிறைந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் நெரிசலும் அவர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவழைப்பதில் ஆச்சர்யமில்லை. அன்றைய நாளின் திருவிழாக் கூட்டத்தில் ஒருத்தியாகிப் போனதால் வெனீசியாவில் எனது இருப்பு என்மீதே வெறுப்பை வரவழைத்தது. முதன்முறையாக ஓர் ஊரின் அழகில் மயங்கியபடியே குற்றவுணர்வில் உழன்றேன்.
செப்டம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் மாதம் என்பதால் ரோமாவிலும் வெனீசியாவிலும் பல நாடுகள் கூடி சங்கமித்தன. வெவ்வேறு நாட்டினர் எனினும் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை இருந்தது.
கருங்கொடிப் புருவ மேறி
கயல்நெடுங் கண்ணு மாடா
கருமணி யிரண்டு மொதுங்கி
கழுத்தொரு புறமாய்ச் சாய்ந்து
அருங்கடி மிடறும் விம்மாது
இருங்கடற் பவளச் செவ்வாய்
வராகனைப் போல் குவிந்தோ
அணிமணி எயிறு தோன்ற
திறந்தோ செல்ஃபி எடுத்தாரோ!
கம்பொடு கரம்நீண்டு பொத்தானை அழுத்தியதோ ! ! !
விளக்கம் : கரிய கொடியினைப் போன்ற (பியூட்டி பார்லரில்) செதுக்கப்பட்ட புருவங்கள் மலையென உயர்ந்து நிற்க, மீன்களைப் போன்ற கண்கள் ஆடாது அசையாது பிறழாது, இமைகள் மூடாது, கருவிழிகள் ஒரு பக்கமாக ஒதுங்கி, கழுத்து ஒரு புறமாக லேசாய் சாய்ந்திருக்க, மிடறு வீங்காமல், பவளத்தைப் போன்ற சிவந்த உதடுகள் வராக பகவானைப் போல குவிந்த வண்ணமோ, ஈறும் பற்களும் தெரிய திறந்த வண்ணமோ நிற்க, அழகிய கைகள் கம்போடு (செல்ஃபி ஸ்டிக்) ஒரு பக்கமாய்த் தாமாகவே நீண்டு கொள்ள அருமையாய் செல்ஃபி எடுத்தனரே ! ! !
சீத்தலைச் சாத்தன் பொருள் பொதிந்த இப்பாடலின் மூலம் அன்றே சொன்னானே ! எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள இவ்வருமையான பாடல் செல்ஃபி எடுக்கும் இலக்கணத்தைத் தெள்ளத்தெளிவாய் வரையறுக்கின்றது. எல்லோரும் படித்திருப்பர் போலும் ! கண்ணெதிரே விரிந்து கிடக்கும் ஆச்சர்யங்களையும் அதன் அழகையும் கூட புகைப்படக் கருவியின் கண் வழியாகத்தான் காண வேண்டும் என ஒவ்வொரு வாரமும் பள்ளியில் உறுதிமொழி எடுத்திருப்பார்களோ ? ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்து முழு ரோமாபுரியையும் முழுமையாக ரசித்துக் கொண்டிருக்கும்போதே எனது பார்வை வரம்பினுள் சில கைகள் கம்பை நீட்டிக்கொண்டு நிற்கும். இது பெரும்பாலும் எல்லா இடங்களிலும் நடந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும், எழில்மிகு காட்சிகளையும் அதன் பிண்ணனி அல்லது அவ்விடத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைகளோடு நேரடியாகக் கண்டு வியந்து நம்முள் உண்டாகும் உணர்வுகளின் உதவியோடு கண்களால் படம் பிடித்து மூளையில் சேகரித்தால் அவை காலத்திற்கும் அழியாத காட்சிகளாக மனதில் தங்கியிருக்கும். என்றைக்காவது அப்படத்தை நினைவுபடுத்திப் பார்க்கும்போது அவ்வுணர்களும் இலவச இணைப்பாய் வந்து உதட்டோரத்தில் குறுநகையை வரைந்து செல்லும். ‘அப்படியொரு இடத்தில் இருந்தேன்’ என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டி மனது தரும் இன்பத்தை விடவா அக்கருவி தந்துவிடப் போகிறது? அதை விடுத்து ‘காலத்தால் அழியாதது’ என புகைப்படக்கருவியையே ஆராதிப்பவர்கள் எடுக்கும் நூற்றுக்கணக்கான படங்கள் பிறரிடம் பீற்றுவதற்கல்லாமல் வேறெதற்கு?
திறமையான சிற்பியும் ஓவியருமான மைக்கேல் ஆஞ்செலோவின் தலைசிறந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சிஸ்ட்டின் சேப்பல், ரஃபேல், கரவாஜோ போன்றோரின் அற்புதமான ஓவியங்களைக் கொண்டிருக்கும் வாட்டிகன் அருங்காட்சியகம், தத்ரூபமான பல சிலைகளும் ஓவியங்களும் இருக்கும் இன்ன பிற அருங்காட்சியகங்கள் – இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் விரித்து எழுதி அறுத்துத் தள்ளி இக்கட்டுரையை ஒரு பயணக் கையேடாக மாற்ற விருப்பமில்லை.
திரும்பி வரும் நாள் நெருங்க நெருங்க, கடவுச்சீட்டை வலுக்கட்டாயமாத் தொலைத்து அவ்வூரிலேயே இன்னும் கொஞ்ச நாள் இருக்கவும் முடிந்தால் அங்கேயே இருக்கவும் ஆசை வந்ததைக் கூறியதைக் கேட்டு சிரித்த எலெயனோரா, விமான நிலையத்தில் எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு என்னைக் கட்டியணைத்து விரைவில் இந்தியா வருவதாகக் கூறி வழியனுப்பினார். “ஆன்டி, இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல. அதோ அங்க கூட ஒரு குப்பைத்தொட்டி இருக்கு” என்று நான் காண்பிக்கவும், “இப்படி விமான நிலையத்திலேயே போட்டால் மாட்டிவிடுவோம்” என்று கூறி என்னைச் செல்லமாக அடித்துக் கிளம்பச் சொன்னார்கள்.
மிகவும் பயந்த அம்மாவும் ஆச்சியும் இப்போது வாயெல்லாம் பல்லாக, “பரவாயில்லையே ! தனியாவே போய்ட்டு வந்துட்டியே !” எனப் பெருமையாகச் சொல்லிச் சொல்லிப் பூரிப்படைகிறார்கள். என்னை எனக்கு மீட்டுத்தந்து எனது துணிவையும் வலிமையையும் அளக்கும் ஓர் அளவுகோலாக அமைந்த இப்பயணம் ஓர் அருமையான துவக்கமாக அமைந்திருக்கிறது. என்னை நானாக உணர்ந்த இந்நாட்களின் நினைவுகள் என்னைத் தொலைய விடாமல் பார்த்துக் கொள்ளும் என நம்புகிறேன். ‘நான் யார்?’ என்ற தேடலுக்கு விடை காணும் பயணம் அல்ல என்னுடையது. அது கொஞ்சம் ஆன்மீகத்தனமான அல்லது தத்துவார்த்தமான கேள்வி. நமக்கெல்லாம் அவ்வளவு பக்குவம் போதாதுங்க ! நானே தைரியமாகத் தனியாக ரோமாபுரியைச் சுற்றி வந்தது, அந்நியர்களுடன் மிக இயல்பாய் உரையாட முடிந்தது, வலியச் சென்று சிலருக்கு உதவியது – எனக்கு என்னைப் பற்றிய ஒரு நல்லுணர்வைத் தந்து வாழ்க்கையில் முதன்முறையாக என்னை நானே பாராட்டிப் பெருமையடைய வைத்த தருணங்கள் அவை.
வாழ்க்கையில் இன்னும் பயணப்பட வேண்டிய அவசியத்தை மிக அழுத்தமாக உணர்த்திய இம்முதல் பயணம் மனதில் தானாகவே ஒரு பட்டியலை இட்டது. அர்ஜென்டினாவின் ‘பிளாசா டே மாயோ’ சதுக்கத்தில் ஒவ்வொரு வியாழனும் தாய்மார்களால் முன்னின்று நடத்தப்பெறும் போராட்டத்தில் ஒருமுறையேனும் கலந்துகொண்டு, நாற்பது வருடங்களுக்கு முன் அரசின் அராஜகத்தாலும் அடக்குமுறையாலும் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போன இளைஞர்களின் பெயர்கள் அவர்களின் தாய்மார்களால் வாசிக்கப்படுகையில் ‘Presente’ என உரக்கக் கூறியவாறே அவர்களின் உணர்வுகளோடு கலந்து கரைந்து கண்களில் நீர் கோர்க்க வேண்டும். மாபெரும் புரட்சியாளன் மீட்டுத் தந்த கியூபாவிற்கும் அவனது இறுதி மூச்சை இன்னும் தனது காற்றில் சேமித்து வைத்திருக்கும் பொலிவியாவிற்கும் செல்ல வேண்டும். சாலமன் தீவில் சோறும் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் சாப்பிட்டுக் கொண்டே அங்கிருக்கும் ஏதேனும் ஒரு மூதாட்டியிடம் அவளது கதை கேட்க வேண்டும். ஆப்பிரிக்காவில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாத கஹாரி காடுகளில் கிழங்குகளையும் செடிகளின் வேர்களையும் பிடுங்கி அதில் வடியும் ஒன்றிரண்டு சொட்டு நீரை மட்டுமே பருகி வாழும் அப்பழங்குடியினரின் வாழ்வுமுறையை நா வறட்சியடைவதையும் பொருட்படுத்தாது ஆர்வமாய் நேரில் கண்டறிய வேண்டும். டடாப், மெனிக் ஃபார்ம் உட்பட உலகின் எல்லா அகதிகள் முகாமிற்கும் சென்று தன்னார்வ ஊழியராகக் குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது பணியாற்ற வேண்டும். அங்கு உயிருக்குப் போராடும் அல்லது உயிர் வெளியேறக் காத்திருக்கும் ஒருவரின் கைகளை எனது கைகளுக்குள் கிடத்தி எனது கதகதப்பைக் கைகளின் மூலம் அம்மனிதரின் மனதிற்குக் கடத்தி ஆறுதலளிக்க வேண்டும். கென்யாவில் மரூகே சென்ற பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளோடு சிறிது நேரம் கால்பந்து விளையாடி விட்டு அப்படியே நமீபியா, அங்கோலா எனச் சுற்றித் திரிந்து பிழைத்திருந்தால் நாடு திரும்பவேண்டும். கிட்டத்தட்ட சே குவாராவின் வாழ்க்கைப் பாதை மாறுவதற்குக் காரணமாய் இருந்த அந்த மோட்டார்சைக்கிள் பயணம் போன்ற ஒன்றை இந்தியா முழுக்க மேற்கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு ஆசை ததும்பி வழிகிறது.
எனது பயணங்களுக்கான விதை ரோமாபுரியில் தூவப்பட்டிருக்கின்றன. அதற்குத்தான் தண்ணீர் ஊற்றித் திரும்பியிருக்கிறேன். கூடிய சீக்கிரமே விருட்சமாகிப் பல நாடுகளுக்குக் கிளை பரப்பும் என நம்புகிறேன்.
- சோம.அழகு
- கிளிக் கதை
- உணவு மட்டுமே நம் கையில்
- பயணம்
- ஆதல்….
- சொல்
- ‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்
- ஒரு மழைக் கால இரவு
- சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.
- நிலாச்சோறு
- நீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்
- வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்
- கிருதுமால்
- தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.
- மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி
- நறுமுகையும் முத்தரசியும்