‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 15 in the series 5 நவம்பர் 2017

 

  1. அன்று

 

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
ஒரு குட்டி முயலைக் காணமுடிந்தது.
அதற்கு ‘கேரட்’ தர முடிந்தது இங்கிருந்தே.
நெடுந்தொலைவிலிருந்தும்

அதன் இக்குணூண்டு கண்ணும் புஸுபுஸு வாலும்
அத்தனை துல்லியமாகக் கண்டது.
அந்தக் குட்டி முயல் மயிலாட்டம் ஆடியது;
குயிலாட்டம் பாடியது;
யானையாகி என்னை முதுகிலேற்றிக்கொண்டு
கானகமெங்கும் சுற்றிவந்தது.
மலைப்பாம்பாகி யெனை
முழுமையாய் விழுங்கிப் பின்
பழுதின்றி மீட்டுயிர்க்கச் செய்தது மறுபிறப்பாய்.
காட்டுத்தாவரங்களை யெல்லாம் பரிச்சயப்படுத்தி யது.
’அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா’வா

என்று வினவியபோது
’அந்த ஆராய்ச்சியெல்லாம் எதற்கு?
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடிவா’
பாடலாம் வா’ என்று கண்சிமிட்டியது.
உறுமிக்கொண்டு வந்த சிறுத்தையைப் பார்த்துச் சிரித்தது பயமின்றி.
ஆற்றுப்பக்கம் மெதுவே போய்க்கொண்டிருந்த ஆமையை நெருங்கி
அன்பா யதன் முதுகு வருடிக்கொடுத்தது.
’அவரவர் வழியே வாழ்க்கையை அணுகிக்கொண்டிருக்கிறோம்.
நமக்கிடையே ஒட்டப்பந்தயம் நடத்திப் பார்க்க முனையும்
மனிதர்களை என்ன செய்ய? என்று புன்னகைத்த வாறே
தன் முதுகுக்கூட்டில் சேர்த்துவைத்திருந்த வார்த்தைகளைக் கோர்த்து
அன்பளிப்பாய் முயலிடம் தந்த ஆமை
அங்கிருந்து பறந்துசென்றது ஓர் இலவம்பஞ்சுச் சுருளாய்.
இன்னுமின்னுமிருந்தன
எண்ணிறந்த கானகப் புதிர்வெளிகள்.
ஒருநாள் குட்டிமுயல் காணவில்லை.
நிலவொரு சிறுபுள்ளியாக மட்டுமே தெரிந்தது தொலைவில்

 

  1. இன்று

நாற்புறமும் நீர்சூழ்ந்து பெருகியவாறு.
அடுத்த அடி பள்ளமா பெருங்கல்லா
பாழாய்ப்போன மின்கம்பியா….
தடுக்கித் தடுக்கி நடந்துபோய்க்கொண்டிருக்கிறேன்.
இருபுறமும் கலவரமாய் விரையும் வாகனங்கள்
நான் கடந்துகொண்டிருக்கும் நீர்ப்பரப்பை
ஆறிலிருந்து கடலாய், கடலிலிருந்து சமுத்திரமாய்
உருமாற்றியவாறே.
தாகவிடாயில் நாவறள்கிறது.
கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது வானம்
என் உன் மனதைப் போலவே.
பாதி வழி வந்தாயிற்று.
பின்னாலெங்கும் வெள்ளக்காடு.
சென்னையை மண்வாரித்தூற்றுவோர் நிறையபேர்.
என்னை யெனக்குத் தந்த சென்னை
யின்னொரு அன்னை யெனக்கு.
என் கண்போன்றது, கண்ணின் மணி போன்றது
இன்னுமிரண்டு கண்ணாய்ப் பொருந்தியிருக்கும்
மூக்குக்கண்ணாடி போன்றது.
காக்க காக்க….வென யாரைக் கேட்க?
நாம் யார் மழையை நாகாக்கச் சொல்ல?
இருமருங்கிலுமான குச்சுவீடுகளிலிருந்து
சிறியதும் பெரியதுமான கைகள் பரபரவென்று
வெளியேற்றிக்கொண்டிருக்கின்றன தண்ணீரை.
கண்ணீரை வகைபிரிக்க நேரமில்லை.
மண்ணரித்துக் கரைத்துவிடுமுன்
நகர்ந்துவிடவேண்டும்
கண்பறிக்கும் நீர்வெளியிலிருந்து.
பேதுறுத்தும் பீதியையும் மீறி
பாதநுண்துளைகள் வழியே உயிர்வரை பரவும்
நீர்க்குளிர்ச்சி
பரவசமடையச் செய்கிறது
அருங்காதல் கலவியின்பமாய்.
தூரத்தே தத்தித்தத்தி வந்துகொண்டிருக்கிறது
ஆட்டோரிக் ஷா போல் ஒன்று.
திக்குத்தெரியாத காட்டிலிருந்து என்னை
மீட்டெடுக்குமோ? தெரியாது.
கரணம் தப்பினால் மரணமாய்
மிகத் தனியாக வருகையில்
பிற யாவும் மனதிலிருந்து பிரியப்
பெறும் ஞானவிளக்கம்
ஆன பொருள்களுக்கெல்லாம் அப்பாலாக
ஏதும் செய்யலாகாமல் முன்னகர்ந்தபடி
என் மனமெலாம் நானாகியிருக்கு மிக்
கணமொரு
துளிவரமாய்…..

Series Navigationஆதல்….சொல்ஒரு மழைக் கால இரவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *